

சீரடி சாய்பாபாவின் பால்ய வயது முதல் இறுதி வாழ்க்கை வரையிலான நிகழ்வுகள் 'சீரடி ஜெய் ஸ்ரீராம்' என்ற பெயரில் படமாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில், சீரடி சாய் பாபாவின் அர்ப்பணிப்பு வாழ்க்கை, துறவறம், மனிதநேயம் உள்ளிட்ட விஷயங்கள் பிரதானமாக இருக்கும். மனிதனாகப் பிறந்து மகான் ஆன சீரடி சாய் பாபாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை முன்னிறுத்தி இந்தியாவின் பல மொழிகளில் படங்கள் வந்திருந்தாலும், அவரது பால்ய பருவத்தில் நடந்த பல சம்பவங்கள் இதுவரை படமாகவில்லை. சொல்லாமல் விட்ட சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. சீரடி சாய் பாபா பிறந்தது, வளர்ந்தது என்று அவரது வாழ்வோடு சம்பந்தப்பட்ட இடங்களுக்கே சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பாபாவின் மகிமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பாஸ்கர் பாபா இப்படத்தை எழுதி, இயக்குகிறார். சீரடி சாய்பாபாவாக தத்தா ரெட்டி நடிக்கிறார்.
இழந்த மார்க்கெட்டை தூக்கிப் பிடிக்கவா...? இல்லை அமெரிக்காவில் செட்டில் ஆவதற்கான முன்னோட்டமா...? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது அசின் சமீபத்தில் பாலிவுட் ஸ்டார்களுக்கு வைத்த பார்ட்டி. "ஓர் அளவுக்கு மேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்' என்று அசின் விதிக்கும் கண்டிஷன் அவரை பின்னுக்குத் தள்ளியது. பாலிவுட் சென்ற சில மாதங்களிலேயே சோப்ரா முதல் கபூர் வரை முன்னணி ஹீரோயின்களுடன் போட்டி போட்ட அசினுக்கு இப்போது ஒரு படம் கூட இல்லை. அமெரிக்க மாப்பிள்ளையை அசின் திருமணம் செய்ய உள்ளார் என்ற கிசுகிசு வேறு பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு 28-வது வயது பிறந்தது. இதுவரை இல்லாத வகையில் நள்ளிரவு பார்ட்டி. இளம் ஹீரோக்கள் அதிகமாக கலந்து கொண்டதால், பாலிவுட்டில் விட்ட இடத்தை பிடிக்கவே அசின் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் விரைவில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதாக இன்னொரு தரப்பு கூறுகிறது.
"பாண்டிய நாடு' படத்துக்கு அடுத்தபடியாக விஷால் நடிக்கும் படத்துக்கு "நான் சிகப்பு மனிதன்' என பெயர். விஷால் ஃபிலிம் பேக்டரியுடன் இணைந்து இப்படத்தை யூ டி.வி. தயாரிக்கிறது. மீண்டும் விஷாலுடன் இப்படத்தில் நடிக்கிறார் லட்சுமிமேனன். காதல் மற்றும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக உள்ள இப்படத்தை திரு கதை எழுதி, இயக்குகிறார். இவர் ஏற்கெனவே விஷால் நடித்த "சமர்' படத்தை இயக்கியவர். படம் குறித்து விஷாலிடம் பேசுகையில், ""இயக்குநர் திரு சொன்ன கதை பிடித்திருந்ததால், அவரை காத்திருக்க சொன்னேன். ஏற்கெனவே "சமர்' படத்தின் மூலம் என்னை அவர் கவர்ந்திருந்தார். அப்படத்தின் திரைக்கதை வெகுவாக பேசப்பட்டது. அதைப் போன்ற ஒரு திரைக்கதை இப்படத்திலும் உள்ளது. "நான் சிகப்பு மனிதன்' என்ற ரஜினிகாந்த் படத் தலைப்பு இந்தக் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அந்த தலைப்பைக் கேட்டு வாங்கி பயன்படுத்துகிறோம். அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. ரிச்சட் எம்.நாதன் ஒளிப்பதிவில், தமன் இசையமைக்கிறார்'' என்றார்.
