திரைக்கதிர்

"வாலி', "குஷி' உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த குமார் எழுதி இயக்கும் படம்
திரைக்கதிர்
Updated on
3 min read

"வாலி', "குஷி' உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த குமார் எழுதி இயக்கும் படம் "விரட்டு'. புதுமுகம் சுஜித் ஹீரோ. எரிகா பெர்னாண்டஸ், ப்ரக்யா ஜிஸ்வால் இருவரும் ஹீரோயின்கள். தாய்லாந்திலிருந்து மலேசியா செல்லும் ரயில் பயண சம்பவங்கள்தான் கதை. நாயகன், நாயகி உள்ளிட்ட பத்து பேர் கதையில் முக்கிய இடம் பிடிக்க, அவர்களுக்குள் எழும் ஈகோ, பயண நேர சிநேகம், பொறாமை, காதல் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவ்வாறான பயணத்தில் நிகழும் ஒரு சம்பவம் கதையில் முக்கிய இடம் பிடித்து திரைக்கதையின் போக்கை மாற்றுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ""தமிழ் சினிமாவில் இப்போது காமெடி படங்கள்தான் குறைந்தபட்ச உத்தரவாதத்தில் உள்ளன. ஆனால் அதையும் மீறி வரும் நல்ல கதைகளை ரசிகர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் பங்கும் இருக்கும். மலேசியா ரயில், அந்த ரயிலில் உள்ள சொகுசான வசதிகள் என படம் முழுக்க புத்தம் புது அனுபவத்தை இப்படம் உண்டாக்கும்'' என்கிறார் இயக்குநர் குமார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் "துருவ நட்சத்திரம்'. இதில் ஜோடியாக நடிக்க த்ரிஷாவுக்கும், அமலாபாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது. இறுதியில் த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் மற்றொரு கதாநாயகியாக சிம்ரன் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் "துருவ நட்சத்திரம்' படத்தில் நாயகியாக நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் த்ரிஷா. இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில்... "" இப்போதைக்கு நடித்து வரும் படங்களில் பிஸியாக இருக்கிறேன். புது படங்களை ஏற்கும் எண்ணம் இல்லை. காரணம், கால்ஷீட் இல்லாததுதான். இதற்கிடையே கௌதம் வாசுதேவ்மேனன் பேசியதாகவும் அவரது படத்தில் நான் நடிப்பதாகவும் தகவல் வெளிவருகிறது. சூர்யாவுடன் நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் நடிக்க காத்திருக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்'' என கூறியிருக்கிறார்.

காதலை மையமாக வைத்து உருவாகும் படம் "விருதாளம் பட்டு'. உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜோடியைப் பிரித்து அப்பெண்ணை மணக்க திட்டமிடுகிறான் தாய்மாமன். காதலனை அடித்து, அவன் இறந்து விட்டான் என கருதி ரயில் தண்டவாளத்தில் வீசுகிறான். உயிருக்கு போராடிய அந்த இளைஞன் தன் காதலியை எப்படிக் கரம் பிடித்தான் என்பதே படத்தின் கதை. ஹேமந்த் ஹீரோ. சானியா ஸ்ரீ வஸ்தவா ஹீரோயின். புதுமுகம் ஜெயகாந்தன் கதை எழுதி இப்படத்தை இயக்கி அறிமுகமாகிறார். "" உறவுகளிடமிருந்து காதலுக்கு வரும் எதிர்ப்புகள் சற்றும் குறையவில்லை. தினம் தினம் நடக்கும் காதல் சச்சரவுகள், திகைக்க வைக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இக்கதையை உருவாக்கியுள்ளேன். காதல் மற்றும் ஆக்ஷன் பின்னணியில் படம் உருவாகியுள்ளது. வழக்கமான கமர்ஷியல் சினிமாதான். ஆனால் கதையின் அழுத்தம், கமர்ஷியலை தவிர்த்து காட்டும் விதத்தில் படம் உருவாகியுள்ளது'' என்றார் இயக்குநர் ஜெயகாந்தன்.

