
கெளதம சித்தார்த்தர் தன் முப்பத்தைந்தாவது வயதில் போதி என்னும் ஞானத்தை ஒரு மரத்தடியில் பெற்றார். எனவே அந்த மரம் போதிமரம் என்று பெயர் பெற்றது. அதுதான் தமிழில் அரச மரம். புத்த சமயம் பரப்ப வந்த துறவிகள் போதி மரத்தையும் கொண்டு வந்தார்கள். போதி மரம் அரச மரமாகிவிட்டது. அதாவது மரங்களுக்குள் அரசன் அரசமரம்.
ஞானம் பெற்ற பின்னர் கெüதம சித்தார்த்தர் தன்னை "ததாகதர்' என்று அழைத்துக் கொண்டார். அது பாலி மொழி சொல். அதற்குப் பூரண ஞானம் பெற்றவர் என்பது பொருள். ஞானம் பெற்ற பின்னர் தான் பெற்ற ஞானத்தை யாருக்கு உபதேசிப்பது என்று யோசித்தார். வாரணாசிக்கு அருகில் சாரநாத் என்னும் இடத்தில் இசிபட்னாவில் மான் சோலையில் தான் விட்டு விட்டு வந்தவர்களுக்கு ஞான உபதேசம் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அவர்கள் முதலில் புத்தரை ஞானம் பெற்றவர் என்று நம்பவில்லை. ஆனால் விரைவிலேயே அவர் உபதேசம் கேட்கலானார்கள்.
"மனிதர்களுக்கு ஒளி தரும் ஒரே கருவி அவர்கள் மனம் மட்டுமே' என்றார். புத்தரின் முதல் உபதேசமே அதுதான். அவரின் முதல் பேருரை தர்ம சக்கரத்தை உருட்டியது என்று சொல்லப்படுகிறது. அவர் குதிரை மீதேறி கானகம் வந்தார். ஐந்தாண்டுகள் அலைந்து திரிந்து ஞானம் பெற்றார். ஞானத்திற்காக அவர் அலைந்த காலத்திலோ, ஞானம் பெற்ற பின்னர் உயிர் வாழ்ந்த நாற்பத்தைந்தாண்டு காலத்திலோ அவர் குதிரை, யானை மீது ஏறியது இல்லை. பல்லக்கில் அமர்ந்தது கிடையாது. வண்டியில் பயணப்பட்டதும் இல்லை. புத்தர் தன் வாழ்நாளில் கடலையே கண்டது இல்லை. அவருக்கு மனக்கடல்தான் தெரியும். தண்ணீர் நிறைந்த கடலை அவர் பார்த்ததே இல்லை. ஆனால் பொங்கும் மனக்கடலை அடக்கவே அவர் வழிகாட்டி வந்தார்.
புத்தர் கோடை காலத்தில் கால்நடையாகவே நடந்து நடந்து சென்று மகத மன்னன் பிம்பிசாரன், அவன் மகன் அஜாதசத்ரு, பெற்றெடுத்த தந்தை சுத்தோதனர், வளர்த்த சிற்றன்னை பிரஜாபதி கெüதமி, மனைவி யசோதரா, தம்பி நந்தன், மகன் ராகுலன், சிற்றப்பா மகன் ஆனந்தன், கொலைக்காரன் அங்குலி மாலன், சண்டாளிகா பிராக்ரதி, நாவிதன் உபாவி எல்லாம் புத்தரிடம் உபதேசம் பெற்றவர்கள்தான். ஆனால் கடைசிவரையில் யார் யாரெல்லாம் சீலத்தோடு வாழ்ந்து ஞானம் பெற்றார்கள் என்பது குறித்து புத்தர் கணக்கெடுப்பு ஏதும் செய்யவில்லை. உபதேசம் மட்டும்தான் அவர் கடமையாக இருந்தது.
புத்தர் வாழ்க்கையில் குறைவாக வருகிறவன் அவர் மகன் ராகுலன்தான். மூன்றோ நான்கோ இடத்தில்தான் அவன் வருகிறான். புத்தர் கடுமையான மொழிகள் பேசியது என்றால் அது அவனிடம்தான்.
