எம்.ஜி.ஆரின் முதலாளி

நாட்டுப்புற கதைகளில் புது பரிசோதனை என கருதப்பட்ட படம் 'பாதாள பைரவி'.
எம்.ஜி.ஆரின் முதலாளி

வாகினியில் கே.வி. ரெட்டி, "பக்த போதனா', "வேமனா', "குணசுந்தரி கதா' படங்களை இயக்கியிருந்தார். "குணசுந்தரி கதா' படத்தில் சம்பந்தப்பட்ட மூலா நாராயணசாமிக்கு அவசரத்துக்கு என் அண்ணன் பி.என். ரெட்டி உதவாதது, கே.வி. ரெட்டிக்குப் பிடிக்கவில்லை. காரணம் வாகினியின் படங்களுக்கு மூலா பிரதான சக்தியாக இருந்ததை கே.வி. ரெட்டி உணர்ந்திருந்தார். இதனால் மூலா நாராயணசாமிக்கு உதவிய என்னுடன் கே.வி. ரெட்டி இணைந்து பணியாற்ற வழிவகுத்தது. இதனால் கே.வி. ரெட்டியுடனான இரண்டாவது யூனிட் விஜயாவுக்குக் கிடைத்தது. மூலா நாராயணசாமி, கே.வி. ரெட்டியின் பள்ளித் தோழரும்கூட.

கே.வி. ரெட்டி அப்போதுதான் வாகினியின் "குணசுந்தரி கதா' படத்தை முடித்திருந்தார். அடுத்து விஜயாவின் இரண்டாவது படமாக "பாதாள பைரவி'யை இயக்கினார். நாட்டுப்புற கதைகளில் புது பரிசோதனை என கருதப்பட்ட படம் "பாதாள பைரவி'. இந்தப் படம் அதன் கதாபாத்திர அமைப்பிற்காகவும் புகழ்பெற்றது. என்.டி. ராமாராவின் தோட்டராமு கதாபாத்திரம் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உருவாக்கப்பட்டது.

விஜயாவிற்கு கே.வி. ரெட்டியின் பங்களிப்பு ஆபாசமில்லாத நல்ல பொழுது போக்குப் படங்களாக அமைந்தன. அவர் பாக்ஸ் ஆபீஸ் படமாக இயக்கி வெற்றிபெறச் செய்துகொண்டிருந்தார்.

படத்தில் பிரம்மாண்டத்துக்கே முக்கியத்துவம் தந்து, பட்ஜெட்டுக்கு உடன்படாத இயக்குநர் கே.வி.ரெட்டி.

கே.வி. ரெட்டி அவர்கள் விஜயாவுக்காக பணியாற்றிய கடைசி படம், "உமா சண்டி கவுரி சங்கருல கதா'. இதில் அவரது மாயாஜாலம் குறைந்திருந்தது. காலங்கள் மாறிக்கொண்டேயிருந்தன. மாயாபஜாரில் தெரிந்த கே.வி. ரெட்டியின் முத்திரையை இதில் காண முடியவில்லை.

கே.வி. ரெட்டி, பாதாள பைரவியிலிருந்து "ஜகதேக வீருனி கதா' வரை சிகரத்திற்கே சென்றார். பின் அந்த சிகரத்திலிருந்து மெதுவாக சரிந்துவிட்டார்.

ரசிகர்களின் விருப்பத்தை நாடித் துடிப்பை அறிந்து ஸ்கிரிப்ட் தயார் பண்ணுவார் கே.வி.ரெட்டி. அவர் தெலுங்கில் இயக்கிய "குணசுந்தரி கதா'  பெரும் வெற்றி பெற்றது.

"மிஸ்ஸியம்மா'வை அடுத்து தன்னுடைய கிராமிய பட ஈடுபாட்டை "சந்திரஹாரம்' படத்தின் தோல்விக்குப்பின் ஈடுகட்ட விரும்பிய சக்கரபாணி, தெலுங்கில் வெற்றிபெற்ற "குணசுந்தரி கதா'வை தமிழில் "குணசுந்தரி' என்ற பெயரில் தயாரிக்க அப்படமும் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அன்றிலிருந்து சக்கரபாணி கிராமிய, புராணப்படங்களை எடுப்பது பற்றி கனவில்கூட நினைக்கவில்லை. இத்தனைக்கும் சக்கரபாணியும் கே.வி. ரெட்டிக்கு சமமான ஒரு ஸ்கிரிப்ட் எழுத்தாளருங்கூட.

