

1
அம்மா இந்தமுறை இங்கு வந்த பிறகு உருவெடுத்திருக்கும் இறுக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் தளர்வதாகத் தெரியவில்லை.
அம்மாவின் முந்தைய வரவுகளின் போதெல்லாம், ""வாங்க அத்தை, சாப்பிட்டீங்களா?'' என்று மரியாதையும் அன்பும் தொனிக்கக் கேட்டபடி ஆஃபீசிலிருந்து வீட்டிற்குள் நுழையும் என்னவரின் வாய் இப்போது பேசவே மறுக்கிறது.
என் மாமியாரிடம் புழங்கும் வார்த்தைப் பட்டியலில் இருந்து "சம்பந்தியம்மா' நீக்கப்பட்டு, "அந்தப் பொம்பளைக்கு' சிம்மாசனம் போடப்பட்டிருக்கிறது.
நகை வாங்கித் தராததற்காகப் புருஷனிடம் சண்டை போட்டுவிட்டு, கடந்த நான்கு மாதங்களாக இங்கு வந்து தங்கிக் கொண்டு தண்டச் சோறு கொட்டிக் கொண்டிருக்கும் என் நாத்தனார் சங்கீதாவிற்கு, அடிக்கடி "நியூசென்ஸ்' என்ற வார்த்தையைப் பிரயோகம் பண்ணும்படி ஒரு கட்டாயம் வந்துவிட்டிருக்கிறது.
""பாவம்மா நம்ம சகுந்தலாப் பாட்டி'' என்ற தங்களது கழிவிரக்கத்தை கூட, மாலையில் நான் ஆஃபீஸிலிருந்து வந்த பின்பு, பக்கத்தில் வேறு யாரும் இல்லாத சமயத்தில்தான் என்னுடைய பத்து வயசு மற்றும் பனிரண்டு வயசுப் பையன்களிருவரும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
2
அப்பா இறந்த பிறகு, பிள்ளைகள் யாருமில்லாத நிலையில், ஒரே பெண்ணாகிய என்னிடம் வந்து சேர்ந்த என் அம்மா எழுபத்தாறு வயசு சகுந்தலாம்மாள், என் புகுந்த வீட்டில், என்னையும் என் பிள்ளைகளிருவரையும் தவிர வேறு யாருக்கும் ஒரு வேண்டாத விருந்தாளியாகி விட்டாள்.
""சீக்கிரம் ஏதாவது செய் இவளே'' என்றபடி, வழக்கமான இரவு நேரச் சம்பிரதாயத் தழுவலைக் கூடத் தவிர்த்துவிட்டு எதிர்த் திசையில் திரும்பிப் படுக்கும் என் கணவனின் அலட்சியம் விடிந்த பிறகும் என் பிடரியில் அறைகிறது.
அனாதரவாக, வேறு கதியின்றி வந்து சேர்ந்திருக்கும் அம்மாவை, அவள் பெற்ற ஒரே பெண் நான் ஆதரிக்காமல் வேறு யார் பொறுப்பில் விடுவது?
""ஏதாவது செய் இவளே'' என்றால் ""எங்காவது கொண்டு போய்த் தள்ளிவிடு'' என்ற அர்த்தமா?
விடிவது முதல் அந்தந்த நாள் முடிவது வரை ஒவ்வொரு நாளும் மனசுக்குள் குடைச்சல்.
ஆஃபீஸ் வேலையிலும் மனசு ஓடுவதில்லை.
""பாருங்கம்மா இந்த பில்லில் கூட்டல் ஃபிகர் தப்பா வந்திருக்கு'' என்ற செக்ஷன் சூப்பர்வைசரின் வார்த்தைகளை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறேன்.
தலைசிறந்த திரைப்பட இயக்குனர் வைக்கும் சிம்பாலிக் ஷாட் மாதிரி, இந்த வீட்டின் வாசற்படியின் மேல்புறம் ஒட்டப்பட்டிருந்த பளபளப்பான நல்வரவு அட்டை, ஒட்டிய பசை காய்ந்து போய்ப் பிய்ந்து தொங்கிய சென்ற வார ஞாயிற்றுக்கிழமையின் மதியப்பொழுதில் இங்கே அடைக்கலம் புகுந்தாள் என் அம்மா.
