

நடிகை அம்பிகா இயக்குநராகிறார்... ஹீரோ தன் காதலியுடன் இந்தியாவுக்கு வருகிறார். ஹீரோயினுக்கு அமெரிக்காவில் நடந்த அமானுஷ்ய விஷயங்கள் இங்கும் தொடர்கின்றன. எதிர்பாராத கொலையும் நடக்கிறது. விசாரணையில் பல மர்மங்கள் வெளிப்படுவதுதான் கதை. "நிழல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மேஜர் கிஷோர், இந்து தம்பி ஜோடியாக நடிக்கின்றனர். பிரசூன் கிருஷ்ணா, ஜோமோன் ஜோஷி உள்பட பலர் நடிக்கின்றனர். மலையாளம், தமிழில் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் அனுபவம் குறித்து அம்பிகா... ""எனக்கு டைரக்ஷன் கனவு இருந்தது. இப்போது அது நிறைவேறி விட்டது. படம் இயக்குவதை விட நடிப்பதுதான் சுலபம். நான் பல இயக்குநர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். யாரும் என்னைத் திட்டியது இல்லை. என் இயக்கத்தில் நடித்தவர்களையும் திட்டவில்லை. இதில் ஏன் நடிக்கவில்லை? என்கிறார்கள். எனக்கான கேரக்டர் இதில் இல்லை என்பதால் நடிக்கவில்லை. இனி இயக்கமா? நடிப்பா? என்று கேட்டால் என் சாய்ஸ் நடிப்பு மட்டுமேதான்'' என்கிறார்.
அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "வாராயோ வெண்ணிலாவே'. "அட்டக்கத்தி' படத்தில் நடித்த தினேஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். காவ்யா ஷெட்டி மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா உள்பட பலர் நடிக்கும் இப்படத்தை, "சென்னை 28' படத்துக்கு திரைக்கதை எழுதிய ஆர்.சசிதரன் இயக்குகிறார். ஒளிப்பதிவு ராணா, இசை கார்த்திக் ராஜா, பாடல்கள் பா.விஜய், கபிலன், கானாபாலா. சென்னையிலிருந்து கேரளத்துக்கு வேலைக்கு செல்லும் தினேஷ் அங்கு ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார். காதலின் விளைவு, எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்குகிறது. அதில் இருந்து தினேஷ் மீள்வதும், காதலின் நிலை என்ன என்பதுதான் திரைக்கதை. படப்பிடிப்பின் பெரும் பகுதி கேரளத்திலேயே நடந்துள்ளது. "" அட்டக்கத்தி' படத்துக்குப் பின் சிறப்பான கதைக்களம் கிடைக்காமல் இருந்தேன். இந்த கதை அமைப்பு பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். இதுவும் திருப்புமுனை கொடுக்கும்'' என நம்பிக்கையோடு பேசுகிறார் நாயகன் தினேஷ்.
ராம்கோபால் வர்மா அடுத்த சர்ச்சைக்கு ரெடி. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு அவர் உருவாக்கும் படங்களுக்கு எப்போதுமே பெரிய ஓப்பனிங் இருக்கும். இந்த முறை தெலுங்கு, ஹிந்தியில் "சத்யா 2' மூலம் வருகிறார். இது தமிழில் "நான்தான்டா' என்ற பெயரில் வெளியாகிறது. சர்வானந்த், அனைகா சோதி, அஞ்சலி குப்தா நடிக்கின்றனர். படத்தின் ட்ரெய்லரை வெளியிட சென்னை வந்திருந்தார் ராம்கோபால் வர்மா...
""பொதுவாக என் படங்களில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் ஆக்ஷனுடன் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளேன். படிக்காத கிரிமினல்களை விட, படித்த கிரிமினல்தான் ஆபத்தானவர்கள். உலகம் முழுவதும் இருக்கும் தாதா, ரவுடிகளின் செய்முறைகளை ஆராய்ந்து அவர்கள் செய்யாத நுணுக்கங்களைப் பின்பற்றி தன் வேலையை செய்கிறார் ஹீரோ சர்வானந்த். இந்த திரைக்கதை யாரும் யோசிக்காத கோணத்தில் இருக்கும். பிற்காலத்தில் கிரிமினல்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்லும் படமாகவும் இது இருக்கும்'' என்றார் ராம்கோபால் வர்மா.
தனுஷ் ஹிந்தியில் நடிக்கும் "ரான்ஜனா', தமிழில் "அம்பிகாபதி' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். மற்றும் அபேதியோல் உள்பட பலர் நடிக்கின்றனர். நட்ராஜ் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜான் மகேந்திரன் வசனம் எழுத "தனு வெட்ஸ் மனு' என்ற ஹிந்தி படத்தை இயக்கிய ஆனந்த் ராய் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி தனுஷ் கூறும் போது, "" ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழில் படம் வெளியாகிறது. இப்படம் மூலம் சோனம் கபூர் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். அனில் கபூரின் மகளாக இருந்தாலும் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவியின் அமைதியை சோனத்திடம் பார்த்து வியந்து போனேன். சக நடிகையாக அவர் எனக்குச் சவாலாக இருந்தார்'' எனத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமாவது குறித்து சோனம் மகிழ்ச்சி தெரிவிக்கையில், ""தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாவது சந்தோஷமானது'' என தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சோனம்.
இயக்குநர் பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஆச்சார்யா ரவி எழுதி இயக்கும் படம் "என்னதான் பேசுவதோ'. விஜய்ராம், விக்னேஷ், ரோசன், தாஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார். படத்தின் கதைக்கரு குறித்து இயக்குநரிடம் பேசுகையில், ""பீகாரில் பெண் குழந்தைகள் விற்கப்படுகிறார்கள் என்ற ஒற்றைச் செய்திதான் இந்த கதைக்கான தேடலை தொடங்கி வைத்தது. எதற்காக அந்த வியாபாரம்? விற்கப்பட்ட பெண் குழந்தை பின்னாளில் என்ன ஆகிறது? என்பன போன்ற பல கேள்விகள் எழுந்தன. பீகாருக்கு போனால், குழந்தைகளை விற்பதற்கென்றே ஒரு கிராமம். நம்மூர் மாட்டுச் சந்தைப் போல் வாரத்துக்கு ஒரு முறை கூடும் சந்தையில், தங்களது பெண் குழந்தைகளை சாதாரணமாக விற்று விட்டுப் போகிறார்கள் பெற்றோர்கள். அந்த சூழலில் பார்த்ததையும், கேட்டதையும் திரைக்கதையாக்கி இருக்கிறேன். பெண் குழந்தைகள் விற்கப்படும் அந்த இடத்திலேயே படப்பிடிப்பு நடத்தியதுதான் இந்த கதைக்கு பலம்'' என்றார் ஆச்சார்யா ரவி.
மலையாள ஹீரோ பஹத் பாசில் நடிக்கும் படம் "நார்த் 24 காதம்'. "சுப்பிரமணியபுரம்' சுவாதி நடிக்கிறார். இவர் ஏற்கெனவே பஹத்துடன் "ஆமென்' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில் நடித்து வரும் சுவாதி, ஷூட்டிங் முடிந்தவுடன் மலையாளப் படத்தில் நடிக்க இருக்கிறார். மீண்டும் மலையாளப் பட வாய்ப்பு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், வெளிநாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்பதில்லை என்ற விஷயத்தில் இப்போதும் கறாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சுவாதி.
-ஜி. அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.