மதினீ

அத்தை  சித்தியிடம் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள். சித்தியின் பெயர் - வீட்டில் முந்தைய தலைமுறையின் கடைசிக் குழந்தை
மதினீ
Updated on
4 min read

அம்மாவும் அத்தையும் பேசிக் கொண்டதேயில்லை. அத்தை என் தாய்மாமாவின்  மனைவி.

என் பள்ளி நாட்களில் முழு ஆண்டு விடுமுறை விட்ட மறு நாள் அதிகாலை ஊரிலிருந்து கிளம்பி பாளையங்கோட்டையில் அத்தை வீட்டுக்கு நுழைகையில் அநேகமாக அத்தை மாமாவுக்கான காலை நேர காப்பியை கலந்து கொண்டிருப்பார்கள்.

 என்னைப்பார்த்து, ""ஏலே வா''

உடன் வரும் அப்பாவைப் பார்த்து இரண்டு கையைச் சேர்த்துக் கும்பிட்டு, ""அண்ணாச்சி வாங்க'' என சிரித்தப்படி கூறி, அம்மாவைப் பார்ப்பதைத் தவிர்த்து, ""வாங்க''  என்பார்கள் சிரிப்பில்லாமல்.  அம்மாவும் ""உம்''

என்பார்.

 அதே முறையில் அன்று ஆரம்பிக்கும் விடுமுறை நாட்கள் ஓரிரு நாளில் முழுவேகம் பிடித்து விடும். சில ஆண்டுகள் மாமாவின் மூத்த மகளை ""அக்கா... அக்கா'' என அழைத்துக் கொண்டே சீட்டு, கேரம், கதைபுக், பாட்டு புக் எனப் பலவாகத் விளையாட்டு மாறிக் கொண்டேயிருக்கும். முதல் வாரத்திற்குள் சித்தியும் தன் இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிடுவார். இரண்டு பேரும் எனக்கு அடுத்தடுத்த வயது. ஆக மொத்தத்தில் நான்கு பேருக்கும் அந்த இரண்டு மாதங்களும் ஓடுவதே தெரியாது.

அத்தை  சித்தியிடம் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள். சித்தியின் பெயர் - வீட்டில் முந்தைய தலைமுறையின் கடைசிக் குழந்தை என்பதால் - "குட்டி'  அத்தை நொடிக்கொருதரம் "குட்டி' என்றோ "ஏ... குட்டி' என்றோ அழைத்தே வேலை ஏவிக் கொண்டேயிருப்பார்கள்.

மாமாவின் வீடு, பாளையங்கோட்டை தெற்கு பஜாரில். ஒரே வளவுக்குள் 4 வீடுகள். அதில் தெற்கே பார்த்த மேல வீடு மாமா வீடு. அடுத்த கீழ் வீடு, எதிர்த்த இரண்டு வீடுகள் எல்லாம் எனக்கு மாமா முறையினர் வீடுகள்தாம். அம்மாவுக்கு பெரியப்பா மகன்கள் வீடு. வளவில் மாமா வீடுதான் பெரியது. அகலமான தார்சாலையில் இருபுறமும் அகலமானகல் திண்ணைகள்.  ஓர் ஆள் தாராளமாகப் படுத்துறங்கலாம். மேல்புறத் திண்ணையோரத்தில் வில்வமரம். அடுத்தாற்போல்  அகலமுடுக்கு. கோடை காலத்தில் திண்ணையிரண்டிலும் படுக்க 24 மணிநேரமும் தூங்கலாம். இரவு படுக்கை பெரிய வெளித் தார்சாவில். கல்திண்ணையில் அப்பா படுத்திருக்க, அம்மா, சித்தி, அத்தை ஒரு வரிசையிலும் எதிர்வரிசையில் நான், சித்தி மகன்கள், மாமாவின் மகள். அம்மா, சித்தியும் இருட்டிலும், விழிகள் மினுங்கப் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

தாத்தாவிற்கு ஓர் ஆண், இரண்டு பெண். அம்மாவும், சித்தியும். பாளையங்கோட்டையில் பிள்ளைமார்கள் கை ஒங்கியிருந்த காலத்தில் லேவாதேவி,  அஞ்சலக குமாஸ்தா வேலை,  நிலபுலன் என தாத்தா ஒரே தடபுடல். மாமா தமிழ் படித்தார். வேலை என்று ஒன்றுக்கும் போகவில்லை. கட்டாயம் போக வேண்டிய சூழ்நிலையும் அந்த காலக்கட்டத்தில் இல்லை.