அம்மாவிற்கு வயது எழுபத்தாறு.
3
அவளது தாம்பத்திய வாழ்க்கையின் வயது அறுபத்தாறு வருடங்கள்.
போன வாரத்தில் என் அப்பா தமது எண்பதாவது வயதில் செத்துப்போக, அம்மாவின் தாம்பத்திய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அப்பா இல்லாமல், தனக்கு விதித்த காலம் வரை அவள் தனது மீதி வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பால்ய விவாகம் சர்வ சகஜம்.
பத்து வயதில் குழந்தைக் கல்யாணம் கண்டு, பதினாறில் சாந்தி முகூர்த்தத்தை எதிர்கொண்டு, எண்ணற்ற நாத்தனார், மைத்துனர்களுக்கு வணங்கித் தொண்டு செய்து, அவர்களை வளர்த்தும் விட்டு, அச்சு அசலான அந்தக் காலப் பெண்மணியாக இருந்திருக்கிறாள் என் அம்மா, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர.
நாஸிக்கில் கரன்ஸி நோட்டுக்கள் அச்சடிப்பது போல் குறைந்தது அரை டஜன் குழந்தைகளையாவது பெற்றுக் கொண்ட சென்ற தலைமுறையினரிடையே, பிள்ளைப்பேறு தள்ளிப் போய், விரதங்களிருந்து, கோயில் குளங்களைச் சுற்றி வந்து, தெய்வங்களுக்கு வேண்டுதல் ஆசை காட்டி, ஒரு வழியாகத் தனது முப்பத்தொன்றாவது வயதில் ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொண்டு திருப்தியடைந்து ஒருவருஷ காலத்துக்குத் தன் கோயில், குள வேண்டுதல்களைப் பூர்த்தி செய்திருக்கிறாள்.
அந்த ஒரே ஒரு பெண் குழந்தை பார்வதியாகிய நான்தான். வில்லங்கமும் அதுதான்.
அப்பாவுக்குப் பிறகு அம்மாவைத் தாங்கிட விழுது ஏதுமில்லை என்னைத் தவிர.
என் புகுந்த வீட்டு ஜமீன்தாரர்களோ வேறு அபிப்பிராயம் வைத்திருந்தார்கள்.
கூடிய சீக்கிரத்தில் அம்மாவுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்து விடுவதாக அந்த ஜமீன்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அப்பாவின் காரியங்கள் முடிந்த மறுநாள் என் அம்மாவை என்னுடன் இங்கு அழைத்து வந்தேன்.
4
அப்பாவுக்கு உடம்பு சீரியஸôக இருக்கும் போதே, எனக்கு முன்பாக என்னவர் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்.
அப்பாவின் இறுதிக் காலம் என்று ஏறக்குறைய உறுதியாகிப் போய்த் தகவல் வந்த ஒரு தினத்தின் பகற்பொழுதில் அவரைப் பார்க்க நாங்களிருவரும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது -
""உங்க அம்மா இனிமே கிராமத்துலே தனியா இருப்பாங்களா இவளே'' என்றார் என்னவர்.
இவளே என்பது என்னவர் என்னை விளிக்கப் பயன்படுத்துவது. சந்தோஷம் கோபம் இத்தியாதி மனோநிலைகளைப் பொறுத்து, "இவள்ளே', "ஏய் இவளேஏஏஏஏ' என்று அது உச்சரிப்பு மாற்றங்களைப் பெறும்.
பார்வதி என்ற என் பெயரை என் புகுந்த வீட்டு கெஜட்டில் "இவளே' என்று மாற்றி வெகு காலம் ஆகி விட்டது. என் மாமியார், நாத்தனாருக்கும் கூட நான் இவளேதான்.
ஹாஸ்ய உணர்ச்சி சற்றே தலை தூக்கும் தருணங்களில் என் பையன்களும் "இவளே'வை என்னிடம் முயற்சித்துத் தலையில் செல்லமாகக் குட்டுப்படுவார்கள்.
