திரைக்கதிர்

ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்துக்கு வந்திருக்கிறார் சேரன். சர்வானந்த், நித்யாமேனன் நடிக்கின்றனர்.
திரைக்கதிர்
Updated on
2 min read

"ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்துக்கு வந்திருக்கிறார் சேரன். சர்வானந்த், நித்யாமேனன் நடிக்கின்றனர். படம் குறித்து பேசிய சேரன், ""வாழ்வில் எந்த உயரத்துக்கும் ஒருவரால் செல்ல முடியும் என்பதுதான் கதை. இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப தொழில்நுட்பம், இசை, காமெடி எல்லாம் இதில் இருக்கிறது. அத்துடன் அழுத்தமான கதையும் உள்ளது. தமிழ் திரையுலகில் கிராமத்து கதை இயக்குநர், கமர்ஷியல் இயக்குநர் என்று பிரித்து தரம் பார்க்கிறார்கள். பல வெற்றிப் படங்கள் கொடுத்தும் எனக்கு சில லட்சங்களில்தான் சம்பளம் பேசப்பட்டது. கமர்ஷியல் வெற்றி கொடுத்தால் அந்த இயக்குநருக்கு கோடியில் சம்பளம் தருகிறார்கள். பிரபல ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்க சென்றால் இவர் "பொற்காலம்', "ஆட்டோகிராப்' போன்ற படக் கதைகளைத்தான் இயக்குவார் என்று எண்ணி கால்ஷீட் தர மறுத்து விடுகிறார்கள். கிராமத்து பாணியிலான படம் மட்டுமில்லாமல் கமர்ஷியல் படங்களையும் என்னால் இயக்க முடியும் என்பதை நிருபிக்கவே இந்தப் படம்'' என தன் வருத்தத்தையும் பதிவு செய்தார்.

ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் "சுற்றுலா'.  கதை எழுதி இப்படத்தின்  மூலம் இயக்குநராகிறார் ராஜேஷ் ஆல்பிரட்.  ""காதல்தான் பிரதானமாக இருக்கும். வீட்டின் எதிர்ப்பை மீறி நண்பர்களின் உதவியுடன் திருமணத்துக்கு தயாராகும் காதல் ஜோடிக்கு உருவாகும் ஒரு பிரச்னைதான் திரைக்கதையின் மையம். பதிவு திருமணம் செய்வதற்காக ஊட்டிக்கும் போகும் காதல் ஜோடியின் நண்பர்கள், திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களுக்கு என்ன பிரச்னை? பின் அந்த ஜோடியின் காதல் என்ன ஆனது? என்பதுதான் கிளைமாக்ஸ். தங்களது உயிருக்காகவும், நண்பர்களின் உயிருக்காகவும் நடக்கும் போராட்ட நிமிடங்கள் பரபரப்பானது. சுற்றுலா தளங்களில் நடந்த சில உண்மை சம்பவங்களோடு கற்பனையைக் கலந்திருக்கிறேன். படத்தின் முழுப் படப்பிடிப்பையும் அதாவது 75 நாள் ஷூட்டிங்கையும் ஊட்டியிலேயே நடத்தி முடித்திருக்கிறோம்'' என்றார் இயக்குநர் ராஜேஷ் ஆல்பிரட்.

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு காதலியுடன் பயணம் செய்யும் தமிழ் இளைஞனுக்கு நடக்கும் திடீர் பிரச்னையும் அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பதையும் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸில் சொல்ல வருகிறது "விரட்டு'. ஒயிட் கேண்டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்களே அதிகம். இந்தப் படத்தின் சிறப்புப் பாடலை தரண்குமார் இசையில் ஆண்ட்ரியாவும், ராகுல் நம்பியாரும் பாடி உள்ளனர். மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தனி அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளனர். குமார்.டி படத்தை இயக்கியுள்ளார். தாய்லாந்து, மலேசியா பயண காட்சிகள் எதார்த்தமாக அந்தந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து சண்டை இயக்குநர் தோதோ, மலேசிய சண்டை இயக்குநர் வில்லியம் இருவரும் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்துக்காக நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் "கஜ புஜ புஜ கஜ தெனாலிராமன்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் வடிவேலு. "போட்டா போட்டி' படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடித்த "பில்லா 2' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி ஒமணக்குட்டன். 2008-ம் ஆண்டில் இந்திய அழகியாக தேர்வானவர். அதே ஆண்டில் ஆசிய அழகிப் போட்டியில் 2-வது இடத்தை பிடித்தார். வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா.... என்று அவரது தரப்பில் கேட்ட போது, ""வடிவேலு படம் பற்றி யாரும் பேசவில்லை. வதந்தியாகத்தான் எங்களுக்கும் செய்தி கிடைத்தது. ஓரிரு முக்கிய படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. அது பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது'' என்றனர். ஏற்கெனவே வெளிவந்த "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்துக்காக வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மனோதத்துவ அடிப்படையிலான குற்றப் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகிறது "ஆதியும் அந்தமும்'. புதுமுகங்கள் அஜய், மிட்டலி அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். எல்.வி.கணேசன் இசையில், கதை எழுதி இயக்குகிறார் கவுசிக். "" ஒரு வட்டத்தின் ஆதியும் அந்தமும் ஒன்றுதான். அதாவது எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே சென்று முடியும். இப்படியொரு வித்தியாசமான கதை அமைப்பில் படத்தை உருவாக்கியிருக்கிறேன். முதல் படத்துக்கு எல்லோரும் எளிதான பார்முலாவைத்தான் கையாளுவார்கள். அப்படி இல்லாமல் சிந்தனையை தூண்டும் அளவில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். மனோதத்துவத்தின் அடிப்படையில்  நடக்கும் ஒரு குற்ற சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான பகுதி மற்றும் ஆக்ஷன் திரில்லர் இரண்டையும் கதைப்படுத்தியது சவாலாக இருந்தது. ஊட்டியில் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியும் சென்னையும் கதைக்களத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன'' என்கிறார் இயக்குநர் கவுசிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com