

"விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் கமல்ஹாசன். பல்வேறு நாடுகளில் ஷூட்டிங் முடிந்ததையடுத்து தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளது படக்குழு. ஆப்கானிஸ்தான் பாலைவனப் பகுதிகளில் நடப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சென்னை அருகே பாலைவன அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக டன் கணக்கில் மணல் இறக்குமதி செய்திருக்கிறார் கமல்ஹாசன். சென்னையில் ஷூட்டிங் முடிந்ததும், டெல்லியில் அதன் தொடர் காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம். முதல் பாகத்துக்கு இசையமைத்த சங்கர் - எஹசான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார். அதே ஆரோ 3 டி ஒலிப்பதிவு முறையில் இப்படத்தின் இசை வடிவமைக்கப்படுகிறது.
சிம்பு, ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு "வாலு' என பெயரிடப்பட்டது. இந்நிலையில் தம்பி ராமையாவின் உதவியாளர் தேசிகா இயக்கும் படத்துக்கும் "வாலு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாதக் கணக்கில் நிலவி வந்த இந்த பெயர்க் குழப்பத்துக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இயக்குநர் தேசிகா தன் படத்துக்கு "ரெட்ட வாலு' என பெயர் மாற்றியதன் மூலம் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ""படத்தின் ஹீரோ அகில், ஹீரோயின் சரண்யா நாக் இருவரும் கலகலப்பான, குறும்புத்தனம் மிகுந்த பாத்திரங்களை ஏற்றுள்ளனர். அதை மையமாக வைத்து "ரெட்ட வாலு' என பெயர் மாற்றியுள்ளேன். எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்கிற லட்சியம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே கை கூடி வருகிறது. பலருக்கு அது கானல் நீராகவே மறைந்து விடுகிறது. இதற்கு காரணம் என்ன? எடுத்துக் கொண்ட லட்சியங்களிலிருந்து மனித வாழ்க்கை ஏன் திசை மாறுகிறது? என்பதை சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது'' என்றார் இயக்குநர் தேசிகா.
""வருத்தம், ஜாலி, கிண்டல், கேலி கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சத்யராஜை அணுகினேன். குறிப்பிட்ட கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கும் அவர், இதில் நடிப்பாரா? என்ற சந்தேகத்துடன் கதை சொன்னேன். பாதி கதையை கேட்ட பின்னர், ஈடுபாடு இல்லாதவர் போல் மீதி கதையை கேட்டார். நான் பயத்தில் உறைந்து போனேன். முழுக் கதையையும் கேட்ட பின்னர், ""இந்த கேரக்டரில் நான்தான் நடிப்பேன்'' என்று சொல்லி உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஏனென்றால் இது அவருக்கான கேரக்டர். அவரை ஞாபகத்தில் வைத்தே இந்த கேரக்டரை உருவாக்கினேன்'' என்கிறார் இயக்குநர் பொன்.ராம். படத்தின் பெயர்: "வருத்தப்படாத வாலிபர் சங்கம்'
"அண்ணா நகர் முதல் தெரு', "நானே ராஜா நானே மந்திரி', "உனக்காக பிறந்தேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலு ஆனந்த், நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் "சந்தித்ததும் சிந்தித்ததும்'. சத்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டெல்லி மாடல் யுதாஷா நடிக்கிறார். படம் குறித்து பாலு ஆனந்த்... ""ஒரு நிமிட நிகழ்வு ஒட்டு மொத்த வாழ்வையும் மாற்றிவிடும் என்பதுதான் கதையின் மையம். ஒவ்வொரு நிமிடமும் நம் கையில் இல்லை. இதுதான் நடக்கும் என்று நினைக்கும்போது அது வேறு விதமாக நடந்து விடுகிறது. அதே போல் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். காமெடி கதைகளுக்கு தற்போது அதிக வரவேற்பு இருந்தாலும், எதார்த்த கதைகளுக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கான படமாக இது இருக்கும். என் நீண்ட நெடிய அனுபவங்கள் இப்படத்துக்கு கைக் கொடுத்திருக்கிறது. பெங்களூர், நாமக்கல் பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வருகிறது'' என்றார்.
நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பதை சமீபமாக பெரிதும் விரும்புகிறார் மோகன்லால். மலையாளத்தில் முன்னணி இயக்குநர்கள் பலரும் மோகன்லாலின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கையில், இந்த வருடம் முழுவதும் நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான திட்டத்தில் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் - விஜய் இணையும் "ஜில்லா' படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்து வருகிறார் மோகன்லால். மதுரை பின்னணியில் உருவாகும் இக்கதையில் விஜய்யின் அண்ணன் பாத்திரம் ஏற்று இருக்கிறார். மோகன்லால் - விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் படமாகி வருகின்றன. இப்படம் முடிந்ததும் "வெற்றிமாறன்' என்ற படத்தில் நடிக்கிறார் மோகன்லால். தமிழில் ஜீவா - மோகன்லால் நடித்த "அரண்' படத்தை இயக்கிய மேஜர் ரவி இப்படத்தை இயக்குகிறார். மாணவிகளை கடத்தும் மாஃபியா கும்பலை பற்றி கதையாக இது உருவாகிறது. தூத்துக்குடி துறைமுகப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
"மௌனம் பேசியதே', "ஆறு' படங்களுக்குப் பின் சூர்யாவுடன் த்ரிஷா இணைவார் என கூறப்படுகிறது. அந்த படம் கௌதம்மேனன் இயக்கும் "துருவ நட்சத்திரம்'. ஆனால் இதில் 50 சதவீதமே த்ரிஷா நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், கதைப்படி அமலாபால் சூர்யாவுக்கு பொருத்தமாக இருப்பார் என படக்குழுவினர் கருதுகின்றனர். அதனால் அமலாபால் தரப்பில் கௌதம் மேனன் பேச்சு நடத்தியிருக்கிறாராம். ""நான் எதிர்பார்த்த தருணம் வந்து விட்டது. முக்கியமான வாய்ப்பை நான் பெறப் போகிறேன். அது பற்றி விரைவில் விவரமாகச் சொல்கிறேன்'' என இந்த பட வாய்ப்பை பற்றி டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் அமலாபால். ஆனால் இந்த வாய்ப்பை எப்படியும் பெற்று விட வேண்டும் என்று போட்டி களத்தில் குதித்திருக்கிறார் த்ரிஷா.
அட்டையில் : நஸ்ரியா நசீம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.