""இந்த எழுபத்தஞ்சு வயசுக்கு மேலே எப்படி உங்க அம்மாவால தனியாக இருக்க முடியும். உங்க உறவுக்காரங்க யாரோடவாவது போய் இருக்கலாமில்லையா?''
""ஏன், நான் என் அம்மாவுக்கு உறவில்லையா?''
அதைத் தொடர்ந்து என்னவர் அனுஷ்டித்த மெüனம் யோசனையா, கோபமா என்று எனக்குப் புலப்படாதிருந்தது. சுமார் ஒரு கால் மணி நேரத்திற்குப்பின் தனது மெüன விரதத்தைக் களைந்த என்னவர், ""நம்ம வீட்டில் ஏற்கெனவே கூட்டம் ஜாஸ்தி இவளே'' என்றார் தயங்கியபடி.
இந்த இவளேவில் ஒரு வித சமாதான முயற்சி தெரிந்தது.
5
முதலில் அப்பா சம்பந்தப்பட்டதெல்லாம் முடியட்டும். எப்படியும் நாள் கணக்குத்தான். அதன் பிறகு பேசி முடிவு பண்ணிக்கொள்ளலாமே.
பஸ் என் பிறந்த ஊரை அடைந்தது.
அப்பாவின் காரியம் விலாவாரியாகப் பத்து நாளெல்லாம் நடக்கவில்லை.
பிள்ளைக்கு பதிலாகக் கொள்ளி போட்ட என்னவருக்கும் போதுமான லீவு இல்லை. எனக்கு என் ஆஃபீஸில் லீவு கிடைப்பதில் பிரச்சினையில்லை என்றாலும், லீவு முடிந்து போனால் என் அலுவலக மேஜையில் சேர்ந்துவிடும் கோப்புகளாலான பிரமிடைக் கரைப்பதற்கு வாரக்கணக்கில், ஏன், சமயத்தில் மாதக் கணக்கில் கூட ஆகிவிடும். வேலையை அவ்வப்போதே செய்து முடித்து விடுவதுதான் சகல விதத்திலும் நல்லது.
எங்கள் இரு தரப்பில் ஒரு தரப்பைச் சேர்ந்த தூரத்து உறவுக்கிளை ஒன்றில் ஐந்தாம் நாளே எல்லாக் காரியத்தையும் முடித்திருப்பதாக யாரோ ஒருவர் தகவல் கொடுக்க அதையே விசுவாசமாகப் பின்பற்றி அப்பாவின் காரியங்களைச் சுருக்கமாக ஐந்தாம் நாளே முடித்துக் கொண்டோம்.
எங்கள் பையன்களிருவருக்கும் பரீட்சை நேரமாதலால் அவர்களை என் மாமியார், நாத்தனார் பொறுப்பிலேயே அது வரைக்கும் விட்டிருந்தோம்.
அப்பாவின் சக ஊழிய, சக பென்ஷன் வாங்கிய நண்பர் ஒருவர், அம்மாவிற்கான குடும்ப பென்ஷனுக்குத் தாம் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
அவர் தகவல் தரும்போது பக்கத்து நகரத்தில் பென்ஷன் வழங்கும் அரசாங்கக் கருவூல அதிகாரி முன்பு ஒரு தரம் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.
அப்பா அம்மா வசித்த வாடகை வீட்டை காலி செய்வதில் பெரிய சிரமமிருக்கவில்லை .
அம்மாவின் அளவான உடமைகள் ஓரிரு பார்சல்களாக்கப் பட்டன.
6
அப்பாவின் காரியங்கள் முடிந்த மறுநாள், இழுத்த இழுப்பிற்கு வரக்கூடிய ஒரு சாதுவான பசுவைப்போல அம்மா எங்களிருவருடன் வேன் ஒன்றில் பயணித்தாள்.
எப்போதுமே அதிகம் பேசாத அம்மா, அப்பாவின் பிரிவையும் அதிர அதிரக் கொண்டாடவில்லை. மனசுக்குள் அவள் அழுத மெüனமான அழுகை, வீட்டைக் காலி செய்துவிட்டு எங்களுடன் பயணிக்க வேனில் ஏறியபோது அவள் உடம்பிலும் முகத்திலும் தெரிந்த அரைக்கண நேர நரம்புச் சிலிர்ப்பில் தெரிந்தது.
