ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் -28

சம்பத்தின் தந்தையார் மறைவு பெரியாரின் அண்ணார் சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி 4.2.50 அன்று தமது 74ஆம் வயதில் காலமானார். பெரியார் மாளிகையில் சோகம் சூழ்ந்தது. பல திசைகளிலிருந்தும் கழகத்தவர் திரண்
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் -28

சம்பத்தின் தந்தையார் மறைவு

பெரியாரின் அண்ணார் சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி 4.2.50 அன்று தமது 74ஆம் வயதில் காலமானார். பெரியார் மாளிகையில் சோகம் சூழ்ந்தது. பல திசைகளிலிருந்தும் கழகத்தவர் திரண்டு பெரியவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டத்தில் பெரியார் தமையனாரை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார். அண்ணா விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். சம்பத்தும் அவரது சகோதரர் செல்வம், தமக்கையார் மிராண்டா, தங்கை செல்லா, சுலோச்சனா சம்பத் அனைவரும் சோகமே உருவாகக் காணப்பட்டனர்.

விடுதலை 5.2.50 இதழில் "வைத்திய வள்ளல் மறைவு' என்னும் தலைப்பிட்டுத் தலையங்கம் இடம் பெற்றது.

அண்ணா சம்பத் அன்புச்சங்கிலி

அண்ணாவின் இதயத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர் சம்பத். அண்ணாவுக்கு லட்சக்கணக்கில் தம்பி இருந்தாலும் சம்பத்துக்கு அண்ணன் அண்ணாதான். அண்ணாவும் மற்ற தம்பிமார்களைவிட சம்பத் தமது உடன் பிறவாத தம்பி என்றே பாசம் காட்டினார். சம்பத்தை மட்டும்தான் "அவன்' "இவன்' என்று "அன்' விகுதியில் குறிப்பிடுவார். அந்த அளவு இருவரிடமும் நெருக்கம் ஓங்கி இருந்தது.

இப்படியாக அண்ணாவோடு மட்டுமல்லாமல் அண்ணாவின் குடும்பத்தாரிடமும் நெருங்கிப் பழகியவர் சம்பத். சமையல் கட்டுவரை சென்று ராணி அம்மையாரிடம் சமையல் குறிப்புகளை எல்லாம் சொல்லிச் சமைக்கச் செய்து அண்ணாவும் சம்பத்தும் ஒரே வட்டிலில் உண்டு, ஒரே கட்டிலில் தூங்கிய பாசமிகு நாட்கள் பசுமையானவை

பாரதிதாசனின் மணிவிழாவினையொட்டி சம்பத் நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் சம்பத்தின் "புது வாழ்வு' இதழுக்குக் கீழ்கண்ட கவிதையினை அளித்தார். அது மனிதகுலத்திற்கு விடுக்கும் அறைகூவலாகும்.

நடத்து லோகத்தை

மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று

இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்

தோளை உயர்த்து, சுடர்முகம் தூக்கு

மீசையை முறுக்கி மேலே ஏற்று

விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்

நகைப்பை முழக்கு நடத்து லோகத்தை

படேல் சம்பத் சந்திப்பு

இந்தியாவின் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் வல்லபாய்படேல் காலமானார். திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு அவர்மீது அளவற்ற மதிப்பு. மேலும் வகுப்புரிமை குறித்து அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யவேண்டும் என்று பட்டேல் பெங்களுர் வந்தபோது சம்பத் சந்தித்துக் கேட்டதற்கு பட்டேலும் சம்மதித்து, ஆவன செய்வதாகக் கூறினார். அதன்படி பட்டேல் மேற்கொண்ட முழு முயற்சியின் காரணமாக, அரசியல் சட்டம் 15ஆம் விதியில் 4ஆம் உட்பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டம் ஏற்பட்ட ஓராண்டில் இது முதல் திருத்தமாகும். எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் சம்பத் பட்டேலைச் சந்தித்ததுடன் இடைவிடாத கடிதத் தொடர்பால் இச்சட்டப்பிரிவு நிறைவேறக் காரணமாக இருந்தார். இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம், சமூக நிலையாலும், கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட குடி மக்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் ஆகியோரின் முன்னேற்றம் கருதி அரசு செய்யும் எந்தத் தனி ஏற்பாட்டையும் இந்த விதியின் ஒரு பிரிவோ 29வது விதியின் 2ஆம் உட்பிரிவோ தடை செய்யாது என்னும் திருத்தம் 1950 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நெடுஞ்செழியன் மீது குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் திராவிட அலுவலகத்தில் கழகத்தின் பொதுக்குழு கூடியது. மாவட்டச் செயலாளர் சி.வி.எம். அண்ணாமலை, கே.டி.எஸ். மணி, வெ. சம்பந்தம் ஆகிய தோழர்கள் விருந்து படைத்திடும் பணியில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு மாநிலம் முழுவதுமிருந்தும் 78 உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

