
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் கீழ் தளத்திலேயே நான் பயணித்த ஆட்டோவை நிறுத்திவிட்டார்கள். கார்கள் மட்டுமே முதல்தள வரவேற்புகூட வாசலுக்குச் செல்லவும் வெளியேறவும் அமைக்கப்பட்டிருந்த நீள்வட்ட சாய்தளப்பாதையில் நான் நடந்து செல்வது இயல்பற்ற காட்சியாக இருந்தது.
இருபுறமும் பெயர் தெரியாத ஆங்கிலப் பூக்கள். வளைவில் திரும்பியதும் ஓட்டலின் கம்பீரம் விரிந்தது. மிகஅழகான முன்னிழற்கூரை. கீழே பளபளக்கும் தரைத்தளம். நுழைவாயிலில் மிக உயரமான கண்ணாடி நிலைக்கதவு. ஒரு நூற்றாண்டு பின்தங்கிய, ஆனால் புத்தம் புதிதான உடை அணிந்த வாயிலாளி என்னை வணங்கினார். அறிமுகமில்லாதவரின் அந்த வணக்கத்துக்கு பதில் வணக்கம் சொல்லாமல் கடந்தேன். ஒரு புன்னகை செய்திருக்கலாம்தான்.
கண்ணாடி நிலைக்கதவை நெருங்கியதும் அது தானாகப் பிளந்து விரிந்தது. முதல் ஸ்பரிசமாக கட்டடத்தின் குளிர் முகத்தில் அடித்தது. அடுத்தது -மெல்லிய பியானோ இசை. மூன்று அடிகள் எடுத்து வைத்தவுடன் கதவு ஓசைப்படாமல் என்னை உள்ளுக்கிழுத்து விழுங்கியது போல மூடிக்கொண்டது.
ஓட்டலின் மைய மண்டபம் மிகப்பெரியது. குறைந்தது நூறு மீட்டர் சுற்றளவு கொண்ட வட்ட மண்டபம். ஏதோ ஓர் அபூர்வ மரத்தைப் பிடுங்கித் தலைகீழாகத் தொங்கவிட்டதைப்போன்று விதானத்தின் நடுவிலிருந்து தொங்கியது சரவிளக்கு. வலது ஓரத்தில் ஒரு நீர்வழியும் பாறை. அருகே ஒருவர் முதுகைக் காட்டியபடி பியானோ வாசித்துக்கொண்டிருந்தார். மெல்லிய சலசலப்பும் பியானோ இசையும் ரம்மியமாக இருந்தது.
வரவேற்பு பகுதி இடது ஓரத்தில் இருந்தது.
சிவப்புச்சேலை உடுத்திய பெண்களில் ஒருவர் என்னிடம் இயல்பாகச் சிரித்தார். போலித்தனத்தைக் காட்டிலும் சில நேரங்களில் இயந்திரத்தனத்தின் நேர்மை நம்மை வீழ்த்திவிடுகிறது.
நான் பேசப்போகும் வார்த்தைகளுக்காக அந்தப் பெண் காத்திருந்தாள்.
திரு. ராஜராஜன் இங்கே தங்கியுள்ளார். அவர் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.. ஆங்கிலத்தில் அவளிடம் சொல்லி முடிக்கும் முன்பாகவே,
""உங்கள் பெயர்?''
சொன்னேன்.
தயைகூர்ந்து வரவேற்பு கூடத்தில் காத்திருங்கள் அதே சிரிப்பு. இதற்கும் ஏன் சிரிக்க வேண்டும்?
கம்பீரமாக இருந்த மைய மண்டபத்தில் நான் மட்டும் தனியாக நடந்தேன்.
அரண்மனை கொலுமண்டபத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ராஜாவை நோக்கி நடக்கும் ஒரு குடிமகனின் மனதில் பதற்றத்தையும் பணிவையும் கூச்சத்தையும் உண்டாக்கிய கம்பீரமான அரண்மனைச் சூழலை, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டுவிடுகின்றன.
