அவளுக்கு அவளே நிகர்..!

உறவுப்பூர்வமான மேடையை உணர்வுப்பூர்வமாக ஆக்கியவர்களுக்கு நன்றிகூற வார்த்தையில்லாது
Updated on
3 min read

""அம்மையே அப்பா ஒப்பிலா மணியே'' என்றார் மணிவாசகப் பெருமான். தாய்-தந்தைக்கு ஒப்புமையாக ஒருவரையும் கொள்ள முடியாது. அதிலும் தாய்க்கு ஒப்புமை கூறவே இயலாது; அவளுக்கு நிகர் அவள் மட்டும்தான்! மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரில் மாதாவைத்தான் முதலிடத்தில் வைத்தனர். காரணம், குழந்தையைப் பெற்றெடுப்பதிலும் (படைத்தல்), காப்பதிலும் (காத்தல்), பிறருக்குத் தெரியாவண்ணம் தான் பெற்ற குழந்தைகளின் குற்றங்களைக் களைந்து மறைப்பதிலும் (மறைத்தல்),

தன் குழந்தைகளுக்கு நன்னெறி காட்டித் தீமைகளை அழிப்பதிலும் (அழித்தல்), குழந்தைகளிடம் அன்போடு கருணை காட்டுவதிலும் (அருளல்) அவள் கடவுளுக்கு (சிவனின் ஐந்தொழில்) நிகரானவளாகத் திகழ்வதால்தான் அவளைக் கண்கண்ட தெய்வமாக முதலிடத்தில் வைத்துப் போற்றினர் நம் முன்னோர்.

தன் தாய், பிறர் தாய் என்றில்லாமல், இந்த அவயத்தில் முந்தி இருக்கச்செய்த பலருடைய அன்னையரையும் அழைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாகக் கெüரவப்படுத்தி வரும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை நடத்தி வருகிறார் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.முரளி.  இந்த ஆண்டும் சென்னை மியூசிக் அகாதெமியில் அந்த நிகழ்ச்சி நடந்தது.

""இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்குக் காரணம். என் தாய்தான். என் தாய் மட்டுமல்ல, எல்லா தாய்மார்களுமே வணங்கப்பட - போற்றப்பட வேண்டியவர்கள்தாம். தாய்மை என்றால் அளவிலா தூய அன்பு. இங்கு வந்துள்ளவர்கள், "அம்மா' என்று சொன்னவுடன் ஆசை ஆசையாக வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையான தூய அன்பு இருக்கும் இடத்தில் வம்புக்கு இடமில்லை. என் வெற்றிக்குப் பின்னால் என் அம்மாதான் இருக்கிறார். நான் வெற்றி அடைந்துவிட்டேன் என்று சொல்லமாட்டேன்; வெற்றியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன் அவ்வளவே! ஒவ்வொரு குழந்தையும் முதல் பத்து ஆண்டுகள் தாய்க்குக் குழந்தையாக இருந்து பல கஷ்டங்கள் கொடுக்கிறார்கள். அதேபோல தாயின் இறுதி பத்து ஆண்டுகள் அவர் நமக்குக் குழந்தையாகிறார். அப்போது அவரை நாம் மிகவும் கவனமாகக் கவனித்துப் போற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை'' என்று மனம் நெகிழ்ந்து பேசினார் எம்.முரளி.

""இந்த நிகழ்ச்சி நடத்துவதன் நோக்கம், இன்றைய இளைஞர்களும் வருங்காலத் தலைமுறையினரும் தாயன்பை உணரவேண்டும்; போற்ற வேண்டும், முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும் என்பதுதான். இதைச் செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. நாங்கள் நடத்தும் நிகழ்வுகளில் அகமகிழும் நிகழ்வு "தாய்மைக்கு வணக்கம்' நிகழ்ச்சி ஒன்றுதான். அதைமட்டும் நான் தவறவிடுவதே இல்லை'' என்றார் எம்.முரளி.

