
வாசலைத் தாண்டி நீண்டிருந்த தாழ்வாரத்தில் சந்திரனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. நெற்றியில் பளிச்சென்று மின்னிய திருநீற்றுப் பட்டைக்கு நடுவே செந்நிறத் திலகம் துலங்கியது. ஒன்றிரண்டு நரை முடிகளைத் தவிர, அடர்த்தியாக சுருண்டிருந்த கருத்த முடி தலை கொள்ளாமல் புரண்டது. ஐம்பது வயதுக்கே உரிய ஆரோக்கியமான உடல். நேற்றுவரை ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தவன், இன்று சப்தநாடியும் ஒடுங்கி, ஐந்தடிக்குள் அடைபட்டுக் கிடப்பான் என்று யார்தான் நினைத்துப் பார்த்திருப்பார்கள்?
செண்பகத்துக்கு இது எதிர்பாராத அடி. கண்ணுக்குக் கண்ணான அவளது அன்புத் தம்பி, இவ்வளவு சீக்கிரம் அவளைவிட்டுப் போய்
விடுவான் என்று அவள் கனவில்கூட நினைக்கவில்லை.
ஊரிலிருந்து மாமா, அத்தை, அண்ணன் பரந்தாமன், கோவையிலிருந்து மூத்த தம்பி மதுசூதனன், பர்வதம் அக்கா, தங்கை காமாட்சி என்று எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
வீட்டிற்கு வெளியே சந்திரனை சுமந்து செல்வதற்கான தேர் தயாராகிக் கொண்டிருந்தது. மல்லிகை, கதம்பச் சரங்களும், பன்னீர் பாட்டில்களுமாக ஒரு பெரிய பை நிறைய வாங்கிக் குவித்திருந்தான் செண்பகத்தின் கணவன் ராமச்சந்திரன். மணக்க, மணக்க சந்திரனை வழியனுப்ப எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.
செண்பகத்தின் மகள் சாந்தியும், மகன் ரவியும், மாமாவின் உடலுக்கு அருகில் அமர்ந்து மெüனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இது ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பு. அவர்களைப் பொருத்தவரை, சந்திரன் மாமா மட்டுமல்ல. நல்ல நண்பன். சேவகன். ஆலோசகன். பாதுகாவலன்.
தண்டச்சோறு, கையாலாகாதவன், தடிமாடு என்று உறவு ஜனங்களால் அடையாளம் காட்டப்படும் சந்திரன், இவர்கள் இருவரின் கண்களுக்கு தியாகத்தின் மறு உருவம். திருமணமே செய்து கொள்ளாமல், தங்கள் குடும்பத்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்ற உணர்வில் உறைந்திருந்தது அவன் மீதான நேசம்.
எங்கிருந்தோ பறந்து வந்த ஈ ஒன்று, சந்திரனின் முகத்தில் அமர்ந்தது. பர்வதம் அக்கா, கையை வீசி அதை விரட்டினாள்.
""நல்ல சாவு போ... உடம்பு சரியில்லாமப் படுத்தான், மத்தவங்களுக்கு தொந்தரவு கொடுத்தான்ங்கிற பழியில்லாம மகராசன் போய் சேர்ந்துட்டான்'' என்று முகவாய்க் கட்டையை விரல்களால் தாங்கி அங்கலாய்த்தாள் பரமக்குடி அத்தை.
""தண்டச்சோறு, தடிமாடுன்னு எத்தனை ஏச்சு வாங்கினான். இப்ப, யாருக்கும் தொந்தரவு கொடுக்காமப் போய்ச் சேர்ந்துட்டான்'' என்று கண்களில் நீர் வழிய அரற்றினாள் பர்வதம்.
