யாரும் படிக்கக்கூடாத டைரி பக்கங்கள்..

இதோ நேற்றோடு அனைத்தும் அவரிடம் பேசி முடித்தாயிற்று. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏற்பட்ட பந்தத்தை நீதிமன்ற வாசற்படி ஏறாமல் வீட்டினுள்ளேயே முறித்து இருவரின் மனதிற்குள் பூட்டு போட்
யாரும் படிக்கக்கூடாத டைரி பக்கங்கள்..
Updated on
4 min read

டிசம்பர் 10, 2011

இதோ நேற்றோடு அனைத்தும் அவரிடம் பேசி முடித்தாயிற்று. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏற்பட்ட பந்தத்தை நீதிமன்ற வாசற்படி ஏறாமல் வீட்டினுள்ளேயே முறித்து இருவரின் மனதிற்குள் பூட்டு போட்டாயிற்று. அதுவும் என் ஒரே இனிய மகளுக்காக. இருவரும் உடைந்து போன முகம் பார்த்த கண்ணாடியைத் திரும்ப ஒட்ட வைக்க எல்லாம் முயற்சிக்கவில்லை. உன் கண்ணாடியில் நீ, என் கண்ணாடியில் நான் என திசைமாறிய பறவைகளாகிவிட்டோம், ஒரே கூட்டினுள். இது சாத்தியப்படுமா? என்ற கேள்வி மனதை பிழிந்தெடுத்தது. ஆனாலும், வேறு வழியில்லை. இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை. இன்று புதிதாக உன்னை வாங்கி வந்துவிட்டேன். முன்பெல்லாம் தனிமை இரவில் அவரின் மார்பில் முகம் புதைத்து நான் பேசிய பேச்செல்லாம் இனி யாரிடம் பகிர்ந்து கொள்வது என்ற நிஜம் சுட நீ எனக்கு சொந்தமாகிப் போனாய்.

டிசம்பர் 12, 2011

நல்லவேளை, வீட்டில் மூன்று அறைகள் இருந்தது வசதியாகிப் போனது. அஞ்சலி படிப்பதற்கு ஓர் அறை போய்விட, நானும் அவரும் ஆளுக்கு ஓர் அறையை எடுத்துக் கொண்டோம். ""ஸ்டோர் ரூமை எதுக்கும்மா சுத்தம் பண்றீங்க, ஐ புது பெட், இனி இதுதான் நம்ம பெட் ரூமா?'' என அஞ்சலி அடுக்கிக் கொண்டே போன வார்த்தை கலவைக்கெல்லாம் அம்மாவின் வேலை பொருட்டு இரவு நெடுநேரம் கண்விழித்து இருப்பதால் அப்பாவின் தூக்கம் கெடுவதாக அவளிடம் பொய்யையும் உரைத்தாயிற்று.

ஜனவரி 1, 2012

ஒரே வீட்டில் முன்பு கணவன் மனைவியாக இருந்ததைவிட நல்ல நண்பர்களாக இருப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. ஜஸ்ட் இன்ட்ரஸ்டிங். இரவு நேர சண்டைகளுக்கு விடிவு கிடைத்ததில் என்னைவிட அருணுக்குத்தான் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். இரவு பத்துக்கெல்லாம் அவர் குறட்டை விடும் சத்தம் என் அறையைச் சுற்றி வட்டமிடுகிறது. அஞ்சலியிடம் எங்கள் பிரிவை மறைப்பதில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. பத்து வயதில்லையா, துறுதுறுவென எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.

ஜனவரி 28

அருண் என்னிடம் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ? அதன்படியே நடந்துக் கொள்கிறார். நான் கூட ஒரே வீட்டில் இரு துருவங்களாக வாழ்வது சாத்தியமா? என நினைத்தேன். ஆனால் என்னிடம் அளவுக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட எக்ஸ்ட்ராவாக பேசுவது இல்லை. முன்பு வார்த்தை அம்புகள் கிழித்ததை விட சமயத்தில் மெüன அம்புகள் அதிகமாய் புண்படுத்துகிறது.

