ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வீக்கங்களைப் போக்க...

உந்தித் தள்ளுதல் எனும் ஒரு செயலை உடலிலுள்ள வாயுவினால் மட்டுமே செய்ய இயலும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வீக்கங்களைப் போக்க...
Published on
Updated on
2 min read

எனது மனைவி (வயது 67) சர்க்கரை வியாதியுள்ளவர். இரண்டு வாரங்களாக இடது கால் தொடை முதல் பாதம் வரை வீக்கமும் வலியுமாக உள்ளது. காலுக்கு இறங்கும் ரத்தம் திரும்ப இதயத்துக்குச் செல்லாததே இதற்குக் காரணம் என்று டாக்டர் கூறி சிகிச்சை அளித்தார். வீக்கம், வலி குறைந்தாலும் குணமாகவில்லை. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை என்ன?

செ.பாண்டியன், பரமக்குடி.

உந்தித் தள்ளுதல் எனும் ஒரு செயலை உடலிலுள்ள வாயுவினால் மட்டுமே செய்ய இயலும். இடுப்புக்குக் கீழே அபானன் என்ற வாயு தனக்குச் சமமான குணங்களைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் வளர்ச்சியடைந்துவிட்டால், பித்தம், ரத்தம், கபம் ஆகியவற்றை  வெளிப்புறச் சிரைகளை நோக்கித் தள்ளுவதுடன் அவற்றால் வழி தடைப்பட்டதன் காரணமாக சருமம், மாமிசம் போன்ற பகுதிகளில் தங்கி, நெருக்கமுற்று உயர்ந்து வீக்கத்தை உண்டாக்கும். எனவே எல்லா வீக்கங்களும் மூன்று தோஷங்களின் காரணமாகவே உண்டாகின்றன என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

 வீக்கம் ஏன் ஏற்படுகிறது? நோய், பட்டினியிருத்தல் முதலியவற்றால் உடல் இளைத்த நிலையில், எளிதில் ஜீரணிக்காதவை, புளிப்பு, நெய்ப்பு, குளிர்ச்சி போன்ற உணவு வகைகளை அதிக அளவிலும் விரைவாகவும் உட்கொள்ளுதல், துவர்ப்பு, சூடான வீர்யம் கொண்ட கறிகாய்கள், தாகமில்லாத போது நீர் அருந்துதல், காலத்திலல்லாத தூக்கம், இரவில் கண் விழித்தல், கிராமத்துப் பிராணிகளின் மாமிசம், வறண்ட மாமிசம், கால்நடையாகவாவது, உடலைக் குலுக்கும் வாகனங்களிலாவது பிரயாணம் செய்தல், சுவாசம், இருமல், பேதி,மூலம், மகோதரம், பெரும்பாடு, காய்ச்சல், வாந்தி பேதி, மப்பு நிலை, சோகை போன்ற உபாதைகளுக்குத் தக்கவாறு சிகிச்சை செய்யாமை ஆகிய காரணத்தாலும், தோஷங்கள் மார்பில் தங்கினால் உடலின் மேற்புறத்திலும், சிறுநீர்ப் பையில் தங்கினால் உடலின் கீழ்பாகத்திலும், உடலின் மத்திய பகுதியில் தங்கினால் நடு உடலிலும் வீக்கமுண்டாகும்., உடலின் எல்லாப் பாகங்களிலும் தோஷங்களாகிய வாத பித்த கபங்கள் பரவியிருந்தால் உடல் முழுவதிலும் ,ஒரு பாகத்தில் இருந்தால் அப்பகுதி மட்டிலும் வீக்கமுண்டாகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

உங்களுடைய மனைவிக்கு பசி நன்றாக எடுத்து உண்ணும் உணவு நன்றாகச் செரிக்கக் கூடியவராக இருந்தால், சுக்கு 5 கிராம், மிளகு 5 கிராம் பொடித்து, அவற்றிலிருந்து சுமார் 2 கிராம் வீதம் சேர்த்து வெந்நீருடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, கால் பகுதியிலுள்ள ரத்த ஓட்டம் சீராகி, வீக்கமும் வலியும் குறைய வாய்ப்பிருக்கிறது. பசி மந்தமாக இருந்து, செரிமானம் குறைவாக இருந்தால் வெறும் வெந்நீர் மட்டும் எளிதாகச் செரிக்கும் உணவு வகைகளுடன் சாப்பிட்டு, பசி நன்றாக ஏற்பட்ட பிறகு மேல் குறிப்பிட்ட சிகிச்சையைச் செய்யலாம். த்ரிபலா எனும் சூரண மருந்தை 5 கிராம் எடுத்து, 300 மி.லி. தண்ணீரில் கொதிக்க விட்டு, 150 மி.லி. ஆனதும் வடிகட்டி, சிலாஜது எனும் பஸ்மத்துடன் (2 கிராம்) காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லதே. இதனால் சர்க்கரை உபாதையின் தாக்கமும் குறையும்.

பசு மூத்திரத்தில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்த 2 -3 கடுக்காய் தோடுகளை மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட நீர்ப்பேதியாகி வீக்கம் வற்றிவிடும். மாதத்தில் 2 முறை இப்படிச் சாப்பிடுவது நல்லது. தற்சமயம் பருவகாலம் இந்த பேதிக்கு உகந்ததாக அனுகூலமாக இருக்கிறது.

தான்வந்திரகிருதம் எனும் நெய் மருந்தை சுமார் 5 மி.லி. அளவில் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர, ரத்தக் குழாய்களுக்குத் தேவையான மிருதுத்தன்மையை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்தி, வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை உபாதையின் பாதிப்புகளைக் குறைக்கும் தசமூலஹரீதகீ எனும் லேகிய மருந்தையும் சுமார் 5 -8 கிராம் காலை, இரவு உணவுக்கு 1/2 -1 மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுவதன் மூலமாக, வீக்கத்தை வடியச் செய்யலாம். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி இம்மருந்தின் உட்கொள்ளும் நேரத்தை உடல் நிலைக்கு ஏற்றபடி மாற்றி அமைப்பதன் மூலமாகவும் நன்மை பெறலாம்.

பழைய அரிசியைச் சாதம் வடித்து பயத்தம் பருப்புக் கஞ்சி, திப்பிலி சூரணம், கொள்ளு ரஸம் என்ற வகையில் சாப்பிட்டால் வீக்கம் வடியும். புளிப்பில்லாத மோர், பானத்துக்கு ஏற்றதாகும். பஞ்சாம்ல தைலம் எனும் மூலிகைத் தைலத்தை வீக்கமுள்ள பகுதியில் பூசி 1/2 - 1 மணி நேரம் ஊறிய பின்னர் வேப்பம்பட்டை, மூக்கிரட்டை, புங்கு, எருக்கு இவற்றைக் கலந்து காய்ச்சப்பட்ட நீரினால் அலம்பி விடுவது வீக்கத்தை வற்றச் செய்யும் ஒரு வெளிப்புறச்  சிகிச்சையாகும். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com