செண்பகம் எதுவும் பேசவில்லை. எல்லாத் துக்கத்தையும் நெஞ்சுக்குள் அடக்கிக் கொண்டவளாய், தம்பியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
சிறுவயதில் இருந்து சந்திரன் என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம். ஆறு பேர் அடங்கிய அவர்களது குடும்பத்தில் கடைசி தம்பி என்பதால், அவளுக்குச் சந்திரன் மேல் பிரத்தியேக வாஞ்சை. சந்திரனுக்கு ஐந்து வயதானபோது அம்மா இறந்துவிட, செண்பகம்தான் குட்டித் தம்பியை குளிப்பாட்டுவது, சோறூட்டுவது என்று தாய் ஸ்தானத்திலிருந்து கவனித்துக் கொண்டாள். சந்திரனுக்கும் மற்றவர்களைவிட செண்பகம் மீது தனி பாசம். "அக்கா, அக்கா' என்று அவளைவிட்டு ஒரு நொடிகூட விலகமாட்டான்.
எல்லோரையும்போல சந்திரனும் பள்ளிக்குச் சென்றான். ஆனால், படிப்பு அவன் மண்டையில் ஏற மறுத்தது. ஒரே வகுப்பில் ஐந்தாறு வருடங்கள் அட்டைபோல் ஒட்டிக் கிடந்தவனை, அதற்கு மேலும் பள்ளிக்கு அனுப்புவதில் பிரயோசனம் இல்லையென்று தீர்மானித்து, ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். ஆறு மாதங்களுக்கு மேல் அங்கு அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மளிகை சாமான்களை சரியாக அளவிட்டுக் கொடுக்கவோ, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை சரிவர எண்ணி வாங்கவோ அவனால் முடியவில்லை என்பதால், வேலைக்கு லாயக்கில்லாதவன் என்று முத்திரை குத்தி திருப்பி அனுப்பினார் கடைக்காரர்.
கணக்கு, பணம் என்று மூளையை செலுத்த வேண்டிய வேலையாக இல்லாமல், சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் உடல் உழைப்பு சார்ந்த வேலையில் சேர்த்துவிட்டார் பரமக்குடி மாமா. நகரில் பெரிய காய்கறி அங்காடி கொடவுனில் தினசரி வந்து இறங்கும் சரக்குகளை இறக்கி, உரிய இடத்தில் கொண்டுபோய் அடுக்கும் வேலை. பத்து மாதங்களுக்குப் பிறகு, அந்த வேலையும் பறிபோனது. சரக்கு ஏற்றி, இறக்கும் இடத்தில் சக பணியாளுடன் வாய்த்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்ததால், கடை முதலாளி அவனது கணக்கைத் தீர்த்து அனுப்பினார்.
இப்படி, கிடைத்த வேலைகளையெல்லாம் சந்திரன் தொலைத்துவிட்டு வந்து நிற்க, குடும்பத்தினர் எல்லோருக்கும் அவனைப் பற்றிய கவலை அதிகரித்தது. மற்ற ஐந்து பேரும் நன்றாகப் படித்து, அரசு உத்தியோகம், பிஸினஸ் என்று நல்ல நிலையில் செட்டிலாகிவிட, சந்திரன் மட்டும் "எதற்கும் கையாலாகாதவன், தண்டச்சோறு' என்ற நிரந்தரப் பட்டத்துடன் சீந்துவாரின்றி தனித்து நின்றான். திருமணம் செய்து வைத்தாலாவது அவனது நிலை உயரலாம் என்று குடும்பத்தினர் எடுத்த முயற்சிகளும் வீணாகப் போனதுதான் நடந்தது. வேலை பார்ப்பவனுக்கு பெண் கொடுக்கவே பலரும் யோசிக்கும் சமுதாயத்தில், படிப்பும், பணியுமின்றி பொழுது போக்கி வரும் ஒருத்தனுக்குப் பெண் கொடுக்க யார்தான் முன்வருவருவார்கள்?
சந்திரன் பிறந்த நேரமோ அல்லது அவனது தலையெழுத்தோ எதைச் சொல்வது? ஆள் வாட்டசாட்டமாக, கண்ணுக்கு லட்சணமாக இருந்தாலும் காரியத்தில் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்பதால், உறவுகள்கூட அவனை ஒதுக்கியே வைத்தன. அப்போதும் தம்பி மீதான அன்பு குறையாமல் அவனை அரவணைத்தவள் செண்பகம் மட்டுமே.
