புத்தர் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்!

தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற பெரிய பெரிய கோவில்களுக்கு எல்லாம் தொல்பொருள்துறையின் பாதுகாப்பும், புனரமைப்பும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் ய
புத்தர் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்!

தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற பெரிய பெரிய கோவில்களுக்கு எல்லாம் தொல்பொருள்துறையின் பாதுகாப்பும், புனரமைப்பும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் ஆயிரக்கணக்கான வரலாற்றுச் சின்னங்கள் கவனிப்பாரற்று, சிதிலமைடைந்து கொண்டிருக்கின்றன. அப்படிச் சிதிலமடைந்த கோவில்களில் ஒன்றுதான், நாகைமாவட்டத்தில் பெருஞ்சேரி என்னும் சிற்றூரில் இருக்கும் புத்தர் கோவில்.

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் சுந்தரப்பன் சாவடியில் இருந்து கிளியனூர் செல்லும் சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதுதான் இந்தப் பெருஞ்சேரி.

புராணங்களில் பிருஹக்ரேணிபுரம் என்ற பெயரில் இவ்வூர் குறிப்பிடப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் வாகிஸ்வரசுவாமி திருக்கோவில் அறிவிப்பு கூறுகிறது.

ரிஷிகோவில் என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் புத்தர் கோவிலில்தான் அந்தப் புத்தர் சிலை இருக்கிறது.

இந்தச் சிலை கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என்று "பெüத்தமும் தமிழும்' நூலை எழுதிய சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.

பெரிய கோவில்களுக்கு நிகராக இந்தக் கோவில் பாதுகாக்கப்படவில்லை என்றாலும், திருவிழா நடக்கும் காலங்களிலாவது ஓரளவுக்குச் சுத்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போதோ ஆடு, மாடுகள் அடையும் இடமாக உள்ளது.

கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் ஏழைகளின் குடியிருப்புகள் வந்துவிட்டன. இவற்றையெல்லாம் பார்த்து கோவிலில் உள்ள புத்தரென்னவோ சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

தமிழகத்தின் பல இடங்களில் இதுபோல புத்தர் சிலைகள் இருந்ததாக சீனி.வேங்கடசாமி தனது நூலில் குறிப்பிடுகிறார். குறிப்பாக, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில், நாகப்பட்டினத்தில், மாயவரத்தில் எல்லாம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்ததற்கான நிறைய ஆதாரங்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

பெருஞ்சேரியில் இருக்கும் புத்தர் சிலையும் அந்த ஆதாரங்களில் ஒன்று என்று தெரிகிறது.

பெருஞ்சேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அக்காலத்தில் ஏராளமான புத்த சமயத்தினர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

தஞ்சைப் பகுதியில் பிற்காலச் சோழர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்பு செழித்து வளர்ந்த பக்தி இயக்கத்துக்கு முன்னர் புத்த, சமண சமயங்கள் செல்வாக்குடன் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக இந்தப் புத்தர் சிலை உள்ள ரிஷி கோவிலைச் சொல்லலாம்.

புத்த சமயத்தினருக்கும், சைவ சமயத்தினருக்கும் அக்காலத்தில் மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை நினைவூட்டும்விதமாக, இப்போதும் இந்தப் பகுதியில் நடக்கும் கோவில் விழாவொன்று இருக்கிறது என்றால் வியப்படையாதீர்கள்.

இந்தப் பகுதியில் ஒவ்வோராண்டும் மாசி மாதத்தில் நடைபெற்றுவரும் வாகிஸ்வரசுவாமி கோவில் விழாவின் ஒரு பகுதியாக ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. அதாவது, பெருஞ்சேரிக்கு அருகில் இருக்கும் வழுவூரிலிருந்து யானை வடிவில் வந்த அசுரச் சக்தியை வதம் செய்த சிவன், பெருஞ்சேரிக்கு வந்து காட்சி அளித்துவிட்டுத் திரும்பச் செல்வார். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது புத்தர் சிலை உள்ள ரிஷி கோவிலின் முன் பகுதியில், மனித உருவ பொம்மைகளை நிறுத்தி வைத்து அதை உடைத்து நொறுக்குகிறார்கள். இச்செயல் மதங்களுக்கு இடையில் நடந்த சச்சரவுகளை நினைவூட்டுகின்றன.

இந்த நிகழ்ச்சியையும் அருகில் இருக்கும் தாருகா வனத்தில் ரிஷிகள் யாகம் வளர்த்த வரலாற்றையும், யானை உரித்த சிவன் அங்கே திருக்கோலம் பூண்டிருப்பதையும் சேர்த்துப் பார்க்கும்போது, பெருஞ்சேரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. இதை வரலாற்று அறிஞர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

எது எப்படியிருப்பினும் ரிஷி கோவிலும் அதனுள்ளிருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையும் தொன்மையானவை என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த தொன்மையான சின்னத்தைப் பாதுகாப்பது நமது கடமை.

ரிஷி கோவிலில் இன்றும் இரக்கமுள்ள எவரோ அவ்வப்போது ஓர் அகல் விளக்கை ஏற்றி வைத்து வணங்குகிறார்கள்.

மக்களின் அறியாமையை நினைத்தோ, தொல்பொருள் துறையினரின் மெத்தனத்தை நினைத்தோ, தனது கையறு நிலையை நினைத்தோ புத்தர் சிரித்துக் கொண்டே இருக்கிறார், கனக்கும் துயரத்தையும் பொருட்படுத்தாமல்.

-அக்களூர் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com