சில ஆண்டுகளுக்கு முன் "வார்த்தா" என்னும் பிரபல தெலுங்கு நாளேட்டில் கடந்த 75 ஆண்டுகளில் வெளியான தெலுங்கு படங்களில், சிறந்த பத்து படங்களாக விஜயா வாகினி தயாரித்த ஆறு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதிலும் முதலாவது படமாக விஜயாவின் "மாயாபஜார்' படம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் மனதில் இன்னமும் விஜயாவின் கொடி பறந்துகொண்டிருக்கிறது, அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது அப்படக் குழுவினருக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.

விஜயா புரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தின் அடித்தளத்தில், அடியேனுடன் தூண்களாக இருந்து கட்டடத்தை நிர்மாணித்தவர்கள் மட்டுமல்ல, நான் படவுலகில் பிரகாசிக்கவும் வாழ்வில் உயரவும் உறுதுணையாக இருந்தவர்கள் சக்கரபாணி, கே.வி.ரெட்டி, எல்.வி. பிரசாத்

ஆகியோர். அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்...

13. தேவர் பிலிம்ஸ்

தமிழ், தெலுங்கு பட உலகில் சாதனை படைத்து வந்த நட்சத்திரங்கள், கதை வசனகர்த்தாக்கள், இயக்குநர்கள் ஆகியோரில் பலர் தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டு அதன் பொற்காலம் (1952-1961) தொடர அடித்தளம் அமைத்தார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்நாளில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணியாற்றி வந்த அந்தக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அவர்களது எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் போவதைப்போல் சுதந்திரப் பறவைகளாக வெளியே வந்து தனிப்பட்ட முறையில் பல திரைப்பட நிறுவனங்களில் பணியாற்றியதுதான். அதனால் அவர்களுக்கு பெயர் புகழுடன் வருவாயும் கூடியது.

ஏற்கெனவே பெற்ற திரைப்பட அனுபவத்துடன் தனிப்பட்ட திறமையும் சேர அவர்களும் படத்தயாரிப்பில் ஈடுபட்டனர்.

திரை உலகில் ரசனையும் மாறியது. இந்த நிலையை உணர்ந்த முதல் தயாரிப்பாளராக, ஸ்டூடியோ முதலாளியாக என் தந்தை விளங்கினார். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப புதிய கலைஞர்கள் புதிய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோருடன் புதிய, நம்பகமான தயாரிப்பாளர்களையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே வரவேற்று ஊக்குவிக்க விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரானது. அதனால் படவுலகில் பல புதிய தயாரிப்பாளர்கள் உள்ளே வந்தனர். திரைப்படப் பண்ணை செழித்து வளர திறம்பட பாடுபட்டனர்.

விஜயா வாகினி வரவேற்ற புதிய தயாரிப்பாளர்களுள் முதன்மையானவர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். தேவர் பிலிம்ûஸ அவர் எப்படி உருவாக்கினார் அவர் எப்படி விஜயா வாகினி குடும்பத்துக்கு அறிமுகமானார் சுவையான நிகழ்ச்சி அது...

சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், 1955ஆம் ஆண்டில் பத்து பேரை கூட்டாகச் சேர்த்து ஒரு படக் கம்பெனியை ஆரம்பித்தார். அவர்கள் போட்ட முதலீடு தலா ரூ.2500 தான். படக்கம்பெனியின் பெயர் தேவர் பிலிம்ஸ்.

தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் படமெடுக்க இருப்பதையும், தம்பி எம்.ஏ. திருமுகத்தை டைரக்டராக்க விரும்புவதையும் தமது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் தேவர் சொல்ல, எம்.ஜி.ஆர். பெருமகிழ்ச்சியடைந்து, அவரால் முடிந்த உதவிகளைச் செய்வதாகச் சொல்லி தேவரை உற்சாகப்படுத்தினார்.

முதல் படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை "தாய்க்குப்பின் தாரம்'. எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாகவும், பி.பானுமதி கதாநாயகியாகவும் நடிக்க ஒப்புக்கொண்டனர். அப்போது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தனர்.

தேவர் பிலிம்ஸ் படத்தைத் எங்கே தயாரிப்பது, கோவையிலா? சென்னையிலா?