அவளுக்கு வாய்த்த கணவனும் குணத்தில் சொக்கத் தங்கம். சந்திரனை, தன் சொந்த சகோதரனாகவே பாவித்து, தங்களுடனேயே தங்க வைத்த ராமநாதனை கடவுளின் மறு அவதாரமாகவே பார்த்தாள் செண்பகம். டீச்சர் டிரெய்னிங் முடித்து, உள்ளூர்ப் பள்ளியிலேயே ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்திருந்தாள் செண்பகம். திருமணமான இரண்டு ஆண்டுகள் கழித்து கருவுற்றதால், அக்காவுக்குத் தேவையான உதவிகளை கூடமாட இருந்து கவனித்துக் கொண்டான் சந்திரன்.
எங்கே சந்திரனை தங்களுடன் சேர்த்துக் கொண்டால், அவனுக்கும் சேர்த்து படியளக்க வேண்டி வருமோ என்று பயந்த மற்ற உடன்பிறப்புகள், அவன் செண்பகம் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கினதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.
அக்கா வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி வந்து கொடுப்பதிலிருந்து, மருமகப் பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதுவரை எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாகச் செய்வான் சந்திரன். சிறு வயதில் செண்பகம் அவனை கண்ணுக்குக் கண்ணாக பார்த்துக் கொண்டதற்குப் பிராயச்சித்தமாக, அவளையும் அவள் பிள்ளைகளையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்.
அதனாலேயே பிரசவம் முடிந்த ஆறே மாதத்தில், பச்சைக் குழந்தையை சந்திரனின் கண்காணிப்பில் விட்டுவிட்டு ஆசிரியப் பணிக்கு உடனடியாகத் திரும்பினாள் செண்பகம். ரவி பிறந்த இரண்டே வருடத்தில் சாந்தியும் பிறந்துவிட, பிரசவத்தால் அவளது ஆசிரியப் பணி எந்தவிதத்திலும் தடைப்படாமல் பார்த்துக் கொண்டான் சந்திரன்.
""என் குழந்தையை கிரெச்சுல விட்டுட்டு இங்க வந்து வேலை பார்க்க வேண்டியிருக்குது. இந்த விஷயத்துல நீ ரொம்பவும் கொடுத்து வச்சவடி செண்பகம். உன் தம்பி, உன் பிள்ளைகளை கருத்தா பார்த்துக்குறார் பாரு'' என்று அவளுடன் வேலைபார்க்கும் வசந்தா சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள்.
பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதுகூட செண்பகம் கவலைப்பட்டதில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பிள்ளைகளை, தாய்க்குத் தாயாக இருந்து கவனித்துக் கொண்டான் சந்திரன்.
சோர்ந்து வரும் பிள்ளைகளுக்கு, பாலைக் காய்ச்சி ஹார்லிக்ஸ் கலந்து கொடுப்பான். பள்ளியில் நடந்த விஷயங்களை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வான். குழந்தைகளுடன் குழந்தையாக சிறிது நேரம் விளையாடுவான். மாலையில் அவர்களுக்கு முகம் கழுவிவிட்டு, வீட்டுப் பாடம் செய்யச் சொல்வான். குழந்தைகள் பாடம் படிப்பதை அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் செண்பகம் பணி முடிந்து வீடு திரும்பிவிடுவாள்.
சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்ட சமையலறை, தொட்டியில் நிறைத்து வைக்கப்பட்ட தண்ணீர், துவைத்து கசங்கலில்லாமல் மடித்து வைக்கப்பட்ட துணிகள் என்று எல்லா வேலைகளையும் முடித்து, அவளுக்கு எந்த வேலையும் இல்லாமல் செய்துவிடுவான். காலையில் 8 மணிக்கு எலெக்ட்ரிக் டிரெய்ன் பிடித்து அலுவலகம் சென்று, இரவு 8 மணிக்கு சோர்ந்துபோய் சக்கையாய் திரும்பி வரும் ராமநாதனுக்கு, வீட்டைப் பற்றிய கவலையே இருந்ததில்லை. எலெக்ரிசிட்டி பில் முதல், சொத்து வரி வரை அனைத்தையும் காலந்தவறாமல் கட்டிவிட்டு, ரசீதை நீட்டுவான் சந்திரன்.
