ஆயுள் காக்கும் ஆயர்வேதம்: வாந்தியை நிறுத்த வழி!

மனதிற்குப் பிடிக்காதது, உடலுக்கு ஒவ்வாத விஷப் பொருள், பித்த நீர் சுரப்பிகள் தூண்டப்படும் நிலை, மிதமிஞ்சிய பசியில் உண்ணும் உணவு, குடலிலுள்ள புண், இரைப்பையையும் குடலையும் இயக்கும் நரம்பு
ஆயுள் காக்கும் ஆயர்வேதம்: வாந்தியை நிறுத்த வழி!
Updated on
2 min read

எனக்கு அடிக்கடி உமட்டலுடன் வாந்தியாகிறது. உணவுக்குழாய், வயிற்றுப் பகுதியில் பிரச்னை ஏதுமில்லை என்று மருத்துவர் கூறுகிறார். வாந்தியை நிறுத்த வழி என்ன?

கிருஷ்ணன், ஆவடி.

மனதிற்குப் பிடிக்காதது, உடலுக்கு ஒவ்வாத விஷப் பொருள், பித்த நீர் சுரப்பிகள் தூண்டப்படும் நிலை, மிதமிஞ்சிய பசியில் உண்ணும் உணவு, குடலிலுள்ள புண், இரைப்பையையும் குடலையும் இயக்கும் நரம்பு மண்டலங்களின் குமுறல், கபம் மார்பில் நிறைந்திருத்தல் போன்ற பல வகைப்பட்ட காரணங்களால் வாந்தி ஏற்படும். இவற்றுக்கு ஒரே விதமான சிகிச்சை அளிக்க முடியாது. வயிற்றில் புளிப்பு மிகுந்து உணவு செரியாமல் புளித்துத் தங்கியுள்ளபோது வாந்தி வரும் நிலையில் அதை உடன் நிறுத்துவது கெடுதலை ஏற்படுத்தும். வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும் அம்சம் வெளியாக வேண்டியது அவசியமே. அதை அடக்குவதற்கு மருந்து சாப்பிட்டால், விஷ சத்து உடலினுள் பரவி தலைவலி, காய்ச்சல், பேதி, மயக்கம் போன்ற பல உபாதைகளை ஏற்படுத்தும். சிலருக்கு உணவு செரிக்காமல் வாந்தியாகும். அப்போது சீரணமாகாத உணவுப் பொருள் வெளியாகும் வரை பட்டினி இருப்பது அவசியம்.

வெறும் வயிற்றில் உமட்டலுடன் கொஞ்சம் சளியோ, புளித்த தண்ணீரோ, கோழையோ, நுரையுடன் உள்ள சளியோ வாந்தியானால், சாப்பிடவும் முடியாது, பட்டினியும் இருக்க முடியாது. உமட்டல் இருந்து கொண்டேயிருக்கும். வெறும் வயிறாக இருப்பதால் பசியும் இருக்கும். இந்த நிலையில் எந்த உணவையும் ஸ்பூன் ஸ்பூனாக சிறிது சிறிதாக இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிட வேண்டி வரும்.

வாந்தியை நிறுத்த நல்ல உணவு நெல் பொரி. இதைத் தனியே பொடித்துத் தூளாக்கி மோர் அல்லது தண்ணீர் விட்டுக் கரைத்துச் சாப்பிடலாம். கஞ்சியாகவும் வைத்துச் சாப்பிடலாம். வயிற்றில் அதிகமாக இடத்தை அடைத்துக் கொள்ளாமல் எளிதில் செரித்துவிடும். வாய்க்கும் ருசி நன்றாக இருக்கும். வாயிலுள்ள ருசியின்மையை மாற்றிவிடும்.

நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சும்போது ஒரு கொதி வந்ததுமே இறக்கிவிடலாம். கொதிக்கும்போது, அதில் ஒரு ஏலக்காயையும், நான்கைந்து கிராம்பையும் போட்டு கஞ்சியாக்கினால் இந்தக் கஞ்சியே வாந்தியை நிறுத்திவிடும் மருந்தாகும். கஞ்சியை வடிகட்டி 1/2 - 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டுச் சாப்பிடலாம். அடிக்கடி வாந்தி எடுத்தால் ஸ்பூன் ஸ்பூனாக இந்த பொரிக் கஞ்சியைச் சாப்பிடலாம். பித்த வாந்தியில் வாய்க் கசப்பும், வாந்தியாகும் தண்ணீரில் மஞ்சள், பச்சை நிறம் காணப்பட்டால், இந்த நெல் பொரிக் கஞ்சியில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மாதுளம் பழச்சாறு போன்றவை சேர்த்துச் சாப்பிடலாம். உமட்டல், விக்கல், நாவறட்சி இவற்றைப் போக்கும். வாந்தியினால் ஏற்படும் உடல் நீரின் குறைவை, சிறிது உப்புச்  சேர்த்து இந்தக் கஞ்சியைக் குடிப்பதன் மூலம், அதன் உபாதைகளைத் தடுக்கலாம்.

உமட்டலைக் குறைக்க எலுமிச்சம் பழத்தின் தோலைக் கசக்கி முகர்ந்தால் உமட்டல் குறையும். தேனில் ஊறப்போட்ட ஆப்பிள், நாட்பட்ட வாந்தியை நிறுத்தச் சிறந்தது. ஐஸ், வாந்தியை இரைப்பையின் பரபரப்பையும் குழப்பத்தையும் குளிர்ச்சியால் மறக்கச் செய்வதன் மூலம் குறைத்துவிடும். வாந்தியை நிறுத்தும்.

மயிலிறகின் சந்திர வட்டக் கண்கள் உள்ள பகுதியை நெய்த்திரி அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் திரியிட்ட விளக்கில் சாம்பலாக்கி, திப்பிலியின் சூர்ணமும் 1 -2 அரிசி எடை அளவில் வகைக்குச் சேர்த்து தேனில் குழைத்துக் கொடுத்தால், இரைப்பையின் குமுறலை அடக்கி, வாந்தியை நிறுத்திவிடும். விக்கல், பெருமூச்சு, மூச்சுத் திணறல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அரசம் பட்டையை நெருப்பில் சிவக்க வைத்துத் தண்ணீரில் துவைத்தெடுத்த நீரைத் தெளிய வைத்துச் சாப்பிட்டால், வாந்தி, விக்கல், நாவறட்சி குணமாகும். இந்துப்பு, சீரகம் சம அளவு, சிறு துண்டுகளாக்கிய எலுமிச்சம் பழத்துடன் பொடித்துச் சேர்த்து அனலில் வாட்டி சுவைத்துச் சாப்பிட, வாந்தி நிற்கும். வசம்பு சுட்ட கரி, ஏலக்காய் சுட்ட கரி, பலாச் சக்கை சுட்ட கரி 4 -6 அரிசி அளவு எடுத்து சிறிது தேனுடன் சாப்பிடலாம். பருத்தி விதைத்தூள், ஏல அரிசி, திப்பிலி, நெல்பொரி சம  அளவு பொடித்து, அதே அளவு சர்க்கரை சேர்த்து 1/4 - 1/2 டீ ஸ்பூன் சாப்பிட இனம் தெரியாத வாந்தி கூட நிற்கும்.

வயிற்றுக் குழப்பத்துடன் வாந்தியிருந்தால் கடுகை  அரைத்து மேல் வயிற்றில் பூசி 10 -15 நிமிடங்கள் கழித்து அலம்பிவிட உடன் வாந்தி நிற்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com