மைய மண்டபத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றைத் தேர்வு செய்து உட்கார்ந்தேன். பியானோ இசை மனதை இலேசாக்கியது. வாழ்க்கை முழுவதும் இப்படியே, சுகமாக இருந்துவிடலாகாதா என்று மனம் ஏங்கியது. திடீரென்று ஏனோ கண் கலங்கியது. இந்த வாழ்க்கை சாத்தியமில்லை என்ற உண்மையால் கலங்கியதா அல்லது திறந்த கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு இப்போது சுவர்களில் மோதிக்கொண்டிருக்கும் நிலைமையை உணர்ந்துகொண்டதன் விளைவா உள்மன ஓட்டம் பிடிபடவில்லை. கண் கலங்கியதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்று அச்சத்துடன் அக்கம் பக்கம் பார்த்தேன். சற்று தொலைவில் ஓர் ஆங்கிலேய ஜோடி மட்டுமே இருந்தது.
கண்ணை மூடிக்கொண்டேன். இமைகளுக்குள் கண்ணீர் தேங்கியது.
இந்த நிமிடத்தை முழுதாக வாழப் பழகு. சென்ற கணங்கள் மீளா. வருவது உறுதி இல்லை. இந்த நிமிடத்தில் இந்த அறை, இதன் அழகு, இதன் குளுமை, இதன் இசை, இதில் மூழ்கு. இதுவாக மாறு.
என் தியானப் பயிற்சிக்குள் ஓர் இனியகுரல் ஊடுருவியது.
அவள்தான்.
இங்கேயே காத்திருக்கச் சொன்னார். மாற்றமில்லா சிரிப்பு. என் பதிலுக்கு காத்திருக்காமல் அவள் தன்னைக் கடந்து சென்ற மற்றொரு பணியாளரிடம் சிரித்துப் பேசிக்கொண்டே தன் இடத்துக்குச் சென்றாள். கூந்தலை அள்ளி முடித்திருந்ததால் அவள் கழுத்தும், முதுகின் வட்டமும் இன்னும் அழகாக இருந்தன.
கண்களை மூடிக்கொண்டேன்.
இப்போதெல்லாம் இத்தகைய தருணங்களில் என் மகள் முகம்தான் மனத்திரையில் விரிகிறது. அவள் படிப்பு, அவளது ஆர்வம், அவளது நம்பிக்கை, அவளது பாசம் இவைதான் என் தனிவிழைவுகளின் வழியடைக்கும் கல்.
அவள் கனவு மெய்ப்பட வேண்டும். அதற்காக எதையும் இழக்கவும் தயாராக இருந்தேன். அவளும் ஒரு தகப்பன்சாமிதான். மா தல்லி நூவம்மா..
இப்போது வந்திருக்கும் வேலை நிறைவாக முடிந்துவிட்டால் என்னால் இன்னும் இருபதாயிரம் ரூபாய் கூடுதல் சம்பளம் பெற முடியும். கோலாலம்பூர். குடும்பத்தைக் கொஞ்சம் பிரிந்தாலும் பரவாயில்லை.
""பாஸ் உன் மேல ரொம்பவே இம்பரஸ் ஆயிட்டார்'' என்று சிதம்பரம் சொன்னபோது நான் நம்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய ஆடை அணிகலன் கண்காட்சியில் என் நிறுவனத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த அரங்கு முழுதும் என் பொறுப்பில் என் விருப்பப்படி அமைக்கப்பட்டது.