காதலிக்காக ஒரு காரியத்தை செய்யப் போய், அதனால் ஏற்படும் பிரச்னைகளில் சிக்கிகொள்ளும் ஒருவனின் கதையாக உருவாகி வருகிறது "என்னமோ நடக்குது'. தொழிலதிபர் ஒருவருக்கும், அரசியல்வாதிக்கும் இடையில், அவர்களின் சுயநலனுக்காக பிரச்னைகளில் சிக்கி கொள்ளும் இளைஞன், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதே திரைக்கதை. தொழிலதிபராக பிரபு, அரசியல்வாதியாக ரகுமான் நடிக்கின்றனர். போஸ்டர் ஓட்டும் கதாபாத்திரம் ஏற்று ஹீரோவாக நடிக்கிறார் விஜய் வசந்த். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மணிரத்னத்தின் உதவியாளர் ராஜபாண்டி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரே நாளில் நடப்பதாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 15 நிமிட காட்சிகள் 1980-களில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி.ஆர். - சிவாஜியை புகழ்வது போல் பாடல் இடம் பெற்றுள்ளது. 80-களின் இளையராஜாவின் பாணியை பின்பற்றி லைவ் ரெக்கார்டிங் முறையில் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. நவம்பர் மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
80 - 90களில் ஒரு சில படங்களை முழுவதுமாக பார்த்த பின்னரே படத்துக்குப் பின்னணி இசை வடிவமைக்கும் பணியில் இறங்குவார் இளையாராஜா. அந்த பாணியில் உருவான பல பாடல்களுக்கு இன்றளவும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. "உதிரிபூக்கள்", "என் ராசாவின் மனசிலே', "சேது' உள்ளிட்ட பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முழுப் படத்தையும் பார்த்த பின்னர் இசையமைக்கும் பாணியை "ஒரு ஊர்ல' படத்துக்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பின்பற்றியுள்ளார். புதுமுக இயக்குநர் வசந்த்குமாரின் வேண்டுகோளை ஏற்று "ஒரு ஊர்ல' படத்தை முழுவதுமாக பார்த்தார் இளையராஜா. படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால், அப்படத்துக்கு இசையமைக்க முன் வந்தார். இப்படத்துக்காக ""இப்படியும் ஒருத்தன் உண்டு...அதை எப்படி நான் சொல்லுவது?'' என்ற பாடலுக்கு இசையமைத்தார். வேல்முருகன் குரலில் இப்பாடல் பதிவாகியுள்ளது. பட புரமோஷனுக்காக அந்த ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வெங்கடேஷ், இந்திரஜித், அன்னபூரணி உள்ளிட்ட புதுமுகங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
"ஐயா', "சந்திரமுகி' படங்களில் குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடித்து அறிமுகமான நயன்தாரா, கவர்ச்சியாக நடித்ததால் படு வேகமாக டாப் இடத்துக்கு வந்தார். அந்த நேரத்தில் சிம்பு, பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, இனி கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்தார். காதல் முறிவுகளுக்குப் பின் அதையே பாலிசியாக வைத்திருந்தார். தெலுங்கில் சீதையாகவும் நடித்து இம்மாற்றத்தை உறுதி செய்தார். இப்போது போட்டி அதிகரித்து விட்டது. நயனும் வயது கடந்து வருகிறார். கவர்ச்சியாக நடித்தால்தான் போட்டியைச் சமாளிக்க முடியும் என அவர் முடிவு எடுத்து, "ஆரம்பம்' படத்தில் படு கவர்ச்சியாகவும், முழுக்க மார்டன் உடைகளிலும் அவர் நடித்திருக்கி
றார். இனி அடுத்தடுத்த படங்களிலும் இதையே தொடரவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் "ராஜா ராணி' தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதிலும் நயன்தாராவையே நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் கமர்ஷியல் அதிகம் தேவைப்படுவதால், ரீமேக்கில் கவர்ச்சி காட்சிகளை அதிகம் பயன்படுத்த உள்ளனர். இதில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.