பெரியாரை நம்பாமல் பல்லாயிரவர், சாமானியர்களான நம்மை நம்பி வந்துள்ளனர். எல்லோரும் ஏழை பாழையர்கள், ஏதுமற்றவர்கள், லட்சிய உறுதி என்ற ஒன்றை மட்டுமே நம்பி, கழகத்தின் கட்டளைகளுக்குச் சித்தமாக, எந்தத் தியாகத்திற்கும் தயாராயிருக்கிறார்கள். குன்றத்தூரில் மார்பில் குண்டடிபட்டு மாங்காடு குட்டி மாண்டிருக்கிறார் இவரைப் போன்ற லட்சிய வீரர்கள் நமக்குச் செல்வமாக கிடைத்துள்ளனர். சென்னைத் தடியடியில் மேலும் இரண்டு அடிபட்டிருந்தால் அப்பாதுரையாரை நாம் உயிரோடு பார்த்திருக்க முடியாது. என்.வி.என். மற்றும் எண்ணற்ற தோழர்கள் சிறைத்தியாகத்தை ஏற்றுள்ளனர். நம்முடைய ஆசைத்தம்பியை சிறை அதிகாரிகள் மொட்டையடித்து வெளியே அனுப்பியிருக்கின்றனர். இப்படியெல்லாம் மழலை நிலையிலேயே கழகம் மகத்தான தியாகங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

நான் இங்கே குற்றச்சாட்டாக அல்ல, ஆங்கிலத்தில், சுய விமர்சனம் என்பார்களே, அப்படியோர் விளக்கத்தை கேட்டறிவதற்காகச் சொல்கிறேன். ஆரம்பத்திலேயே தவறுகளைத் தவிர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகச் சொல்கிறேன். அதிலும் திராவிடர் கழகத்திற்கும் நமக்குமுள்ள வித்தியாசமே, நமது அமைப்பு ஜனநாயக அடிப்படை கொண்டது என்பதுதான். ஆகவே ஜனநாயக ரீதியாக விவாதிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நாட்டின் பல பாகங்களிலும் நம்முடைய தோழர்கள் 144 தடையை மீறிக் கூட்டங்களில் பேசிச் சிறை சென்றிருக்கின்றனர். ஆனால் நமது கழகத்தின் பிரசாரக் குழுச் செயலாளர் நெடுஞ்செழியன் திருச்சி மாவட்டம் நாரணமங்கலத்தில் தாம் ஒப்புக் கொண்ட கூட்டத்தில் தடையை மீறிப் பேசாமல் திரும்பி வந்தார். ஆனால் உள்ளுர்த் தோழர்கள் தடை மீறிப் பேசி சிறை சென்றிருக்கிறார்கள். இவர் ஏன் திரும்பி வந்தார்? அதற்கு என்ன விளக்கம் தருகிறார்?.... என்று சம்பத் கேட்டபோது பலரும் திகைத்தனர்.

முதல் பொதுக்குழுவிலேயே பிரச்சினையா? குருவி இப்போதுதான் கூடுகட்டுகிறது. இதிலே குற்றம் காண்பதா? இப்படிச் சிலர் குறுக்கிட்டனர். அண்ணாவின் நிழல் போன்றவர் சம்பத், அவர் தனியாக அண்ணாவிடமே இதைப் பேசியிருக்கலாம். இப்படியும் ஒருவர். வேறு சில உறுப்பினர்கள், சம்பத் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கழகத்தின் கட்டளையை ஏற்றுச் சாதாரணத் தொண்டன் தியாகம் செய்கிறான், பிரச்சார குழுச் செயலாளர் பின் வாங்கினால், என்ன அர்த்தம் என்று கேட்டனர்.