தமிழ்க் கூட்டங்களுக்குப் போவார். பெரியார் கட்சி, பின் அண்ணா  அவரோடு புதுக்கட்சி என அரசியல், இலக்கியம். வீட்டில் எப்பொழுதும் படிக்கவும், பாடம் கேட்கவும் இளைஞர் பட்டாளம் இருக்குமாம். மதியமும், இரவும்  மாமாவுடன் சாப்பிட குறைந்தது இருபது நண்பர்கள். இதெல்லாம் எனக்கு சொல்லித்தான் கேள்வி. நான் கல்லூரிக்குள் நுழைந்து மாமாவுடன் அமர்ந்து பேசும் காலத்தில் அதே போல் நண்பர்கள் கூட்டம் வயதானவர், இளையவர், நடுவயதுக்காரர், பேராசிரியர்கள், வியாபாரிகள் வெவ்வேறு அளவிலும், கட்சியிலும் அரசியல்வாதிகள். அவர்கள் சந்தேகங்கள் கேட்க, மாமா அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய துறையில் உள்ள விற்பன்னர்களின் மேற்கோள்களுடன் தெளிவு செய்வார்.

படுக்கையும், அருகில் உள்ள தொலைபேசியும் புத்தகங்களும் தொடர்ச்சியான காபியும்,சிகரெட்டும்தான் வாழ்க்கை. மாமாவின் பூர்வீகச் சொத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் ஆயின. வருமானமும் புத்தகங்களாகவே வந்தன. ஒரு கட்டத்தில்  தள்ளாடி தடுமாறியது மாமாவின் தினசரி வாழ்க்கை. மாமா மகளும் வளர்ந்தாள். அவளை ஏம்.ஏ ஆங்கில  இலக்கியம் படிக்க வைத்தார் வேலை வாய்ப்புமில்லை. தன்னால் உருவாக்கப்பட்டவர்களையோ, உருவாகி வருவபர்களையோ மாமா தன் மகளின் வேலைவாய்ப்பு குறித்து ஒன்றும் கேட்கவில்லை. அந்த வட்டமும் மாமாவின் குணத்தை செüகரியமாக எண்ணியதோ என எனக்கு நினைக்கத் தோன்றும்.

அவளை ஒரு சுயநிதி மேனிலைப்பள்ளி ஆசிரியருக்கு கை பிடித்து கொடுக்கு முன் மாமா ஆய்ந்து ஓய்ந்துவிட்டார். ஒரு வழியாக அவளுக்கு 30 வயது நெருங்குகையில் 20 பவுன் போட்டு கல்யாணம் செய்கையில் மாமா கிட்டத்தட்ட  திவாலாகிவிட்டார்.

 எனக்கும் திருமணமாகியது. புதியவள் அவள் குடும்பத்தினர் என புதிய பட்டியல் வந்த பின்பும் மாமாவின் முடிவுகள் தான் எங்கள் குடும்பத்தில் என்பதில் நடக்கும் என் மனைவிக்கு அடங்காத சினம், சீற்றம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதல்லாம் சீறுவாள். மட்டரகமாகப் பேசுவாள். தட்டிக்கேட்கவும் முடியாமல்  வெளியே சொல்லவும் முடியால் தவித்தேன் நான்.

மெல்ல  என் மனைவியின் கோபம் அண்ணன் தங்கை உறவைத் தாக்கத் தொடங்கியது.

  ""உங்க அம்மா  உங்க மாமாவுக்கு உங்க அத்தையை கட்டக்கூடாது என்று சொன்னாளாமே?''  என்று வினவினாள் ஒரு இரவில் படுக்கையில்.

அம்மாவைக்குறித்து ஒருமைச் சொல் உறுத்தியது. 30 ஆண்டுக்கு முந்தைய கதை இப்போது எதற்கு என்று எண்ணியப்படியே அமைதியாக இருந்தேன்.