குடும்ப செலவுகளைப் பாதியாக பகிர்ந்து கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது தானே. அதன்படி வரவு-செலவுகளை எழுதி என் பங்கை இன்று அவரிடம் நீட்டினேன். "வைத்துக் கொள்' என்பதாக சைகை மட்டுமே அவரிடம். "வேண்டாம்' என வம்படியாக மேஜை மேல் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

பிப்ரவரி 14

இந்த தினத்தின் முன்பொரு பனி இரவில் நாங்கள் முதன் முதலில் சொல்லிக் கொண்ட "ஐ லவ் யூ' நினைவுக்குள் வந்து முடிச்சு போட்டு போட்டு அவிழ்த்தது. இரவு நேரத்தில் தூக்கம் வராமல் புரள்வதால் நாளை முதல் வேலையாக ஒரு டி.வி.யை வாங்கி என் ரூமிற்குள் வைத்துவிட வேண்டும்.

மார்ச் 2

""அதெல்லாம் கலந்துக்க முடியாது'' என்று சொன்னதுதான் அஞ்சலிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அஞ்சலியின் பள்ளியில் நடைபெற இருக்கும் சிறந்த அம்மா-அப்பா அதாவது அவர்களின் ஜோடிப் பொருத்தம் கான்டஸ்ட் தான் அவள் இறக்கிய இடி. எப்படி அவளைத் தேற்றுவது? எனப் புரியாமல் இருவரும் கல்லாகிப் போனோம். இறுதியில் அவர் தான் என்ன சொல்கிறாய்? என்பதாய் என்னைப் பார்த்தார். சம்மதத்தை தவிர வேறு என்ன செய்வது?

ஒன்றாக இருந்தபோதெல்லாம் இதுபோல் எதுவும் இல்லை. தாமரை இலை தண்ணீர் போல் இருக்கையில் தான் குளத்தினுள் எதிர்நீச்சல்.

மார்ச் 15

""என்ன மம்மி டாடி, ரெண்டு பேரும் ஆளுக்கொரு வேலையையே எப்பவும் செஞ்சிட்டிருக்கீங்க. இன்னும் 10 நாள்தான் இருக்கு. எப்படி ஃபிரிபேர் பண்ணப் போறீங்க? எனக்குத் தெரியாது நீங்கதான் பர்ஸ்ட் ஜோடியா வரணும். நான் என் பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் பெட் கட்டியிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்த முதல் படத்துல இருந்து பிடித்த விஷயங்கள் வரை ஞாபகம் பண்ணிக்கோங்க. மறந்துடப் போறீங்க. இன்னும் 10 நாள்தான் 25ம் தேதி கான்டஸ்ட். அப்புறம் ரெண்டு பேரும் ஆபீஸ்க்கு அன்னிக்கு லீவ் சொல்லிடுங்க. இப்படியாக சொல்லிக்கொண்டே போன அஞ்சலியை நாங்கள் முகத்தில் ஈயாடாமல்தான் வெறித்தோம்.

மார்ச் 20

5 நாட்கள் கழிந்துவிட்டது. அருண் போட்டி பற்றி எதுவும் என்னிடம் பேசவேயில்லை. நான் ஏன் முதலில் பேச வேண்டும் என்ற "ஈகோ' என்னையும் அழுத்திவிட்டது. அஞ்சலியை நினைத்தால்தான் பரிதாபமாக இருந்தது. எங்களின் முகங்களையே மாறி மாறி பார்த்த வண்ணம் இருக்கிறாள். வித்தியாசத்தை அவளும் உணர்ந்திருக்கிறாள் போலும். விரைவில் அவளும் இதில் பழக்கப்பட்டுவிடக்கூடும்.