சிதம்பரம் எனது நெடுநாளைய நண்பர். ராஜராஜனின் தனிச்செயலர். ராஜராஜன் திண்டுக்கல் பக்கம். நூற்பாலை நட்டத்தில் இயங்கியபோது, ஜவுளிகடை வைத்தார். இந்தியாவின் பல நகரங்களில் கிளைகள் அமைத்துகொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர் கே. தன் கறுப்புப்பணத்தை இவரிடம் கொட்டுகிறார் என்றும் ஒரு பேச்சு உண்டு. கோலாலம்பூரில் ஒரு கிளை தொடங்க இருப்பதாக சிதம்பரம் சொன்னார். அதற்காக ஆள் தேடிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகத்தான் என்னை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.
""இந்த மாதிரி ஆளுங்க நம்ம கிட்ட இருக்கணும் சிதம்பரம். உங்க பிரெண்டுதானே கூட்டிட்டு வந்துடுங்க'' என்று அவரே சொன்னதாக சிதம்பரம் கூறியதால்தான் இந்த இடத்தில் இன்று நான்.
நான் வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு எந்தத் தொல்லைகளும் இல்லை. முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் சம்பளம் குறைவு என்பதைத்தவிர வேறு வருத்தங்கள் கிடையாது. இங்கே சிதம்பரம் இருப்பதாலும், என் மீது ராஜராஜனுக்கு மதிப்பு இருப்பதாலும் என்னை நல்லபடி நடத்துவார்கள் என்ற எண்ணம்தான் துணிச்சலைத் தந்தது.
""நானே வந்து அழைத்துச் செல்கிறேன்'' என்று சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால் பல வேலை நெருக்கடிகள். எனக்கு நேற்றே தொலைபேசியில் சொல்லிவிட்டார், நான் மட்டும் தனியாக வந்து அவரை சந்திக்க வேண்டும் என்று. ""இந்த வாய்ப்பை விட்டால், பிறகு அவரைப் பிடிப்பது கடினம். சம்பளம் பற்றி எதையும் பேசிக்கொள்ள வேண்டாம். இப்போது என்ன சம்பளம் என்பதை மட்டும் வெளிப்படையாக சொல்லு. கூட்டிச் சொல்லாதே. பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்''.
சிதம்பரம் உடன் இருந்தால் இத்தனை பதற்றம் இருந்திருக்காது.
மீண்டும் அதே இனியகுரல்
அதே சிரிப்புடன் அவள்.
இன்று அவருக்கு சற்று உடல்நலக்குறைவு என்பதால் அவரால் கீழே வரஇயலவில்லை. பொதுவாக பார்வையாளர்களை வரவேற்பு கூடத்துக்கு அப்பால், அறைகளுக்கு அனுப்புவது இங்கே வழக்கம் இல்லை. என் முகம் வாட்டம் கண்டது.
""கவலை வேண்டாம். திரு. ராஜராஜன் எங்கள் இனிய வாடிக்கையாளர். அவருக்காக சில விதிகளை தளர்த்திக்கொள்வதை எங்கள் சேவைக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறோம். எங்கள் பணியாளர் உங்களை அவரது அறைக்கு அழைத்துச்செல்வார்''
அவளைப்போலவே அவளது ஆங்கிலமும் அழகாக இருந்தது. என் மகளுக்கு ஈஸ், வாஸ், ஹேவ், த, ஷல் சரியாகப் பயன்படுத்த தெரிந்துவிட்டால் இவளைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவாள்.
அந்தப் பணியாளர் கறுப்புக் கோட்டு அணிந்திருந்தார். என்னை வணங்கி, ""தயைகூர்ந்து வாருங்கள்'' என்றார். அவர் பின்னே நடந்தேன். திடீரென தெரிந்த இடைப்பகுதியில் நின்றபோதுதான் பார்த்தேன். இருபுறமும்- பக்கத்துக்கு மூன்று மின்தூக்கிகள்வீதம்- மொத்தம் ஆறு மின்தூக்கிகள். மெல்லிய இசையுடன் ஒரு மின்தூக்கியின் கதவு திறந்தது. அவர் என்னை உள்ளே போகும்படி சைகை செய்து புன்முறுவல் பூத்தார். அவரும் நுழைந்து பொத்தான் 4-ஐ அழுத்தினார். கென்னி.ஜி இசை எங்களை நான்காம் தளத்துக்குத் தூக்கிச்சென்றது.
