வரம்

இவளுக்கு முழங்கால் வலி ஆரம்பித்துவிட்டது. எத்தனை கடைகளின் படிகளைத்தான் ஏறி இறங்குவாள்?
வரம்
Published on
Updated on
5 min read

இவளுக்கு முழங்கால் வலி ஆரம்பித்துவிட்டது. எத்தனை கடைகளின் படிகளைத்தான் ஏறி இறங்குவாள்? மகள் யாமினி, தன் பிறந்த நாளுக்காக ஒரே ஒரு ஜீன்ஸ் வாங்கத்தான் இவ்வளவுஅலைக்கழிக்கிறாள்.
 யாமினிக்கு ஒரு குறிப்பிட்ட டர்க்காயிஷ் நிறம்தான் வேண்டுமாம். அதில் ஒரு மாற்று கூடியோ, குறைந்தோ இருக்கிறது. பிடிவாதக்கார யாமினி தேடுகிறது.
 ""போனவாரமே வாங்கு... வாங்குன்னு சொன்னனே....'' இவள் சலித்துக் கொள்கிறாள்.
 ""டெஸ்ட் டயத்துல என்னால ஃப்ரியா ஷாப்பிங் பண்ணமுடியாது...'' விரைப்பாகச் சொல்கிறாள் மகள் - தன்னைவிட வளர்ந்திட்ட மதர்ப்பில். பார்த்துக் கொண்டிருக்கும் போதே பளபளவென்று வெளுக்கும் விடியலைப் போல மகளின் வளர்ச்சியும் கண்கட்டு வித்தையாகத்தான் இருக்கிறது இவளுக்கு.
 கடைசியாக யாமினி தேடிய நிறம் கிடைத்தேவிட்டது. வாங்கிக் கொண்டு விரைகிறாள் வீட்டிற்கு.
 கதவைத் திறந்த இவள் கணவன் முகத்தைத் திருப்பியபடி "பசிக்குது' என்று அலறும் டிவியை நோக்கி விரைகிறான். இவளுக்கோ பசித்து பெருங்குடல் சிறுகுடலைத் தின்றேவிட்டது. யாரிடம் சொல்லமுடியும்? போர்க்களமாகக் கிடக்கும் அடுக்களைக்குப் போய்க் குக்கரை வைக்கிறாள்.
 யாமினி எட்டிப் பார்த்து ""டின்னர் என்ன?'' என்று கேட்க, ""ரைஸ்'' என்று இவள் சொல்லவும் "ஐயோ..!' என்று தலையில்அடித்துக் கொள்கிறது.
 ""நா என்ன மெஷினா? ஒங்கூடத்தான உள்ள நுழைஞ்சேன்...?'' இவள் வெடிக்க,
 ""ஓ.கே... ஓ.கே... டோன்ட் ஸ்டார்ட்...!'' என்று யாமினி தன் அறைக்குப் போய்விட்டது.
 இனி சாப்பிடும்போது கணவன் அலுத்துக் கொள்வான் - காலையிலிருந்த அதே கறி என்பதால்.
 இவளுக்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடவேண்டும் என்றிருந்தது. இவளுக்கு முதன்முதலாக வங்கி வேலை கிடைத்தபோது, ""அப்பாடா! நம் அம்மா, சித்திகள் மாதிரி அடுக்களையிலேயே வேகவேண்டாம்...'' என்று நிம்மதியாக இருந்தது. தான் சிறகுகளாக நினைத்த அதே வேலை ஒரு விலங்கைப் போலத் தோன்றுகிறது இப்போது.
 இவள் கணவன் இவள் சம்பளத்தைத் தொடமாட்டேன் என்று பெயர் பண்ணினாலும், அவனுடைய முக்கால் சம்பளம் ஃபிளாட் வாங்கிய கடனுக்கு பிடிக்கப்படுவதால் வீட்டு செலவு இவள் தலையில். மகள் பிறந்த நாளுக்கு அவன் கொடுத்த பணம் ஜீன்ஸ் வாங்கவே சரியாகிவிட்டது. சொன்னால் "நீதான் கெடுக்கிற' என்று கத்துவான்.
 ஒருவழியாக இரவு சாப்பிட்டு ஒழித்துப்போட்டு படுத்தவுடன் நித்திரை மொத்தமாக விழுங்கிவிட்டது இவளை.
 
 நேற்றைய அசதியில் காலையில் சற்று தாமதமாக எழுந்துவிட்டாள்.
