தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி, நடித்த "ஊ ல லா' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் திவ்யா பண்டாரி. இந்தப் படத்துக்குப் பிறகு சிறு சிறு வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் ஓரளவுக்காவது தமிழ் கற்றுக் கொண்ட பிறகே நடிப்பேன் என்கிறார். "யாரிடம் தமிழ் படிக்கிறீர்கள்?' என்று கேட்டால்... "தமிழ் படிப்பதற்காக தனியாக ஆசிரியர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. பழைய தமிழ்ப் படங்கள் முதல் இப்போதுள்ள படங்கள் வரை செலக்டிவாக இருநூறு டி.வி.டி. க்களை வாங்கியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்த்து வசன உச்சரிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் என்ன தமிழில் புத்தகமா எழுதப் போகிறேன். நடிப்பதற்கு இப்படி தமிழ் கற்றுக்கொண்டால் போதும்' என்கிறார்.
வீணா மாலிக்கை அடுத்து பாகிஸ்தானிலிருந்து இன்னொரு நடிகை பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவர் - பாகிஸ்தானின் பிரபல மாடலான மெஹரீன் சையத். "லாகூர்' படத்தை இயக்கிய சஞ்சய்பூரன் சிங் செüஹானின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். "லாகூர்' படத்துக்கே இவரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார் சஞ்சய். ஆனால் அப்போது லண்டனில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவில் கேட் வாக் செய்தபோது தவறி விழுந்துவிட்டார் மெஹரீன். அதனால் தனது அடுத்த படத்தில் அவரை புக் செய்துள்ளார் சஞ்சய்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், சுஜாதா, ரஜினி, ஜெய்கணேஷ் நடித்து 1974-ம் ஆண்டு வெளிவந்த படம் "அவள் ஒரு தொடர்கதை'. "தெய்வம் தந்த வீடு வீதி இருக்க...', "கடவுள் அமைத்து வைத்த மேடை...' போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம். அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே படத்தை 1976ம் ஆண்டு "அந்துலேனி கதா' என்ற பெயரில் தெலுங்கில் இயக்கினார் பாலச்சந்தர். இதில் கமல் தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்தார். சுஜாதா கதாபாத்திரத்தில் ஜெயப்ரதாவும் ஜெய்கணேஷ் கதாபாத்திரத்தில் ரஜினியும் நடித்திருந்தனர். அங்கும் இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. இப்போது இந்தப் படத்தை "கடவுள் அமைத்து வைத்த மேடை' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடவுள்ளனர். "அவள் ஒரு தொடர்கதை' பார்த்த படம்தான் என்றாலும் தெலுங்கில் ரஜினி நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு இந்த டப்பிங் படம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்ற கணக்கில் படத்தை வெளியிடவுள்ளது சிம்பொனி மூவீஸ் என்ற நிறுவனம்.
"சுப்ரமணியபுரம்', "போராளி' படங்களில் நடித்த ஸ்வாதிக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் ஸ்வாதி இனி கிளாமராக நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார். "நீங்களுமா?' என்று கேட்டால்... ""இதுவரை எனக்கு குடும்பப் பாங்கான வேடங்கள்தான் கிடைத்தன. அதனால் என்னால் கிளாமராக நடிக்க முடியாது என சில இயக்குநர்கள் நினைக்கலாம். அதற்காகத்தான் என்னாலும் கிளாமராக நடிக்க முடியும் என கூறினேன். வாய்ப்புக்காக அல்ல. சினிமாவில் கிளாமரும் ஓர் அங்கம் என்பதால்தான் அப்படிக் கூறினேன்'' என்கிறார்.
இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான தம்பி ராமையா, தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து "அனுபவ முகடுகள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். விரைவில் புத்தக வெளியீட்டை நடத்தவுள்ள தம்பி ராமையா வாரிசுகளால் கைவிடப்பட்டவர்களுக்காகவும் ஆதரவற்றோருக்காகவும் "அன்னை மடி' என்ற பெயரில் சென்னையில் முதியோர் இல்லம் ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அரை குறை ஆடையணிந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளுக்கு மத்தியில் சேலை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று கூறி அதைக் கடைப்பிடித்தும் வருபவர் வித்யா பாலன். அதற்குரிய பலனை இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது. பிரபல சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ.5 கோடி சம்பளம் கொடுத்து வித்யா பாலனை தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்த காலம் வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தங்கள் நிறுவன சேலைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது ஒரு கண்டிஷன்.
தான் ஒன்று சொன்னால் பத்திரிகைகளில் வேறு மாதிரியாக செய்தி வருவதாகக் கோபத்தில் இருக்கிறார் ஆண்ட்ரியா. அதனால் இனி பத்திரிகைகளுக்குப் பேட்டியே தருவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம். பகலில் ஒரு மாதிரியும் மாலைப் பொழுதின் மயக்கத்தில் ஒரு மாதிரியும் பேசினால் வேறு எப்படி செய்தி வரும் என்கிறது மீடியா வட்டாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.