

பரம ஏழை ஒருவன், பணத்தில் கொழித்து உச்சத்தில் வாழும் ஒருவன் என இரு வித வாழ்க்கை வாழும் இளைஞர்களை மையப்படுத்தி உருவாகி வரும் கதை "புலிவால்'. பணக்கார இளைஞனாக பிரசன்னா, பரம ஏழையாக விமல் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் சந்திக்கும் தருணங்களில் அனன்யா, ஓவியா, இனியா நடிக்கின்றனர். "கண்ணும் கண்ணும்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற மாரிமுத்து, இப்படத்தை எழுதி இயக்குகிறார். பிரசன்னாவின் விலை உயர்ந்த செல்போன் விமல் கைகளில் கிடைக்கிறது. தன் செல்போனில் பல ரகசியங்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் பிரசன்னா, இடைவிடாத முயற்சிகளுக்குப் பின் தன் செல்போனை கண்டுபிடிக்கிறார். அதன் பின் பிரசன்னாவுக்கும், விமலுக்கும் இடையே நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகளே கதை. எதிர்பாராத திருப்பங்களுடன் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துக்காக ராதிகா சரத்குமாருடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
"ஜில்லா', "ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களைத் தவிர தமிழில் படங்கள் இல்லை; "நாயக்', "பாட்ஷா' என தெலுங்கில் ஹிட் படங்கள் கொடுத்தும் மகேஷ்பாபு, பவன்கல்யாண் பட்டியலில் காஜலுக்கு இடமில்லை. என்ன காரணம்... தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களோடு நடித்து வந்த காஜலுக்கு திடீரென மார்க்கெட் உச்ச நிலைக்குப் போனது. இது அவரை பாலிவுட்டிலும் உச்சத்துக்கு அழைத்து சென்றது. மார்க்கெட் இருக்கும் போதே சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தினார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ""இனி வயதான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த இரு முடிவுகளாலும் காஜலின் சினிமா கேரியரில் பேரடி விழுந்திருக்கிறது. சம்பள விஷயத்தில் இறங்கு முகம் காட்ட மறுத்ததால், வேறு ஹீரோயின்களை தேடிச் செல்கின்றனர் தயாரிப்பாளர்கள். கமல் உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க மறுத்ததால் சக ஹீரோக்கள் கோபம் அடைந்தனர். காஜலை ஓரம் கட்டும் வகையில், சமந்தா, அமலாபால், ஸ்ருதி ஆகியோரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
ஜெனி பவர்புல் மீடியா நிறுவனம் தயாரித்து வரும் படம் "அது வேற இது வேற'. வர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். சானியாதாரா ஹீரோயின். புதுமுகம் திலகராஜன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ""பல வித கனவுகளுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ஹீரோவுக்கு, எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. கனவுகளையும், காதலையும் சுமக்கும் அந்த ஹீரோ மீது திடீரென்று கொலைப்பழி விழுகிறது. இதனால் அவனது வாழ்க்கையின் போக்கே மாறுகிறது. பழியில் இருந்து மீண்டு வந்து தன் கனவுகளை அவன் நனவாக்கினானா... என்பதே கதை. கொலைச் சம்பவ பின்னணி கொண்ட திரைக்கதை என்றாலும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு ஆகியோர் முதன் முறையாக காமெடி காட்சிகளில் இணைந்துள்ளனர். செந்தில் - கவுண்டமணி, வடிவேலு - சிங்கமுத்து கூட்டணி போல் இந்த கூட்டணியும் பேசப்படும்'' என்கிறார் இயக்குநர் திலகராஜன்.
கர்நாடக இசை மேதை புரந்தரதாசர் வேடத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அவரது நண்பர் ராஜ்பகதூர். பெங்களூரைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் ரஜினியின் உருவத்தை கர்நாடக இசை மேதை புரந்தரதாசர் தோற்றத்தில் வரைந்தார். ஸ்ரீபுரந்தர தாசா இண்டர்நேஷனல் டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவில் இந்த ஓவியத்தை ரஜினியிடமே தருவதற்காக அவருக்கு அழைப்பு விடுத்தனர். "கோச்சடையான்' டப்பிங்கில் இருப்பதால், விழாவுக்கு ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் சென்றார். அதை ஏற்றுக் கொண்ட விழாக் குழு, ராஜ்பகதூரிடம் அந்த ஓவியத்தை அளித்தனர். பின்பு விழாவில்... ""ரஜினி நடிகர் மட்டுமல்ல. ஆன்மிகவாதி. புரந்தரதாசர் வடிவில் இருந்த ரஜினியின் உருவம் என்னை கவர்ந்தது. ரஜினி சார்பாக இந்த ஓவியத்தை பெறுகிறேன். இங்கு கிடைத்த எல்லா மரியாதைகளும் ரஜினிக்கே உரியது. இந்த ஓவியத்தை அவரிடம் அளிப்பதுடன், புரந்தரதாசர் வேடத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எனது எண்ணத்தையும் அவரிடம் தெரிவிப்பேன்'' என ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் ராஜ்பகதூர்.
குற்றாலத்தில் நடந்த உண்மை சம்பவம் "குற்றாலம்' என்ற பெயரில் படமாகிறது. சஞ்சய்ராம் எழுதி இயக்கும் இப்படத்தில், புதுமுகம் வாலி ஹீரோவாக நடிக்கிறார். மீனு கார்த்திகா ஹீரோயின். படம் குறித்து சஞ்சய்ராம்... ""என் படங்களில் எப்போதுமே ஆக்ஷனுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். இப்போதுள்ள சினிமா சீஸனுக்கு ஏற்றவாறு இப்படத்தில், காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீஸன் காலம் போக மற்ற நேரங்களில் வறட்சிதான். இந்த மாதிரியான சூழலில் ஊரையே செழிப்பாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி வசூல் வேட்டை நடத்துகின்றனர் மாமன், மச்சான் இருவர். அப்போது ஊருக்கு பிழைப்புத் தேடி அக்கா, தங்கை வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒருவன் மீது காதல் மலர்கிறது. இதன் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ். இப்படத்தின் புரமோஷனுக்காக ""காதலை கண்டுபிடிச்சவன் யாரு...'' எனத் தொடங்கும் லவ் பெயிலியர் என்ற இசை ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபி ஆண்டனி இசையில் வந்துள்ள இப்பாடலுக்கு யூ டியூபில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றார்.
"கர்ணன்', "வசந்த மாளிகை' வரிசையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது "பாசமலர்'. 1961-ல் வெளிவந்த இப்படம் அண்ணன் - தங்கை பாசப் போரட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. சிவாஜி அண்ணனாகவும், சாவித்ரி தங்கையாகவும் பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர். சாவித்ரியின் கணவராக ஜெமினிகணேசன் நடித்திருந்தார். ஆரூர் தாஸ் வசனத்தில் பீம்சிங் இயக்கினார். 52 ஆண்டுகளை கடந்த நிலையில் நவீன தொழில்நுட்பத்தில் இப்படம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டி.டி.எஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் சினிமாஸ்கோப்பில் மெருகேற்றப்பட்டுள்ளது. வெற்றி சினி ஆர்ட்ஸ் சார்பில்சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன் இப்படத்தை வெளியிடுகிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.