தேவரின் இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒளிப்பதிவாளரும், அவரது நண்பருமான ஆர்.ஆர். சந்திரன், படப்பிடிப்பை கோவையில் வைத்துக் கொள்வதைவிட சென்னையில் வைத்துக் கொள்வதுதான் நல்லது. அது லாபகரமானதாகவும் இருக்கும் என்று காரணங்களோடு விளக்கி, சென்னை வாகினி ஸ்டூடியோவிலேயே படப்பிடிப்புக்கான வசதிகளை தேவருக்கு ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லி, தேவரை என் தந்தையாரிடம் அழைத்து வந்தார்.

முதன் முதலாக அப்போதுதான் தேவர்  என் தந்தையாரைச் சந்தித்தார். தேவரின் எளிமையும், பகட்டில்லாத பேச்சும், நாணயமும் என் தந்தையாரைக் கவர்ந்துவிட்டன. அதேபோல தேவருக்கும் என் தந்தையாரிடம் கண்ட நேர்மையும். பண்பாடும். மதிப்பு,  மரியாதையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம். இருவருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள், வளர்ந்தவர்கள். இயற்கையையும் விலங்கினங்களையும் பறவைகளையும் நேசித்தவர்கள்.

வாகினியில், தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பை வைத்துக்கொள்ள தேவையான வசதிகளைத் தருவதாக என் தந்தையார் வாக்களித்தார். இந்த முடிவை எம்.ஜி.ஆர். அவர்களும் மகிழ்ந்து வரவேற்றார்.

அந்நாளில் சென்னையில் ஜார்ஜ் டவுனில் பிரபல ஆர்யபவன் ஓட்டலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வடபழனியில் இடம் வாங்கி ரேவதி ஸ்டூடியோவை நிர்மாணித்து, ஒரு திரைப்படத்தையும் தயாரித்து வந்தார். ஆனால் திரைஉலகில் முன்அனுபவமில்லாத அவர், அப்படத்தை முடிப்பதற்குள் பட்ட இன்னல்களை விவரிக்க இயலாது. இதனால் இன்னொருவர் வாயிலாக அவர் என் தந்தையாரை அணுகி, தமது நிலையை விளக்கிச் சொல்ல... என் தந்தையாரும் அப்படம் சம்பந்தமாக உதவினார்.

பிரச்னையில் இருந்து விடுபட்ட அவர், என் தந்தையாரிடம், நான் தொடர்ந்து படவுலகில் நீடிக்க விரும்பவில்லை. உங்கள் வாகினி ஸ்டூடியோவுக்கு சேர்ந்தாற்போல இருக்கும் ரேவதி ஸ்டூடியோவையும் நீங்களே எற்று நடத்துங்கள். இந்த ஸ்டூடியோவைக் கொடுத்துவிட்டால் இனி எனக்கு பிசினஸ் சம்பந்தமாக வடபழனி பக்கம் வரவேண்டி இருக்காது என்று சொல்ல, அதற்கு என் தந்தையாரும் உடன்பட்டு தவணை முறையில் முழுத் தொகையையும் தந்து, அந்த நாலரை ஏக்கர் பரப்பளவு உள்ள ரேவதி ஸ்டூடியோவை வாங்கி, அதற்கு விஜயா ஸ்டூடியோ என்று பெயரிட, 14 படப்பிடிப்பு தளங்கள் கொண்ட விஜயா - வாகினி தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவாகத் திகழ்ந்தது.

அத்துடன் திரைப்படங்களுக்கு நிதியுதவி வழங்க ஃபிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தையும் ஏற்படுத்தினார் என் தந்தையார். அதன் நிர்வாகியாக தென்காசி குற்றாலத்தைச் சேர்ந்த பி.சி. சுப்பராஜா நியமிக்கப்பட்டார்.