""எதுக்குடா சந்திரா எல்லா வேலையையும் நீயே செய்தே? நான் வந்து செய்ய மாட்டேனா?'' என்று ராமநாதன் கேட்டால், ""நீங்களே ஆபீஸ்ல இருந்து களைச்சுப் போயி வர்றீங்க. இதுல வீட்டு வேலையும் செய்யணுமா என்ன? வீட்டை நான் கவனிச்சுக்கிறேன். நீங்க ஆபீஸ் வேலைகள கவனிங்க'' என்பான் புன்னகை மாறாமல்.
எல்லோருக்கும் இந்த மனசு வராது. என்னதான் உடன்பிறந்தவளாக இருந்தாலும், ஒரு நண்பனைப் போல, வேலைக்காரனைப்போல உதவும் பரந்த சிந்தனை இருக்காது. சந்திரன் இருந்தான், ஒரு சேவகனாக.
அந்த சந்திரன்தான் இப்போது மூச்சடங்கி படுத்துக் கிடக்கிறான். சாந்தியும், ரவியும் மாமாவின் முகம் பார்த்து குமுறிக் குமுறி அழுதனர். கல்லூரி மாணவர்களான அவர்களுக்கு, தாயின் பாசத்தைவிட மாமாவின் பரிவே, அதிகப் பரிச்சயமானது. குழந்தைகளாக இருந்தபோது, அவர்களின் தனிமைத் துயரைப் பகிர்ந்து கொண்டு, கதை சொல்லி, பாட்டுப் பாடி, தோளில் சுமந்து, தாலாட்டுப் பாடி தூங்க வைத்து... தாயுமாகி நின்ற தாய் மாமன்.
சென்ற வாரம் நடந்த சம்பவம் ஒன்று சாந்தியின் நெஞ்சில் நிழலாடியது. திடீரென்று நாவல்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசை. அம்மாவிடம் சொன்னபோது சிரித்தாள்.
""நல்ல ஆசை போ. இப்பத்தானே ஜூன் மாசம் தொடங்கியிருக்குது...இனிமேல்தான் மார்க்கெட்டுக்கு நாவல்பழம் வரும்'' என்றபடியே கைக்காரியத்தில் மூழ்கிப் போனாள்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை. மாலையில் ஏதோ வேலையாக வெளியே போய்விட்டு இரவு வீடு திரும்பிய சந்திரனின் கையில், அரை கிலோ நாவல்பழங்கள் பளபளவென்று மின்னின. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த சாந்தி, ""தாங்க்யூ மாமா... தாங்க்யூ..'' என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
""சீசன் இனிமேல்தானே வரப்போகுது உனக்கெப்படிடா இந்த பழங்கள் கிடைச்சது'' என்றாள் செண்பகம் ஆச்சரியத்துடன்.
""கோயம்பேட்டுல வழக்கமா நான் பழங்கள் வாங்கற வியாபாரியோட தோட்டத்துக்கே போய் பறிச்சிட்டு வந்தேன்... என்ன, விலை கொஞ்சம் அதிகம்...'' என்று சிரித்தான் சந்திரன்.
முடிந்தவரை, குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பான் அவன்.
அப்படிப்பட்ட மாமனின் இறப்பு, அவர்களைப் பொருத்தவரை ஆறாத ரணம்தான்.
அழுது, அழுது சிவந்திருந்த கண்களை துடைத்துக்கொண்டு, சாந்தி மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தாள். மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. மர பெஞ்சுகளில் ஊர்ப் பெரியவர்களும், உறவினர்களும் நிறைந்திருந்தனர்.
""நேரம் ஆயிட்டிருக்குதேப்பா ராமநாதா அஞ்சு மணிக்குள்ள எடுத்துடலாமா?'' என்றார் கிணத்துக்கடவு பெரியப்பா, அரிவாள் மீசையை முறுக்கியபடியே.
