ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குண்டான முகம் இளைக்க..!

எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம். வயது 27. என் முகம் குண்டாக உள்ளது. முகம் இளைப்பதற்கு வழி என்ன? கழுத்துப் பகுதி கறுப்பாக உள்ளது. பழைய நிறத்துக்கு வர என்ன செய்வது? திருமண மேடையில் நான் அழகாகக் காட்சி தரவும், எனது திருமணம் இனிதே நடைபெறவும் ஆயுர்வேத மருத்துவம் உதவுமா?
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குண்டான முகம் இளைக்க..!
Updated on
2 min read

எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம். வயது 27. என் முகம் குண்டாக உள்ளது. முகம் இளைப்பதற்கு வழி என்ன? கழுத்துப் பகுதி கறுப்பாக உள்ளது. பழைய நிறத்துக்கு வர என்ன செய்வது? திருமண மேடையில் நான் அழகாகக் காட்சி தரவும், எனது திருமணம் இனிதே நடைபெறவும் ஆயுர்வேத மருத்துவம் உதவுமா?

சந்திரன், ஊர் குறிப்பிடப்படவில்லை.

முகம் வீக்கமாக இருக்கிறதா? அல்லது சதை பருத்து, முகம் தொங்குகிறதா? போன்ற விவரங்கள் முக்கியமானவை. தலையினுள் நீர்க்கோவை ஏற்பட்டு அதனால் முகம் குண்டாயிருந்தால் அது அழகான குண்டல்ல. வைத்தியம் தேவைப்படும். ரத்த சோகையினால் சிலருக்கு முகம் குண்டாகத் தெரியும். மதுபானம் சாப்பிடும் பல ஆண்களுக்கும் முகம் குண்டாகத் தெரிகிறது. இவை அனைத்தும் சரியல்ல.

கழுத்துப் பகுதி வெயிலில் படும்படி அடிக்கடி வெளியே செல்ல நேர்ந்தால் கறுத்துப் போகும். ரசாயனத் தொழிற்சாலையில் வேலை செய்தாலோ, உரம் தயாரிக்கும் கூடங்களில் வேலை செய்தாலோ, தோல் கறுத்துப் போகும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமின்மை, உணவில் போதுமான அளவுக்குத் தோல் ஊட்டத்தைத் தரும் சத்தில்லாத கறிகாய்களையும், நெய்ப்பில்லாத வறட்சியான உணவுகளையும் சாப்பிடுவது போன்றவற்றாலும் தோல் கறுத்துவிடும். பச்சைப் பயறு, கடலை மாவு போன்றவற்றை முகம் கழுவப் பயன்படுத்தாமல் வறண்ட முகத்தின் மீது, அடிக்கடி சோப் போட்டு முகம், கழுத்தைக் கழுவினாலும், தோல் வறண்டு கறுத்துவிடும். இப்படி பல காரணங்களிருக்க, நீங்கள் எதனால் முகம் குண்டாக இருக்கிறது, கழுத்து கறுப்பாக ஆனது என்பதற்கான விளக்கம் தெரிவிக்கவில்லை.

இத்தனை இருந்தும் நீங்கள் விரைவில் மாப்பிள்ளையாக மணமேடையில் அமர இருப்பதால், உங்களுக்கு ஏதேனும் வகையில் உதவிட முடியுமா என்று மனம் ஏங்குகிறது. ஏலாதி சூரணம் என்ற பெயரில் ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. அதை தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீரில் கலந்து, முகத்தைத் தண்ணீர் விட்டு அலம்பிய பிறகு, கீழிருந்து மேலாகத் தேய்த்தும், உருட்டி உருட்டித் தேய்த்தும் சுமார் 1/4 - 1/2 மணி நேரம் ஊறிய பிறகு, அலம்பி விடுவது நல்லது. காலையில் 6 மணி முதல் 6.30 மணிக்குள் இந்தச் சிகிச்சையை செய்து கொண்டு விடுவது நல்லது. வெயில் நன்றாக வந்த பிறகு இதைச் செய்து கொள்வது கூடாது. மாலையில் 6 மணி முதல் 6.30 மணிக்குள் காலையில் குறிப்பிட்டது போலவே முகத்தை அலம்பிக் கொள்வது நல்லது.

கழுத்திலுள்ள கறுப்பு நிறம் மாறி இயற்கை நிறம் பெற ஏலாதி கேர தைலம் எனும் மூலிகை தேங்காய் எண்ணெய்யைப் பூசி அரை மணி நேரம் ஊறிய பிறகு, பச்சைப் பயறு பொடியைக் குளிர்ந்த நீரில் கரைத்து, அந்த எண்ணெய் பிசுக்கை அகற்றப் பயன்படுத்தவும். இதையும் காலை, மாலை என்று இருவேளை செய்து கொள்ளலாம்.

குங்குமாதி தைலம் எனும் மருந்தை மூக்கினுள் 2 -4 சொட்டுகள் விட்டு உறிஞ்சித் துப்பிவிடுவதும் நல்ல சிகிச்சைமுறைதான். முகத்திலுள்ள பருமன் குறைந்து தோலுக்கு அழகையும் மென்மையையும் வசீகரத்தையும் கூட்டும். காலை, இரவு பல் தேய்த்த பிறகு, மூக்கினுள் விட்டுக் கொள்வது நல்லது. இரவு படுக்கும் முன் இளநீர்க் குழம்பு எனும் கண் சொட்டு மருந்தை ஓரிரு துளிகள் விட்டுக் கொள்வதால், முகத்திலும் கண்களிலும் உள்ள நீர்க்கட்டு ஏதேனுமிருந்தால், அது நீர்த்து வெளியேறிவிடும். இதன் மூலமாகவும் குண்டான முகத்தை மெலிதாக்க முடியும். வாயினுள் அரிமேதஸ் தைலம் 3 -5 மி.லி. விட்டுக் கொப்பளித்துத் துப்புவதால், முகத்தின் உட்புற கன்னத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து குண்டான முகத்தை மெலிதாக்கி அழகுறச் செய்யும்.

முகத்தை உப்புசமாக்கும் மதுபானம் பழக்கமிருந்தால், அதைத் தவிர்க்கவும். சட்டையிலுள்ள காலர் பொத்தானைக் கொண்டு கழுத்துப் பகுதியை மூடிக் கொண்டு வெயிலில் செல்லவும். உணவில் இனிப்பும் புளிப்பும் தவிர்க்க வேண்டிய சுவைகளாகும். பகல் தூக்கம் கூடாது. இவை அனைத்தும் செய்து வந்தால், திருமணத்தின்போது நீங்கள் அழகாகக் காட்சி தருவீர்கள். நல் வாழ்த்துகள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com