பரத், எரிகா பெர்னாண்டஸ் நடிப்பில் சசி இயக்கும் படம் "555'. "பூ' படம் வெளிவந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் இப்படம் வெளிவருகிறது. திரைத்துறைக்கு வந்த 15 வருடங்களில், சசி இயக்கும் ஐந்தாவது படம் இது. சராசரியான இடைவெளியில் படம் இயக்கியிருந்தாலே குறைந்தது பத்து படங்களை இயக்கியிருக்கலாமே? என்றால்...""இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் இன்னும் நீங்கள் ஏன் செட்டில் ஆகவில்லை...?'' எதேச்சையான சந்திப்பு ஒன்றில் இப்படி கேட்டார் சினிமா நண்பர் ஒருவர். ""எப்படி செட்டில் ஆவது...?'' ""ஹீரோவுக்காக கதை யோசியுங்கள்...''. அந்த சின்ன உரையாடல் என்னை ஏதோ செய்தது. இதுவரை எந்த ஹீரோவையும் மனதில் வைத்து கதையை நான் உருவாக்கியதில்லை. ஒரு ஸ்கிரிப்ட் பிடித்து அதற்கான நடிகர்களைத்தான் தேர்வு செய்வேன். தமிழில் இதுவரை வெளிவந்த எந்த மாஸ் நடிகரின் கமர்ஷியல் படங்களையும் பார்த்ததில்லை. சரி ஹீரோவுக்காக கதை செய்யலாம் என எண்ணிய போது, அத்தனை கமர்ஷியல் படங்களையும் பார்த்து விட்டேன். ஆனால் அதிலிருந்து இந்த படத்தை எடுக்கவில்லை. ஆக்ஷன் ப்ளஸ் கமர்ஷியல் என்றாலும், என் கதைக்கான அடையாளம் இதில் இருக்கும்'' என்றார் சசி.

இணைந்த கைகள் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "மா இலை தோரணம்'. புதுமுகம் இன்பா ஹீரோ. விஷ்ணு பிரியா, சங்கமித்ரா ஹீரோயின்கள். "திருப்பாச்சி' ஆர்யன், இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர், ஆர்த்தி, டெல்லி கணேஷ், மயில்சாமி, சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.

பேரரசுவின் உதவியாளர் விக்ரம்சந்தர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "" அது வேண்டும், இது வேண்டும் என்ற தேடல்கள் மிகுந்த வாழ்க்கையில், எதாவது ஒன்று கிடைக்காத போதுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. பாசம், அன்பு, நேசம் எல்லாம் வைத்து வாழும் சில நெருங்கிய உறவுகளிடமிருந்து ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சும் போது, எல்லோருக்கும் கோபம் வரும். பெருந்தன்மை என்பது பெரிய விஷயம். அதை சில இடங்களில் எல்லோராலும் கண்டிப்பாக கடைப்பிடிக்க முடியாது. உறவுகளிடமிருந்து ஏமாற்றம் வரும் போது, இந்த கதையின் பாத்திரங்களின் மன நிலை என்ன என்பதுதான் கதை. "மா இலை தோரணம்' என்பது கதையின் உள் அர்த்தத்தை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் விக்ரம்சந்தர்.

தம்பி ராமையா, ஆஷிக், செல்வா, வருண், நேகா உள்ளிட்டோர் நடிக்கும் படம் "உ'. புதுமுகம் ஆஷிக் இப்படத்தை எழுதி இயக்குகிறார். எல்லா நேரங்களையும் சமாளிக்க அளவு கடந்த அறிவு தேவையில்லை. சின்ன சின்ன சாமர்த்தியத்தனங்களே போதும் என்பதுதான் கதைக்கரு. "" ஓலைச்சுவடிகளை பயன்படுத்திய நம் முன்னோர்கள், முதலில் எழுத்தாணியால் "உ' என்பதைத்தான் எழுதி பார்ப்பார்கள். ஏனென்றால் அதில்தான் வளைவு, சுழிவுகள் அதிகம் இருக்கும். அப்படி எழுதும் போது அந்த ஓலைச்சுவடி வளையாமல் இருந்தால்தான், அதை எழுத பயன்படுத்துவார்கள். அன்று முதல் இன்று வரை நாம் அந்த "உ' எழுத்தை பயன்படுத்துகிறோம். நல்ல தொடக்கம் என்பதன் பொருளே உ.  படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே தன் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலேயே ஒரு விஷயத்தை முதல் தடவையாக செய்கிறார்கள். அதை குறிக்கும் விதத்தில் "உ' என்று தலைப்பிட்டோம். தன்னால் செய்ய முடியாத ஒரு காரியத்தை நான்கு இளைஞர்களின் துணையோடு செய்ய நினைக்கும் தம்பி ராமையாவுக்கு அந்த காரியம் நிறைவேறியதா? என்பதுதான் திரைக்கதை''  என்கிறார் ஆஷிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com