மார்ச் 22

"சுஜி' என இன்று காலை மிகவும் சத்தம் போட்டு என்னை அழைத்தார். உடம்பினுள் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எரிந்தது போல் என்னுள் பிரகாசம். என் பெயரைச் சொல்லி அழைத்து எத்தனை நாட்களாயிற்று. இனம் புரியாத சந்தோசம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. என்னவென்று கேட்டு அவரின் அறையை அடைந்தேன். முக்கியமான ஆபீஸ் பைல் ஒன்று காணவில்லை என்றும் நான் எங்கேனும் அதை பார்த்தேனா என்பதே அவர் அழைத்ததற்கான காரணமாக இருந்தது. நான்கு மாதங்கள் கழித்து அவர் எனக்கு பணித்த முதல் வேலை. தேடினேன்... தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன். அலமாரிகளில் "காக்கிரி போக்கிரி' என நொந்தப்பட்டிருந்த அவரின் துணிகளை தொடுகையில் என் கைகளில் மெல்லிய நடுக்கம். அவர் வெளியே ஹாலில் தேடிக்கொண்டிருக்க, அஞ்சலிக்கு ஸ்கூலுக்கு நேரமாகவே அவளை தயார்படுத்தி அனுப்பிவிட்டு மறுபடி வேட்டையை தொடர்ந்தேன். மற்றொரு ரேக்கை இழுக்க நானும் அவரும் தோள் மேல் கை போட்டபடி முன்பொருமுறை தஞ்சாவூர் மாமா எடுத்த அந்த ஸ்டில் இருந்தது. அதை பெரிதுபடுத்தி புது பிரேம் போட்டு பார்க்கவே அழகாக இருந்தது. அதனடியில் அஞ்சலி பிறக்கையில் நான் தாய் வீட்டிலிருந்த அந்த 7 மாதங்களும் இவருக்கு நான் எழுதிய கடிதங்கள் கொத்தாக காணக் கிடைத்தன. ""ஆங் கிடைச்சிடுச்சி'' என அவர் வெளியிலிருந்து சத்தம் கொடுக்க நான் பாதி மனதுடன் கடிதங்களை அப்படியே வைத்துவிட்டு வெளியேறிவிட்டேன்.

இத்தனை நாள் எங்கே பத்திரப்படுத்தி வைத்திருந்தார் என்றே தெரியவில்லை. இதோ உன்னில் எழுத முடியாமல் கண்களை கண்ணீர் மறைக்கிறது.

மார்ச் 23

இரண்டு நாட்கள்தான் மீதம், பள்ளிப் போட்டிக்கு. அஞ்சலி உறங்கிய பின் நாம் முதன்முதலில் பார்த்த படம் ஞாபகம் இருக்கிறதா? என நான்தான் ஆரம்பித்தேன். ""ம் ஏன் இல்லாமல்?'' என்பதாய் ஆரம்பித்த அரைமணி நேர பேச்சும் இனிமையாய் கழிந்தது. முதல் விருந்து, முதல் அவுட்டிங், பிறந்த தேதி, பிடித்த வியங்கள் பிடிக்காத தருணங்கள், விட்டுக் கொடுத்த நிமிடங்கள், சண்டை போட்ட கணங்கள் என மன பரிமாற்றத்தில் அரைமணியும் அருமையாகக் கழிந்தது.

மார்ச் 25

பள்ளியில் எங்கள் இருவரிடமும் நிறைய கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கிக் கொண்டே இருந்தனர். கேள்விகளின்போது உதட்டளவில் பூத்த சிரிப்பை அவர் மறைத்துக் கொண்டார். என்னால் தான் கட்டுப்படுத்த இயலவில்லை. பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன். அருண் அதை ரசிப்பதாக கண்கள் சொல்ல வெட்கம் என்னில் ஒட்டிக்கொண்டது. பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்த நெருக்கம், யதேச்சையான ஸ்பரிசம் மனதில் ஆழ்ந்த கிளர்ச்சியை உண்டு செய்துவிட்டது. ஒருநிலைப்படுத்த இயலாமல் தவித்தேன். இதோ முடிவு அறிவித்தார்கள். எங்களை சிறந்த தம்பதியாக தேர்வு செய்திருந்தனர். மகிழ்ச்சியில் உரத்து கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் இதயத்தின் ஓரத்தில் வலி. எங்கே உடைந்து விடுவேனோ? என்ற பயத்தில் அருணின் கண்களை பார்க்க முடியாமல் தவிர்த்தேன். அஞ்சலிக்கு ஒரே உற்சாக துள்ளல்தான் இன்றெல்லாம்.

வீடு திரும்புகையில் அஞ்சலி டிரீட் கேட்கவே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அஞ்சலி மெனு கார்டை ஆராய்ந்து கொண்டிருக்க ஆனியன் ஊத்தப்பத்தையும் அருணே ஆர்டர் கொடுத்தார். ""டாடி, நான்தான் பார்த்துட்டிருக்கேன்ல, அதுக்குள்ள ஏன் ஆர்டர் கொடுத்தீங்க?'' என அவள் இழுக்கையில், ""உங்கம்மாவுக்கு ரொம்ப பிடிச்சது'' என்றார். மயிலிறகில் மனதை வருடும் சுகம் வசப்பட்டது எனக்கு.