 "தாய்மைக்கு வணக்கம்' நிகழ்ச்சியில், கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் எஸ்.ருக்குமணி, நடிகர் ஆர். மாதவனின் தாயார் சரோஜா ரங்கநாதன், டிரம்ஸ் சிவமணியின் தாயார் லட்சுமி ஆனந்தன், "யுனிவர்செல்' நிறுவனர் - இயக்குநர் சதீஷ்பாபுவின் தாயார் பாமிதுரை, செஃப் தாமுவின் தாயார் கே.கோதைநாயகி, "அக்ட்சயா பிரைவேட் லிட்' தலைவர் டி.சிட்டிபாபுவின் தாயார் எஸ்.பார்வதி தங்கப்பன், "லட்சுமிகுமரன் & ஸ்ரீதரன் அட்டர்னிஸ்' நிர்வாகப் பங்குதாரரான வி.லட்சுமி குமரனின் தாயார் வி.ஜெயம்மாள், "டாடா கன்சல்டன்சி'யின் தாமஸ் வி.சைமனின் தாயார் சுசி சைமன், அப்பல்லோ மற்றும் மியாட் மருத்துவமனை டாக்டர் ஆர்.சுரேந்திரனின் தாயார் பாக்கியம் ராஜகோபால், பரதநாட்டியக் கலைஞர் ரோஜா கண்ணனின் தாயார் விஜயா வெங்கட்ரமணன், பத்மஸ்ரீ ஹரிஹரனின் தாயார் அலமேலுமணி, "எடல்வைஸ் பைனான்சியல் சர்வீஸஸ்' நிறுவனர் வெங்கட்ராம சுவாமியின் தாயார் புவனேஸ்வரி ராமசாமி ஆகிய பன்னிருவர் கெüரவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் கடைசி இருவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

டாக்டர் சுரேந்திரன், ""ஒரு பாராட்டு விழா நடக்கிறதென்றால் அதில் ஓர் உள்நோக்கம் இருக்கும். ஆனால், இந்தப் பாராட்டு விழா முற்றிலும் வித்தியாசமானது. தாயன்பு போலக் கைம்மாறு கருதாத விழா இது. இப்படி ஒரு நிகழ்வை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. அரசு மருத்துவமனையை அரச மருத்துவமனையாக்க வேண்டும் என்றவர் என் தாய். என் தாயை ஆயிரத்தில் ஒருத்தியாக, லட்சத்தில் ஒருத்தியாக அல்ல, கோடியில் ஒருத்தியாகவே நினைக்கிறேன். பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாச் சக்திகளையும் தன் பிள்ளைக்காக மண்டியிட வைப்பவள் தாய் ஒருத்திதான்'' என்றார்.

சதீஷ்பாபு, ""அம்மா என்றால் தியாகம், தியாகம், தியாகம்தான். அதிகாலையிலிருந்து இரவு வரை குறை சொல்லாமல், முகம் சுளிக்காமல் பணிவிடை செய்யக்கூடியவர்'' என்றார்.

வழக்குரைஞர் லட்சுமி குமரன், ""வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிட்டபின் ஏணி, தோணி, வாத்தியார் என்னும் மூன்றையும் யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். அதுபோல நீங்கள் இருக்காதீர்கள் என்பதை முரளி நமக்கு ஆண்டுதோறும் நினைவுபடுத்தி வருகிறார். இது ஒரு மிகப்பெரிய சேவை மட்டுமல்ல, சாதனையும்கூட'' என்றார்.

சமையல் கலை வல்லுநர் தாமு, ""அன்பு, பாசம் என்றால் என்னவென்றும், வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதையும் கற்றுக்கொடுத்தவர் என் தாய்தான். தாயிற்சிறந்த கோயில் இல்லை. யாரும் நினைத்தாலும் செய்யமுடியாத ஒரு புனிதமான செயல் இது'' என்றார்.

÷டிரம்ஸ் சிவமணி, ""எனக்குப் பேசத் தெரியாது; வாசிக்கத்தான் தெரியும். என் அம்மா வயிற்றில் இருக்கும்போதே நான் ரிதம்-லயம் எல்லாம் கற்றுக்கொண்டேன். அவங்க ஹார்ட் பீட்டில்தான் என்னுடைய இசை லயத்தை கடவுள் வைத்திருந்தான். இது அவர்கள் கொடுத்த பிச்சை. தாயின் கருவறைதான் ஒவ்வொரு குழந்தைக்கும் மூலஸ்தானம்; அவளே தெய்வம்'' என்றார்.