 ""என்ன பேச்சையே காணோம்?'' என்றாள்.

""தெரிலே'' என்றேன் பொத்தாம் பொதுவாய்.

""உங்க அம்மக்கி கழுத்து நிறைய நகையோடு கொழும்பு வியாபாரி வீட்டியிருந்து தன் அண்ணனுக்கு பெண் எடுக்கணும்னு ஆசை. உங்க ஆச்சியும் மகள் ஐடியாவுக்குத்தான் சப்போர்ட். ஆனா உங்க மாமா, படிச்ச பெண் வேணும்னு உங்க அத்தையை கட்டி வைக்கச்சொல்லி உங்க ஆச்சிட்ட சண்டை போட்டு கட்டிக்கிட்டாராம்'' என்றாள்.

""உண்மை தெரியவில்லை. அத்தை படித்துஇருக்கிறார்கள் என்பதும் புதிய தகவல் எனக்கு உண்மையிலேயே தெரியலே'' என்றேன்.

""உங்களுக்கும், உங்கம்மைக்கும் வாயில் விரல விட்ட கடிக்கத் தெரியாது'' என்றாள்.

மறுநாள் அவள் குளிக்க போயிருப்பதை உறுதி செய்து கொண்டு அம்மாவிடம், ""அம்மா... அத்தை படிச்சிருக்காங்களோ?'' என்றேன்.

""உன் பொண்டாட்டி கேட்டாளோ? நேத்து புதுப்பேட்டை தெரு சாந்தா இவளைப் பார்க்க வந்தா. அவ சொல்லியிருப்பா'' என்றாள்.

""அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு'' என்றேன்.

""ஆமா பி.ஏ படிச்சிருக்கா. ஆனா என்ன பிரயோஜனம்? ஒரு கழுத்தச் செயினை மட்டும் போட்டுகிட்டு வந்து எங்கப்பா சொத்தை ஆள வந்துட்டா. செவத்த தோலுக்கு இவனும் மயங்கிட்டான்'' என் அண்ணனையும் சாடினார்.

""நீ அத்தையைக் கட்டக் கூடாதுன்னு உங்கம்மாட்ட சொன்னயா?'' என்றேன்.

நேரடியான கேள்வியால் அம்மா திக்கு முக்காடினார்.

""அதெல்லாம் இல்ல. இரண்டு மூணு பெரிய இடங்களை நானும் உங்க அப்பாவும் துப்புச் சொன்னோம். பேசியும் பார்த்தோம். எங்கண்ணன் பெரியார் கொள்கை அது இதுன்னு படிச்ச பொண்ண அய்யர் இல்லாம தாலி கட்டிகிட்டான். என்னத்தச் சொல்ல? இத்தனை வருஷம் கழிச்சு உன் பொண்டாட்டி உனக்கு உபதேசிக்காளா?'' என்றாள்.

 அம்மாவின் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்ததை கவனித்துப் பேச்சை வளர்க்காமல் விட்டுவிட்டேன்.

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என் அம்மாவின் பிம்பத்தை உடைத்து தன் பிம்பத்தை நிலை நாட்டினாள் என் பத்தினி. நான் அம்மாவிடம் எதையும் கேட்பதில்லை என சாணக்கிய சபதமே எடுத்திருந்தேன்.

""உங்கம்மா ஒரு நாள் உங்கத்தையை வெளியே வச்சு கதவைப்பட்டிட்டாளாமே? உங்க அத்தை விடிய விடிய திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தாங்களாமே?'' என்றாள் ஒரு இரவில். மறுநாள் பகலில் தாங்க முடியமால் இச்சம்பவத்தை அம்மாவிடம் கேட்டேன் ""ஏலே உங்க அத்தை எங்கண்ணட்ட கேட்காம அவ அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தா நான் சனி, ஞாயிறு லீவுக்கு ஊருக்கு வந்திருந்தேன். எங்கண்ணன்  யாராவது கதவு தொரந்தா நா செத்ததுக்கு சமம்ன்னு சொல்லிட்டான். நான் யாருக்குன்னு ஆக? அதனால் நானும், எங்கம்மையும் திறக்கல'' என்றார்.

அம்மாவின் பிம்பம் இன்னொரு முறை எனக்குள் உடைந்தது.