 ""அம்மா...!'' அலறுகிறது யாமினி.
 அதன் ரூமுக்கு விரைந்தாள்.
 ""யூனிஃபார்ம் அயர்ன் பண்ணாம இருக்கு!'' பல்லைக் கடிக்கிறது. அவசரமாக அயர்ன் பண்ணிக்கொடுக்கையில் கையைச் சுட்டுக் கொண்டாள்.
 தன்னைச் சுற்றி எதுவுமே நடக்காததுபோல நடுக்கூடத்தில் அவன் செய்தித் தாளில் மூழ்கியிருந்தான். காபியைக் கொடுத்துவிட்டு ஆரம்பித்தாள், ""இன்னைக்கு சாயந்திரம் யாமியைக் கூட்டிக்கிட்டு...''
 ""ஈவினிங் எனக்கு மீட்டிங் இருக்கு...'' நறுக்கெனக் கத்தரித்தான்.
 ஆதி நாளிலிருந்தே அவன் அப்படித்தான். ஆஸ்பத்திரி, பள்ளிக்கூட பி.டி.ஐ., திடீரென்று கிராஃப்ட்டுக்கான பொருள், பிறந்த நாள் பரிசு - எதுவானாலும் இவள்தான் போட்டது போட்டபடி ஓடவேண்டும்.
 ""ஏன், நேத்தி பூரா அலஞ்சியே.. இன்னுமா முடியல?'' எகத்தாளமாகக் கேட்கிறான்.
 ""நேத்தி ஜீன்ஸ் வாங்குச்சு... இன்னும் டாப்....''
 ""எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்ல...'' தோளைக் குலுக்கி அலட்டிக் கொள்கிறான்.
 இவளும் அதே பி.காமாக இருந்தாலும், யாமினி பிறந்தவுடன் பதவி உயர்வெல்லாம் வேண்டாம் என்று இன்னும் எழுத்தராகவே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாள். ஆணாக இருக்கும் ஒரே தகுதியால் அவன் மேன்மேல் சில பதவிகள் உயர்ந்து அவளைத் தாழ்ந்து பார்க்கிறான்.
 இவளுக்கு வாழ்க்கைப் பந்தயத்தில் தன் பாதையில் மட்டும் இத்தனை வேகத் தடைகளா? என்று பொங்கிக் கொண்டுவருகிறது.
 
 அடுத்தநாள் சீக்கிரம் சட்டை வாங்கிவிட்டு பாம்பேயிலிருந்து வந்திருக்கும் தன் ஆத்ம தோழி உமாவை அப்படியே பார்த்துவரலாம் என்று எண்ணியிருந்தாள். அவள் அம்மா வீடு அங்கேதான். ஒன்றிரண்டு நாட்களில் திரும்பிப் போவதாகத் தொலைபேசியில் சொன்னாள். போகாவிட்டால் நிச்சயம் கோபப்படுவாள். இவளுக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? பார்த்து சில வருடங்களாவிட்டதே.
 ஆனால் இந்த குட்டி அது வேண்டாம், இது வேண்டாம் என்று எங்கோ ஒரு "பார்ஷ்' கடைக்குக் கூட்டிப்போய் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, "ஐ லைக் திஸ்...' என்றது.
 இவளுக்கு மகளின் ஸ்டைலைப் பார்த்துப் பெருமிதம் ஒருபுறம்; இவ்வளவு பணம் இல்லையே என்று யோசனை மறுபுறம்.
 ""வாட்... அஸ் யூஷுவல் பணமில்லையா?'' உதட்டைச் சுழித்துக் கேட்ட யாமினியின் குரல் பொட்டிலறைந்தது.
 ""இல்ல கார்டிருக்கு... ஆனா இவ்ளோ...'' இவள் இழுப்பதற்குள்,
 ""ஷாப் குளோஸ் ஆகப்போகுது மேடம்...'' என்ற கடைப்பையனின் குரல் கேட்க,
 ""சரி, பில் பண்ணிடு...'' என்றாள்.
 நாளை மறுநாள் பிறந்த நாளாயிற்றே. இன்றாவது எடுத்து முடிந்தால் தேவலை. திரும்ப ஸ்கூட்டரில் வருகையில் குளிரில் சிலிர்த்தது உடல். பின்னால் திரும்பிப் பார்த்து இரைகிறாள்.
 ""ஏ... சனியனே.. ஷூட்டாலே தலைய மூடு! படுத்துகிட்டு என் எழவெடுக்காதே...'' ஆனால் யாமினி காதில் வாங்காததுபோல வருகிறது. மூடாது அது.