அண்ணா திகைத்தார். தேம்பினார். சம்பத்தை நோக்கி, அதைப் பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போது சட்டதிட்ட நகல் பற்றி முக்கிய விவாதம் நடைபெற வேண்டியிருக்கிறது. தம்பி அதை விட்டுவிடு.. என்று கெஞ்சினார். அதனையொட்டி சம்பத் முதல் மாநில மாநாடு சென்னையிலே நடத்துவது பற்றி தமது கருத்துகளைத் தெரிவித்து உரையை முடித்தார்.

தேர்தல் உத்தி சம்பத் வெளியீடு

3.3.51இல் தஞ்சை மாவட்ட தி.மு.க. மாநாடு என். ஜீவரத்தினம் தலைமையில் நடைபெற்றது. காஞ்சி கல்யாண சுந்தரம் சிறப்புரையாற்றினார். அண்ணா, சம்பத் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.

6.4.51இல் சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத்துக்கு, இந்தி ஆதிக்கம் ஒழிக முழக்கத்தோடு மக்கள் அணி திரண்டு கருப்புக் கொடி காட்டினர்.

மே 5, 6 தேதிகளில் சேலம் மாவட்ட தி.மு.க. மாநாடு நாகர்கோவில் வி.என். ஜான் தலைமையில் நடைபெற்றது. சத்தியவாணிமுத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அண்ணா, சம்பத், முன்னணியினர் பங்கேற்றனர். இரவு நடைபெற்ற "சந்திர மோகன்' நாடகத்தில் சிவாஜியாக சம்பத் நடித்தார்.

16.7.51இல் கோலார் தங்க வயல் வந்திருந்த பிரதமர் நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

மதுரைப் பொதுக்குழு:

17.7.51இல் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூடியது. சம்பத் உள்ளிட்ட 84 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கழகத்தின் சட்டதிட்டங்களை கே.ஏ. மதியழகன் முன்வைத்தார்.

வருகிற (1952) பொதுத் தேர்தலில் கழகம் கடைப்பிடிக்க வேண்டிய முறையையும் ஐக்கிய முன்னணி பிரச்சினையையும் பொதுக்குழு ஆராய்ந்தது.

இதுபற்றி, சம்பத் தமது கருத்தை வெளியிட்டார்:

திராவிடரின் கருத்தை அறியாமலும் தென்னகத்தின் உரிமைக்கு ஊறு விளைவித்திடும் வகையிலும், காங்கிரசாரின் ஏகாதிபத்திய எண்ணப்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தை நாம் ஏற்க முடியாது. இதைக் குறிக்கும் வகையில் இதற்கு அடையாளமாகக் கழகம் இந்த முதல் பொதுத் தேர்தலில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க வேண்டும். அண்ணா நினைப்பது போல் நாம் நம்முடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியது அவசியம் என்று கருதினாலும் கூட, அதற்கான மாற்று வழி உண்டு.

இந்தத் தேர்தலில் கழகம் குறிப்பிடும் கொள்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகிற கம்யூனிஸ்ட், மற்றும் காங்கிரஸ் அல்லாத திறமையாளர்களை பொதுச் செயலாளர் அண்ணா பரிசீலித்து, அந்த வேட்பாளர்களுக்கு கழகம் ஆதரவு தரலாம். இதனை இந்தப் பொதுக்குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன்.

இதனைப் பொதுக்குழு ஏற்றது.

(1) திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன். (2) சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ உறுப்பினரால் மேற்கண்ட பிரச்சினை சம்பந்தமாகவும், தி.மு.க. கழகக் கொள்கைக்கு ஆதரவு தேடும் வகையிலும் பணியாற்றி வருவேன். (3) சுரண்டலையும், எதேச்சாதிகாரத்தையும் ஒழிக்க, தி.மு.க. வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும்விதமாகச் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பணியாற்ற உறுதி கூறுகிறேன் என்னும் மூன்று உறுதிமொழிகள். அக்கொள்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகள்.

நடைபெறும் மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் அதிகாரபூர்வமாக தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் அதற்குப் பின்னரே கழகத் தோழர்கள் தேர்தல் களத்தில் இறங்கவேண்டும் என்றும் இப்பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

இத்தீர்மானத்திற்குப் பிறகு தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்பிய கம்யூனிஸ்ட் தோழர்களும், காங்கிரஸ் அல்லாதார் கட்சியினரும், சுயேட்சையாளர்களும், அவ்வப்போது அண்ணாவைச் சந்தித்து ஆதரவு கேட்டவண்ணமிருந்தனர்.



