திரைக் கதிர்

மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது "கருப்பம்பட்டி'. ஹீரோ அஜ்மல் கருப்பம்பட்டி என்ற கிராமத்திலிருந்து பாரீஸ்
திரைக் கதிர்
Updated on
2 min read

மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது "கருப்பம்பட்டி'. ஹீரோ அஜ்மல் கருப்பம்பட்டி என்ற கிராமத்திலிருந்து பாரீஸ் செல்கிறார். அங்கேயே திருமணம் செய்து நிரந்தரமாகத் தங்கி விடுகிறார். பின் அவர் தன் வேரைத் தேடி கருப்பம்பட்டிக்கு வரும் போது எதிர்க்கொள்ளும் பிரச்னைகள்தாம் படம். அஜ்மலுக்கு ஜோடியாக அபர்ணா பாஜ்பாய் நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், அர்ச்சனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை புதுமுகம் பிரபு ராஜா சோழன் எழுதி இயக்குகிறார். "" மூன்று கால கட்டங்களில் நடக்கும் இக்கதையைப் படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தன. 1970-80 களில் நடக்கும் கதையை கறுப்பு வெள்ளையிலும், 85-ல் நடக்கும் கதையை ஈஸ்ட்மென் கலரிலும், 2012-ல் நடக்கும் கதையை டிஜிட்டல் கலரிலும் படமாக்கி இருக்கிறோம். தமிழ்நாடு, பாரீஸ், இத்தாலி ஆகிய மூன்று இடங்களில் கதை பயணிக்கிறது. இங்கு வரும் கதாபாத்திரங்கள் பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழியில் பேசுவார்கள். அதற்கு சப் டைட்டில் போடவில்லை. கதையின் போக்கிலேயே வசனங்கள் புரிமாறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன'' என்றார் இயக்குநர்.

படத் தயாரிப்பில் இறங்குகிறார் இயக்குநர் மிஷ்கின். நீண்ட காலமாகத் திட்டம் வகுத்து வந்த மிஷ்கின், இந்த ஆண்டு முதல் தயாரிப்பை வெளியிட இருக்கிறார். இயக்குநர்கள் பாலா, அமீர், சுசீந்திரன், வெற்றிமாறன், லிங்குசாமி உள்ளிட்ட இயக்குநர்கள் படங்களை இயக்குவதோடு, தயாரிப்பு பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் மிஷ்கினும் சேர்ந்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு "லோன் வுல்ஃப்' எனப் பெயரிட்டுள்ளார். மிஷ்கின் கூறும் போது, ""என்னை மிகவும் கவர்ந்த மிருகம் ஓநாய். அவை கூட்டமாகத் திரியும் என கேள்விப்பட்டுள்ளோம். சில நேரங்களில் சில ஓநாய்கள் தனியாக வாழும். அவற்றை "லோன் வுல்ஃப்' என்பார்கள். அதன் குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் என்னைக் கவர்ந்ததால் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு அப்பெயரை வைத்துள்ளேன். இதன் மூலம் தரமான படங்களைத் தர இருக்கிறேன்'' என்றார் மிஷ்கின்.

திருமண வாழ்வில் கஷ்டங்களை அனுபவிக்கும் ஒருவர், தன் மகளுடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அப்போது வழியில் சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள் அவர்களுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை மையமாக வைத்து உருவாகும் படம் "நிர்ணயம்'. தந்தைக்கும் மகளுக்குமான உறவையும் உலகில் ஒரு மனிதன் சக மனிதனை எப்படி பார்க்கிறான் என்பதையும் எதார்த்தமாக சொல்லும் படமாக இது உருவாகிறது. பி சி எஸ் எம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் ஆனந்த், ரெஜினா, பேபி வேதிகா நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ஸ்ரீ.சரவணன் எழுதி இயக்கி உள்ளார். வி. செல்வகணேஷ் இசையமைத்துள்ளார். "" சக மனித மதிப்பீடுகள்தான் திரைக்கதையின் மையம். தனி மனித வாழ்வில் தினந்தோறும் நடக்கும் பிரச்னைகள், தனி மனிதனுக்கே பெரிதாகத் தெரிவதில்லை. அதை உணர்வூப்பூர்வமாக படம் பிடித்து காட்டும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது'' என்றார் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்ரீ.சரவணன்.

"சந்தமாமா', "ரகளபுரம்', "மச்சான்', "தப்பாட்டம்' என கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார் கருணாஸ். காமெடி ரோல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர், இப்போது ஹீரோவாக மட்டுமே... "" நான் சினிமாவில் போராடி ஜெயித்தவன். எந்த நிலையில் எப்படிப்பட்ட முடிவு கை கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும். ஹீரோவாக நடித்தாலும், நான் காமெடி படங்களுக்குதான் முக்கியத்துவம் தருகிறேன். அதுதான் என் எல்லை. எழுத்தாளனாக பல தகுதிகள் வேண்டும். எந்தத் தகுதியும் இல்லாதவன் பெரிய எழுத்தாளனாக துடிக்கிறான். அங்கீகாரம் இல்லை. இதனால் தன் சொத்துக்களை விற்று புத்தகம் வெளியிடுகிறான். ஒரு புத்தகமும் விற்பதில்லை. நிறைய அனுபவங்களைச் சந்தித்து இருந்தால்தான் எழுத்தாளனாக முடியும் என அறிவுரை சொல்கிறார் ஓர் எழுத்தாளர். இதையடுத்து ஒவ்வொரு செயலிலும் நேரடியாக ஈடுபட்டு எழுதத் தொடங்கும் போது, ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் "சந்தமாமா'வின் கதை. இது போன்ற காமெடி கதைகள்தாம் எனக்கு பலம். அதைத்தான் செய்கிறேன்'' என்றார் கருணாஸ்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு பிரிட்டிஷ் மாடல். "மதராசப்பட்டினம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன், கோலிவுட், பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறார். அந்த வரிசையில் "தலைவன்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் நிகிஷா பட்டேல். எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கிய "புலி' படத்தின் ஹீரோயின். பவன் கல்யான் ஜோடியாக அறிமுகமானவருக்கு கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட வாய்ப்புகள். திரைக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் கன்னடத்தில் "நரசிம்மா', "டாக்போ', "வரதநாயக்கர்', மலையாளத்தில் "நியூஸ்மேக்கர்', தெலுங்கில் "ரம்' என எல்லாமே ஹிட் படங்கள். ""அப்போதே என்னைத் தமிழ் சினிமாவுக்கு வர சொன்னார் எஸ்.ஜே.சூர்யா. கன்னடம், தெலுங்கு, மலையாளம் என கால்ஷீட் பிஸி. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்தால் தமிழுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். இப்போது வந்து விட்டேன்'' என டிவிட்டரில் மனம் திறந்து இருக்கிறார் நிகிஷா பட்டேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com