 புது இடமாதலால் நாலைந்து பேரிடம் வழி கேட்டு தட்டுத்தடவி ஒருவழியாகப் பரிச்சயமான சாலையை வந்தடைந்தாள். வானத்து நட்சத்திரங்கள் கண்சிமிட்டி தன்னைக் கேலி செய்வதாகத் தோன்றியது.
 வீட்டில் மாருதி கார் இருந்தபோதும் ஓட்டத் தெரியாது இவளுக்கு. அவன் கூட்டி வந்திருக்கலாம். தன்மேல் திடீரென்று கழிவிரக்கம் வந்தது இவளுக்கு. இரவு ஆக, ஆக, தனிமையும் பயமும் மெல்லக் கவ்வ, பத்திரமாக வீடு சேர்த்தாள் மகளை.
 
 அலைந்த அலைச்சலில் அடுத்தவாரம் வரவேண்டிய தூரம் இவளுக்கு மறுநாளே வந்துவிட்டது. அத்துடன் வழக்கமான இடுப்பு வலியும் சேர்ந்தே வந்தது.
 வெட்கத்தை விட்டுக் கணவனிடம் கேட்கிறாள், ""இன்னைக்கு எனக்கு பீரியட்ஸ். யாமிய சாயங்காலம் செருப்பு வாங்க கூட்டிட்டுப் போங்க...''
 அவனும் மனமிரங்கி, ""சரி; ஆனா நா லேட் ஈவினிங் பார்ட்டிக்குப் போணும். அதுக்குள்ள முடிஞ்சிரும்ல யாமீ?'' என்று கேட்கிறான்.
 ஆனால் யாமினி, ""மம்மி கூடத்தான் போவேன். நீங்க ரெண்டுமூணு கடதான் கூட்டிட்டுப் போவீங்க...'' என்று அவனைக் காப்பாற்றிவிட்டது.
 இவனுக்கு உள்ளூரப் பெருமையாக இருந்தது.
 ""மம்மீ!.. போயிட்டு வாங்க.. ஒரேயடியா கண்ணுமண்ணு தெரியாம செலவு பண்ணிட்டிருக்காதே...'' என்றான். அவனுக்கு சாப்பாட்டையும் குடியையும் தவிர எல்லாமே அநாவசியம்தான்.
 ""எல்லா பசங்களுந்தான் வாங்குதுங்க...'' என்று இவள் வக்காலத்து செய்ய,
 ""நீயெல்லாம் சொன்ன பேச்ச கேப்பியா? ராத்திரி எனக்கு டின்னர் வேணாம்...'' என்று எழுந்து போனான்.
 சாயங்காலம் சீக்கிரமே வங்கியிலிருந்து வந்தவள் மகளை அழைத்துக் கொண்டு ஆரம்பித்தாள் தன் பயணத்தை.
 மெட்ரோ கடைக்குப் போன யாமினி, இரண்டாயிரத்து நூற்றித் தொண்ணூற்று ஒன்பது ரூபாய்க்கு ஒரு செருப்பைப் போட்டுப் பார்த்து, ""இது நல்லாருக்கா?'' என்று கேட்டது.
 ஆசுவாசமாக அமர்ந்தவள், ""வெல என்ன பாத்தியா?''
 என்று கேட்டாள். ""இல்லை'' என்ற மகளை முறைத்து விலையைப் பார்த்து, ""ரெண்டாயிரத்து இருநூறுக்குத் தேவையில்லை; அதைவிட கொறச்சுப் பார்...'' என்றாள் சற்றே கண்டிப்பாக.
 ""இங்க அதவிட கொறச்சு கெடையாது...'' என்றது யாமினி.
 ""அப்படீன்னா போலாம்....'' என்று எழுந்தவள், கடைக்காரன் விழுங்கிய நமுட்டுச் சிரிப்பைப் பார்த்து குனிந்து தன் காலைப் பார்த்தாள். தன் நூற்றைம்பது ரூபாய் செருப்பின் பல வார்களில் ஒன்றிரண்டு அறுந்திருப்பதைக் கவனித்து கூச்சப்பட்டாள்.
 உடன் அருகிலிருக்கும் சின்ன கடைக்குப் போய் இருநூற்றைம்பது ரூபாய்க்கு பழுப்பு நிறத்தில் கெüரவமான ஒரு செருப்பை வாங்கியணிந்து பிய்ந்த செருப்பை விட்டாள். பணம் கொடுத்தபிறகே தான் பேரம் செய்ய மறந்ததை உணர்ந்து கடிந்து கொண்டாள் - தன்னை உள்ளூர.