ஏப்ரல் 20

காலண்டரை கிழிக்கையில் தென்பட்ட அந்த நாளையே இன்று 5 நிமிடமாக வெறித்திருந்தேன். சென்ற வருடம் இந்நாளில் பக்கத்து வீட்டு மாமியிடம் ஆசி வாங்கியது, பட்டுப் புடவை சரசரக்க கோவிலுக்கு போனது கண்முன் வந்துபோனது. ஆம், திருமண நாள். ஆபீஸில் மாலினி எனக்கு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு புத்தகத்தை பரிசளித்தாள். மேய்ந்ததில் அவர் கண்ட ஒரு வடமாநில குடும்பத்தில் வாரம் ஒருநாள் குறை சீட்டு வைபவம் போல் ஒன்றை தொடர்ந்து செய்வதாகவும் அதில் ஒருவருக்கு ஒருவர் மேல் ஏற்பட்ட குறையை அந்த சீட்டில் எழுதி குடும்பத்தினரின் முன்னிலையில் பரிமாற்றம் குறித்தும் எளிதான தீர்வு குறித்தும் எழுதியிருந்தார். எனக்கு ஏன் அவ்வாறு தோணவில்லை என்பதை எண்ணி மருகினேன். பல சமயம் ஒப்புக்கும் வீம்புக்கும் நான் போட்ட சண்டைகள் தேனீக்களாக வந்து மனதை கொத்தின. "ஈகோ' என்னும் மாயப் பிசாசின் தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனாகிப் போன தருணங்களை எண்ணி என்ன செய்ய?!

ஏப்ரல் 21

நேற்றிரவு டைரி எழுதிவிட்டு தூக்கம் பிடிக்காமல் நான் மொட்டை மாடியில் காலாற உலவ சென்றிருந்தேன். ஆச்சர்யம். அருண் எதிர்வாடையில் பாய் தலையணை சகிதம் வானத்தை நோக்கியபடி படுத்திருந்தார். சிறிது நேரம் உலவிவிட்டு துக்கம் தொண்டையை அடைக்க வந்து விழுந்து விட்டேன், மெத்தையின் மேல் ஒரு மரக்கட்டையாக.

மே 10

ஒரு வாரம் ஆபீஸ் டூர் முடிந்து வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டிருந்தேன். அருணும் துணிகளை பெட்டியினுள் அடுக்கிய வண்ணம் இருந்தார். என்னைப் பார்த்து ஏதாவது பேச மாட்டாரா? என மனம் ஏங்கியது. ஈகோயிஸத்தை விட்டுக் கொடுக்க இயலாமல் இந்த ரணத்தை நானே விரும்பி ஏற்றுக் கொண்டது தானே? என மறுபுறம் நானே சமாதானப்பட்டுக் கொண்டிருக்க, ""நல்லாயிருக்கியா, எப்படி இருந்தது டிரிப்?''

என விலைமதிக்க இயலா ரத்தினங்களாக வார்த்தைகள் வந்து விழுந்தது அவர் வாயிலிருந்து. மடை திறந்த வெள்ளமாய் "ஓ'வென அழுது விட்டேன். அவர் மார்பில் சாய்ந்தபடி.

"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?' பாடியபடி அலைபேசி அவரை அவசரமாய் அழைத்தது.

பேசி முடித்தவர், ""பிளைட்டுக்கு நேரமாச்சு. ஆபீஸ் டூர் போறேன் மும்பைக்கு. வர இரண்டு நாள் ஆகும்'' எனச் சின்னச் சின்ன வார்த்தைகளில் சொல்லி சிட்டாக பறந்துவிட்டார். கடவுள் வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கா கதையாகிப் போனது.

மே 12

அவரின் வருகையின் பொருட்டு இந்த இரவிலும் அளவான ஒப்பனையுடன் இதோ எழுதிய வண்ணம் காத்துக் கொண்டிருக்கிறேன். அஞ்சலி ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள். அக்னி குண்டத்தை வலம் வருகையில் ஏற்பட்ட பந்தத்திற்கு மீண்டும் உயிர்ப்பூட்டும் முனைப்பில் எப்படி பேச்சை ஆரம்பிப்பது? அவரிடம் என பலமுறை ஒத்திகை செய்து பார்த்தாயிற்று. இதோ தெரு முனையில் அவரின் டூ வீலர் எழுப்பும் ஹாரன் ஓசை. டைரியே... இனி உன் பங்களிப்பு எனக்கு அதிகம் தேவைப்படாது என நினைக்கிறேன்.

நாளைய இரவு உன்னுடன் செலவிட எனக்கு நேரம் இருக்கப் போவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com