திரைக் கதிர்

60-களில் வெளியான பெரும்பாலான படங்களில் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறைவான வசனங்கள், அதிகமான பாடல்கள் என்ற பாணியில் படங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் அந்த டிரெண்ட் மாறியது. வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
திரைக் கதிர்
Updated on
2 min read

60-களில் வெளியான பெரும்பாலான படங்களில் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறைவான வசனங்கள், அதிகமான பாடல்கள் என்ற பாணியில் படங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் அந்த டிரெண்ட் மாறியது. வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பாடல்களின் எண்ணிக்கையை 5 அல்லது 6 என்ற அளவில் குறைத்து, படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் புதிதாக உருவாகும் "பறவை' என்ற படத்தில் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அஞ்சனா, ஷில்பா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை புதுமுகம் ராஜேஷ் விஜய் இயக்குகிறார். ""இசையில் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. தனியாக பல இசைக்குழுக்களை வைத்து நடத்தியிருக்கிறேன். முன்னணிப் பாடகர்கள் எல்லோரிடமும் நெருங்கிய பழக்கம் உண்டு. இது காதல் கதை என்பதால் பழைய பாணியில் கதை சொல்லத் தோன்றியது. அதனால்தான் பாடல்களுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறேன்'' என்றார் இயக்குநர் ராஜேஷ் விஜய்.

-----------------------------------------------

"திமிரு', "காளை' படங்களை இயக்கியதுடன் "மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்த தருண்கோபி, தற்போது "பேச்சியக்கா மருமகன்' என்ற படத்துக்கு கதை எழுதி ஹீரோவாக நடிக்கிறார். ""மாயாண்டி குடும்பத்தார்' உறவுகளை மையப்படுத்தி உருவானதால் பெரும் வெற்றியைப் பெற்றது. அதனால் அதே ஃபார்முலாவில் இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறோம். மாமியார்}மருமகனுக்கு இடையே நடக்கும் மோதல்கள்தான் இதுவரை வந்திருக்கிறது. இந்தப் படம் மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையேயான தாய், மகன் பாசத்தை மையமாக கொண்டு உருவாகிறது. மாமியார் வேடத்தில் ஊர்வசி நடிக்கிறார். அவரது மருமகனாக நான் நடிக்கிறேன். பிரியங்கா ஹீரோயின். தம்பி ராமையா, செவ்வாளை, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக 10-க்கும் அதிகமான பட வாய்ப்புகளை இழந்துள்ளேன்'' என்றார் தருண்கோபி.


-----------------------------------------------

வெற்றிமாறனின் உதவியாளர் பிருத்வி ராஜ்குமார் கதை எழுதி இயக்கும் படம் "நான் ராஜாவாகப் போகிறேன்'. நகுல், சாந்தினி, கௌரவ், அவனி மோடி நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார். ""சமூக சேவகர் மணிவண்ணனை மானசீகமாக ஏற்று அவர் வழியைப் பின்பற்றும் சாந்தினியை தொடரும் பிரச்னைகளும், சாந்தினி யாரென்று தெரியாமலேயே உதவிக்கு போய் பிரச்னைகளை தீர்க்கும் நகுலும் சந்திக்கும் புள்ளிதான் திரைக்கதை. இதைத்தவிர இடைவேளைக்குப் பின் வரும் இன்னொரு நகுலுக்கும் இந்த திரைக்கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் பரபரப்பான க்ளைமாக்ஸ். இமாச்சல பிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கதை பயணிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. போபால் விஷ வாயுக் கசிந்த யூனியன் கார்பைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கதையின் முக்கியக் காட்சிகள் படமாகியிருக்கின்றன. பாலிவுட் நடிகை ஷெரீன் கான் சிறப்பு தோற்றம் ஏற்றுள்ளார்'' என்றார் இயக்குநர் பிருத்வி ராஜ்குமார்.

-----------------------------------------------

சென்னையில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படம் "யமுனா'. பாலுமகேந்திராவின் பள்ளியில் நடிப்பு பயின்ற சத்யா ஹீரோ. தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யா ஹீரோயின். கணேஷ் பாபு கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். சென்னையில் குடிசைப் பகுதி சமூகத்தின் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழும் கேரக்டரில் நடிக்க இங்குள்ள பல நடிகைகளிடம் பேச்சு நடத்தினோம். இத்தனை கனமான கேரக்டரில் நடிக்க முடியாது. இப்படி நடித்தால் இமேஜ் போய் விடும் என்று அவர்கள் மறுத்த நிலையில், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீரம்யாவிடம் கதை சொன்னேன். கேரக்டர் உணர்ந்து உடனே நடிக்க வந்தார். 6 மாதங்கள் தமிழ் கற்று நடித்தார். சிறப்பு "ழ' கரம் வராததால் அவரால் டப்பிங் பேச முடியாத சூழல், இதையடுத்தே தமிழ் பயிற்சி பெற்று டப்பிங் பேசி நடித்திருக்கிறார். அந்த அளவுக்கு இந்தக் கதையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்'' என்கிறார் கணேஷ்பாபு.

-----------------------------------------------

கேரளத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தமிழில் உருவாகும் படம் "தீக்குளிக்கும் பச்சை மரம்'. சின்னத்திரை தொகுப்பாளர் பிரஜன் ஹீரோ. மலையாளத்தில் பிரபலமான பிரயூ ஹீரோயின். எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, டி.பி.கஜேந்திரன் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். வினீஸ் - பிரபீஷ் என்ற புதுமுக இரட்டை இயக்குநர்கள் இப்படத்தை இயக்குகிறார்கள். பள்ளிப் பருவத்தில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு சென்று விடுதலையாகும் ஒருவனை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது. அதன் விளைவாக அவன் எடுக்கும் முடிவுகள்தான் திரைக்கதை. மருத்துவமனை பிணவறையில் நடக்கும் படு பயங்கரமான காட்சிகளின் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு திருட்டுக்கள் சமூகத்தில் எப்படி மறைமுகமாக நடக்கிறது என்பதையும் படம் பிடிப்பதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

-----------------------------------------------

"விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து கமல் இயக்கி நடிக்கும் படத்துக்கு "பிட்டர் சாக்லேட்' (கசப்பு சாக்லேட்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கமல் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கும் ஒரு முக்கியமான கேரக்டரை உருவாக்கி உள்ளாராம். இதில் அவர் நடிப்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். இது பற்றி அவர், ""என் அப்பாவின் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. வருத்தம் மற்றும் சந்தோஷமாக சொல்வது என்னவென்றால் இப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை'' என்று கூறியுள்ளார். இந்நிலையில் "விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்தை வரும் ஆகஸ்ட் 15-ல் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

-----------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com