 மனதைக் கல்லாக்கி, மகளைப் பார்த்து கண்டித்துச் சொன்னாள், ""யாமினீ, பாத்தியா நா வாங்குன செருப்போட வெலைய? என் சக்தி அவ்ளோதான். அதனால ஆயிரம் ரூபாய்க்குள்ள வாங்கு; இல்லன்னா வாங்காத..!''
 கசப்பான எல்லாவற்றையும் - படிப்பதிலிருந்து கண்டிப்பது வரை இவள்தான் செய்து கெட்டவளாக வேண்டும். அவன் எதிலும் பட்டுக் கொள்ளாமல் நல்ல பெயர் எடுத்துக் கொள்வான்.
 இப்போது அடிவயிற்றில் விண்விண்ணென தெறிக்கிறது இவளுக்கு. பொறுக்கும்படி இருந்தாலும் அதிகமாக்க வேண்டாமென்று கடைகளின் வாசலிலேயே நின்று கொண்டாள். யாமினி மட்டும் படியேறி, இறங்கி உள்ளே போய்வந்தது.
 ஒரு குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். மறுகணமே, "பாத்ரூம் போகவேண்டி வந்தால்...' என்று கைவிட்டாள்.
 வெளியே வந்த மகளிடம், ""இன்னுமா கெடைக்கல? ஒங்கப்பனக் கூட்டிட்டு வராம ஏன் என் உயிர வாங்குற?'' என்று பொரிய, பிள்ளையின் நீண்ட விழிகள் பளபளப்பேறின... முட்டி நிற்கும் கண்ணீரால்.
 ""சே... என்ன பொம்பிளை நான்? இருக்கும் ஒரு குழந்தையைக் கூட....'' என்று தன் மேலேயே இவளுக்கு வெறுப்பாக வந்தது.
 ""அந்த கடைல பாருடா கண்ணா...'' என்று அழைத்துக் கொண்டு போய் தேர்ந்தெடுப்பதில் உதவி, அது கேட்ட வெள்ளி நிறத்தில் ஜொலிக்கும் செருப்பை வாங்கித் தந்தாள். கூர்முனை குதிகால் செருப்புதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து இவள் எச்சரிக்கையை மீறி வாங்கிக் கொண்டது.
 இப்போது இவளுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டியது. எனவே நேராக வீட்டையடைந்தாள். அப்பாடா என்று நேப்கினையும் மாற்றிக் கொண்டாள். கணவன் இன்னும் வரவில்லை.
 ""அம்மா, பார்லர் மூடிடுவாங்க...'' என்று யாமினி ஞாபகப்படுத்தவும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடினாள். அதுகூட, நல்லவேளை வீட்டின் அருகில் இருந்ததால் ஏழு நிமிட நடையில் அடைந்தார்கள்.
 ""இதையெல்லாம் முன்னாடியே முடிக்கக் கூடாதாம்மா?'' என்று ஜாக்கிரதையாகக் கேட்க, ""செட்டிங் மொதநாள் தான பண்ணனும்...'' என்றது அந்தப் பெரிய மனுஷி.
 சோபாவில் காத்திருந்த இவளிடம் ஒரு பெண் வந்து, ""மேடம், யுவர் ஹேர் ஆல்úஸô நீட்ஸ் ட்ரிம்மிங்...'' என்றாள், இவள் துடைப்பக்கட்டைக் குதிரை வாலைப் பார்த்து.
 ""பிறகு பார்க்கலாம்....'' என்று சொல்லிவைத்தாள் இவள். செலவுதான் எகிறுகிறதே.
 அங்கிருந்த சஞ்சிகையைப் புரட்டியவளுக்கு அதிலிருந்த சாக்லேட் படத்தைப் பார்த்ததும் பொறிதட்டியது.
 ""யாமீ... ஸ்கூலுக்கு சாக்லேட்?'' என்று மகளிடம் போய்க் கேட்டாள்.
 ""அச்சச்சோ! மறந்தாச்சே....'' என்றது யாமினி.
 ""சூப்பர் மார்க்கெட் மூட்ற நேரமாச்சே...'' பதற்றப்படுகிறாள் இவள்.