1955ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி தேவர் பிலிம்ஸின் முதல் படமான தாய்க்குப்பின் தாரம் படத்திற்கான பூஜை போடப்பட்டது. அந்த நன்னாளில்தான் எம்.ஜி.ஆர்.  என் தந்தையார் நட்பும் தொடங்கி, தொடர்ந்து... பிரிக்க முடியாத அளவுக்கு பல்லாண்டுகள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. என் தந்தையார் காமிராவை இயக்கி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளுக்கு அன்றைய தினம் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

"தாய்க்குப்பின் தாரம்' படப்பிடிப்பின்போது, படப்பிடிப்பு தளத்தில் சட்டை அணிந்து கொள்ளாமல் பணிவுடன் நின்று கொண்டிருந்தவர்தான் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் என்பது அப்படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கே அப்போது தெரியாது. அவரும் படத்தில் நடிக்கத்தான் வந்திருக்கிறார் என்றே எண்ணிக் கொண்டிருந்தார்கள். பின்பு விவரம் தெரிந்தவுடன் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தேவர் எளிமையான தயாரிப்பாளராக இருந்தார். கடைசி வரையில் சட்டை அணியாமலேயே உடம்பில் சந்தனப் பூச்சுடன் காட்சியளித்த தயாரிப்பாளர் அவர்.

""வாகினி ஸ்டூடியோவின் அதிபர் பி. நாகிரெட்டியார்  என் முதல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய எல்லா படங்களையும் தொடங்கி வைப்பவர் ரெட்டியார் . என் முதல் படத்தில் என்னுடைய பங்காக எனக்குக் கிடைத்தது ரூ.30,000'' என்று பெருமிதத்துடன் கூறுவார் தேவர்.

தேவருக்கு படவுலகிலேயே நிலைத்து நிற்க வேண்டும் என்கிற எண்ணம் அப்போது இல்லை. கிடைத்த லாபத்தைக் கொண்டு கோவையில் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தவே விரும்பினார். என் தந்தையார் நிதியுதவி செய்கிறேன் என்று சொன்னது தேவரை படவுலகில் நிலைக்கச் செய்துவிட்டது.

அதன் வாயிலாகத் "தாய்க்குப்பின் தாரம்' படத்தில் தொடங்கி, தேவரின் முதல் நான்கு படங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. என் தந்தையாருடன் சேர்ந்து, அவரது நிதியுதவியுடன் "தாய்க்குப்பின் தாரம்', "நீலமலைத் திருடன்", "செங்கோட்டை சிங்கம்", "வாழவைத்த தெய்வம்' ஆகிய நான்கு படங்களைத் தயாரித்தவர் தேவர்.

"தாய்க்குப்பின் தாரம்' படத்திற்குப் பிறகு தயாரான படங்கள் சுமாராக ஓடிய படங்களாக அமைந்தன. எனவே, படத் தயாரிப்பைத் தொடர்வதா, வேண்டாமா என்று தேவர் துவண்டு போயிருந்தபோது, என் தந்தையார் தேவரை அழைத்து, உதவிக்கரம் நீட்டி இனி நீங்கள் தனியாகவே படமெடுக்கலாம். இதுவரையில், இப்போது உள்ள அனைத்து உதவிகளும் தொடரும் எனத் தைரியமூட்டி, தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு புனர்வாழ்வு கொடுத்தார்.

என் தந்தையாரின் ஆலோசனைப்படி, தேவர்  1960ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் தனி உரிமையாளராகி, எம்.ஜி.ஆர். அவர்கள் மீண்டும் தேவர் பிலிம்ஸில் நடிக்க, "தாய் சொல்லைத் தட்டாதே' படத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடிக்க 16 படங்களைத் தயாரித்த தனிப்பெரும் தயாரிப்பாளராகத் திகழ்ந்தார் தேவர்.

தம்முடைய திரையுலக வாழ்வுக்கு தெம்பூட்டி புனர்வாழ்வு தந்த என் தந்தையாருக்கு தேவர் அவர்கள் எப்படி நன்றி செலுத்தினார் தெரியுமா?

1956ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்' படம் தொடங்கி, தேவர் அவர்கள் 1977ல் புகழுடம்பு அடையும் வரையில், அவர் தயாரித்த அத்தனை படங்களுக்கும் வாகினி ஸ்டூடியோ 4வது தளத்தில், என் தந்தையார் காமிராவை துவக்கி வைத்து ஆசி வழங்கிய பின்னரே படங்களை உருவாக்கினார். அந்த அளவுக்கு ராசியான கை என என் தந்தையாரை நன்றியுடன் நேசித்தார் தேவர்.

திரையுலகில், படத்தயாரிப்பில் தமக்கு வழிகாட்டிய என் தந்தையாரை நன்றியுடன் நேசித்த தேவர் அவர்களைப் போல, தமக்கு முன்னோடியாக இருந்த ஒரு மாமனிதரை என் தந்தை நேசித்தார்.

யார் அவர்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com