தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும் சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் கலையழகுடன் சித்திரிக்கும் படைப்பாளியான அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் கூட. தமிழக அரசின் விருது பெறுவதற்காகச் சென்னைக்கு வந்திருந்த
அவரிடம் பேசியதிலிருந்து...
நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கிலக் கல்வி. தேவிகுளம் பீர்மேடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் என் தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லாரும் கங்காணிகள். இப்போது கண்ணன் தேவன் டீ என்ற பெயரில் உள்ள எஸ்டேட் அப்போது ஜேம்ஸ் ஃபின்லே என்ற பெயரில் இருந்தது. டீ எஸ்டேட்டை நடத்திய வெள்ளைக்காரன் எஸ்டேட்டில் வேலை செய்த ஸ்டாப்களின், கங்காணிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தினான். அதில் ஆங்கிலத்தில்தான் எல்லாப் படிப்பும்.
கல்லூரியில் படிப்பதற்காக திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு வந்தேன். கல்லூரியில் அப்போது பிரின்ஸ்பாலாக இருந்தவர் அலெக்ஸôண்டர் ஞானமுத்து. ஷேக்ஸ்பியர் இலக்கியங்களில் கரை கண்டவர். அவர் எனக்கு ஆங்கில இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். நானே விரும்பி பிரெஞ்சு இலக்கியத்தில் மாபாசானைப் படிக்கத் தொடங்கினேன். அப்போது திருநெல்வேலியில் எனக்கு தி.க.சி., என்.வானமாமலை, சிதம்பர ரகுநாதன் போன்றவர்கள் பழக்கமானார்கள். அவர்கள் "நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை' நடத்தி வந்தார்கள். அவர்களுடைய தொடர்பின் காரணமாக நான் தமிழில் வெளிவந்த கதைகளை - குறிப்பாக புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். ரஷ்ய இலக்கியங்களிலும் அளவுக்கதிகமான ஈடுபாடு ஏற்பட்டது. வெளிநாட்டு படைப்பிலக்கியங்கள் போலத் தமிழிலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுகதைகளை தமிழில் எழுத ஆரம்பித்தேன்.
அப்போது ஜனசக்தி வார மலரில் எனது கதைகள் வெளிவந்தன. சந்தால் ஆயுதப் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிறுகதைகள் எழுதியிருந்தேன். சிதம்பர ரகுநாதனின் "சாந்தி' இதழிலும் எனது கதைகள் வெளிவந்தன. அப்போதுதான் சுந்தரராமசாமியும் அதில் எழுத ஆரம்பித்திருந்தார். எனது சிறுகதைகள் "நோன்பு', "நிழல்யுத்தம்', "செல்வராஜ் கதைகள்' என்ற பெயரில் நூல்களாக வெளிவந்தன.
மக்களுக்கு நேரடியான காட்சி அனுபவத்தைத் தரும் - அவர்களிடம் உடனடியாகச் சென்று சேரும் நாடகங்களை எழுத நினைத்தேன். "பாட்டு முடியும் முன்னே' என்ற நாடகம் எழுதினேன். அதற்குப் பட்டுகோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல் எழுதினார். எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஆனார். டி.கே.பாலசந்திரன் தனது "மக்கள் நாடக மன்றம்' மூலம் தமிழ்நாடு முழுக்க அந்த நாடகத்தைக் கொண்டு சென்றார். அப்புறம் "யுக சங்கமம்' என்ற நாடகத்தை எழுதினேன். அது புத்தக வடிவிலும் பின்னர் வெளிவந்தது.
எனது தாத்தா காலத்திலேயே தேயிலைத் தோட்ட வேலைகளுக்குச் சென்றுவிட்டாலும், எங்களுடைய சொந்த கிராமமான திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் கிராமத்துடன் தொடர்பு இருந்து வந்தது. நெல்லை மாவட்டத்தில் அப்போது விவசாயிகள் முத்திரை மரக்கால் போராட்டம் நடத்தி வந்தார்கள். அந்தப் போராட்டங்களை எல்லாம் நேரில் பார்த்ததாலும், அந்தப் போராட்டங்களில் எனக்கு ஆர்வம் இருந்ததாலும் அதை மையப்படுத்தி "மலரும் சருகும்' என்ற நாவலை எழுதினேன்.
என் இளமைப் பருவத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் மிகவும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களிடம் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் படும் துயரங்களைக் கண்டிருக்கிறேன். அந்த அனுபவங்கள்தாம் பின்னாளில் நான் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வைச் சித்திரிக்கும் "தேநீர்' நாவல் எழுதக் காரணமாக இருந்தது. பின்னர் அதைத் திரைப்படமாகவும் எடுத்தார்கள்.
நெல்லையில் படித்து முடித்த பின்பு, சென்னையில் சட்டம் படிக்க வந்தேன். அதற்குப் பிறகு திண்டுக்கல்லில் வழக்கறிஞர். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பலருடன் நேரில் பழகியிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கைக் கதையைப் பல வருடங்களாக குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அந்தத் தொழிலாளர்களுக்கான பல வழக்குகளையும் நடத்தியிருக்கிறேன்.
தோல் பதனிடும் தொழிலாளர் வாழ்க்கையை நரக வாழ்க்கை என்று சொல்லலாம். அந்த வேலை செய்யும் தொழிலாளர்களின் விரல் நகங்கள் கறுத்துவிடும். தொழுநோய் வந்தவர்களின் விரல்கள் போல ஆகிவிடும். 50 ஆண்டுகள் அவர்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விஷயம். அவற்றையெல்லாம் நேரில் பார்த்து மனம் உருகியிருக்கிறேன். அவர்களுடைய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்திய ஏ.பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்களுடனும் பழகியிருக்கிறேன். இவற்றையெல்லாம் வைத்துத்தான் "தோல்' நாவலை எழுதினேன்.
எனது எழுத்துகளில் பழைய இலக்கியங்களின் சாராம்சம் இருக்கும். நிகழ்கால மனிதர்களின் வாழ்க்கை இருக்கும். இவ்விரண்டையும் இணைத்துத்தான் எழுதுகிறேன். அதுபோல ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் என்பது ஒரு தனிநபரின் சித்திரிப்பாக இருக்காது. உதாரணமாக, தோல் நாவலில் வரும் தொழிற்சங்கத் தலைவர் கதாபாத்திரம் அப்போதும், அதற்கு முன்பும் தமிழ்நாட்டில் வாழ்ந்த பல மக்கள் தலைவர்களின் கூட்டுக் கலவையான ஒரு கதாபாத்திரமே.
"தோல்' நாவலுக்கு தமிழக அரசு விருது கொடுத்திருக்கிறது என்ற தகவலை எனக்குத் தொலை பேசி மூலம் சொன்னார்கள். நான் நம்பவில்லை. சரியாகப் பார்த்தீர்களா? என்று பலமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் நம்பிக்கை வந்தது. ஏனென்றால் எனது படைப்புகளுக்கு விருது எல்லாம் கிடைக்கும் என்று எந்தக் காலத்திலும் நான் நினைத்ததுமில்லை; எதிர்பார்த்ததுமில்லை'' என்றார்.