"நாடோடிகள்', "எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்த அனன்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வில்வித்தை போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வந்தவர். கடந்த 2006, 2007ம் ஆண்டுகளில் நடந்த வில்வித்தை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளார். குடும்பப் பிரச்னை காரணமாக தற்போது சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியுள்ள அனன்யா, ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு விடாமுயற்சியுடன் வில்வித்தைப் பயிற்சியில் ஈடுபட்டு கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் மகளிர் வில்வித்தைப் போட்டியில் கலந்துகொண்டார். அதில் 466 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்று தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளார்.
வித்தியாசமான பின்னணியோடு ஒரு புதிய அழகிப் போட்டி விரைவில் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது. எல் எக்ஸ் ஜி இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தும் இந்த அழகிப் போட்டியில் 18 -லிருந்து 39 வயது வரையிலான தாய்மார்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இதில் வழக்கத்துக்கு மாறாக போட்டியாளர்கள் வீட்டுக்கே தேர்வுக் குழு சென்று, அவர்கள் தங்களுடைய வீட்டைப் பராமரிக்கும் பாங்கு, பாரம்பரிய உணவு வகைகளைச் சமைக்கும் திறமை, அண்டை அயலார் வீட்டினரோடு பழகும் தன்மை போன்றவற்றைச் சோதிக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட முக்கியமான ஒரு தேர்வில் வென்றால்தான் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியும். அது... போட்டியாளர்கள் தங்களுடைய மாமனார், மாமியார், தங்கள் வீட்டிலுள்ள வயோதிகர்களை எந்த அளவுக்கு அன்பாக நடத்துகிறார்கள் என்பதற்குத்தான் அதிக மதிப்பெண்கள். இந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியை நடத்தப் போகிறவர் "காதல்' சந்தியா.
சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் குஷ்பு. யார் போய் கேட்டாலும், "நமக்கு அரசியலுக்கே நேரம் இல்லீங்க. இப்ப போய் எங்க சினிமாவுல நடிக்கறது?' என்கிறார். ஆனால் சின்னத்திரையில் மட்டும் தொடர்ந்து நடிப்பாராம். காரணம் கேட்டால்... ""அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை'' என்கிறார் குஷ்பு.
தான் இயக்கியுள்ள "நீர்ப்பறவை' படத்தில் நடித்த விஷ்ணு, சுனேனா, நந்திதா தாஸ் ஆகியோர் உள்பட பலருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சீனு ராமசாமி. ""இதில் நந்திதா தாஸ் வேடத்துக்கு முதலில் ஷபானா ஆஸ்மியைத்தான் கேட்டிருந்தேன். ஆனால் அவர் தனக்குத் தெரியாத மொழியில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால்தான் நந்திதா தாûஸத் தேர்ந்தெடுத்தேன். இந்தப் படம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியது. அப்படிப்பட்ட கதையில் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒருவர் நடித்தால்தான் படம் உலகத்தின் பார்வைக்குச் செல்லும். அதனால்தான் நந்திதாவைத் தேர்ந்தெடுத்தோம்'' என்கிறார் சீனுராமசாமி.
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் நுழைகிறார்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் "பட்டத்து யானை' படத்தின் மூலம் கதாநாயகி ஆகிறார் ஐஸ்வர்யா. விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தனர். இறுதியில் விஷால் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். காரணம்... அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பதுதான்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன "டிராஃபிக்' தமிழில் "சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் வெளியாகிறது. உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் இக்கதையின் உரிமையைப் பெறுவதற்காகக் கடந்த ஆண்டு படத்தைப் பார்த்தார் சரத்குமார். உடனடியாக, அவர் செய்த முதல் காரியம், தன்னுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்ததுதான். ""உடல் உறுப்புகளை தானம் செய்த விஷயத்தை ராதிகாவிடமே கடந்த வாரம்தான் தெரிவித்தேன்'' என்றார் சரத்குமார்.
நல்ல கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தந்து வருகிறார்கள் மலையாளப் படவுலகினர். "சுப்பிரமணியபுரம்', "நாடோடிகள்' படங்களுக்காக இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி ஆகியோருக்கு பாராட்டு விழாக்களை நடத்தி மலையாளப் படங்களிலும் நடிக்க வைத்தனர். அந்த வகையில் "மேல் விலாசம்' மலையாளப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பார்த்திபனையும் கெüரவித்து வருகிறார்கள். கேரள அரசு மற்றும் தனியார் திரைப்படப் பயிற்சி நிறுவனங்களில் பார்த்திபனை சிறப்பு வகுப்புகளை எடுக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பார்த்திபனும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு சண்டைக் காட்சி. அதற்காக பன்னிரெண்டு மணி நேரம் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் அவ்வப்போது மட்டும் இடைவெளி எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சண்டைக் காட்சி முழுவதிலும் தலைகீழாகத் தொங்கியபடியே "தல' (கோட், சூட், கறுப்புக் கண்ணாடியெல்லாம் இல்லை) நடித்திருப்பதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.