முதல் மாநில மாநாடு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, 1951 டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னை, எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் (பின்னாளில் கண்ணப்பர் திடல்) நடைபெற ஏற்பாடாகியிருந்தது. மதுரைப் பொதுக்குழுவில் இதுபற்றி மிக உற்சாகமாகப் பேசப்பட்டது. மாநாடு குறித்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டுத் தலைவர்: அண்ணா, திறப்பாளர்: குடந்தை கே.கே. நீலமேகம், கண்காட்சித் திறப்பாளர்: சி.பி. சிற்றரசு, வரவேற்புக் குழுத்தலைவர்: தொண்டர் படைத்தலைவர்: கே.எம். கண்ணபிரான் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்புக்குழு உறுப்பினர்கள்.

இவ்வாறு பொதுக்குழு தீர்மானித்தது.

தி.மு.க. மாளிகை திறப்பு விழா:

தி.மு. கழகத்துக்குச் சொந்தமாகத் தலைமை நிலையம் இயங்கச் சென்னை ராயபுரம் சூரியநாராயணச் செட்டித் தெருவில் 24ஆம் எண் உள்ள கட்டடம் ரூ.30,000க்கு 5.11.51-இல் வாங்கப்பட்டது. தாழ்வாரங்கள், கூடங்கள், அறைகள் வசதியாக அமைந்துள்ள எழிலான இரண்டு மாடிக் கட்டடம். இந்தக் கட்டடத்தைக் கண்டுபிடித்தவர் அண்ணாவின் நண்பர் தேவராஜ் முதலியார். அண்ணாவும், கே.ஆர். ராமசாமியும் நாடகங்கள் நடத்தி, அந்த வசூல் பணத்தில் கழகத்திற்காகக் கட்டடம் வாங்கப்பட்டது. இந்த வசூல் நாடகங்களில் சம்பத்தும் பாத்திரமேற்று நடித்தார்.

2.12.51 அன்று தலைமைக் கழகம் "அறிவகத்தை' தோழர் வி.எம். ஜான் திறந்து வைத்தார். அண்ணா, சம்பத் மற்றும் முன்னணியினர் பங்கேற்றனர். இவ்விழா மாலை நடைபெற்றது. முன்னணியினர் பேசியபின் இசைச்செல்வி ஜி. கஸ்தூரியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. தலைமை நிலையம் இங்கே செயல்படத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர். கட்சியில் சேர்ந்தார்:

திராவிடர் கழகத்திலிருந்தபோது அண்ணா, "சந்திர மோகன்' நாடகத்தை எழுதி அதில் சிவாஜியாக யாரை நடிக்க வைப்பது என்ற யோசனை எழுந்தபோது அருகிலிருந்த டி.வி. நாராயணசாமி கோவையில் எம்.ஜி. ராமச்சந்தர் இருக்கிறார். சில சில படங்களில் சிறு பாத்திரங்களில் நடிக்கிறார். அவரை இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிச் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டார்.

அதற்குப்பின் எம்.ஜி. ராமச்சந்தர் "மருத நாட்டு இளவரசி' "மர்மயோகி', "மந்திரகுமாரி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து, எம்.ஜி.ஆர். என்னும் பெயருடன் புகழ் பெறலானார். "மர்மயோகி' படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு புரட்சிக்காரராக கருப்புச்சட்டை போட்டு வந்து குதிப்பார்; கொட்டகையே அதிரும். இப்படித்தான் தேசியத்திலிருந்து விடுபட்டு திராவிட இயக்கத்திற்கு வரலானார். அந்தக் கட்டத்தில் (1951) அவர் டி.வி. நாராயணசாமி, கருணாநிதி ஆகியோரின் முயற்சியால், கதர்ச்சட்டை, குங்குமப்பொட்டு, ருத்திராட்ச மாலை ஆகியவற்றைக் களைந்துவிட்டுத் தி.மு.க.வில் சேர்ந்தார்.

சென்னையில் முதல் மாநில மாநாடு

கழகம் பிறந்த குறுகிய காலத்தில் 12 மாவட்ட மாநாடுகளை மகத்தான முறையில் நடத்தி, ஆட்சியாளரின் கடும் அடக்கு முறைகளுக்கிடையே பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி தியாக முத்திரை குத்திக் கொண்ட முன்னேற்றக் கழகம் மிடுக்கோடு தன் முதல் மாநில மாநாட்டை 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13,14,15,16 தேதிகளில் நடத்தியது. இந்த மாநாட்டுப் பணிகள் இரவு பகல் நடந்து கொண்டிருக்கும்போது அண்ணா, சம்பத் முன்னணியினர் இரவு 2.00 மணிவரையிலும்கூட பணிகளை, உடனிருந்து உற்சாகப்படுத்துவர்.