மின்தூக்கியிலிருந்து வெளிப்பட்டு அந்த வராந்தாவில் நடக்கும்போதுதான் என் ஷூ அதிக ஒலி ஏற்படுத்துவதை உணர்ந்தேன். டக்.டக்.டக். அந்தப் பணியாளரின் ஷூ ஒலி எழுப்பவில்லை. ஷூக்களின் தோல், அடிப்பாகம் இரண்டும் மிக முக்கியம். விலை கூடக் கூட இவை மிருதுவாகவும் வலுவாகவும் இருக்கும். ஆனால் என் ஷு விலை மலிவானது. அடிப்பாகம் மட்டமானது. ரப்பரும் பாலிதீனும் கலந்த கலவை. என் கால்களை மெல்லப் பதித்தேன். ஆனாலும் ஒலி குறையவில்லை.
பணியாளர் நின்ற இடத்தில், அறையின் கதவு திறந்தே இருந்தது. உள்ளே ராஜராஜன் அழகு நாற்காலியில் சம்மணம்போட்டு அமர்ந்திருந்தார். வெள்ளை வேட்டியின் முனை சரியாக தரையைத் தொட்டபடி தேநீர் மேசைக்கு கீழே சரிந்திருந்தது. எங்களைப் பார்த்ததும் தலையை மட்டும் அசைத்து, உள்ளே வரச்சொன்னார். நான் உள்ளே சென்றேன். ஷூ ஒலி என் மண்டையைப் பிளப்பதுபோல இருந்தது. அவர் எதிரே அருகே தனிநபர் இருக்கைகள் இரண்டு இருந்தன. அவர் சொல்லாமலேயே நான் தனிநபர் இருக்கையில் உட்கார்ந்தேன். அவர் புருவம் மேலெழுந்தது. இதழோரம் புன்னகை.
சிதம்பரம் உங்களைப் பற்றி உயர்வாகச் சொன்னார்
நான் புன்னகைத்தேன்.
ஜலதோஷம்.... ஏதோ இன்பெக்ஷன்- மூக்கை உறிஞ்சினார். மேசையின் மீது இருந்த அமிர்தாஞ்சன் தைலத்தை எடுத்துத் திறந்தார். மெல்ல மூக்கின் அருகில் பூசிக்கொண்டார். அவரை பல இடங்களில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் இதுபோன்று அமர்ந்து பேசுவது இதுதான் முதல்முறை. அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பெரும் செலவாளி. தங்கும் ஓட்டல் எதுவானாலும் அதே தளத்தில் வேறொரு அறை அவரது அழகிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என்று சொல்லக் கேள்வி. வேடிக்கையாக சிதம்பரத்திடம் கேட்டபோது, அவர் சிரித்து மழுப்பிவிட்டார். அமைச்சர் கே... தாய்லாந்து சென்றபோது, ராஜராஜன் சிங்கப்பூரிலிருந்தும், ஒரு பிரபல நடிகை ஆஸ்திரேலியாவிலிருந்தும் அங்கே போனதாக சென்றவாரம் கிசுகிசு வெளியானது. மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை பணம் இருந்தால், பலவித சுகங்கள் தேடி வரும்தான்.
""உங்ககிட்ட ஏஸ்தடிக் சென்ஸ் இருக்கு. ஃபாஷன் வேர்ல்டு நீட்ஸ் பீப்பிள் லைக் யு''
புகழ்மாலை கனத்தது.
""இந்தத் தொழிலில் நிறைய மாடலிங் பெண்களுடன் பழக வேண்டியிருக்கிறது. வெளிப்படையாகப் பேசுவோமே... "செக்ஸýக்கு ஈல்டு' ஆகிப் போனால், முன்னேறவே முடியாது'' மீண்டும் தைலத்தை எடுத்துத் தடவிக்கொண்டார்.
