

1. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காகத்திய அரச குலத்தைச் சேர்ந்த பெண் வீராங்கனை "ராணி ருத்ரம்மா தேவி'யாக நடிக்கிறார் அனுஷ்கா. 3டி வடிவில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்காக தீவிர கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. குணசேகர் எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் அனுஷ்காவின் காஸ்ட்யூம், கிரீடம் உள்ளிட்டவற்றை உருவாக்க ஒரு வருட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராணி ருத்ரம்மா தேவியாக நடிக்கும் அனுஷ்காவின் நகைகள், ஆடைகள், மேக்கப், கிரீடம், போர் வாள் உள்ளிட்டவற்றுக்கு வரலாற்று ஆய்வாளர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அனுஷ்காவின் உயரம், தலைப்பகுதியின் அகலம் உள்ளிட்டவற்றை அளவெடுத்து அதற்கேற்ப ஆடைகள் தயாரிக்கப்பட்டன. இதற்காக சிறு சிறு விஷயங்களில் கூட அதீத கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் அளவு முடிந்துள்ளது. ஃப்ளாஸ் பேக் காட்சிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலத்தில் நடப்பது போன்ற காட்சிகளுக்காக மார்டன் ஆடை, நகைகளும் அனுஷ்காவுக்காக பிரத்யேகமாகத் தயாராகி வருகின்றன.
2. "வசூல்ராஜா எம்பிபிஎஸ்' உள்ளிட்ட படங்களில் குத்தாட்டம் போட்ட ரகசியாவை, "வேல்முருகன் போர்வேல்' என்ற படத்திற்காக காமெடி நடிகரும், தயாரிப்பாளருமான கஞ்சாகருப்பு ஒப்பந்தம் செய்தார். இதற்காக மும்பையிலிருந்து தன்னுடன் 3 உதவியாளர்களுக்கும் விமான டிக்கெட் போடும்படி வற்புறுத்தினார். உதவியாளர்களுக்கும் டிக்கெட் போட்டால்தான் சென்னைக்கு வருவேன் என நடிகை கறாராகச் சொல்லவே, டிக்கெட் போட்டு அழைத்து வந்தார்கள். சென்னை வந்த ரகசியாவுக்கு நூறடி சாலையில் உள்ள ஹோட்டலில் அறை ஒதுக்கினார்கள். ஹோட்டலுக்குள் நுழைந்த ரகசியா முகம் சுளித்தார். வசதிகள் எப்படிப்பட்டவை? விரும்பும் உணவு வகைகள் கிடைக்குமா? என்றெல்லாம் விசாரித்தவருக்கு அங்கு தங்க மனமில்லை. இதனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை ஒதுக்கினால்தான் தங்குவேன் என்றாராம். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்கள். பிறகு படப்பிடிப்புக்கு வந்தவரிடம் கஞ்சா கருப்புக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொல்ல, அப்படி நடிக்க மறுத்து விட்டாராம். இப்படி அடுத்தடுத்து நடிகை ரகசியா கொடுத்த சிக்கல்களால் கஞ்சா கருப்பு அலறிவிட்டாராம்.
3. பார்த்திபனின் அடுத்த வித்தியாசமான சினிமாவாக உருவாகிறது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. தான் இயக்கும் படங்களில் தானே நடிக்கும் வழக்கத்தை கொண்ட பார்த்திபன், இப்படத்தை இயக்குவதோடு சரி. முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்ட இப்படம் குறித்து பார்த்திபன்... ""சம்பவங்களின் தொகுப்பாகத்தான் என் திரைக்கதைகளை உருவாக்கி வந்திருக்கிறேன். அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்? என்கிற சுவராஸ்யம்தான் வாழ்க்கை. அதை மையப்படுத்தியே என் எல்லா திரைக்கதைகளையும் அமைத்துள்ளேன். சினிமா உலகத்தில் இயக்குநராக அறிமுகமான சமயத்தில் எனக்கு பெரிய கர்வம் உண்டு. இந்த சினிமாவையே நான் மாற்றிக் காட்டி விடுவேன் என்கிற அந்த கர்வத்தால், நான் தயாரிப்பாளர்களைத் தேடிப் பிடித்ததில்லை. என்னை வைத்துப் படம் எடுக்கவில்லையென்றால் இந்த சினிமாவுக்குதான் நஷ்டம் என்று சுற்றித் திரிந்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது நான் பக்குவமாகியிருக்கிறேன். என் பயணத்தில் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் கதை என்னவென்று சொல்ல முடியாது. இதில் கொஞ்சம் கூட கதை இல்லை'' என்றார்.
4. ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவ காட்சிகளை படம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்திய மலையாள "களிமண்', தமிழில் "உயிரின் ஓசை' என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. ஒரு பாடலுக்கு ஆடும் ஸ்வேதாமேனன் பலவித போராட்டங்களுக்கு பின் நடிகையாகிறார். ஸ்வேதா நடித்த முதல் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வரும் ஸ்வேதாவின் கணவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு நிலைக்கு ஆளாகிறார். பெரிய நடிகையாகி விட்ட ஸ்வேதாவுக்கு தாயாகப் பரிணாமம் எடுக்க முடியாத நிலை... அதைத் தொடர்ந்து தாய்மை நிலை அடைந்த ஸ்வேதாவின் பிரவச காட்சிகள்தான் கதை. இதற்காக நிஜத்திலேயே தன் பிரசவத்தை காட்சியாக்க ஒப்புக் கொண்டார் ஸ்வேதாமேனன். எப்படி இது என பரபரப்புக் கிளம்ப... ""ஒரு பெண் தாயாவது... இந்த உலகத்துக்கு ஓர் உயிரைக் கொண்டு வருவது... எத்தனை ஆபத்தானது என்பதை வெளியுலகுக்குச் சொல்லவே இந்தப் படத்தில் நடித்தேன்' என பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்வேதா. மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் பிஜூமேனன், சுஹாசினி மணிரத்னம், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது.
5. பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள படம் "இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ளனர். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக உருவாகி வந்த இப்படம் வரும் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் குறித்து செல்வராகவன்.... ""அதென்ன "இரண்டாம் உலகம்'? எனக் கேட்காதவர்களே இல்லை. "இரண்டாம் உலகம்' என்பதை எப்படி விளக்க முடியும் என்றும் எனக்கு தெரியவில்லை. நாம்தான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறோம். ஆனால் நம்மை மீறிய வெவ்வேறு உலகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர். இதோ இந்த இடத்தில் பேசிக் கொண்டிருக்கும் நான், வேறு மாதிரியான உலகத்தில் வழிப் போக்கனாக இந்த நிமிடம் இருக்கலாம். இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வியும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கற்பனை குதிரைதான் இந்த சினிமா என்றாலும், அதைத் தாண்டிய விஞ்ஞான கண்டுபிடிப்பு இதில் இருக்கிறது. முதலில் கதை கேட்டவர்கள் எல்லாம் இதை எப்படி சினிமாவாக மாற்றுவது, இதை எப்படி திரையில் கொண்டு வருவது? என்றுதான் கேட்டார்கள். அந்த கேள்விகளைச் சவாலாக எடுத்துக் கொண்டு படத்தை முடித்திருக்கிறேன். "ஆயிரத்தில் ஒருவன்' ஒரு வரலாற்றை பின்னணியாகக் கொண்டதால், அதை ரசிகர்கள் புரிந்து கொண்டதில் சிக்கல்கள் இருந்தன. இதில் அது நிச்சயம் நிகழாது'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.