

"இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளும் வசூலும் ஸ்ரீதேவியை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதையடுத்து தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கும் ஸ்ரீதேவியை பல பிரபல இயக்குநர்கள் முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியோ ""எப்படிப்பட்ட படங்களிலும் நடிக்கலாம் என்று நினைத்திருந்தால் கடந்த பதினாறு ஆண்டுகளில் எத்தனையோ படங்களில் நடித்திருப்பேன். இப்போது என் வயதுக்கு ஏற்ற என் திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்'' என்கிறார். "உங்கள் படத்தில் அஜித் கெளரவ வேடத்தில் நடித்தது போல அஜித் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்தால் நடிப்பீர்களா?' என்று கேட்டால்... ""அஜித்துக்காக நிச்சயம் நடிப்பேன்'' என்கிறார்.
"சான்றோன்', "ஓணான்' படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ரா ரா. இவர் தற்போது "கல்லாபெட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஊரில் வெட்டியாகப் பொழுதைக் கழித்துக்கொண்டு அதே சமயம் கோடிகளில் பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய இந்தக் கதையில் புதுமுகங்கள் அஸ்வின் பாலாஜி, ரோசின் ஜாலி நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகிக்கு படத்தில் அழுது வடியும் வேடமாம். அதனால் நாயகி தேர்வின்போது ரோசின் ஜாலியின் அழுகைக்கு மனமிரங்கி கதாநாயகி வாய்ப்பை அளித்துள்ளார் இயக்குநர் ரா ரா.
வடிவுடையான் இயக்கும் "சொக்கநாதன்' படத்தில் பத்து ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடிக்கிறார் வித்யா பாலன் என செய்திகள் வெளியாகின. இதைக் கேள்விப்பட்ட வித்யாபாலன் அந்தப் படத்துக்காக யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அழைத்து, அதிக சம்பளம் கொடுத்தாலும் இப்போதைக்கு தமிழில் நடிக்கும் எண்ணமே இல்லை. விளம்பரத்துக்காக படக்குழுவினர் பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தமிழிலும் மலையாளத்திலும் இப்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தங்கை துளசி "கடல்' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு புதிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். ""உங்கள் தங்கை உங்களுக்குப் போட்டியா?'' என்று கேட்டால்... ""என் தங்கை துளசி நடிப்புக்கும், படிப்புக்கும் இடையில் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருக்கிறாள்.அவர் திரையுலகுக்கு வருவது மகிழ்ச்சி. என் அம்மாவும், அவரது சகோதரி அம்பிகாவும் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கவில்லையா? அவர்களுக்குள் என்றாவது போட்டி, பொறாமை இருந்ததா? அதுபோல் நானும் துளசியும் சாதனை சகோதரிகளாகத் திகழ்வோம்'' என்கிறார் கார்த்திகா.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த "கேமராமேன் கங்கா தோ ராம்பாபு' படத்தின் ரிசல்ட்டை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தார் நடிகர் விஜய். படம் வெற்றி பெற்றால் அதன் உரிமையை வாங்கி அந்தக் கதையையே இயக்குநர் விஜய்யிடம் கூறி படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் படத்துக்கு நெகட்டிவ் ரிசல்ட் வரவே, இயக்குநர் விஜய் ஏற்கெனவே கூறிய கதையையே படமாக்க சம்மதித்திருக்கிறார் நடிகர் விஜய்.
பாலிவுட்டில் எஸ்.ஆர்.கே. என்றால் பிரபலம். அது ஷாருக்கானின் தனி அடையாளம். கடந்த சில ஆண்டுகளாக பிரபல பிராண்டுகளின் பெயர்களுக்கு டிரேட் மார்க் அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று தனது எஸ்.ஆர்.கே. என்ற இனிஷியலுக்கு காப்புரிமை கேட்டிருக்கிறார் ஷாருக்கான். இனிஷியலுக்கு அனுமதி கேட்டுள்ள மற்றொரு பிரபலம் டெண்டுல்கர். எஸ்.ஆர்.டி. (சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்) என்ற பெயரை டிரேட்மார்க் ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் ரோஜர் பெடரர், மைக்கேல் ஜோர்டன், பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் ஆகியோர் தங்களது பெயர்களுக்கு டிரேட் மார்க் காப்புரிமை பெற்றுள்ளனர்.
ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்துக்கு "ராஜா ராணி' என பெயரிடப்பட்டுள்ளது. ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை ஷங்கரின் உதவியாளர் அட்லீ இயக்குகிறார். இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்றவுடன் கதையே கேட்காமல் நடிக்கச் சம்மதித்தாராம் நயன்தாரா. மேலும் இதுவரை யாரிடமும் வாய்ப்பு கேட்காத நயன்தாரா, இந்தப் படத்தைத் தொடங்கி வைத்த கமல்ஹாசனிடம் "உங்கள் அடுத்த படத்தில் எனக்கு கட்டாயம் வாய்ப்பு தர வேண்டும்' என நேரடியாகக் கேட்டுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடித்து, இசையமைத்து, இயக்கும் "இசை' படத்தில் புதுமுகம் சாவித்ரி கதாநாயகியாக நடிக்கிறார். பத்திரிகைகளில் வெளியான இவரது புகைப்படங்களைப் பார்த்து பல இயக்குநர்கள் தங்களுடைய படங்களில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் "இசை' வெளியாகும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் போட்டிருப்பதால் படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார் சாவித்ரி.
பிரகாஷ் ஜா இயக்கும் "சக்ரவியூக்' ஹிந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமீரா, ""பட வாய்ப்புகள் இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆட வந்துவிட்டீர்களா?'' என அவரிடம் கேட்டால்... ""அயிட்டம் சாங் எனப்படும் குத்துப் பாடலுக்கு ஆடுவதைப் பெருமையாகவே கருதுகிறேன். அதற்கு நல்ல அங்கீகாரத்துடன் தேவையான சம்பளமும் கிடைக்கிறது. "இந்தப் படத்தில் அயிட்டம் சாங் இருக்கிறதா? அதில் யார் ஆடியிருக்கிறார்கள்?' என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அதற்கேற்றாற்போல் நாமும் மாறிக் கொள்ள வேண்டியதுதான்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.