""உங்களுக்குத் தொல்காப்பியம் தெரியுமா?'' இந்த ஆள் தொல்காப்பியம் படித்திருப்பாரா? என்ற கேள்வி ஏற்படுத்திய ஆச்சரியம் என் முகத்தில் பரவுவதைக் கண்டு திருப்தியடைந்தார். ""தொல்காப்பியர் சொல்றார்- எல்லாச் சொல்லும் பொருள் உடைத்து. அதுபோலத்தான் பெண்ணும். எல்லாப் பெண்களும் அழகுடைத்து. ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு அழகு இருக்கும். அதற்காக ஜொள்ளுவிட்டுத் திரிந்தால் நமக்கு தொழில் நடக்காது''
மூக்கை ஒரு விலங்குபோல சுழித்தார். ""ஏதோ ஒரு வீச்சம் இருக்கு இல்லை. இந்த தைலத்தை மீறி ஒரு ஸ்மெல் கேன் யு ஸ்மெல் இட்''
எனக்கு அப்படியொன்றும் வீச்சம் தெரியவில்லை. மிக நுட்பமாக முகர்ந்தபோது அவரது தைல வாசம் மட்டுமே என் நாசிக்குப் பட்டது.
""அப்படி ஏதுமில்லை''
""நோ..நோ.. சம்திங் பேட் ஸ்மெல்'' என்றவர், மீண்டும் விஷயத்துக்குத் திரும்புவது போல கனைத்தார்.
"" உங்களிடம் ஏஸ்தெடிக் சென்ஸ் இருப்பது மட்டுமல்ல, மாடலிங் பெண்களிடம் வழியாமல் நீங்கள் நீங்களாகவே பேசிக்கொண்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் கவனித்திருக்கிறேன்''
கண்களில் சிரிப்பு மின்னியது.
""ஆமாம், உங்களிடம் அதுதான் எனக்கு பிடித்திருந்தது. கெüபீன சுத்தம் தொழிலுக்கு அவசியம்''
நான் கேள்விப்பட்டதெல்லாம் வெறும் புரளியாகவும் இருக்கலாம். பணம் வைத்திருப்பவரைப் பற்றி நாலுபேர் நாலுவிதமாக கிளப்பிவிடுவார்கள்தான்.
புரமோஷனல் ஆக்டிவிட்டிஸ் நிறைய செய்ய வேண்டியிருக்கு. உங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிதம்பரம் சொன்னார்.
முதலாளி சிலாகித்தார் என்று சிதம்பரம் என்னிடம் சொல்லியிருந்தார். ஆனால் இவர், சிதம்பரம் சொன்னதால்தான் அழைத்ததுபோல பேசுகிறார்.
""சிங்கப்பூர், கோலாலம்பூர், அதை முடித்தபிறகு தில்லி, மும்பை, பெங்களூர், கடைசியாக சென்னை... எல்லா இடங்களிலும் ஃபாஷன் பரேட் நடத்த வேண்டும். நம்ம புராடக்ட் புரமோஷனுக்காக இப்படிச் செய்வது இதுதான் முதல்முறை. இதற்கான மாடலிங் பெண்களைத் தேர்வு செய்வது, அவர்களுக்கான உடைகளைத் தேர்வு செய்வது, அவர்களை அழைத்து வந்து திருப்பியனுப்புவது இதையெல்லாம் ஏஜன்டுகளே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் நம் புரோகிராமுக்கு வரும்போது, வேறு அஜன்டாவுடன் வந்தால், நமக்குத்தான் நட்டம். அவர்களை முழுக்க நம்ம கன்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் "கான்ஃபிடன்ஷியலான' ஆள் தேவை. சிதம்பரம் உங்களை மிகவும் நம்பிக்கையாகச் சொல்கிறார். அதனால்தான்...''