டி.சிட்டிபாபு ""தாழ்மையான மாலை வணக்கம் என்று சொல்வதைவிட தாய்மையான மாலை வணக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. என் தாயிடமிருந்து  எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயமும்தான் என்னுடைய பிரதிபலிப்பு. வாழ்க்கையில் முன்னேறி வருவதற்கு அன்பான அம்மாவும் கண்டிப்பான அப்பாவும் அவசியம் தேவை'' என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ""மைசூர்பாகை எத்தனையோ ஊர்களில் எத்தனையோ பேர் செய்திருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வித்தியாசமானதுதானே. அதே போல முரளி  தொழிலில் மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிகளின் மூலமும் வித்தியாசத்தைப் புகுத்தியிருக்கிறார். இப்படியொரு மேடையை இதுவரை நான் பார்த்ததே இல்லை. அம்மாவைப் பற்றிப் பேசும் போது அவ்வளவு சீக்கிரம் வார்த்தைகள் வராது. பெற்றவர்களை மதிக்காதவர்கள், பாதுகாக்காதவர்கள் நன்றாக இருந்ததாகச் சரித்திரமே இல்லை. நமக்கு உயிர் கொடுத்தவள், தன் உயிர் உள்ளவரை நம்மை உயிராய் நினைக்கும் ஒரே உயிர் அம்மாதான். "அம்மாவுக்கு வணக்கம்' என்பதை அடுத்த ஆண்டிலிருந்து "பெற்றோருக்கு வணக்கம்' என்று அப்பாவையும் சேர்த்து கெüரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

நடிகர் மாதவன், ""ஒரு நடிகரா, நமக்கு எப்பவுமே ஒரு புது அனுபவம் கிடைக்குமா என்று நினைக்கத் தோணும். அப்படியொரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் முரளி. என் வெற்றிக்குப் பின்னால் அம்மா சொல்லிக் கொடுத்த மூன்று விஷயங்கள்தான் உள்ளன. ஒன்று, தெரிந்து யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது. இரண்டாவது, உனக்கு 50 காசு கிடைத்தால் அது நேர்மையான வழியில் வந்ததாக இருக்க வேண்டும். இல்லையென்றால் 50 லட்சம் ரூபாய்க்காக அவமானப்பட நேரும். மூன்றாவது, யார் எப்படி இருந்தாலும் உயர்வு-தாழ்வு பார்க்காமல் அவர்களையும் மனிதனாக மதிக்க வேண்டும். இதுதான் என் தாய் சொல்லிக்கொடுத்த மந்திரம். அம்மா கோபத்தில் திட்டினாலும் சரி; சாபம் கொடுத்தாலும் சரி அது வரமாகத்தான் இருக்கும்'' என்றார்.

பரதநாட்டியக் கலைஞர் ரோஜா கண்ணன், ""இந்த உலகில் நான் இப்படி உங்கள் முன்னால் ஒரு தகுதி பெற்று நிற்பதற்கு மூல காரணம் என் அம்மாதான். வாழ்க்கையில் நிறைய முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் எனக்கு ஊக்கம் கொடுத்து, என்னை ஒரு பெண் சாதனையாளராக ஆக்கியவள். என்னுடைய பி.ஆர்.ஓ. என் அம்மாதான்'' என்றார்.

உறவுப்பூர்வமான மேடையை உணர்வுப்பூர்வமாக ஆக்கியவர்களுக்கு நன்றிகூற வார்த்தையில்லாது எம்.முரளி தவித்தார்.

  பிள்ளைக்கு ஊட்டிவிடும் தாய், அந்தப் பிள்ளையின் கையால் உணவருந்த ஆசைப்படுவாள் இல்லையா? பலருக்கும் அப்படியொரு மகனாக வாய்த்திருக்கிறார் முரளி!

÷""சொர்க்கம் சொர்க்கம் என்று எங்கே அலைகிறாய்; அது உன் தாயின் காலடியில் உள்ளது'' என்றார் ஓர் அறிஞர். உண்மையிலும் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com