

"சுறா' படத்துக்குப் பின் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் படம் "பட்டைய கௌப்பணும் பாண்டியா'. விதார்த், சூரி, மனிஷாயாதவ், இமாம் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் பயணிக்கும் ஒரு மினி பேருந்துதான் கதை களம். பஸ் டிரைவர் விதார்த்துக்கும் அதில் பயணிக்கும் பள்ளி மாணவி மனிஷாவுக்கும் காதல். அதன் பின்னணியில் கலகலப்பான காமெடி, சுவாரஸ்யம் நிறைந்த சம்பவங்கள் என திரைக்கதை உருவாகியுள்ளது. பஸ் கண்டக்டராக சூரியும், பஸ் ஓனராக இமாம் அண்ணாச்சியும் பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். முழுக்க முழுக்க மினி பஸ்தான் கதை களம் என்பதால், ரூ.16 லட்சத்துக்கு சொந்தமாகவே மினி பஸ் வாங்கி ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. ""வடிவேலுக்கு நான் எழுதிய பல காமெடிகள் இப்போதும் ஹிட். அந்த அனுபவங்களைக் கொண்டு இந்த படத்துக்கான காமெடி ஸ்கிரிப்ட்களை எழுதியிருக்கிறேன். கொஞ்சம் கதை, காமெடி அதிகம் என்ற விதத்தில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' என்கிறார் எஸ்.பி.ராஜ்குமார்.
இசைக் கலைஞர்களின் காதல் கதையாக உருவாகி வரும் படம் "ஜமாய்'. "பாடும் வானம்பாடி' படத்தை இயக்கிய ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். நவீன், உதய் ஹீரோக்கள். வைஜெயந்தி, நிமிஷா ஹீரோயின்கள். ராதாரவி, பாண்டு, டி.பி.கஜேந்திரன், சங்கீதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ""காதலுக்கும், காமெடிக்கும் தரும் முக்கியத்துவம் இசை சம்மந்தப்பட்ட கதைகளுக்கு இல்லை. அந்த வகையில் இசையுடன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. டிரம்ஸ் வாசிப்பதில் கை தேர்ந்த கல்லூரி மாணவன், அதே கல்லூரியில் புகழ் பெற்று விளங்கும் பாடகர் இருவருக்கும், தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு பாடகி மீது காதல் பிறக்கிறது. மூவருக்குமான சம்பவங்கள் முக்கோண காதல் கதையாகச் சொல்லப்படுகிறது. அந்த காதல் அடைந்த நிலை என்ன? இசைக் கலைஞர்கள் இருவரும் தன் லட்சியத்தை அடைந்தார்களா? என்பதை கமர்ஷியலாக சொல்லுவதே கதை. கேரளத்தில் முதற் கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளது. அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடக்கிறது'' என்றார் இயக்குநர் ஜெயக்குமார்.
பெற்றோர்களின் உணர்வை புரிந்துக் கொள்ளாமல் நண்பர்கள்தான் வாழ்க்கை என்று இருக்கும் வாலிபன் வாழ்வில் காதல் பிறக்கிறது. நட்பா? காதலா? என்ற சூழல் எழும் போது அவன் எடுக்கும் முடிவுதான் "அழகு மகன்' படத்தின் கதை. புதுமுகம் உதய் ஹீரோ. மாளவிகா வேல்ஸ் ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி அகமலை, புலிக்குகை போன்ற இடங்களில் நடந்தது. "பிதாமகன்', "பரதேசி' போன்ற பாலாவின் படங்கள் ஷூட்டிங் நடந்த இடங்கள் மற்றும் அதற்கும் உயரமான இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல வாகன வசதிகள் கிடையாது என்பதால், உதய், மாளவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்கள். அக்கு அஜ்மல் ஒளிப்பதிவில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, புதுமுக இயக்குநர் அழகன் செல்வா இப்படத்தை இயக்குகிறார்.
தெலுங்கில் "இ வருஷம் சாக்ஷிகா', கன்னடத்தில் "ரன தான்ட்ரா' உள்ளிட்ட படங்களில் நடிக்கும் ஹரிப்பிரியா, நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் "வாராயோ வெண்ணிலாவே' படத்தில் நடிக்க வந்திருக்கிறார். ""முரண்' படத்துக்குப் பின் தமிழில் ஏற்பட்ட இடைவெளிக்கு நல்ல கதைகள் அமையாமல் போனதுதான் காரணம். எதிர்பார்த்த வாய்ப்பு "வாராயோ வெண்ணிலாவே' படத்தின் மூலம் வந்ததால், தமிழ் சினிமாவுக்கு வந்து விட்டேன். காதல் கதை என்றாலும், வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. என் கதாபாத்திரத்தின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று பல முறை இயக்குநரிடம் கேட்டு, அதை உணர்ந்து நடித்து வருகிறேன். சசிதரண் இயக்குகிறார். "அட்டக்கத்தி' தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். காதல் பாடல் ஒன்றுக்காக தற்போது மூணாறில் இருக்கிறேன். தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பிஸியாக இருக்கிறேன். தெலுங்கில் வெளிவரவுள்ள "அப்பாயி கிளாஸ் அம்மாயி மாஸ்' படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என கூறினார் ஹரிப்பிரியா.
"இம்சை அரசன் 23-ம் புலிகேசி', "அறை எண் 305-ல் கடவுள்', "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன், கதை எழுதி இயக்கும் படம் "ஒரு கன்னியும் 3 களவாணிகளும்'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். பிந்துமாதவி, அஷ்ரிதா ஷெட்டி ஹீரோயின்கள். பகவதி, கார்த்திக் சபேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். மோகனா மூவிஸ் சார்பில் மு.க.தமிழரசு இப்படத்தைத் தயாரிக்கிறார். ""வழக்கமாக என் படத்தில் இருக்கும் அதே பாணிதான் இந்த திரைக்கதையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உணர்வுகளைத் தொட்டுப் பார்க்கும் சில காட்சிகளுடன், கலகலப்பான காமெடி திரைக்கதையில் முக்கிய இடம் பிடிக்கும். ரொமான்டிக் காமெடி படமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி காட்சி வரை சிரித்துக் கொண்டே இருப்பது போல் படம் இருக்கும். விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது'' என்றார் சிம்புதேவன்.
விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ஹிட்டான படம் "ரமணா'. தெலுங்கில் "ஸ்டாலின்' என்ற பெயரில் ரீமேக்கான இந்தப் படம், தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தமிழில் "வானம்' படத்தை இயக்கிய கிரீஷ் இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷய் ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று கூறப்பட்டது. இப்போது அவருக்குப் பதில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்று தெரிகிறது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷய்குமாருடன் இதுவரை நடிக்காத ஒருவரை ஜோடியாக நடிக்க வைக்கும் எண்ணம் இருக்கிறதாம். தமன்னா ஏற்கெனவே அக்ஷய்குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதால் இதில் ஸ்ருதியை நடிக்க வைக்க இருக்கிறோம் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.