

கோடீஸ்வர பெண், தோழியின் திருமணத்துக்காக காரில் செல்கிறார். இடையில் ஒரு ஹோட்டலில் மூன்று இளைஞர்கள் அவளைப் பார்க்கிறார்கள். ஒருவனுக்கு காதல். ஒருவனுக்கு அந்தப் பெண் அணிந்திருக்கும் நகை மீது ஆசையும், மற்றொருவனுக்கு காமமும் ஏற்படுகிறது. இந்த மூன்று பேரும் அவளை துரத்துகின்றனர். மூன்று பேரில் யாருக்கு வெற்றி? இதுதான் "கானகம்' படத்தின் கதை. கால் ஷூவில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு தொடர் ஓட்டமாக ஓடும் ஹீரோவின் கதையாக உருவாகி, பரவலான பாராட்டுக்களைப் பெற்ற "அஃகு' படத்தை இயக்கிய மாமணி இப்படத்தை எழுதி இயக்குகிறார். கிருஷ்ணன் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். அஞ்சனா ஹீரோயின். அனுஹாசன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.""பார்வை ஒன்று அர்த்தங்கள் பல என்பதுதான் கதைக் கரு. அழகான ஒரு காபி ஷாப்பில் ஆரம்பிக்கும் கதை, அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் செல்கிறது. "லைஃப் ஆஃப் பை' படத்தில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டிருந்த புலி மாதிரியே, இப்படத்தில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட சிறுத்தை நடிக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் ஷூட்டிங் நடந்துள்ளது'' என்றார் இயக்குநர்.
20 வருடங்களுக்குப் பின் "ஜெய்ஹிந்த்' இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கிறார் அர்ஜுன். ஒரு சராசரி இந்திய குடிமகனின் கண்ணோட்டத்தில் இந்திய கல்வி முறையின் தற்போதைய நிலை என்ன என்பதுதான் கதை. சுர்வீன் சாவ்லா, சார்லட் கிளார் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கவுண்டமணி இடத்தில் பிரம்மானந்தம். பிரம்மானந்தத்துடன் அதே செந்தில் கூட்டணி. ""முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்தியாவில் 74 சதவீத மாணவர்கள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள பிரச்னை இந்தியாவின் மற்ற துறைகளில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி செய்து இக்கதையை வடிவமைத்திருக்கிறேன். தயாரிப்பு, இயக்கம், ஹீரோ என மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறேன். மார்க்கெட் இருக்கும் வரை ஹீரோவாக நடிப்பேன். எப்போதெல்லாம் மார்க்கெட் சரிகிறதோ அப்போது இயக்குநராகி விடுவேன். இப்படத்தை முன்னாள் ஜனாதிபதி, மற்றும் இந்திய பத்திரிகை துறைக்கு சமர்ப்பிக்கிறேன்'' என அறிவித்திருக்கிறார் அர்ஜுன்.
தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் தமன்னா, சாஜித் கான் இயக்கிய "ஹிம்மத்வாலா' ரீமேக்கில் அஜய்தேவ்கான் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார். இதில் அவர் ஸ்ரீதேவி நடித்திருந்த வேடத்தை ஏற்றார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், தமன்னாவை மீண்டும் தன் இயக்கத்தில் நடிக்க வைக்கிறார் சாஜித்கான். இதில் சயீப் அலிகான் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் இஷா குப்தா, சோனல் சௌகான் நடிக்கின்றனர். இதைத்தவிர அக்ஷய்குமார் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார் தமன்னா. தற்போது அவர் "சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்குப் பின் பாலிவுட்டில் அதீத கவனம் செலுத்த அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
காதலுக்காக நடனம் கற்கும் ஹீரோ. மாணவன் காதலுக்காக உயிரைத் தியாகம் செய்யும் மாஸ்டர். இவர்களை அழிக்க வரும் வில்லன். இந்த நான்கு பேருக்கும் இடையில் நடக்கும் பிரச்னைகளையும், போராட்டங்களையும் மையமாக வைத்து உருவாகும் படம் "மாதவனும் மலர்விழியும்.' அஸ்வின், சிஜாரோஸ், நீரஜா நடித்துள்ளனர். புதுமுகம் மாசில் எழுதி இயக்குகிறார். படம் குறித்து மாசில்... ""வெளியில் பிரகாசமாக பேசப்படும் ஒரு நாட்டியக் கலைஞனின் வாழ்க்கை சோகமானதாக மாறிவிடுகிறது. அந்த சோக உலகத்தில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை. இப்படத்துக்காக சிஜாரோஸ் பிரத்யேக நடன கலைஞரிடம் பல மாதங்கள் நடன பயிற்சி பெற்றிருக்கிறார். பரதநாட்டியத்தில் ஏற்கெனவே பயிற்சி உள்ள சிஜா ரோஸ், இப்படத்துக்காக முழுமையான நடனக் கலைஞராக மாறி விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஜான்பாபு இப்படத்துக்கு நடனம் அமைத்துள்ளார்.''
""மக்கயலா....'' ரூபா மஞ்சுரி "சிவப்பு' படத்தில் இலங்கை தமிழ் அகதியாக நடிக்கிறார். மேக்கப் இல்லாமல் கறுத்த தேகத்துடன் ஸ்டில்ஸில் கவனம் ஈர்க்கிறார். படம் குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ரூபா மஞ்சுரி... ஆறு வருடங்களில் "சிவப்பு' 3-வது படம். இந்தப் படம் பற்றி என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். அழகு பொம்மையாக மட்டுமே ஒரு நடிகை இருக்கக் கூடாது என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். அதற்காகத்தான் இந்தப் படம். இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நாளும், இரவு படுத்தால் நன்றாக தூக்கம் வருகிறது. நாளைக்கே எனக்கு குழந்தைப் பிறந்தால் நான் நடித்த படங்களைப் பார்த்து விட்டு, ""ஏம்மா இது மாதிரி படத்துல நடிச்சே?''ன்னு கேட்டு விடக்கூடாது. இது வீம்புதான். ஆனால் இது பிடித்திருக்கிறது. எனக்கான சரியான இடத்துக்காக நான் இது மாதிரி நடிப்பதில் தவறில்லை. நிஜமாகவே ஒரு கட்டடத் தொழிலாளியை நீங்கள் பார்க்கலாம்'' என "டுவிட்'டியிருக்கிறார் ரூபா மஞ்சுரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.