திரைக்கதிர்

திரைக்கதிர்

மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் "டி கம்பெனி' படத்தை ஜோஷி, ஷாஜி கைலாஸ், தீபன், பத்மக்குமார், விநோத் விஜயன் என ஐந்து இயக்குநர்கள் இயக்குகிறார்கள். மோகன்லால், திலீப், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் ந
Published on

மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் "டி கம்பெனி' படத்தை ஜோஷி, ஷாஜி கைலாஸ், தீபன், பத்மக்குமார், விநோத் விஜயன் என ஐந்து இயக்குநர்கள் இயக்குகிறார்கள். மோகன்லால், திலீப், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவுக்கு அழைப்பு வந்துள்ளது. "முதல் மலையாளப் படமே மோகன்லாலுடன்' என ஆசையாக சொல்லி வந்த த்ரிஷா இப்போது வருத்தத்தில் இருக்கிறாராம். காரணம் சம்பளம்! த்ரிஷா கேட்ட தொகை ரூ.70 லட்சம். அதிலிருந்து ஒரு பத்து லட்சத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்கிறேன் என்று கூட சொல்லியிருக்கிறார். ஆனால் மல்லுவுட்வாசிகளோ ரூ.6 லட்சத்தைத்தான் உங்களுக்கு சம்பளமாக ஒதுக்கியிருக்கிறோம். வேண்டுமானால் ரூ.10 லட்சம் தரலாம். அவ்வளவுதான் எனக் கூற சோகத்தில் இருக்கிறார் த்ரிஷா.

விஜயகாந்த் நடித்த "ரமணா' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய "கான்' நடிகர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. இறுதியில் ஷாருக்கானுக்கே ஜெயம். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாûஸ அழைத்து முறையாக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவருக்கும் தூது விட்டிருக்கிறார்கள்.

"அழகி' படத்தில் அறிமுகமான மோனிகா, "சிலந்தி' படத்துக்குப் பிறகு க்ளாமர் வலையில் சிக்கிக் கொண்டதால் அதையடுத்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. சற்று இடைவெளிக்குப் பிறகு "குறும்புக்கார பசங்க' படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைக்கப் பெற்று குடும்பப் பாங்காக நடித்துள்ளார். இயக்குநர் மனோஜ்குமாரின் உதவியாளரும் மாற்றுத்திறனாளியுமான டி.சாமிதுரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் படம் முழுக்க அஜித்தின் தீவிர ரசிகையாக நடித்திருக்கிறார் மோனிகா.

தெலுங்கில் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கால்ஷீட் கொடுக்க மறுக்கும் அனுஷ்கா தமிழ்ப் படங்களுக்கு மட்டும் தாராளம் காட்டி வருகிறார். செல்வராகவன் இயக்கும் "இரண்டாம் உலகம்' படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறவுள்ளது. இதற்காகத் தொடர்ந்து 65 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் அனுஷ்கா. அவருடைய சினிமா கேரியரிலேயே ஒரு படத்துக்கு தொடர்ந்து இத்தனை நாள்கள் கால்ஷீட் தருவது இதுவே முதல் முறை.

தமிழிலும் தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருந்தாலும் ஸ்ருதிஹாசனின் எண்ணமெல்லாம் பாலிவுட் மீதே இருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நாயகி ஆகி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஸ்ருதி, மும்பை பாந்த்ரா பகுதியில் தனி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறிவிட்டார்.

தான் எடுத்த "கடல்' படத்தின் காட்சிகளைப் போட்டுப் பார்த்திருக்கிறார் மணிரத்னம். பல காட்சிகளில் ஹீரோ கெüதமை விட அதிக வயதாகத் தோற்றமளித்ததால் படத்திலிருந்து சமந்தாவை நீக்கிவிட்டார். அவருக்குப் பதிலாக ராதாவின் இளைய மகள் துளசியைக் கதாநாயகி ஆக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து கேட்டால்... ""மீனவப் பெண் வேடம் என்பதால் தொடர்ச்சியாக பல நாள்கள் வெயிலில் நிற்க வைத்து காட்சிகளைப் படமாக்கினார்கள். அதனால் என் தோலின் நிறமே மாறிவிட்டது. இதனால் நான் நடித்து வரும் மற்ற படங்களின் "கண்டினியுட்டி' பாதிக்கப்படுகிறது. எனவே படத்திலிருந்து விலக வேண்டியதாகி விட்டது'' என்கிறது சமந்தா தரப்பு.

கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் பொன்குமரன் இயக்கும் "சாருலதா' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் வேடத்தில் நடிக்கிறார் ப்ரியாமணி. இந்தப் படத்துக்காக தனக்கு மீண்டும் ஒரு முறை தேசிய விருது கிடைக்கும் எனக் கூறி வருகிறார் ப்ரியாமணி.

அஜித் நடித்த "பில்லா 2', கார்த்தி நடித்த "சகுனி' ஆகிய இரண்டு படங்களும் இரண்டு வார இடைவெளியில் வெளிவருவதாக இருந்தது. ஆனால் "சகுனி' படத்தின் தெலுங்கு உரிமை அஜித் நடித்த "பில்லா 2' வின் தெலுங்கு உரிமையை விட அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. இதையடுத்து இரண்டு படங்களையும் தனித் தனியாக வெளியிடாமல் ஒரே நாளில் வெளியிட்டு "தல'யுடன் ஸ்டார் வாரில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளாராம் "பருத்தி வீரன்'.

இந்திய சினிமாவின் பிரமாண்டப் படமாகக் கருதப்படக் கூடிய கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்கிறது சினிமா வட்டாரம். இதில் நளினமான தோற்றமுடைய கதக் நடனக் கலைஞர், ஆக்ரோஷமான தீவிரவாதி உள்பட இன்னும் சில புதுமையான கெட்-அப் களில் தோன்றும் கமல்ஹாசனின் சம்பளம் மட்டும் ரூ.45 கோடி என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

"தென்மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் ஆறாவது தேசிய விருதைப் பெற்ற கவிஞர் வைரமுத்து, அந்தப் படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் "நீர்ப்பறவை' படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். கடலோர மீனவர்கள் குறிப்பாக கிறிஸ்தவ மீனவர்களைப் பற்றிய கதை என்பதால் படத்தின் ஐந்து பாடல்களையும் விவிலிய (பைபிள்) சொற்களைப் பயன்படுத்தி புதுமையாக எழுதியுள்ளார். இதில் "அழகி' படத்துக்குப் பிறகு தமிழில் நந்திதா தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com