என்னுடைய வயது 68. மூன்று வருடங்களாக நான் புற்றுநோயால் அவதிப்படுகிறேன். உடல் மிகவும் மெலிந்து பலவீனமாக உள்ளது. தோலில் சுருக்கம் அதிகமாக உள்ளது. என்ன மருந்து சாப்பிடலாம்?
அலர்மேல் மங்கை, திருவெறும்பூர்.
மனித உடலில் பதின்மூன்று வகையான நெருப்புகள் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருப்பதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. வயிற்றில் ஜாடராக்னி எனும் ஒரு நெருப்பு, நாம் உண்ணும் உணவைச் செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியை உடல் உட்புறங்களிலுள்ள ரஸ - ரக்த - மாம்ஸ - மேத -அஸ்தி (எலும்பு) - மஜ்ஜை - சுக்லம்(விந்து) ஆகிய பகுதிகளில் இருக்கக் கூடிய ஏழு வகையான தாதுக்களில் பொதிந்துள்ள நெருப்புகளுக்கு உணவாக்கித் தருகிறது. படுசுறுசுறுப்பான இந்த ஏழு நெருப்புகளில் மிகவும் சூட்சுமமாக மறைந்துள்ள ஐந்து பூதாக்னிகளாகிய நிலம் - நீர் - நெருப்பு - காற்று
மற்றும் ஆகாயம் ஆகியவை, வந்துள்ள சத்தான உணவுப் பகுதிகளிலிருந்து தமக்கு உகந்த பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அந்தந்த தாதுக்களைப் போஷிப்பிக்கின்றன. உதாரணமாக இனிப்புப் பொருளாகிய பாயஸத்தை நிலம் என்னும் நெருப்பு பரபரப்புடன் ஸ்வீகரித்துக் கபம் எனும் தோஷத்தை போஷிப்பித்து உடலை ஊட்டமாக்குகிறது. அதுபோலவே ரஸம் - மாம்ஸம் - மேதஸ் - மஜ்ஜை மற்றும் விந்து ஆகிய தாதுக்களையும் ஊட்டப்படுத்தி போஷிப்பிக்கின்றது. உணவினூடே செல்லும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், ஜீரகம், தனியா, உப்பு, பட்டை, சோம்பு போன்ற சூடான வீர்யம் கொண்ட பொருட்களை, ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகிய நெருப்பு, ஆர்வமுடன் வரவேற்று, தன் நண்பனாகிய பித்தத்தையும், ரத்தத்தையும் போதுமான அளவில் சூடேற்றி, அவற்றைத் திறம்படச் செயல்புரிய வைக்கிறது. பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, காராமணி, மொச்சை போன்றவை ஜாடராக்னியில் வெந்து, உட்பகுதிகளில் சத்தாக வரும்போது காற்று மற்றும் ஆகாயம் எனும் பகுதிகளில் மறைந்துள்ள நெருப்பு மிகுந்த உற்சாகத்துடன் அவற்றைக் கபளீகரம் செய்து வாயு எனும் தோஷத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக்குகிறது.
இப்படி போட்டா போட்டி போட்டுக் கொண்டு செயல்படும் இந்த நெருப்புகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு மந்தகதியான நிலையில் உள்ளன. தகிக்க வேண்டிய நெருப்பு மந்தமானால், குண்டானில் உள்ள தண்ணீர் கொதிப்பதற்கு நேரமாவதைப் போல, நெருப்பின் தகிப்பினால் வேக வேண்டிய உணவுச் சத்து சரி வர வேகாமல் பதனழிந்து போய்க் கொண்டிருப்பதால், உங்களுக்கு உடல் மெலிவும், பலஹீனமும், தோல் சுருக்கமும் ஏற்பட்டுள்ளன.
தங்களுடைய கடிதத்தின் ஒரு பகுதியில் நெய், வெண்ணெய், எண்ணெய்ப் பலகாரம், அசைவ உணவு, முட்டை போன்றவற்றை விட்டுவிட்டேன் என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதற்கான காரணத்தை எழுதவில்லை. உடல் இயங்கத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு மாப்பொருளும், நெய்ப் பொருள்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. புரதம் நிறைந்த உணவுப் பொருள், உடலின் தேய்வை ஈடு செய்து புஷ்டியை அளிக்கிறது. புதிய ஜீவ கோசங்களை உற்பத்தி செய்கிறது. நீங்கள் குறிப்பிடும் நெய்ப் பொருள்களை விட்டுவிட்டதால், புரத வகை உணவுகளே மா - நெய்ப் பொருள்களின் செயலையும் புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், புதிய ஜீவகோசங்கள் மூலம் புஷ்டி தரவும் தேய்வை ஈடு செய்யவும் முடியாமல் உடல் இளைக்கிறது. நெய்ப் பொருளின் தனியம்சமான சக்தி தானமும் குறைவதால் இளைப்புடன் தோலும் சுருங்குகிறது.
அதனால் நீங்கள் உணவுப் பொருள்களில் கொழுப்பு சத்து கொண்ட நெய்ப் பொருளை ