திரைக்கதிர்

2008 மற்றும் 2013 என இரு காலக் கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது "விழி மூடி யோசித்தால்'.
திரைக்கதிர்
Updated on
2 min read

2008 மற்றும் 2013 என இரு காலக் கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது "விழி மூடி யோசித்தால்'. ஊமைப் பெண்ணைக் காதலித்து மணக்க எண்ணுகிறான் ஹீரோ. மர்மமாக அவள் கொல்லப்படுகிறாள். கொலை செய்தது யார்...? கொலைக்கான காரணம் என்ன..? என்பதை கல்லூரி, காதல் மற்றும் த்ரில்லர் பின்னணியில்  சொல்கிறது கதை. அமெரிக்காவில் பல குறும்படங்களை இயக்கிப் புகழ் பெற்ற கே.ஜி.செந்தில்குமார் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். படத்தை இயக்கி, தயாரிப்பதுடன் ஹீரோவாகவும் நடிக்கிறார். நிகிதா, பானுஸ்ரீ மெஹரா ஹீரோயின்கள். ஊர்வசி, பாலாசிங், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலைகள் பெங்களூர் நெடுஞ்சாலை என பெரும் பகுதி நெடுஞ்சாலைகளில் படமாக்கப்பட்டுள்ளது. காதல், த்ரில்லர் என்றாலும் படத்தில் சர்வதேச பிரச்னை மையமாக உள்ளது.  க்ளைமாக்ஸôல் சர்ச்சை ஏற்பட்டு விடுமோ என்பதால், இப்படத்துக்கு 3 க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதில் ஒரு க்ளைமாக்ஸ் தேர்வு செய்யப்படுமா?.

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து இசையமைக்கும் படம் "இசை'. இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றிய படம். படத்தின் கதை இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியது என சினிமா வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களின் கேரக்டர் பெயரும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என உச்சரிப்பது போலவே வருவதாகவும் கூறப்படுகிறது. ரஹ்மான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இளையராஜா கேரக்டருக்கு முதலில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமானார். ஆனால் அவர் இளையராஜா கேரக்டரில் நடிப்பதாக வெளியான தகவலால் திடீரென படத்திலிருந்து விலகி விட்டார். சர்ச்சைகளுக்குப் பயந்தே அவர் விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து கதையின் ஒன் லைன் சொல்லி பல நடிகர்களை அழைத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் யாரும் முன் வரவில்லை. இந்த நிலையில் சத்யராஜ் இளையராஜாவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

"வெடிகுண்டு முருகேசன்', "கருப்பசாமி குத்தகைதாரர்' ஆகிய படங்களை இயக்கிய கோவிந்தமூர்த்தி இயக்கும் படம் "பப்பாளி'. இப்படமும் காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவாகிறது. இப்படத்துக்கும் வடிவேலுவை மனதில் வைத்து காமெடி ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. ஆனால் வடிவேலுவை தொடர்பு கொள்ள முடியாமையால், அந்த இடத்தில் நடிப்பவர் சிங்கம்புலி. படத்தின் கதை என்ன...? ""தாத்தாவின் நிறைவேறா ஆசை, அப்பா மேல் விழும். அப்பாவின் லட்சியங்கள் மகன் மீது திணிக்கப்படும். இது தினமும் யாருக்கோ, எங்கேயோ நடந்து கொண்டே இருக்கும். மகனின் பெயருக்குப் பின்னால் கல்யாணப் பத்திரிகையில் போட வேண்டும் என்பதற்காக கடனுக்கு படிக்க வைத்து விட்டு, அதன் பின் கடை கல்லாவிலேயே உட்கார வைக்கிற அப்பாக்கள்தான் இங்கு அதிகம். மகன்களின் ஆசையையும் அப்பாக்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். திட்டும் போது கூட பாசிட்டிவாக திட்ட வேண்டும் என்பதுதான் படத்தில் சொல்ல வரும் செய்தி'' என்கிறார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி.

ஃபைன் ஃபோகஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "நெடுஞ்சாலை'. "சில்லுன்னு ஒரு காதல்' படத்துக்குப் பின் கிருஷ்ணா இப்படத்தை எழுதி, இயக்குகிறார். கதாநாயகனாக ஆரி நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் ஷிவதா நடிக்கிறார், தம்பி ராமையா, மலையாள நடிகர் சலீம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ""1960, 80 மற்றும் இன்றைய காலக் கட்டங்களில் நடக்கும் சம்பவங்கள்தாம் கதை. நிஜ மனிதர்களின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். கற்பனை கதைதான் என்றாலும், நிஜ வாழ்க்கையின் அசலாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 80-களில் நகரமும், கிராமமும் எப்படியிருந்தது என்பதை  ஆராய்ந்து படத்துக்கான முக்கிய காட்சிகளைப் படமாக்கியிருக்கிறேன். கிராமமும், நகரமும் கலந்து வித்தியாசப்பட்ட கோணத்தில் இருந்த ஊர்கள் சிலவற்றை படம் பிடித்திருக்கிறேன். அது கதைக்கு பலமானதாக இருக்கும். நெடுஞ்சாலை என்ற பெயருக்கேற்ப முழுக்க முழுக்க நெடுஞ்சாலைகளிலேயே நடக்கும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் கிருஷ்ணா.

இராம.நாராயணன் எழுதி இயக்கும் 126-வது படம் "ஆர்யா சூர்யா'. நதியா, குஷ்பூ போன்ற ஹீரோயின்கள் பெயரில் பாடல்கள் வந்தது போல், நடிகை முமைத்கான் பெயரில் இப்படத்தில் பாடல் இடம் பெறுகிறது. இராம. நாராயணனிடம் பேசுகையில், ""சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இரண்டு நண்பர்கள் சென்னை வருகின்றனர். அந்த இளைஞர்களின் வாழ்வில் சினிமாவும், அரசியலும் குறுக்கிடுகிறது. இதில் அவர்கள் எதை தேர்வு செய்து முன்னேறுகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்வதே கதை. விஷ்ணுபிரியன், கங்கை அமரன், கோவை சரளா, நட்சத்திரா, நளினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முமைத் கான் பெயரில் ""முமைத் முமைத் முமைத்....'' என்ற பாடல் இடம் பெறுகிறது. பேராசிரியர் கருணாநிதி எழுதியுள்ள இப்பாடலை "ஒஸ்தி' படத்துக்குப் பின் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடியிருப்பதுடன் முமைத்கானுடன் நடனமும் ஆடியிருக்கிறார் டி.ராஜேந்தர். இதற்காக டிஆர் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான ஐந்து செட்கள் போட்டு இப்பாடலை படமாக்கியுள்ளனர்.

பாலிவுட் செல்கிறார் பரத். சசி இயக்கும் "555' படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நடித்துள்ளார் பரத். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது. டிரெய்லர்  பார்த்து பிரமித்துப் போன பாலிவுட் இயக்குநர் கொய்சாத் குஸ்தாத், தான் புதிதாக இயக்கவுள்ள படத்தில் நடிக்க பரத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வெவ்வேறு கலாசாரங்களை கொண்ட நான்கு இளைஞர்கள் கோவாவில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியிலிருந்து கோவா சென்று வசிக்கும் இளைஞனாக பரத் நடிக்கிறார். ""பாலிவுட் வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நான்கு இளைஞர்களுக்குள் நடக்கும் கதையாக உருவாகிறது. ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ஏமாற்றிக் கொள்வதுதான் கதை. படத்தில் தமிழ் கலந்த ஹிந்தி பேசுவேன். இதற்காக ஹிந்தி ஆசிரியர் ஒருவரிடம் ஹிந்தி கற்று வருகிறேன்'' என்றார் பரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com