

""பாலிவுட் வாய்ப்புகள் என்றாலும் ஆடைகளை துறந்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் காஜல் அகர்வால். ""பாலிவுட்டில் ஒல்லியான உடலமைப்பைக் கொண்டிருந்தால்தான் மவுசு. தென்னிந்திய படங்களில் பூசினாற் போன்று இருந்தால்தான் மவுசு. பாலிவுட்டில் தொப்பை விழாத வரைக்கும் ஹீரோயினாக நடிக்க முடியும். பாலிவுட்டாக இருந்தாலும் கவர்ச்சிக்கு சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமருக்குத் தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்கள் அழகாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளைத் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அது போல் நடிக்க கேட்டால் காட்சியை மாற்றும் படி இயக்குநரை கேட்டுக் கொள்வேன்'' என தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் காஜல்.
கதை, திரைக்கதை, கிளைமாக்ஸ் என எதுவும் எழுதப்படாமல் குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையை மறைமுகமாக படம் பிடித்து உருவாகும் படம் "கோமாலினி'. காட்டுக்குள் வாழும் சித்தர்கள், யோகிகள், நம்பூதிரிகள் மற்றும் மந்திரவாதிகளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இந்த படத்தில் ஆவிகளுடன் பேசுபவர்களின் உலகம் பற்றியும் படமாக்கியுள்ளார்கள். ""இந்தப் படத்தில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் என யாரும் கிடையாது. கேமிராவை மறைத்து வைத்து எதார்த்தமாக கடந்து போகிறவர்களை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடித்து இருக்கிறோம். பின் அதை திரைக்கதையாக்கி கோர்வைப்படுத்தி படமெடுக்கும் "ஹிடன் கேமிரா' என்ற பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்கிறார் படத்தை இயக்கும் திருநாவுக்கரசு.
விஞ்ஞான மாற்றங்களால் காதலில் ஏற்படும் விபரீதங்களை சொல்ல வருகிறது "கம்பன் ஏமாந்தான்'. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை "காதல் செய்ய விரும்பு', "வெல்டன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பார்கவன் எழுதி இயக்குகிறார். ""கடித போக்குவரத்து, கால் கடுக்க காத்திருந்த தருணங்களில் மலர்ந்த காதல்கள் சாகாவரம் பெற்றவையாக உள்ளன. ஆனால் விஞ்ஞான மாற்றங்களைக் கொண்டு மலரும் காதல் உணர்வுப்பூர்வமான அன்பை வெளிப்படுத்த தயங்குகிறது. மிஸ்டு காலில் தொடங்கி, எஸ்.எம்.எஸ்ஸில் ஹலோ சொல்லி, ஈ மெயில் மூலமாய் கடிதம் எழுதி, பேஸ் புக்கில் முகம் பார்த்து, ஸ்கைப்பில் பேசி விட்டு சில மாதங்களுக்கு பின் சந்திக்கும் காதல் ஜோடிகள் தங்கள் காதலில் நிகழ்ந்த விபரீதங்களை சந்திக்கிறார்கள். அதை சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையாக்கியிருக்கிறேன்'' என்கிறார் இயக்குநர் பார்கவன்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஹீரோ அங்கேயே செட்டில் ஆக நினைக்கிறார். அந்நாட்டின் குடியுரிமையைப் பெற அங்கு வசிக்கும் ஹீரோயினை காதலிக்கிறார். ஹீரோயினுக்கும் காதல் மலர்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தியாவுக்கு வந்து விடுகிறார் ஹீரோயின். பின் அந்த காதல் என்ன ஆனது என்பதைத்தான் சுவாரஸ்யமாக சொல்ல வருகிறது "கண் பேசும் வார்த்தைகள்.' "சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்து வரும் செந்தில் தான் ஹீரோ. இனியா ஹீரோயின். படத்தை ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் இயக்குகிறார். ஸ்ரீ பாலாஜி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சரவணக்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். கிராமத்து வேடங்களில் மட்டுமே நடித்து வந்த இனியா, முதன் முதலாக நகரத்து மாடர்ன் பெண்ணாக மாறியிருக்கிறார்.
"ஆடுகளம்' படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திலும் ஹீரோவாகிறார் தனுஷ். தொடர்ந்து தனுஷை ஹீரோவாக்கும் திட்டம் குறித்து கேட்டால், ""எனக்கும் தனுஷூக்குமான புரிதல் நல்ல முறையில் இருக்கிறது. அடுத்த இரண்டு படங்களில் தன்னிச்சையாக பணியாற்றலாம் என்றுதான் முடிவு எடுத்திருந்தோம். ஆனால் சூழ்நிலை எங்களை அடுத்தப் படத்தில் இணைத்து விட்டது. மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. தற்போது "அதிர்வு' என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கிறேன். நான் ஆங்கில புத்தகங்களை அதிகமாக படிப்பேன். அவற்றில் சிறந்த புத்தகங்களை தமிழில் கொண்டு வரவே இந்த பதிப்பகத்தை தொடங்கியுள்ளேன். தரமான நேரடியான படைப்புகளையும் இதன் மூலம் வெளியிடுவேன்'' என்றார் வெற்றிமாறன்.
மலையாளத்தில் அறிமுகமாகி விட்டார் தனுஷ். விஜய், சூர்யா படங்கள் சமீப காலமாக மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தனுஷ் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. இந்நிலையில் மலையாள ரசிகர்களை கவர்வதற்காக மம்முட்டி, திலீப்புடன் "கம்மத் அண்ட் கம்மத்' என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி உள்ளார் தனுஷ். மம்முட்டியும் திலீப்பும் சகோதரர்கள். கேரளத்தில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவர்கள், புதிதாக கட்டியுள்ள ஹோட்டலை தனுஷை அழைத்து வந்து திறப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கார்த்திகா, ரீமா கல்லிங்கல் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மம்முட்டி, திலீப், கார்த்திகா, ரீமாகல்லிங்கலுடன் தனுஷ் இணைந்து ஆடுவது போல் கிளைமாக்ஸ் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளதாம்.
ஆதர்ஷ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் பி.வி.அருண் தயாரிக்கும் படம் "வெண்ணிலா வீடு'. "அரும்பு மீசை குறும்பு பார்வை' இயக்குநர் வெற்றிவீரன் தனது பெயரை வெற்றி மகாலிங்கம் என மாற்றி இப்படத்தை இயக்குகிறார். சிருந்தா, விஜயலெட்சுமி, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஐந்துகோவிலான் வசனம் எழுதுகிறார். ""கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஒரு தம்பதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். அங்கு சந்திக்கும் நகரத்து நட்பும், அனுபவங்களும் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுவதுதான் கதை. காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் உருவாகும் இப்படம் மெல்லிய மனித உணர்வுகளை பேசும் படமாகவும் உருவாகிறது'' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.