ஒன்ஸ்மோர்

என் பால்ய வயதில் எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார்.
ஒன்ஸ்மோர்
Updated on
2 min read

 திருவாசகம் நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். "குட்டித் திருவாசகம்' என்ற பெயருடைய நூல் ஒன்று உண்டு. தெரியுமா?
 கரிவலம் வந்த நல்லூர் என்ற தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது. அதைக் கருவை என்றும் சொல்வார்கள். கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, கருவைக் கலித்துறை அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்கள் அதிவீரராமபண்டிதர் இயற்றியுள்ளார். அவற்றிற்குக் "குட்டித் திருவாசகம்' என்று பெயர் வழங்கும்.
 
 தெரியுமோ? அயிராவதம் என்பது இந்திரனுக்குரிய வெள்ளை யானை. அயிராவணம் என்பது சிவபெருமானுக்குரிய யானை!
 அரிசியில் உடைந்ததை நொய் என்றும் குருணை என்றும் சொல்கிறோம். ஏன்! நொய்து என்றால் லேசானது என்று பொருள். அரிசியைவிட நொய்தாய் (லேசானதாய்) இருப்பதால் நொய் என்று பேர் வந்தது. அதைவிடச் சிறியது குறுணை. குறுநொய் என்பதே குறுணை ஆயிற்று!
 ("கி.வா.ஜ. பதில்கள் என்ற நூலிலிருந்து')
 
 
 என் பால்ய வயதில் எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் சொல்வார்:
 ""ராமாமிருதம், வள்ளுவன் என்ன செய்துட்டிருந்தார்னு நினைக்கிறே? தினம் ரெண்டு முழம் நெய்வார். அது அவருக்கு ஏதோ கணக்கு. இல்லை, அந்த நாள் தறியில் அதுக்கு மேல் முடியாதோ என்னவோ? தறியில் காலின் ஒவ்வொரு மிதிக்கும் குறுக்கே நாடா. இந்தப் பக்கத்திலிருந்து அந்தக் கோடிக்கு ஒரு பாய்ச்சல், மறு மிதிக்கு அந்தப் பக்கத்திலிருந்து இந்தக் கோடிக்கு ஒரு பாய்ச்சல். இப்படி மிதிக்கு மிதி ஒரு குறுக்கு இழை, நெடுக்கு இழையுடன் இழை இழையா துணி வளர்ந்துட்டுப் போவும். இந்தச் சமயத்தில் மனம் சும்மா குந்திட்டு இருக்குமா? ஏதேனும் எண்ணிக்கிட்டுத்தானேயிருக்கும்! கூடவே நெசவுலேயும் கவனமாயிருக்கணும். இழை அறுந்து போனால் அப்பப்போ அதை முடியணும். அவர் மனம் நமது மாதிரி குப்பைமேட்டை சுத்திட்டு இருக்குமா? நாடாவின் குறுக்கு ஓட்டத்தில் ஓட்டத்துக்கு ஓட்டம் ஒரு சொல், சொல் வளர்ந்து அடி, அடிக்கு அடுத்துக் கீழ் அடி; இரண்டடிக்கு ஒரு குறள் என்று அஞ்சாம் வேதம் முழுமையும் குறள் சரமாவே, தறியில் உட்கார்ந்தபடி, தொடுத்திருப்பார்னுதான் எனக்குத் தோணுது. அப்படியானால் அந்த மனம் எப்படி ஒருப்பட்டிருக்க வேணும் பார். அந்த மாதிரிக்குத் தவத்தில் உருவான அந்த நூலில் ஒரு குறளேனும் ஒரு சொல்லைப் பிடுங்கி அந்த இடத்தில் நம்மால் மறு சொல் வைக்க முடியுமா? என்ன அழுத்தம்! எத்தனை எத்தனை அர்த்தங்கள்! மனம் அப்படி லயித்திராவிட்டால் ஆண்டவனுடைய நடனத்தில் காதிலிருந்து விழுந்த குண்டலம், ஆடும் பரதம் வழி மீண்டும் காதுக்கு ஏறினதை, நேரில் நடனம் பார்த்தவங்க காண முடியாததை, தறியில் உட்கார்ந்தபடி, இவர் மட்டும் காண முடியுமா?''
 அந்தப் பெரியவர் காட்டியபடி வள்ளுவனின் தறி நிலையே தவ நிலைதான்.
 ("முற்றுப் பெறாத தேடல்' என்ற
 புத்தகத்தில் லா.ச.ராமாமிருதம்)
 
 
 வெப்பத்தை இத்தனை "டிகிரி' என்று சொல்வதுபோல ஒலியை "டெசிபல்' என்ற அலகால் அளந்து சொல்கிறார்கள். ஒருவரால் 80 டெசிபல் ஒலியைத்தான் பொறுத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் காதொலி வல்லுநர்கள். ஒலி அந்த அளவைத் தாண்டும்போது "பேரொலி' என்றும் "ஒலிமாசு' என்றும் அழைக்கப்படுகிறது.
 சாதாரணமாக நாம் பேசும் உரையாடல்களின்போது எழும் ஒலியின் அளவு 35 முதல் 55 டெசிபல் வரை உள்ளது. "கிசுகிசு'ப் பேச்சின் ஒலியின் அளவு 20 டெசிபல். அளவு மீறிய ஒலி நம் செவி, உடல், மனம் ஆகிய மூன்றையும் பாதிக்கிறது.
 காதைப் பொருத்தவரை பலமான ஒலி இருவகைப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வெளிக்காது, நடுக்காது ஆகியவை ஒலியால் பாதிக்கப்படும்போது தற்காலிகமாக கேட்கும் திறன் குறைகிறது. அது ஒரு வகை. உட்காதை ஒலி பிளக்கும்போது அங்குள்ள நுட்பமான செல்கள் அழிகின்றன. அவை மீண்டும் உருவாவதில்லை! அதன் காரணமாக "டின்னிடஸ்' என்ற ஒருவித காது இரைச்சல் உண்டாகி ஆயுள் பூராவும் ஒரு வகைச் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. அது இரண்டாவது வகை பாதிப்பு.
 மித மிஞ்சிய ஒலியை நெடுநேரம் கேட்போர் நிரந்தமாகக் கேட்கும் திறனை இழந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தீபாவளிக்குப் பிறகும் வரும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர், அதிலும் குறிப்பாக இளம் வயதினர் முழுவதுமாகக் கேட்கும் திறன் இழப்புக்கு உள்ளாகிறார்கள். இப்படிக் கணிக்கிறார்கள் செவி மருத்துவ நிபுணர்கள். பலமான ஒலி இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகப்படுத்துகிறது. "கொலஸ்ட்ரால்' அளவைப் பெருக்கிக் குருதி ஓட்டத்திற்குக் குந்தகம் ஏற்படுத்துகிறது.
 ("நுனிப்புல்' என்ற பல்சுவைக் கட்டுரைத்
 தொகுப்பு நூலில் முனைவர் வெ. நல்லதம்பி)
 தொகுப்பு : கேசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com