அண்ணா தமது பேருரையைத் தொடங்குகின்ற போது, "தலைவர் அவர்களே', "தோழர்களே' என்றெல்லாம் விளிக்கவில்லை. தமது "கணீர்' என்ற குரலில், "கண்ணீர்த்துளிகளே' என் "கண்ணின் மணிகளே', "கழகக் காவலர்களே' என்று தொடங்கியபோது, எதிரே குழுமியிருந்த மக்கள் வெள்ளம் உணர்ச்சி வசப்பட்டு பலத்த கரவொலி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பேச்சு களை கட்டிய நேரத்தில் கூட்டத்தில் ஆரவாரம் குழப்பம், எம்.ஜி.ஆர். வருகிறார் என்னும் முழக்கத்தோடு அமளி ஏற்பட்டது. அண்ணா பேச முடியாமல் அமர்ந்துவிட்டார். கூட்டத்தின் மையப்பகுதியில் இருந்து ஸ்டண்ட் நடிகர்களின் பாதுகாப்புடன் எம்.ஜி.ஆர் மேடை நோக்கி வருகிறார். அவர் மேடைக்கு வந்து சேர 10 நிமிடங்களாயின. அதுவரை அமளி, கூச்சல். மேடையில் ஏறிய எம்.ஜி.ஆர். அண்ணாவுக்கும் கூட்டத்தினருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பின்னால்போய் உட்கார்ந்துவிட்டார். கூட்டத்தில் அமைதி திரும்பவில்லை. ஆனாலும் அண்ணா தம் பேச்சை தொடரலானார். குரலை உயர்த்தி 10 நிமிடம் விடாது பேசிப் பார்த்தார். கூச்சலடங்கவில்லை. எம்.ஜி.ஆரை பேசச் சொல்லுங்கள் என்று ஒரு பக்கத்திலிருந்து கூச்சல் கிளம்பியது. ஆத்திரப்பட்ட அண்ணா வேட்பாளர் பட்டியல் பத்திரிகையில் வரும் என்று அத்துடன் மாநாடு முடிந்தது என்றும் அறிவித்துவிட்டார்.

அண்ணா, சம்பத் முதலான தோழர்கள் காரில் ஏறிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றனர். அனைவருமே ஆத்திரவயப்பட்டிருந்ததால் காரில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கடற்கரையில் அமர்ந்ததும் சம்பத் அமைதியைக் கலைத்து ஆவேசமாக இரண்டொரு வார்த்தைகளைக் கூறினார்.

""கட்சியின் முதல் மாநில மாநாடு. ஏழைத் தொண்டர்கள் அண்டா குண்டாக்களை அடமானம் வைத்துவிட்டு அண்ணா என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க வந்திருக்கிறார்கள். 4 நாட்கள் மாநாட்டில் ஏதாவதொரு நாளில் எம்.ஜி.ஆர் பேசிவிட்டுப் போயிருக்கலாம். கடைசியாக அண்ணா பேசுகிற போதுதான் வரவேண்டுமென்று பலப்பரீட்சை செய்திருக்கிறார். இதை அண்ணா சாதாரணமாகக் கருதக் கூடாது. திராவிடர் கழகத்திலிருந்த கட்டுப்பாடு தி.மு.கவில் இல்லை, கூத்தடிக்கிறார்கள் என்று கட்சி நகைப்பிற்கிடமாகி விடக்கூடாது''

இவ்வாறு சம்பத் சொன்னார். ஆளுக்கொரு கருத்தைச் சொன்னார்கள். என்.வி.என். அழுதார். ""ஏன் என்ன ஆச்சி?'' என்று கேட்டார் அண்ணா. ""லட்சக்கணக்கில் மக்கள் வந்தும் உங்கள் பேச்சைக் கேட்க முடியாமல் போய்விட்டதே'' என்றார் என்.வி.என். "அடுத்த மாநாட்டில் பேசிவிடலாம்' என்று சொல்லி அண்ணா பேச்சை மாற்றினார்.

(தொடரும்)

தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com