அவர் எப்போதும் இனிமையான சொற்களையே பேசினார். சொல்லாலும், செயலாலும் யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பது அவர் வாழ்க்கை முறையாக இருந்தது. அவர் மக்களின் நேசராக இருந்தார். அறிவுக்கு எட்டாத எதன் மீதும் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. மக்களுக்காகவே அவர் பேசினார். அவர் பேசிய மொழிய மாகதி மொழி. அதாவது மகத நாட்டு மக்கள் பேசி வந்த மொழி. அதற்கு எழுத்துக்கள் இல்லை. அதுமட்டுமல்ல. அவர் காலத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் என எந்த மொழியும் எழுத்து மொழியாக இல்லை. எல்லாம் பேச்சு மொழியாகவே இருந்தன. புத்தர் தன் காலத்தில் எதையும் எழுதவில்லை.
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் துயருற்ற சீடர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி என்ன செய்வது என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுபத்ரன் என்ற சீடன் "அவர் பரிநிர்வாணம் அடைந்தது நல்லதுதான்'. ஒவ்வொருவரையும் நீங்கள் இன்னது செய்ய வேண்டும்; இன்னது செய்யக்கூடாது என்று தடுத்து வந்தார். அந்தத் தடையில்லாது போய்விட்டது. நாம் சுதந்திரமாகச் செயல்படலாம்' என்றான்.
தர்ம உபதேசத்தை ஒழுங்குபடுத்தி வைக்காவிட்டால் அவர் என்ன உபதேசம் புரிந்தார் என்பதே தெரியாமல் போய்விடும் என்று பயந்தார்கள். எனவே புத்தர் கூறியவற்றையும், அவர் செயல்பாடுகளையும் தொகுத்து வைப்பதென முடிவு செய்தார்கள். எனவே புத்தரின் நிழல்போல கூடவே இருந்த ஆனந்தனிடம் சுத்தபிடகம், அபிதம்ம பிடகம் இரண்டையும் தொகுக்கச் சொன்னார்கள். அதில்தான் புத்தரின் நேரடியான உபதேசமாகிய தம்ம பதம் வருகிறது. உபாலியிடம் விநயபிடகத்தைத் தொகுக்கச் சொன்னார்கள். பின்னர் ராஜகிருகத்தில் ஐநூறு பிட்சுக்கள் கூடினார்கள். அதுதான் பெüத்த முதல் மாநாடு. அதில் ஆனந்தன், உபாலி தொகுப்புக்கள் ஒப்பிக்கப்பட்டன. சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. புத்தர் சொன்னதற்கு முரணில்லாத வகையில் இருக்கிறது என்பது உறுதியான பிறகு அவை அங்கீகாரம் பெற்றன. அதனையே வழிகாட்டியாக பிட்சுகள் ஓதி வந்தார்கள். அசோகன் காலத்தில் பாலி மொழியில் எழுதப்பட்டன. எனவேதான் பெüத்த சமய நூற்களுக்கான மொழியாக பாலி இருந்து வருகிறது.
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அசோகன் பெüத்த சமயத்தில் சேர்ந்தான். புத்தரின் தர்ம உபதேசத்தைப் பரப்புவதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தான். புத்தர் பிறந்த கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்த கயா, உபதேசம் புரிந்த சாரநாத், ராஜகிருகம், பரிநிர்வாணம் அடைந்த குசிநரா- என்று முக்கியமான இடங்களில் எல்லாம் ஸ்தூபிகள் அமைத்தான். அவரின் உபதேசங்களைப் பொறித்து வைத்தான். அவை பாலி, பிராகிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் உள்ளன.
அசோகன் தன் கல்வெட்டுக்களில் தன்னை தேவனாம்பிரியன் பிரியதர்ஷன், தர்மராஜா என்று அழைத்துக் கொள்கிறான். பெüத்த சமயத்திற்கென ஒரே ஒரு காப்பியந்தான் இருக்கிறது. அது தமிழில் எழுதப்பட்ட மணிமேகலை. எழுதியவர் மதுரை கூலவணிகன் சீத்தலைசாத்தனார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.