சதுரங்க ராஜா!

ஓன்றல்ல, இரண்டல்ல 5 முறை உலக செஸ் சாம்பியன். ஐரோப்பியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை 2007 முதல் தற்போது வரை தன்வசம் வைத்திருக்கும் சாதனைத் தமிழர் விஸ்வநாதன் ஆனந்த்.
சதுரங்க ராஜா!
Updated on
3 min read

ஓன்றல்ல, இரண்டல்ல 5 முறை உலக செஸ் சாம்பியன். ஐரோப்பியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை 2007 முதல் தற்போது வரை தன்வசம் வைத்திருக்கும் சாதனைத் தமிழர் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்தியாவில் செஸ் என்றாலே, நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆனந்தும், அவருடைய சாதனைகளும்தான். 30 ஆண்டுகளுக்கு முன்பு செஸ் பயணத்தைத் தொடங்கி, உலக செஸ் அரங்கில் இப்போது எல்லாவற்றையும் சாதித்துவிட்டார் இந்த சதுரங்க ராஜா.

பார்க்கும் ரசிகர்களையே மூளையை கசக்க வைக்கும் இந்த மூளைக்கார விளையாட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் அடுத்த தலைமுறை செஸ் வீரர்கள் உருவாவதற்கு முக்கியக் காரணமாகவும் இருக்கிறார். ஆனந்தின் அபார வெற்றிகளால் இன்றைய இளைஞர்களின் கவனம் செஸ் பக்கம் திரும்பியிருக்கிறது.

தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து ரஷிய கலாசார மையத்தில் செஸ் பயின்று உலக செஸ் போட்டிகளில் ரஷியர்களையே வீழ்த்திய பெருமைக்குரியவர்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று திரும்பிய ஆனந்த், "7-வது சுற்றில் இஸ்ரேலின் ஃபோரீஸ் கெல்ஃபான்டிடம் தோற்றபோது, தூக்கத்தை இழந்ததாக' குறிப்பிட்டார்.

செஸ் போட்டிக்கு அப்பாற்பட்டு, தனது பொழுதுபோக்கு உள்ளிட்ட சில விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். உலக செஸ் போட்டியின் சவால் நிறைந்த ஆட்டங்களால் களைப்படைந்திருந்தாலும், அவரின் பதில்களில் மட்டும் உற்சாகத்துக்கு குறைவில்லை என்றே சொல்லலாம்.

மாஸ்கோ அனுபவம் பற்றி...

மாஸ்கோவில் காலையில் 9 மணிக்கு எழுவேன். எனக்குரிய சில வேலைகளை செய்துவிட்டு, காலை உணவை முடித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். அதன்பிறகு செஸ் போட்டியில் விளையாடுவேன். பின்னர் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வேன். போட்டி இல்லாத நாள்களில் முன்னதாகவே உடற்பயிற்சி மையத்துக்கு சென்று வந்துவிடுவேன்.

உங்களின் பொழுதுபோக்கு....

எனக்குரிய சிறிய வேலைகளை செய்வது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது, குறிப்பாக எனது மகன் அகிலுடன் நேரம் செலவிடுவது இதுதான் என்னுடைய பொழுதுபோக்கு.

ஸ்பெயினில் குடியுரிமை பெற்றது ஏன்?

ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக அளவில் செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஸ்பெயினில் இருந்து போட்டிக்கு செல்வது எளிது. அதுமட்டுமின்றி செஸ்ஸில் எனக்கு வேண்டப்பட்ட சிலர் அங்கு இருக்கிறார்கள். போட்டிக்கு தயாராவதற்கு அவர்கள் மிகவும் உதவியாக இருப்பதால் அங்கு குடியுரிமை பெற்றேன். ஆனால் இப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். இனிமேல் சென்னையில்தான் இருப்பேன். அவசியம் ஏற்பட்டால் ஸ்பெயினுக்கு செல்வேன்.

சென்னையில் அடிக்கடி செல்லும் இடங்கள்...

மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவை. இதுமட்டுமின்றி நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். டிசம்பர் மாதங்களில் இசைக் கச்சேரிகளுக்கு செல்வது எனக்குப் பிடித்த விஷயம்.

உங்கள் மகன் அகில் எப்படி இருக்கிறார்?

