திரைக்கதிர்

இளையராஜா இருந்தும் பாடல்கள் இல்லாத படமாக உருவாகிறது "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. முதலில்
திரைக்கதிர்
Updated on
2 min read

இளையராஜா இருந்தும் பாடல்கள் இல்லாத படமாக உருவாகிறது "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. முதலில் இப்படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா, பின் மிஷ்கின் சொன்ன கதையால் ஈர்க்கப்பட்டு சமாதானம் ஆகியிருக்கிறார். கூலிக்கு வேலை செய்யும் கொலைகாரன் பற்றிய கதையாக உருவாகும் இப்படத்தில் மிஷ்கின், ஸ்ரீ, 6 வயது குழந்தை சைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயின் கிடையாது. இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து மிஷ்கின்.... ""இளையராஜாவுக்கு என் மீது சின்ன கோபம் இருந்தது. முதலில் என்னிடம் பேசவே முடியாது என மறுத்து விட்டார். ஆனாலும் ஸ்டூடியோவை விட்டுப் போகாமல் அங்கேயே நின்றிருந்தேன். நீண்ட நேரத்துக்கு பின் சமாதானம் ஆகி, கதையை கேட்டார். அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ""படத்தில் எத்தனை பாடல்?'' என்று கேட்டார். ""பாடலே கிடையாது'' என்றேன். ""பின் எதற்காக என்னிடம் வந்தாய்?'' என்றார். ""படத்துக்கு ரீ ரெக்கார்டிங் முக்கியம் என்பதால் உங்களிடம் வந்தேன்'' என்றேன். அதற்குப் பின் சமாதானமான அவர்  இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.'' "நந்தலாலா' படத்துக்குப் பின் இளையராஜா - மிஷ்கின் கூட்டணி இந்த படத்தில் இணைகிறது.  

"யா யா' படத்தின் மூலம் சந்தானம் - சிவா கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்தில் டோனி என்ற பாத்திரத்தில் சிவாவும், சேவாக் என்ற கதாபாத்திரத்தில் சந்தானமும் நடிக்கின்றனர். பீர்பால் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஹீரோயின்களாக தன்ஷிகா, சந்தியா நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் ஒன்றைச் சொல்கிறார் சிவா... ""எனக்கும் சந்தானத்துக்கும் கதைப்படி மோதல் நடக்கும். என்னை அவர் சிக்கலில் மாட்டி விடுவார். இந்த விஷயத்தை என்னிடம் சொல்வதற்காக வரும் பவர் ஸ்டார், ""எல்லா பிரச்னைகளுக்கும் அந்த கேசவன்தான் காரணம்'' என்றார். கேசவன் என்ற பாத்திரம் படத்திலேயே இல்லையே இவர் ஏன் இப்படி கூறுகிறார் என்று இயக்குநர் ராஜசேகர் குழம்பினார். இதனால் ரீடேக் எடுத்தார். அப்போதும் அவர் கேசவன் என்ற வசனத்தையே கூறினார். சேவாக் என்ற பெயரைத்தான் கேசவன் என்று மாற்றிச் சொல்லி பதற வைத்து விட்டார் பவர் ஸ்டார். இந்த சம்பவம் படப்பிடிப்போடு நின்று விடாமல் இப்போதும் காமெடியாக இருக்கிறது'' என சிரிக்கிறார் சிவா.

"பீட்சா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது "தி வில்லா'. "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் பிரபலமடைந்த தீபன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். "பீட்சா' படத்தில் வரும் ஒரு காட்சியின் தொடக்கமாக இக்கதை தொடங்குகிறது. அசோக் செல்வன், சஞ்சீதா ஷெட்டி நடிக்கின்றனர். பிரெஞ்ச் பாணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் தீபன் கூறுகையில், ""இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது உண்மைதான். ஆனால் அவரது கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்துள்ளோம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார். படத்தரப்பில் விசாரித்த போது, வில்லத்தனமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது. பேய்க் கதை என்பதால் அனுமாஷ்ய சக்திகள் கொண்டவராக இதில் சூர்யா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஹீரோ வாய்ப்புகள் இல்லாததால் தானே தயாரித்து, இயக்கி, இசையமைத்து "இசை' என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யா எடுத்து வருகிறார்.

"யோகி' படத்துக்குப் பின் அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். "555' நாயகி மிருத்திகா ஹீரோயினாக நடிக்கிறார்.  "கொள்ளைக்காரன்' படத்தை இயக்கிய சந்திரன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கேபிள் டி.வி. ஆபரேட்டரான அமீருக்கும், மிருத்திகாவுக்கும் இடையிலான காதலையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

"தில்லு முல்லு' ரீமேக்கை இயக்கி பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் பத்ரி. தொடர்ந்து பழைய படங்களை ரீமேக் செய்யும் முடிவிலும் இருக்கிறார். "" வெற்றியை விட தோல்விகள்தான் அதிகம். சரியான ஓர் அங்கீகாரம் இப்போது "தில்லு முல்லு' வெற்றிக்குப் பின் கிடைத்திருக்கிறது. "தில்லு முல்லு' ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை, என் பிறவிப் பயனாக கருதுகிறேன். இயக்குநர் கே. பாலசந்தர் படத்தை பார்த்து விட்டு வெகுவாகப் பாராட்டி பேசினார். பழைய படம் போல் இல்லாமல் புதிய சாயலில் உருவானதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் சிவா நடிக்கும் படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு இயக்குகிறேன். காமெடி கதையை தேர்வு செய்வது பெரிய விஷயம் அல்ல. அதை மெருகேற்றி நடிக்கும் நடிகர்கள் இருந்தால்தான் எந்த காமெடியும் நன்றாக வரும்.  ரசிகர்கள் விரும்பும் காமெடி படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. அடுத்து எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள்? என்ற கேள்விகள் என்னைத் துரத்துகின்றன. அந்த வாய்ப்பு கிடைத்தால் கமலின் "மன்மத லீலை'யை இயக்குவேன்'' என்கிறார் பத்ரி. 

"சுவடுகள்' படத்துக்காக லைவ் ரிக்கார்டிங் முறையில் பாடல்களை உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். நீண்ட இடைவெளிக்குப் பின் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து "தில்லு முல்லு' ரீமேக் படத்துக்கு இசையமைத்தார் எம்.எஸ்.வி. இதையடுத்து தனி நபராக "சுவடுகள்' படத்துக்கு இசையமைக்கிறார். பாலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்கி, நடிக்கிறார் ஜெய்பாலா, மோனிகா ஹீரோயின். எம்.எஸ்.வி.யைப் போலவே, நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கிய பாத்திரமேற்று  கே.ஆர்.விஜயாவும் நடிக்கிறார். தென்காசி பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படம், காதலை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக இசையமைக்க முன் வந்த எம்.எஸ்.வி. இன்றைய காலக் கட்டத்து இசையைப் போல் இல்லாமல், முன்பிருந்த நேரடி ரிக்கார்டிங் முறையில் இசையமைக்கிறார். இதற்காக 50 இசைக் கலைஞர்களை வைத்து ஒரே டேக்கில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார். கிராமிய இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com