எங்களின் வேன் பிரயாணம் பெரும்பாலும் மெüனத்தையே ஆலிங்கனம் செய்தபடி இருந்தது.
பயணத்தின் இடையில் என்னவர் ஒரு முறை என் காதில் கிசுகிசுத்தார்
""நம்ம சிட்டிக்கு வெளியிலேயே கந்தன் நகரில் வசதியான ஒரு முதியோர் இல்லம் இருக்கு. ஃபீஸýம் கம்மிதான் இவளே''
பதில் சொல்லவில்லை நான். சொல்லத் தெரியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
அம்மாவின் காதில் என்னவர் கூறியது விழுந்து விடாதிருக்க வேண்டும் என்பதே என் அப்போதைய ஒரே கவலையாயிருந்தது.
என்னவருடைய தாயார், என் மாமியார், எனது சின்ன மைத்துனரால் விரட்டியடிக்கப்படாத குறையாக எங்களிடம் வந்தபோது சகல மரியாதைகளுடன் வரவேற்றவள் நான்.
""அம்மா, உங்க காலமெல்லாம் நீங்க எங்களுடனேயே இருங்கம்மா'' என்று நான் அப்போது என் மாமியாரிடம் சொன்ன வார்த்தைகள் என் நாபிக்கமலத்திலிருந்து வெளிப்பட்ட சத்திய வார்த்தைகள்.
இதோ கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தன் கணவனிடம் கோபித்துக் கொண்டு எங்கள் வீட்டில் குடியேறி, எப்போது சமாதானமாகிக் கணவன் வீட்டுக்குத் திரும்புவாள் என்பது நிச்சயமின்றி, அது பற்றிய கவலையுமின்றி, தினமொரு சினிமா, வேளை தவறாமல் டி.வி. யில்.
சீரியல்கள், வித விதமான சாப்பாடு, நொறுக்குத் தீனியைத் தின்றுவிட்டுக் கட்டிலுக்கு வலிக்க வலிக்கத் தூக்கம் என்று கொட்டமடித்துக் கொண்டிருக்கும் என் நாத்தனார் சங்கீதாவிடம், ஒரு தரம், ஒரே ஒரு தரம் கூட, நான் முகம் சுளித்துப் பேசியது கிடையாது.
இத்தனைக்கும், நாள் தவறாமல் நான் ஆஃபீஸýக்குக் கிளம்பத் தயாராகும் தருணத்தில் பாத்ரூமை விடாமல் அரைமணி நேரம் ஆக்கிரமித்துக் கொண்டு செய்யும் அழிச்சாட்டியம் ஒன்று போதும். காலா காலத்துக்கும் அவளை வெறுக்கலாம்.
நான் மட்டுமல்ல, என்னுடைய பையன்களிருவரும் கூட பலப்பல தினசரிச் செüகரியங்களை தங்கள் அருமை அத்தையின் டேராவால் இழக்க வேண்டியிருக்கிறது.
என்னவருக்குச் சமமாக வேலை பார்த்து, சம்பாதித்து, வீட்டுப் பொறுப்புகளையும் நிறைவேற்றி, நிற்காமல் சுற்றிச் சுழன்ற போதும், என்னவரின் நிரந்தர மற்றும் அவ்வப்போது வந்து போகின்ற படை பரிவாரங்களை முகம் சுளிக்காமல் உபசரித்துக் கவனிக்கின்ற போதும், என்னுடைய அம்மாவை இந்த வீட்டு ஆத்மாக்களில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்ள இங்கு யாருக்கும் மனசு இல்லை, என்னைத் தவிர.
முன்பே சொன்னது போல, என் அம்மா இந்த வீட்டில் நுழைந்த போது வாசலில் இருந்த நல்வரவு அட்டை, ஓர் அஃறிணைப்பொருள், அது கூட பிய்ந்து தொங்கித் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
நானும் என் அம்மாவும் வாங்கி வந்த வரம் அப்படி என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.
