

கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் பெரும் போட்டியே நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுன், ராம்சரண்தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட இளம் முன்னணி ஹீரோக்கள் தங்களுடைய படங்களில் நடிக்க அக்ஷராவுக்குத் தூது விட்டு வருகின்றனராம். ஆனால் அக்ஷராவின் அம்மாவும் நடிகையுமான சரிகா, "நடிகையாக விரும்பினால் பாலிவுட் படங்களின் மூலம்தான் அறிமுகமாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் பிரகாசிக்க முடியும்' என மகளுக்கு மந்திராலோசனை கூறியிருக்கிறார். "சொசைட்டி' ஹிந்திப் படத்தில் ராகுல் தொலாக்கியாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அக்ஷரா, தற்போது "விஸ்வரூபம்' படத்தில் தந்தையிடம் டைரக்ஷன் தொழில்நுட்பத்தைக் கற்று வருகிறார். "நடிப்போ, இயக்கமோ உனக்குப் பிடித்ததைச் செய்' என மகளின் முடிவுக்கே விட்டுவிட்டார் கமல்ஹாசன்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவுள்ள காஜல் அகர்வாலுக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் வருகின்றன. அஜய் தேவ்கனுடன் நடித்த "சிங்கம்' ஹிந்திப் பட ஹிட்டுக்குப் பிறகு அக்ஷய்குமாருடன் ஜோடி சேருகிறார் காஜல். பெயரிடப்படாத இந்தப் படத்தை பெரும் பெயரைப் பெற்றுத் தந்த "வெட்னஸ்டே' ஹிந்திப் படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்குகிறார்.
"கொலவெறிடி...' பாடல் ஹிட்டுக்குப் பிறகு தனுஷுக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனந்த் ராய் இயக்கத்தில் "ராஞ்சா' என்ற ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதையடுத்து பரத்பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். கேரளத்தில் பிரசித்த பெற்ற தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து ஹிந்தியிலும் தமிழிலும் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அஸின் நடிப்பார் எனத் தெரிகிறது. "19 ஸ்டெப்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது.
மும்பையிலுள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றை தத்தெடுத்து அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவையான அடிப்படை உதவிகளைப் பூர்த்தி செய்து வருகிறார் சமீரா ரெட்டி. இதற்காக மாதம்தோறும் ஒரு கணிசமான தொகையை ஒதுக்கி வருகிறார்.
இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா, இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். "இசை' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குபவரும் அவரே. இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையேயான போட்டியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் தானே இரண்டு வேடங்களிலும் நடித்துவிடலாம் என்று முடிவெடுத்தவரை "ஏன் இந்தக் கொலைவெறி?' என அறிவுறுத்தி அடங்க வைத்திருக்கிறார்கள் சில நல விரும்பிகள்.
இயக்குநர் தரணி, ஓவியங்கள் வரைவதில் கெட்டிக்காரர். "நீங்கள் வரைந்த ஓவியங்களைக் கண்காட்சியாக வைக்கலாமே?' எனக் கேட்பவர்களிடம் "ஆத்ம திருப்திக்காக செய்யும் விஷயங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது' என்கிறாராம்.
பொதுவாக ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை டப்பிங் செய்பவர்கள், அதை டப்பிங் படம் என்பதை மறைத்துவிட்டு தமிழுக்காக சில மாற்றங்களைச் செய்து மீண்டும் ரீ-ஷூட் நடத்தினோம் என்று கூறி படத்தை வெளியிடுவார்கள். ஆனால் தெலுங்கில் ஹிட் ஆன "வீரா' படத்தின் டப்பிங்காக உருவாகும் "வீரய்யா' படத்தை "இது 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் அக்மார்க் தெலுங்கு டப்பிங் படம்' எனக் கூறி வெளியிடுகிறார்கள்.
டாப்ஸி, காஜல் அகர்வால் ஆகியோரின் க்ளாமரும் ரவிதேஜாவின் ஆக்ஷனும்தான் இந்த நம்பிக்கைக்கு காரணம். இந்தப் படத்தின் ஏழு பாடல்கள் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. 1000 கார்கள் அணிவகுப்பு, புல்டோசர்கள், பொக்லைன் எந்திரங்களை அந்தரத்தில் பறக்க வைப்பது என முழு நீள கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
"முனி', "காஞ்சனா' படங்களின் வெற்றிக்குப் பிறகு அதன் மூன்றாம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ். சென்னை ஆவடி அருகே ராகவேந்திரர் கோயிலைக் கட்டிய பிறகே தன்னுடைய சினிமா கேரியர் உச்சத்தைத் தொட்டுள்ளதாக நம்பும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக பூந்தமல்லியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்-விஷ்ணு ஆலயத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
"மாற்றமில்லாதது ஏதுமில்லை' என்கிற கொள்கையிலிருந்து முற்றிலும் விதிவிலக்கானது காதல். இக் கருத்தை மையமாக வைத்து "காதல் தீவு' என்ற படம் தயாராகிறது. "அரும்பு மீசை குறும்பு பார்வை' படத்தை இயக்கிய வெற்றிவீரன் இயக்குகிறார். ஆஸ்கர் விருதுகளை அள்ளிய "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் சிறுமியாக வந்த தான்வி லோன்கர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். "அழகி' படத்தில் சிறுவனாக நடித்த ராம்சரண் கதாநாயகனாகிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி வில்லனாக நடிக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் "தடையறத் தாக்க' படத்தில் நடித்து வரும் அருண்விஜய், முதல்முறையாக சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமன் இசையில் உருவான "பூந்தமல்லிதான் புஷ்பவல்லிதான்...' என்று தொடங்கும் அந்த "ஹை டெம்ப்போ' பாடலை பிரபல பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடியிருக்கிறார் அருண்விஜய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.