திரைக்கதிர்

மலையாள, தெலுங்கு படங்கள் இருந்தாலும், கோலிவுட்டையே பெரிதும் நம்பியிருந்தார் அமலாபால். "வேட்டை' வெளியாகி ஒரு
திரைக்கதிர்
Updated on
2 min read

மலையாள, தெலுங்கு படங்கள் இருந்தாலும், கோலிவுட்டையே பெரிதும் நம்பியிருந்தார் அமலாபால். "வேட்டை' வெளியாகி ஒரு வருடத்துக்கு மேலாகியும், அடுத்தடுத்து படங்கள் வெளிவராமல் அப்படியே நிற்கிறது.  ஹீரோ ஜெயம் ரவியின் கெட்டப் மாற்றத்தால் "நிமிர்ந்து நில்' பட ஷூட்டிங் 40 சதவீதத்தோடு நிற்கிறது. சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது "தலைவா'. இதனால் அமலாபால் அப்செட். இதற்கிடையே தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக நடித்த "பெஜவாடு', தமிழில் "விக்ரம் தாதா' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இடைவெளி குறித்து கருத்து தெரிவிக்கையில், ""முப்பொழுதும் உன் கற்பனைகள்', "வேட்டை', "காதலில் சொதப்புவது எப்படி' என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து  படங்கள். அதன் பின் சரும பாதுகாப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அந்த இடைவெளியால்தான் படங்கள் இல்லை. இருந்தாலும் "தலைவா', "நிமிர்ந்து நில்' இரு படங்களுமே இன்னும் பெரிய உயரங்களுக்கு கொண்டு போகும்'' என்கிறார் அமலாபால்.

கோலிவுட் ஹீரோக்கள் நேரடி ஹிந்தி படங்களில் நடிப்பது போல், பாலிவுட் ஹீரோக்கள்  நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பது குறைவு. கமலின் அழைப்பை ஏற்று "ஹேராம்' படத்தில் நடித்தார் ஷாரூக்கான். கதையின் அழுத்தத்தை உணர்ந்து "ஆரண்ய காண்டம்' படத்தில் நடித்தார் ஜாக்கி ஷெராப். "கோச்சடையான்' படத்திலும் சிறப்பு தோற்றம் ஏற்க உள்ளார். அமிதாப் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தாலும், அந்த வாய்ப்பு அவருக்குக் கை கூடவில்லை. இது போக, பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்கள் தமிழகத்திலும் வெளியாக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் டான்ஸ் சக்ரவர்த்தி என்று பாலிவுட்டில் பெயர் பெற்ற மிதுன் சக்ரவர்த்தியை "யாகாவாராயினும் நாகாக்க' என்ற படத்தில் நடிக்க கேட்டார் இயக்குநர் சத்யபிரகாஷ். கதையின் பாத்திரம் பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் ஹீரோவாக ஆதி நடிக்கிறார். மும்பை மாடல் நிக்கி, நாசர், நரேன், ரிச்சா பலோட் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

"ஜெய்ஹிந்த்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கிறார் அர்ஜுன். பல்வேறு மாநிலங்களில் ஷூட்டிங் முடித்ததையடுத்து, தற்போது மைசூரில் முகாமிட்டுள்ளது படக்குழு. சிறைச்சாலையில் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு ஏக்கர் நிலத்தில் சிறைச்சாலை போன்ற செட் உருவாக்கப்பட்டு ஷூட்டிங் நடந்தது. இதில் அர்ஜுன், வில்லன் பாத்திரம் ஏற்றுள்ள ராகுல் தேவ் சண்டையிடும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மைசூரில் ஷூட்டிங் முடிந்ததும், அதன் தொடர்ச்சியான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளன. ஜெய்ஹிந்த்' படத்தின் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாக கதைக்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. வருங்கால இந்தியாவில் கல்விக்கு முக்கியத்துவம் எப்படி இருக்கும் என்பதுதான் கதையின் மையம். ""குழந்தைகள்தான் வருங்கால இந்தியா என்கிறோம். அந்த குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வி எப்படிப்பட்டது...? என்பதை யதார்த்தமாக சொல்ல வருவதுதான் "ஜெய்ஹிந்த் -2'' என்கிறார் அர்ஜுன். 

சினேகாவை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர், கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் பிரசன்னாவுக்கு குறைந்துவிட்டன. "சென்னையில் ஒரு நாள்' உள்ளிட்ட பல படங்களில் ஓரிரு காட்சிகளில் நடிக்கவே வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. வந்த வாய்ப்புகளைக் கை விட மனமில்லாமல் நடித்து வந்தார். இந்நிலையில் பிரசன்னா ஹீரோவாக நடிக்கும் படம் "கல்யாண சமையல் சாதம்'. காதல், காமெடி, குடும்ப சென்டிமெண்ட் எல்லாம் கலந்த கலவையாக உருவாகி வருகிறது. ""நிஜம்தான். நானே எதிர்பார்க்காத விஷயங்கள் சினிமாவில் நடந்து விட்டன. இருந்தாலும் கவலையில்லை. குறிப்பிட்ட சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும், எல்லாப் படங்களுமே திருப்திதான். இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத்தின் கதையைச் சொன்ன போதே, கண்ணுக்கு முன் ஒவ்வொரு காட்சியும் நின்றது. அந்த அளவுக்கு ரசனையான திரைக்கதையாக அமைந்திருக்கிறது. அதுவுமில்லாமல் இப்படத்தில் ""பல்லு போன ராசா...'' என்ற பாடலையும் பாடியிருக்கிறேன். பாடல் நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எல்லா வகையான படங்களிலும் நடிக்க ஆசை'' என்கிறார் பிரசன்னா. 

இயக்குநர் மிஷ்கின் ஸ்டைல் படங்கள் எப்போதுமே பேசப்படும். வர்த்தக நோக்கத்துக்காக கமர்ஷியல் அம்சங்களுடன் வெளி வந்த ஒரு சில படங்கள் மிஷ்கினைக் கடனாளியாக மாற்றிவிட்டது. தற்போது தனது அலுவலகத்தை அடகு வைத்து அதன் மூலம் பெறப்பட்ட பணத்தில், சினிமா சமரசங்களுக்கு இடமில்லாமல் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். மிஷ்கின் படங்களை ரசிகனாகப் பார்த்து வியந்த விநியோகஸ்தர் ஒருவர், இப்படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார். கோவை, திருப்பூர் மாவட்ட விநியோகஸ்தரான வெற்றிவேல், ஜனாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை விலைக்கு வாங்கி விட்டார். இதே போன்று பத்மாமகன் இயக்கத்தில் உருவாகியுள்ள "நேற்று இன்று' படத்தையும் வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com