ஒரே வாரம் தான் ஆயிற்று, அம்மா இங்கு வந்து.
7
அதற்குள் என் மாமியார் மற்றும் நாத்தனார் இருவரின் முணுமுணுப்புகள் வெளிப்படியான புகார்களாக வடிவம் பெறத் தொடங்கிவிட்டன.
""ஏண்டி இவளே, நீ ஆப்பீஸ் (இதை அழுத்திச் சொல்வது என் மாமியாரின் வழக்கம், கேலியாம்) போன பிறகு உங்க அம்மா எதுவும் சாப்பிட மாட்டேங்கிறா, காப்பி வேண்டாம், டிபன் வேண்டாம் என்றால் எப்படி. இந்த வயசான காலத்தில், நீயும் வீட்டில் இல்லாமல் ஆப்பீஸ் போயிருக்கிற நேரத்தில், உங்க அம்மாவுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிவிட்டால் அப்புறம் எங்களுக்குத்தானேடியம்மா பொல்லாப்பு''
இது என் மாமியாரின் புகார் வாசிப்பு.
""என்ன இவளே, உன் அம்மாவுக்கு எப்பவும் ஓயாத சளி, இருமலாக இருக்கு. நாள் முழுக்க இருமிக்கொண்டிருந்தால் வீட்டில் இருக்கிறவங்களுக்கெல்லாம் இன்ஃபெக்ஷன் வந்து விடாதா? நாங்கள் எல்லாம் வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் நடுவே தினமும் அலைஞ்சு திரியணும்னு உங்க அம்மாவுக்கு வேண்டுதலா என்ன?''
இது காலேஜ் படித்துக் கல்யாணம் செய்துகொண்ட என் நாத்தனாரின் கம்ப்ளெய்ண்ட்.
இவர்களது புகார்களுக்கெல்லாம் என்ன பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றே புரியவில்லை எனக்கு.
வயதான ஒருத்தி பசியின்மையால் டிபன் காப்பி வேண்டாம் என்பதும், வேற்றிட வாசமும் வேற்றுத் தண்ணீரும் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் போய் ஜலதோஷம் பிடித்து இருமுவதும் தும்முவதும் கூட புகார் செய்யத் தகுதியான விஷயங்கள்தானா.
இன்று சாயந்திரம் நான் ஆஃபீஸிலிருந்து திரும்பி, வீட்டின் பின்கட்டில் கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டிருக்கும் போது, என் பிள்ளைகள் மெதுவாக என்னிடம் வந்து, ""அம்மா, நீ இல்லாத போது அப்பா பாட்டியும், அத்தையும் அம்மா பாட்டியைத் திட்டிக்கிட்டே இருக்காங்க'' என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள்.
8
அம்மா எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். அப்பா போய்விட்ட அதிர்ச்சியையே பிரபலப் படுத்திக் கொள்ளாதவள் என் அம்மா.
""சரிடா கண்ணுகளா, நான் பார்த்துக்கிறேன், நீங்க ரெண்டு பேரும் போய் விளையாடுங்க அல்லது படிங்க'' என்று சொல்லி என் பிள்ளைகளை அனுப்புவதற்குள், அம்மாவும் பிள்ளைகளும் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதை வேவு பார்ப்பதற்காக தோட்டத்துப் பக்கம் வந்துவிட்ட என் நாத்தனார், ""கொடியில் உலர்த்தியிருக்கிற துணிகளை எடுக்கலாம்னு வந்தேன் இவளே, நீ போய் காபி சாப்பிடு'' என்று அசடு வழிந்தாள்.
சீக்கிரம் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அக்கணமே வந்தேன்.
இன்றும் இரவுப்படுக்கையில் என்னிடம் புறமுதுகு காட்டிய என்னவரிடம் ""எப்படியும் நாளைக்கு என் அம்மா பிரச்னைக்கு ஒரு வழி செய்துவிடலாம். நானும் விசாரிச்சுக்கிட்டுதான் இருக்கேன்'' என்றேன்.