 ""நீங்க போய்ப் பார்த்து ஃப் யூ செலக்ட் பண்ணிவைங்க; நா இத முடிச்சிட்டு வந்து அதுல பாத்து எடுத்துக்கறேன்...'' என்று யாமினி சொன்னதும், அவள் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு இரைக்க இரைக்க நுழைகிறாள் சூப்பர் மார்க்கெட்டுக்குள்.
 யாமினி இப்போதெல்லாம் மாறித்தான் போய்விட்டது. தன்னிடம் முன்போல் பகிர்வதோ, சந்தேகம் கேட்பதோ இல்லை. பேச்சையே குறைத்துவிட்டது. எனவே மகளுக்கு எது பிடிக்கும் என்று இவளால் தீர்மானிக்க இயலவில்லை.
 நான்கைந்து சாக்லேட் பாக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்து வைத்தாள். தலைவலியால் விலையைப் பார்க்கக் கூடத் திராணியில்லை இவளுக்கு. போனால் போகட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
 ""மேடம், குளோஸிங் டைம்...'' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக காவலாளி சொல்ல, ""டூ மினிட்ஸ் ப்ளீஸ்...'' என்று வினயத்தை வரவழைத்துக் கெஞ்சுகிறாள்.
 ஐந்து நிமிடத்தில் யாமினி வந்து வாங்கிக் கொண்டது. இருவரும் வீடு நோக்கி மெல்ல நடக்கையில், வானத்தில் நிலா, ஒரு வெள்ளிக் கோப்பையைப் போலப் பொங்கி வழிவதைப் பார்த்து, "தாகம் என்பதே தணியாத ஒன்றுதானோ, அல்லது தனக்கு மட்டும் அப்படியோ' என்றெண்ணினாள்.
 யாமினி நண்பர்களுடன் தொலைபேசியில் பேச ஆரம்பித்துவிட்டது. இனி அதற்கு நேரமோ, வேறு உலகமோ தெரியாது.
 பதினோரு மணிக்கு லேசாகத் தள்ளாடியபடி வந்த கணவன் நேராகப் படுக்கையில் விழுந்து தூங்கிவிட்டான். கூடத்து திவானில் படுத்த இவளுக்கு உடம்பை முறித்து வலித்தது. தூக்கம் இமையை அழுத்தினாலும் பனிரெண்டு மணிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விழித்திருக்கிறாள்.
 தன் அறையில் யாமினி இன்டர்நெட்டில் தன் படையோடு சாட் பண்ணிக் கொண்டிருக்கிறது. தன் ஒரு கையை மட்டும் காற்றில் அளைந்து ஒலியைத் தேடும் பைத்தியம் தான் எனத் தோன்றியது இவளுக்கு.
 பதினைந்து வருடங்களுக்கு முன் யாமினி பிறந்த இதே நாளிரவில் தன்னைத் தவிர இந்த உலகில் அதிர்ஷ்டசாலி யாருமில்லை எனப் பூரித்தாள். தனக்குக் கிடைக்காதவற்றைத் தன் மகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டாள். ஆனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழந்து வருவதாக உணர்கிறாள்.
 மணி பன்னிரண்டு ஆனது. வாழ்த்து சொல்ல காத்திருக்கும் அவள் தோழர்களோடு பேசி முடிக்கட்டும். நாம் ஏன் இடையில் பூந்து கலைக்கவேண்டும் என்று காத்திருந்தாள்.
 கையில் செல்ஃபோனுடன் ஓடிவந்த யாமினி, ""ஃபாஸ்ட்... ஃபாஸ்ட்... யூ விஷ் மீ ஃபர்ஸ்ட்...'' என்கிறது.
 மகளைக் கட்டி இறுக்கி, ""ஹேப்பி பர்த்டே கண்ணம்மா...'' என்று நெற்றியில், கன்னங்களில், உச்சந்தலையில் முத்தமழை பொழிந்தவளிடமிருந்து பிய்த்துக் கொண்டு ஓடுகிறது.
 ""ஹே! ஃபர்ஸ்ட் ஐ வான்ட் மை மாம்ஸ் விஷ்யா... தட்ஸ் வொய் ஐ ஸ்விட்ச்டு ஆஃப் த ùஸல்போன்... தாங்க் யூ... தாங்க் யூ!'' என்று கடலை உடைக்கிறது மொபைலில்.
 இவளுக்குள் ஏதேதோ உடைபட்டு கண்ணீர் வழிய, அதில் எல்லாம் கரைகின்றன.
 பி. கண்மணி
 தினமணி-காரைக்குடி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
 ரூ. 3000 வென்ற சிறுகதை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com