

என் மகளுக்கு வயது 32. நிறை மாத கர்ப்பிணி. இருமுறை கர்ப்பம் நிலைக்காமல் கலைந்துவிட்டது. இது தலைச்சன் பிரசவம். ஜூலை முதல் வாரத்தில் பிரசவம். இப்போது அவளுக்கு நல்ல சளி, காய்ச்சல். ஆண்ட்டி பயாடிக் ரசாயன மருந்துகள் உட்கொள்ளக் கூடாது என்று அலோபதி டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். என்ன மருந்துகள் இந்த நிலையில் பாதுகாப்பானவை?
பாலாம்பாள், சாலிக்கிராமம்.
காய்ச்சல் விரைவில் குணமடைவதற்கு மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவை ஆசாரம், ஆகாரம், ஒüஷதம்.
ஆசாரம்: ஆசாரங்களில் முதலாவது விச்ராந்தி. உடல், பேச்சு, மூளை மூன்றுக்கும் தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும். இரும்புக் கட்டிலில் படுப்பதைவிட மரக்கட்டிலில் படுப்பதே நல்லது. இரும்புக் கட்டில் குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியாகவும், வெயில் காலத்தில் அதிக சூடாகவும் மாறுகின்றது. மரக்கட்டில் எல்லாப் பருவ காலங்களிலும் ஒரே சீரான சுகமான சீதோஷ்ணத்திலேயே இருக்கும். மகள் படுத்திருக்கும் மெத்தையும் தலையணைகளும் இலவம் பஞ்சு கொண்டதாயிருக்க வேண்டும். இலவம் பஞ்சில் மிருதுத்தன்மை அதிகம். அத்துடன் சீதோஷ்ண மாறுதல் ஏற்படுவதில்லை. படுக்கையின் மேல் விரிப்பும் பருத்தியினால் நெய்யப்பட்டதாய் இருப்பதுதான் நல்லது. தோலிலிருந்து வெளியாகும் வியர்வையை உறிஞ்சி வியர்வை நாளங்களை விரியச் செய்து சுத்தமாகக் காப்பாற்றும். குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கக் கூடாது. அதுபோன்ற அறையில் படுத்தால் மார்பில் சளி கட்டும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டாகிக் கொண்டிருப்பதே நல்லது. வியர்வை மூலம் உடலின் மலாம்சம் வெளியேறுகின்றது. அவர் படுக்கும் அறையில் காற்றும் வெளிச்சமும் மிதமாய் மட்டுமே இருக்க வேண்டும். மின்சார விசிறியும் உடலின் மேல் நேராகப் படும்படி அமைக்காமல் மிக மந்த வேகத்தில் எட்டியே வைக்க வேண்டும். அவருடைய ஓய்வுக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளையாதபடி சூழ்நிலை அமைந்திருக்க வேண்டும். இனிய சங்கீதம் அவர் காதில் விழும்படி செய்தால் உறக்கம் இடையூறு இல்லாமலிருக்கும்.
ஆகாரம்: எல்லா சமயங்களிலும் ஒரே திட்டமாய் உணவை அமைக்க முடியாது. காய்ச்சலின் வேகம், மப்பு நிலை, காய்ச்சலுக்கான காரணம், ஜீரண சக்தி முதலியவற்றை நன்கு யோசித்துத் தகுந்தபடி உணவை அமைத்துக் கொள்ள வேண்டும். சளியும் காய்ச்சலும் சேர்ந்திருப்பதால், ஷடங்கபானீயம் என்னும் ஒரு வகைக் குடிநீர், பருக ஏற்றது. கோரைக் கிழங்கு, வெட்டிவேர்,விளாமிச்சை வேர், பர்ப்படகம், சுக்கு, சந்தனசிராய் ஆகிய ஆறு சரக்குகள் ஒவ்வொன்றையும் பத்து கிராம் அளவுக்கு எடுத்து இடித்து தவிடு மாதிரி பெருந்தூளாகச் செய்து கொள்ளவும். அதில் 10 கிராம் அளவு எடுத்து இரண்டு லிட்டர் அளவு தண்ணீரில் போட்டு, ஒரு லிட்டர் அளவு மீதமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். நா வறட்சியைப் போக்குவதற்காக இதை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். ஆற வைத்துச் சாப்பிட்டால் வாத, கபம் மேலிட்ட காய்ச்சல் குணமாகும்.
மகளுக்குப் பசி குறைவாக இருந்தால் புழுங்கலரிசியை சிறிது சிவப்புக் காணும் வரை லேசாக வறுத்து 3-4 அரிசித் திப்பிலியை வறுத்துப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளவும். இதை 1 பங்காகவும், தண்ணீர் 20 பங்காகவும் சேர்த்து, கால் பங்கு சுண்டும் வரை கொதிக்கவிட்டு, இறக்கிக் கொள்ளவும். பருக்கையை வடிகட்டி, கஞ்சியை மட்டும் காலையில் சிறிது உப்பு சேர்த்து வெதுவெதுப்பாகப் பருகினால், மிக எளிதில் ஜீரணமாகும். உடலிலுள்ள கடுப்பு வலி, கனம், முறித்துக் கொள்ளும் வேதனை, தொண்டை, மார்பு, தலை முதலிய இடங்களில் கபம் கட்டிச் சளி, நீர் இளக்கம் முதலிய வாத - கப உபத்திரவங்கள் அனைத்தும் நீங்கும். 2 -3 நாட்களுக்குப் பிறகு, பசி நன்றாக எடுக்கத் தொடங்கிவிட்டால், கோதுமையையும், பார்லியையும் லேசாக வறுத்து 1 பங்கு எடுத்து, 12 பங்கு தண்ணீர் சேர்த்து, தண்ணீர் சரிபாதியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சிறிது உப்பு சேர்த்து காலையில் பருக, சளியால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மதியம், இரவு சூடான சாதத்துடன் மிளகு, சீரகம் பொரித்த ரசம் கலந்து நன்கு வேக வைத்த கறிகாய்ப் பொரியல் சாப்பிடலாம். தேங்காய் கூடாது.
ஒüஷதம் (மருந்து): நீர்க்கோவையினால் ஜலதோஷம் தலை பாரம், தலைவலி இருந்தால் ரஸ்னாதி சூரணத்தை இஞ்சிச் சாறில் குழைத்துச் சூடாக்கி, நெற்றியில் பற்று இடவும். காலை, மாலை வேளைகளில் சுமார் 1/2 - 1 மணி நேரம் போட்டு வைக்கலாம்.
குடூச்யாதி எனும் கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீரில் கலந்து காலை, மாலை, வெறும் வயிற்றில் சாப்பிட, கப - பித்தங்களால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.