

வாரிசுகளின் வரிசையில் சேருகிறார் ஜெமினி கணேசன் - சாவித்ரி தம்பதியரின் பேரன் அபிநய். "விளம்பரம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில், புதுமுகம் ஐரா, "அட்டக்கத்தி' ஐஸ்வர்யா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதன் ஷூட்டிங் மலேசியா, கோலாலம்பூர், புத்ரஜெயா ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.
"சிங்கம் -2' படத்தின் சிறப்பு குறித்து சூர்யாவிடம் பேசுகையில், ""சிங்கம்' படத்தின் வெற்றி காலம் கடந்தும் பேசப்படுகிறது. சில படங்களுக்கு மட்டும்தான் இது மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும். சினிமா பயணத்தில் எனக்கான நிரந்தரமான இடத்தை பிடித்ததில் "சிங்கம்' படத்துக்கு மகத்தான இடம் உண்டு. அதைத் தொடர்ந்து "சிங்கம் -2' படத்தில் அதீத ஆர்வம் காட்டியிருக்கிறேன். "சிங்கம்' உள்ளூர் போலீஸ், ரௌடியிசம் எனப் பேசியிருக்கும். இது சில எல்லைகளை கடந்து சர்வதேச பிரச்னைகளை கொண்டு வந்துள்ளது. துரைசிங்கம் என்ற கேரக்டர் சந்திக்கும் பிரச்னைகளும், அதை அணுகும் விதமும் திரைக்கதையில் புதுமையாக இருக்கும். தமிழ்நாடு போலீஸ் என்ற நிலையை கடந்து, இந்திய போலீஸ் என்ற நிலையில் இந்தப் படம் இருக்கும்'' என்றார் சூர்யா.
வித்தியாசமான தலைப்புகளின் வரிசையில் கவனம் ஈர்க்கிறது "3டி தேடி பிடி அடி'. புதுமுகம் ஏகன் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், ""சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் காதல் ஜோடிகளுக்கு இடையேயும் இப்போது டேட்டிங் என்ற பழக்கம் பெருகி வருகிறது. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் பேசிக் கொள்வதே தவறு என கூறப்பட்டது. பின்னர் காதல் வரை சென்று இப்போது டேட்டிங் வரை வந்து விட்டது. இந்த கால வித்தியாசத்தில் உண்மையான காதல், அன்பு இதற்கெல்லாம் இடம் இல்லாமல் போய் விட்டது. இந்த முரண்தான் படம். அடர்ந்த வனப்பகுதிக்குள் டேட்டிங் செல்லும் காதல் ஜோடிகளுக்கு நடக்கும் திகில் சம்பவங்களுக்கு பின்னணியில் இந்த பிரச்னையைச் சொல்ல வருகிறேன். இது 3 டி படமல்ல. வித்தியாசமான தலைப்புக்காகவே இந்த தலைப்பு'' என்றார் இயக்குநர் ஏகன்.
முன்னணி நடிகைகளின் பாணியில் சமீபத்தில் ஹிட் படங்களில் இடம் பிடித்த நடிகைகளும் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர். இரு மொழிகளில் நடிக்கும் த்ரிஷா, நயன்தாரா, இலியானா, அனுஷ்கா, காஜல்அகர்வால் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில் கேட்கத் தொடங்கியுள்ளது போன்று, ஹன்சிகா, அமலாபால், அஞ்சலி போன்றவர்களும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருப்பவர் ப்ரியா ஆனந்த். தமிழில் "வாமனன்', "180', "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் சமீபத்தில் நடித்த "எதிர்நீச்சல்' பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனால் தன் சம்பளத்தை அடுத்தடுத்த படங்களுக்கு உயர்த்தியதுடன், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாங்கும் கட்டணத்தையும் உயர்த்தி விட்டாராம்.
அஜித், நயன்தாரா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்தது. இதையடுத்து ஜீவா, ஆண்ட்ரியா, த்ரிஷா நடிக்கும் "என்றென்றும் புன்னகை' படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்தது. இந்த படங்களின் படப்பிடிப்புக்கு முன்பாகவே அமீரின் "ஆதிபகவன்' படப்பிடிப்பு அங்கு நடத்தப்பட்டது. தமிழ் பட படப்பிடிப்புகளுக்காக பாங்காக்கில் பல்வேறு சலுகைகள் தரப்படுவதால், அங்கு ஷூட்டிங் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல தயாரிப்பாளர்கள் பாங்காக்கை தேர்வு செய்கின்றனர். இந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது "விஸ்வரூபம் 2'. பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அங்கு படமாக்கிய கமல், சமீபத்தில் தாய்லாந்து சென்று சில காட்சிகளைப் படமாக்கினார். இதில் முழுக்க முழுக்க வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றினார்கள். இதையடுத்து மீண்டும் பாங்காக்கில் ஷூட்டிங் நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.