ராமநாதன் அதற்கு பதிலளிக்க முற்படுகையில், சட்டென்று சாந்திக்கு ஏதோ பொறி தட்டியது. கூட்டத்தை விலக்கி உள்ளே ஓடியவள், ரவிக்கு அருகே சென்று அவள் தோளைத் தட்டி தன்னுடன் வரும்படி ஜாடை காட்டினாள்.
""என்னடி?''
""கொஞ்சம் உள்ளே வர்றியா?'' என்றபடியே வீட்டின் பின்பக்கத்துக்கு விரைந்தாள். ரவியும் அவளைத் தொடர்ந்தான்.
பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சாந்தி, ரவியின் காதில் ஏதோ குசுகுசுத்தாள். அதைக் கேட்டதும் அவன் முகத்தில் ஒரு பிரகாசம்.
""நல்ல வேளை சரியான நேரத்துக்கு நியாபகப்படுத்தினே சாந்தி இதோ, ஒரு நிமிஷத்துல ஜவஹர் சாருக்குப் போன் போடறேன்'' என்றபடியே, தன் அறையிலிருந்த செல்போனை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காத இடத்துக்குச் சென்று ஜவஹருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான். சாந்தியிடம் திரும்பி வந்தவன், ""இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்திடுவாங்க'' என்றான்.
""ஒண்ணும் பிரச்சினையாயிடாதேடா''
""நீ எதுக்கும் கவலைப்படாதே. இப்பவாவது உனக்கு இந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்ததே''
""அந்த டாகுமெண்ட் உன்கிட்டதானே இருக்குது ரவி அதை எடுத்து தயாரா வெச்சுக்கோ. நான் ஹாலுக்குப் போறேன்'' என்றபடியே முன் ஹாலுக்கு வந்தாள் சாந்தி.
இறுதிச் சடங்குக்கான எல்லா ஏற்பாடுகளும் முனைப்புடன் நடந்து கொண்டிருக்க, சாந்தியும், ரவியும் ஒருவித டென்ஷனில் இருந்தனர். சரியான நேரத்துக்கு ஜவஹர் சார் வரவேண்டுமே என்று கவலையாக இருந்தது.
ராமநாதனும் இன்னும் சிலரும் சேர்ந்து, சந்திரனின் சடலத்தை வாசலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்த மர பெஞ்சில் படுக்கவைத்து, கூடப் பிறந்தவர்கள் கோடித் துணி போட்டு, சடலத்தை சுற்றி வந்து கொண்டிருந்த நிமிடத்தில், வீட்டுக்கு முன்பாக வந்து நின்றது அந்த வெள்ளை நிற வேன்.
அதிலிருந்து இறங்கிய ஜவஹரையும், அவரது நண்பர்களையும் பார்த்தபிறகுதான் சாந்தியும், ரவியும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
சுற்றியிருந்த ஜனங்களின் பார்வை கதர் ஜிப்பா, வேட்டி அணிந்து, ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருந்த ஜவஹரின் மீதே நிலைத்திருந்தது.
""இங்க ராமநாதன்கிறது'' என்று ஜவஹர் விசாரிக்கும்போதே, சாந்தியும், ரவியும் அவரை நெருங்கினர். அவரும் அவர்களைப் பார்த்தார்.
""ஜவஹர் சார், இவர்தான் எங்கப்பா'' என்று ராமநாதனை அறிமுகப்படுத்த, அவர் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்தார்.
ஜவஹர் மெல்லிய குரலில் ராமநாதனிடம் ஏதோ சொல்லிவிட்டு, தன் கையிலிருந்த ஓர் ஆவணத்தை எடுத்துக்காட்டினார். அதை வாங்கிப் படித்துப் பார்த்த ராமநாதனின் முகம் மாறியது. செண்பகத்தை சைகை காட்டி தன் அருகே அழைத்தார் அவர். ஜவஹர் சொன்னதை செண்பகத்திற்கு மட்டும் கேட்கும் குரலில் அவர் கூற, செண்பகம் அதிர்ந்தாள்.
