இனிக்க மணக்க

சாம்பார் மணக்க: அரைத்துவிட்ட சாம்பார், அதிகநேரம் கொதிக்கக் கூடாது. தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து ருசிகெட்டுவிடும். இறக்கிய பிறகு தான் தாளிக்க வேண்டும்.
இனிக்க மணக்க

சாம்பார் மணக்க: அரைத்துவிட்ட சாம்பார், அதிகநேரம் கொதிக்கக் கூடாது. தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து ருசிகெட்டுவிடும். இறக்கிய பிறகு தான் தாளிக்க வேண்டும்.

ரசம் மணக்க: சிம் ஃப்ளேமில் ரசத்தை மஞ்சள் நுரை வரும் வரை நிதானமாகப் பொங்க வைத்து (கொதிக்கக் கூடாது) இறக்கிய பின், பச்சை கொத்துமல்லி தாராளமாகச் சேர்க்கவும். கடுகு, சீரகம், பச்சை கறிவேப்பிலை நெய்யில் தாளிக்க வேண்டும். புளியைக் குறைத்து தக்காளியைக் கூட்டினால் ருசி கூடும். பெரிய அளவில் ரசம் செய்யும் போது அரை ஸ்பூன் வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்தால் ரசம் கடைசி வரை தெளிவாக இருக்கும்.

புளி சேர்க்காத கூட்டு வகைகள் செய்யும் போது காய்களுக்கு ஏற்ற அளவில் மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம்பருப்பு, கட்டிப்பெருங்காயம் இவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்து தேங்காயும்  அரைத்துச் சேர்த்துச் செய்தால் "கும்'மென்ற வாசனையுடன் ருசியும் பிரமாதமாக இருக்கும்.

கறிவகைகள் மணக்க: கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும் போது மேரினேட் செய்து பத்து நிமிடம் ஊறவிடவும். உப்பு, காரம் நன்கு இறங்கும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் முதலில் அரை ஸ்பூன் பொடி உப்பைச் சேர்த்து, பிறகு வழக்கம் போல் தாளித்துக் கிழங்கு வகைகளைச் சேர்த்து இரண்டு தடவை கலந்து கொடுத்து சிம் ஃப்ளேமில்  ஐந்து நிமிடம் கிளறாமல்  அப்படியே விடவும். பிறகு திருப்பினால் வெளிப்புறம் மொறு மொறுப்பாகவும் உட்பாகம் மிருதுவாகவும் நன்றாக கடாயில் ஒட்டாமல் ரோஸ்ட் ஆகும். எண்ணெயும் குறைவாகவே செலவாகும்.

கடலை, பட்டாணி சுண்டல் செய்யும் போது, மசாலாப் பொடி போடுவதற்குப் பதிலாக கடையில் விற்கும் பாவ்பாஜி மசாலாப் போட்டு சுண்டல் செய்தால் "கம கம'வென்று வாசனையாக இருக்கும்.

அல்வா போன்ற ஸ்வீட் செய்யும் போது வெண்ணெயை அரைப்பதமாக உருக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறினால் நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கம கமக்கும்.

அதிரசம் செய்யும் போது மாவை வெல்லத்தோடு கலந்த பின் பேரீச்சம் பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக் சேர்க்க அதிரசத்தின் சுவை கூடும்.

பஜ்ஜி போடுவதற்கு கடலைமாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியையும், ஒரு பங்கு பாசிப்பருப்பையும் கலந்து மிஷினில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் உப்பு, காரம், பெருங்காயம், சோடா உப்பு சேர்த்து பஜ்ஜி போட சுவை அருமையாக இருக்கும்.

தேங்காய் பர்ஃபி செய்யும் போது தேங்காயைப் பிழிந்து கெட்டிப் பால் எடுத்து பர்ஃபி முக்கால் பதம் வரும் போது பாலையும் சேர்த்துக் கிளறினால் பர்ஃபி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

ரவாலட்டு செய்யும் போது கால் பங்கு பால் பவுடரைக் கலந்து செய்தால் சுவையாக இருக்கும்.

புளியோதரை, புலாவு, தக்காளி சாதம் போன்றவற்றைச் செய்யும் போது சாதம் கட்டியாக அங்கங்கு தங்கிவிடும். இதைத் தவிர்க்க சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெயைச் சேர்த்துக் கலக்கினால் சாதம் கட்டியாகாமல் மிகவும் சுவையுடன் இருக்கும்.

வெங்காய ராய்த்தா தயாரிக்கும் போது, இரண்டு ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு பச்சை மிளகாய் இவற்றை அரை ஸ்பூன் மைதா மாவு அல்லது சோளமாவு சேர்த்து அரைத்து கலந்துவிட்டால் ராய்த்தா கெட்டியாக தனிச்சுவையுடன் இருக்கும்.

சாம்பார் நன்றாகக் கொதித்து இறக்கியவுடன், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும், கருவேப்பிலையையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் மிகவும் வாசனையாக இருக்கும்.

பக்கோடா மாவுடன் சிறிதளவு நெய்யும், உப்பு போடப்பட்ட தயிரும் கலந்து நன்றாக பிசைந்து கொண்டு பக்கோடா செய்தால் பக்கோடா மொற மொறப்பாக இருப்பதுடன் ருசியாகவும் இருக்கும்.

தோசைக்கு உளுந்து ஊறவைக்கும் போது கொஞ்சம் வெந்தயத்துடன் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை சுட்டால் தோசை சிவப்பாகவும்,சுவையாகவும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com