மெல்ல மெல்ல நானும் என் மாமாவைப் போல் படிக்க ஆரம்பித்தேன் மாமாவின் கைப்பிடித்து ஒவ்வொரு படைப்பாளியாக தேடினேன். வெறும் மாமனாக இருந்த வரை ஒரு ஞானகுருவாக ஏற்று இலக்கிய உலகில் மிதந்தேன். மாமாவுக்கு ஏன் பணத்தின் மேல், உலகின் மேல் பெரிய பற்றில்லை என்று புரிய ஆரம்பித்தது.

மாமா மெல்ல பற்றிலான் பற்றை பற்றத் தொடங்கினார். வாழ்க்கையின் வட்டம் வேறு மாதிரி அவருக்கு சுழலத்தொடங்கியது. தமிழிலிருந்து ஆன்மிக உலகுக்குள் புகுந்தார். அத்துறையிலும் ஒரு பெரிய வட்டம் அவர் பின் வந்தது. சைவ மடாதிபதிகள் மாமாவை அழைத்து ஆன்மிக விளக்கம் கேட்டனர்.

எனக்குள் கொஞ்சம் புரிதல் அம்மா, தங்கை, மனைவி என்ற மூன்று பெண்களின் பிடியில் மாமாவின் வாழ்க்கை மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். பெரும் இலக்கிய ஆசானக, அரசியல் குருவாக, ஆன்மிக வழிகாட்டியாக பலர் ஏற்றுக் கொண்ட என் மாமா, இந்த மூன்று பெண்களிடம் தன்னை நிலை நிறுத்த முடியாமல், மனைவியோடு உள்ள வாழ்வை,காதலை தனியாகப் பிரித்தெடுக்க முடியாமல்  குழம்பியது எனக்கு வியப்பாக இருந்தது. நான் தெளிவாக வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.

வழக்கத்திற்கு மாறாக காலை வேளையில் என் மாடிக் கதவு தட்டப்பட்டது. நான் படுக்கைப் பக்கத்திலிருந்து கைபேசியில் மணியைப் பார்த்தேன். காலை 5.50 இந்த நேரத்தில் யார் ஏன நினைக்கையில் அம்மா தட்டினாள்.

""ஏலே கதவைத் திற'' என்றாள்

குரலில் பதட்டம்.

""என்ன''? என்றேன். கதவைத் திறந்தபடியே ""உங்க மாமா காலைய எந்திரிச்சு கக்கூஸ் போனவன், கீழே பேச்சு மூச்சில்லாம விழுந்துட்டானாம். வேளாங்கண்ணி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க. சீனி மாமா மகன் போன் பண்ணினான் ஆஸ்பத்திரிக்கு போகணும்'' என்றாள்.

சட்டையை மாட்டிக் கொண்டு காரில் அம்மாவை ஏற்றிக் கொண்டு விரைந்தேன்.  மனசுக்குள் ஆயிரம் கேள்விகள். மாமாவின் வயது, சிகரெட்டு, பருத்த உடல் என ஆயிரம் ஓட்டம். ஆஸ்பத்திரிக்கு மாமா வீட்டுத் தெரு வழியாகத்தான் போகவேண்டும். வீட்டின்  முன் சீனி மாமா மகன் ஓர் அட்டோவுடன் நின்று கொண்டிருந்தார்.

நான் காரை நிறுத்தினேன். அவன்  ஒன்றும் பேசாமல் உள்ளே கையைக் காட்டினான். நானும் அம்மாவும் உள்ளே ஏறக்குறைய ஓடினோம்.

உள்ளே மாமாவை தரையில் படுக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். சீனி மாமா வீட்டு  அத்தை ""மருமகனே கொழுந்தன் நம்மை விட்டுவிட்டு போயிட்டாக'' என்றாள்.

அத்தை முதுகைக் காட்டிக்கொண்டு மாமாவின் உடலருகில் உட்கார்ந்திருந்தார். அம்மா உள்ளே நுழைந்து அத்தையின் முதுகை தொடவும், அத்தை திரும்ப நிமிர்ந்தார்கள்.  இருவரும் ஒரே நேரத்தில் உச்ச ஸ்தாயில் அலறினார்கள்.

""ஏ  மதினீ''.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com