இவருக்கு கான்ஃபிடின்ஷியலான ஆள் தேவை. சிதம்பரம் என்னிடம் இப்படிச் சொல்லவில்லை.
""கோலாலம்பூரில் ஒரு கடை திறக்கப்போவதாக...''
""ஆமாம். அதற்கான இடம்கூட முடிவாகிவிட்டது. ஆனால் முதலில் புரமோஷனல் ஆக்டிவிட்டீஸ். அதன் பிறகுதான் பிராஞ்ச் திறப்பது. பெரிய
அளவில் சந்தையில் இறங்கப்போகிறோம்''
நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன்.
அவர் பொத்தானை அழுத்திவிட்டு என்னைப் பார்த்தார். ""சம்திங் வெரி பேட் ஸ்மெல்''.
எனக்கு என் ஷூ மீது சந்தேகம் வந்தது. ஏதாவது மிதித்துக்கொண்டு வந்துவிட்டேனா, அல்லது எனது சாக்ஸ் நாறுகிறதா? என் சந்தேகம் என்னைத் தின்னத்தொடங்கிவிட்டது.
மூடாத அறைக்கதவின் எதிரே ஒரு பணியாளர் வந்து நின்றார்.
""ப்ளீஸ். கேன் யு பிரிபேர் 2 கிரீன் டீ ஃபார் அஸ்''
அவர் யந்திரப் புன்னகையுடன் உள்ளே வந்து, ஒட்டலின் பிரத்யேக வாட்டர் பாட்டிலை உடைத்து, தண்ணீரை எலக்ட்ரிக் கெட்டிலில் ஊற்றினார். பொத்தானை அழுத்திய சிறிது நேரத்தில் நீர் பொங்க ஆரம்பித்தது. பொத்தானை அணைத்துவிட்டு, தண்ணீரை இரு கண்ணாடி டம்பளரில் ஊற்றி, இரண்டு கிரீன் டீ பைகளைப் போட்டு, சர்க்கரை பாக்கெட்டுகளை ஆளுக்கொன்றாக வைத்து தேநீர் மேசையில் வைத்தார்.
ஏதோ ஸ்மெல் அடிக்குது, இல்ல அவனிடம் கேட்டார்.
பணியாளரும் நாசியை நுட்பமாக்கினார்.
எனக்குத் தெரியவில்லை- ஒரு பணியாளருக்கே உரித்தான நழுவல்.
""கேன் யு அப்ளை ரூம் பிரஷ்னர்''
""யெஸ்''
அவன் வெளியேறும்போது எனக்குள் மிகப்பெரிய குழப்பம். குனிந்து என் சாக்ûஸ மெல்லத்தொட்டுப் பார்த்தேன். ஏதாவது ஈரம் பட்டிருந்தாலும் புழுதிபடிந்த காலுறையில் இத்தகைய வீச்சம் வருவதற்கு வாய்ப்புண்டு. சாக்ஸ் உலர்வாகவே இருந்தது. அவருக்குத் தெரியாதபடி, தேநீர் மேசைக்கு இடையே என் கால்களை புரட்டி ஷூவைப் பார்த்தேன். அடிப்பாகத்தில் ஏதும் ஒட்டியிருக்கவில்லை. ஆனாலும் மனதில் ஒரு குழப்பம். பதற்றம். குற்றவுணர்ச்சி.
""ஹேவ் யு எவர் பீன் டு கோலாலம்பூர்''
கேள்வியைக் காலதாமதமாக உணர்ந்துகொண்டு, கடல் தாண்டியதில்லை என்று சிரித்தேன்.
""ஐ.சி''
""பாஸ்போர்ட் இருக்கா?''