""முடியாது. நிச்சயமா முடியாது. இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்'' என்றாள் வெறிபிடித்தவளைப்போல.
அதற்குள் பர்வதம் அக்கா, பரமக்குடி சித்தப்பா என்று உறவு ஜனங்கள் அவர்களை நெருங்கினர்.
""என்னப்பா என்னாச்சு யாரு இவங்க?'' என்றார் கிணத்துக்கடவு பெரியப்பா குழப்பமாக.
""இவங்க, சங்கரா ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்காங்க பெரியப்பா. தான் இறந்த பிறகு தன்னோட உடம்பை மருத்துவக் கல்லூரிக்கு தானமா கொடுக்கிறதா சந்திரன் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கான். இதோ, அதுக்கான ஆதாரம்'' ராமநாதன் நீட்டிய பத்திரத்தை பெரியப்பா வாங்கிப் படித்தார்.
""இல்லை இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். என் தம்பிக்கு நல்லபடியா காரியம் செய்து அனுப்பணும். அவனோட உடம்பை ஆஸ்பத்திரிக்குக் கொடுத்து கூறுபோட அனுமதிக்கமாட்டேன்'' என்று ஆவேசம் பிடித்தவள் போலக் கத்தினாள் செண்பகம்.
""ஏய், செண்பகம் கொஞ்சம் பேசாம இருக்கறியா நீ படிச்சவதானே எதுக்காக இந்த ஆர்ப்பாட்டம் பண்றே? சந்திரன் தானே விருப்பப்பட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கான். இதுக்கு நாம தடையா இருக்கக்கூடாது. அவங்க அவனோட உடம்பை எடுத்துட்டுப் போகட்டும் தள்ளி நில்லு'' அதட்டினார் ராமநாதன்.
""என் தம்பிக்கு இதப்பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. யாரோ அவனுக்கு தப்பா வழிகாட்டியிருக்காங்க'' என்று செண்பகம் ஏதோ சொல்ல முற்பட, தாயின் தோளைத் தொட்டு அணைத்தாள் சாந்தி.
""இந்த விஷயம் எனக்கும், ரவிக்கும் தெரியும்மா. மாமா எங்ககிட்ட சொல்லிட்டுத்தான் இப்படி செஞ்சார்'' என்ற சாந்தியின் முகத்தை கண்ணீருடன் ஏறிட்டாள் செண்பகம்.
""இதை ஏன் என்கிட்டே முதல்லயே சொல்லல...''
""மாமாதான் யார்கிட்டயும் இதைப்பத்தி இப்பவே சொல்ல வேண்டாம்னுட்டார். தான் இறந்த பிறகும், மத்தவங்களுக்குப் பயன்படணும்ங்கிறது மாமாவோட விருப்பம். அவரோட ஆசைக்கு குறுக்கே நிற்காதேம்மா. ப்ளீஸ்'' என்ற ரவியின் வார்த்தைகளைக் கேட்டு தாங்கமாட்டாமல் கதறி அழுதாள் செண்பகம்.
அவள் அழுது ஓயட்டும் என்று காத்திருந்தார் ராமநாதன். அதற்குள், கூடியிருந்த உறவு ஜனங்கள் தங்களுக்குள் ரகசியமாக ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, சலசலப்பு அதிகமானது.
நேரம் ஓடிக்கொண்டே இருக்க, ராமநாதன் செண்பகத்தை நெருங்கினார்.
""செண்பகம், டைம் ஆகுதும்மா. சந்திரனை சந்தோஷமா அனுப்பி வைப்போம்...அவன் விருப்பத்தை நிறைவேற்றும்மா...'' என்றார் கெஞ்சும் குரலில்.
""எடுத்துட்டுப் போகச் சொல்லுங்க என் தம்பியை, உதவாக்கரை, தண்டச்சோறுன்னு இனி யாரும் என் தம்பியை சொல்லக்கூடாது. சந்தோஷமா எடுத்துட்டுப் போகச் சொல்லுங்க'' என்றபடியே கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு குலுங்கினாள் செண்பகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.