சட்டென்று மனம் மாறிய வெள்ளைக்கொடியுடன் என் மேல் படர்ந்த என்னவரின் கையை மெதுவாக விலக்கி விட்டு, ""நாளைக்குப் பார்க்கலாம்ங்க'' என்று சொல்லிவிட்டுத் தூங்கிப் போனேன்.
மறுநாள் இரவு மணி எட்டரை.
சாப்பாட்டுக் கடை முடிந்து நடுக்கூடத்தில் சபை கூடியிருந்தது.
""என்ன இவளே... என்ன சொல்றே நீ?''என்று கேட்ட என்னவரின் குரலிலும் கைகளிலும் ஒரு நடுக்கம் தெரிந்தது.
9
எல்லாம், தானும் சம்பாதிக்கிறோம் என்கிற திமிர். என்று குரல் எழுப்பிய மாமியாரையும், நாத்தனாரையும் அலட்சியப்படுத்தி என்னவரை மட்டுமே பார்த்தபடி பேசினேன்.
""இதோ பாருங்க, எனக்குச் சம்பாதிக்கிற திமிர் இருக்கிறது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், நான் சொல்றதில் தப்பு எதுவும் இல்லையே. என் அம்மா இங்கே நம்ம எல்லாருக்கும் தொந்தரவாக வந்து சேர்ந்திருப்பது வாஸ்தவம்தான். அதே போல, பொறுப்பான வேலையிலே இருக்கிற எனக்கும், சி.பி.எஸ்.இ. சிலபஸில் பெரிய பாடச் சுமையுடன் சிரமப்பட்டுப் படிக்கும் நம்ம பிள்ளைகளுக்கும், அவ்வளவு ஏன், ஆஃபீஸ் ஃபைல்களையும் ரிஜிஸ்டர்களையும் வீட்டுக்கே கொண்டு வந்து உழைக்கிற உங்களுக்கே கூட தொந்தரவாக உங்க அம்மாவும், தங்கையும் இருப்பது நிஜம்தானே. நீங்க சொன்ன மாதிரியே கந்தன் நகர் முதியோர் இல்லத்தைப் போய்ப் பார்த்தேன்.
வயசானவங்களை நம்மை விட நல்லாவே பார்த்துக்கறாங்க. உடனடியா அங்கே உங்கம்மா, எங்கம்மா ரெண்டு பேருக்குமே அட்வான்ஸ் பணம் கட்டி இடம் ரிசர்வ் பண்ணிட்டேன். என்ன, மாதாந்திரக் கட்டணம் ஒருத்தருக்கு ஏழாயிரம் ரூபாய். கொஞ்சம் அதிகம்தான். ஆனால், நம்ம வீட்டுப் பெரியவங்க செüகரியத்துக்காக இது கூட செலவழிக்க மாட்டோமா என்ன?வருகிற ஞாயிற்றுக்கிழமையே ரெண்டு பேரையும் கொண்டு வந்து விட்டுடச் சொன்னாங்க. அப்புறம், உங்க சிஸ்டர் தன் புருஷன் வீட்டுக்குத் திரும்புகிற வரைக்கும் தனியாகத் தங்கிக் குடித்தனம் பண்ணுவதற்கு ஒரு சின்ன போர்ஷனையும் பார்த்து ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அதுக்கான பணத்தையும் கொடுத்துடுவோம். அடுத்த வாரமே எனக்குப் புரொமோஷன் வரலாம்னு சொல்றாங்க. வேலைப்பளு கூடுகிறது. இதுல வயசானவங்களையும், உறவுக்காரங்களையும் வெச்சிப் பராமரிக்கிறது ரொம்பக் கஷடம்ங்க. என்ன, நான் சொல்றது சரிதானே?''
யாரும் பதில் பேசவில்லை. சபை யோசனையுடன் மெüனமாகக் கலைந்தது.
நான் செய்த ஏற்பாடுகளின் படியே எல்லாம் நடக்கிறதோ இல்லையோ இனிமேலும் இந்த வீட்டில் என் அம்மா ஒரு நியூசென்ஸôகக் கருதப்பட மாட்டாள் என்று உறுதியாகத் தோன்றியது எனக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.