""இல்லை''
""நோ வொரி. ஒரு மாதத்தில் வாங்கிவிடலாம்''
அந்தப் பணியாளர் வந்து, ரூம் ஃபிரஷ்னரை அடித்தான். மெல்லிய, இதமான மணம் பரவியது. அவன் போகும்போது கதவைச் சாத்திவிட்டுச் சென்றான். ஒருவேளை திறந்த கதவின் வழியாகவும் வீச்சம் வந்திருக்கலாமோ
""கேஎன்வி இதில் ஒரு பார்ட்னர். உங்களுக்குத் தெரிந்திருக்கும்'' மெதுவாகக் கூறியவர் என் எதிர்வினையைக் காண விழைந்தார்.
""நேரடியாக இல்லை. அவர் மைத்துனி பெயரில்தான்'' சிரித்தார்.
""பணம் பெரிய விஷயமே இல்லை. கோடிகோடியாக இறக்கலாம். ஆனால் நம்பிக்கையான ஆள்கள்தான் கிடைப்பதில்லை. ஒண்ணு பணத்துக்கு விலைபோகிறார்கள். இல்லையானால், பெண்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த இரண்டு பலவீனமும் இருக்கும் ஒரு ஊழியர் "கான்ஃபிடன்ஷியல்' விவகாரங்களுக்கு சரிப்படமாட்டார்''
""ஃபாஷன் வேர்ல்டு உங்களுக்கு தெரியாதது அல்ல. மாடலிங் பெண்கள், கோலாலம்பூர், சிங்கப்பூர் வந்தால் திடீரென்று தாய்லாந்து போக ஆசைப்படுவார்கள்'' கண்சிமிட்டிச் சிரித்தார்.
""நாம் அவர்களைத் தடுக்க முடியாது. ஆனால் கண்ணும் காதும் வைத்ததுபோல அவர்கள் போய்வரப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை நேரத்துக்கு நம் புரோகிராமுக்கு அழைத்துவரவும் வேண்டும். குறிப்பாக பத்திரிகைக்காரன்களுக்கு தீனிபோடக்கூடாது. இந்தப் பெண்களிடமும், இவர்களுடைய ஏஜன்டுகளிடமும் கறாராக இருக்க வேண்டும். இல்லையானால் கவிழ்த்துவிடுவார்கள். நாம் பணம் தருகிறோம். நம் விருப்பம்தான் முக்கியம், இல்லையா?''
"நம் விருப்பம்தான்' என்பதற்கு தேவையற்ற அழுத்தம் கொடுத்தது போல இருந்தது. மீண்டும் தைலத்தை எடுத்து மூக்கின் அருகில் தடவினார்.
""பி ரெடி. உங்கள் நிறுவனத்தில் எத்தனை நாளைக்கு முன்பாக சொல்ல வேண்டும்? ஒரு மாதம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்கான பணத்தை நாங்கள் கொடுப்போம். சம்பளத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்'' புன்னகைத்தார்.
டீக் கோப்பையை காட்டினார்.
அவர் இரண்டு மிடறுகளுடன் தேநீர் கோப்பையை வேண்டாம் என்பதுபோல ஒதுக்கி வைத்தார். நான் தேநீரை வேகமாகவே பருகி, பாதியிலேயே கோப்பையை கீழே வைத்தேன்.
""வெல்..'' என்றபடி, சோபாவில் சம்மணமிட்டிருந்தவர் கால்களை விலக்கி கீழே வைத்தார். நான் எழுந்துகொண்டேன். அவர் எழாமல் என்னைப் பார்த்தார்.
""ஐ நீட் யு வெரிமச்''
அதே புன்னகை.
வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறினேன். மனது தெளிவடைந்திருந்தது. இந்த வேலை வேண்டாம் என்று சொல்லியாக வேண்டும். சிதம்பரத்திடம் எப்படி இதைச் சொல்வது? என்று மனது பல வழிகளை அவசர அவசரமாக, பதற்றத்துடன் யோசித்தது. வேகமாக நடந்தேன். என் ஷூ ஒலிகள் இப்போது எனக்கு பிரச்னையாகவே படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.