அகிலுக்கு இப்போது ஒரு வயது ஆகிறது. அவனுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது. வீட்டிற்குள் அவன் போகும் இடமெல்லாம் அவன் பின்னாடியே செல்கிறேன். அவனுடன் கொஞ்சி விளையாடும் அந்தப் பொழுது மிக இனிமையான தருணம். ஓர் அப்பாவாக எனக்குள் ஏற்படும் உணர்வுகளை சொல்ல வார்த்தையில்லை. மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டி மற்றும் பயிற்சியின்போது அகிலுடன் நேரம் செலவிடமுடியாமல் போனதில் வருத்தமே.

2010-ம் ஆண்டு பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டிக்கு ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் இருந்து காரில் சென்ற அனுபவம்...

விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வேறு வழியில்லை என்பதால், சோபியாவுக்கு காரில் செல்ல முடிவெடுத்தேன். 3 நாள் பயணம் அது. இக்கட்டான பயணம் என்றாலும், ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளைக் கடந்து சோபியா சென்ற அந்த அனுபவம், சுற்றுலா செல்வது போன்ற இனிமையான உணர்வை ஏற்படுத்தியது. காரில் சென்றபோது எனக்குப் பிடித்த படங்களைப் பார்த்துக்கொண்டே சென்றேன். அந்தப் போட்டியிலும் வெற்றி கண்டு பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.



செஸ் போட்டிகள் இல்லாதபோது வேறு ஏதாவது பணிகளில் ஈடுபடுகிறீர்களா?

இப்போதுதான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை முடித்துக் கெண்டு வந்திருக்கிறேன். மிகவும் களைப்பாக இருப்பதால் இப்போதைக்கு ஓய்வு மட்டுமே. ஓய்வுக்குப் பிறகுதான் மற்றதைப் பற்றி யோசிக்கணும்.

பிடித்த உணவு: ரசம், தயிர், சுசி, மெக்ஸிகோ உணவு வகைகள்.

பிடித்த அயல் நாடுகள்: மெக்ஸிகோ, ஸ்பெயின், ஐலேன்ட், தென் ஆப்பிரிக்கா, சிலி.

சென்னையில் பிடித்தவை: கடற்கரை, தென்னிந்திய ஹோட்டல்கள், இசை நிகழ்ச்சி, பள்ளி தோழர்கள், வீடு.

பிடித்த படங்கள்: ரோஜா (கதாநாயகன் அரவிந்த் சாமி ஆனந்தின் வகுப்பறைத் தோழர்), ஏ ஃபியூ குட் மென், டெர்மினேட்டர், தி கிங்ஸ் ஸ்பீச், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்.

தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ்.

பிடித்த நடிகர்கள்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிர்கான், மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி.

பிடித்த செஸ் வீரர்கள்: பாப்பி ஃபிஷர் (அமெரிக்கா), மிகெய்ல் டால் (லாட்வியா), போரீஸ் ஃகெல்பான்ட் (இஸ்ரேல்), ஜுபோமிர் ஜுபோஜீவிக் (செர்பியா), விளாதிமிர் கிராம்னிக் (ரஷியா).

இந்திய செஸ்ஸில் நம்பிக்கைக்குரியவர்கள்: பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், டி.ஹரிகா, எம்.மகாலட்சுமி, வைபவ் சூரி.

முன்மாதிரி மனிதர்கள்:  மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ரத்தன் டாடா, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்டின் லூதர் கிங்.

மறக்க முடியாத தருணங்கள்: முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்றது, ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வென்றது, முதல்முறையாக உலக சாம்பியன் ஆனது, மாஸ்கோவில் நடைபெற்ற சமீபத்திய உலக சாம்பியன் போட்டி.

பாராட்டுக்குரிய விளையாட்டு பிரபலங்கள்: ஜான் மெக்கன்ரோ (டென்னிஸ்), லயோனெல் மெஸ்ஸி (கால்பந்து), ஜினடின் ஜிடேன் (கால்பந்து) ரோஜர் ஃபெடரர் (டென்னிஸ்), ரஃபேல் நடால் (டென்னிஸ்).

பார்த்து ரசிக்கும் விளையாட்டுகள்: டென்னிஸ், கால்பந்து, ஸ்நூக்கர், கிரிக்கெட், கூடைப்பந்து.

பிடித்த எழுத்தாளர்கள்: டான் பிரௌன், சைமன் சிங், ஜே.கே.ரோவ்லிங், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், வில்லியம் டால்ரிம்பிள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com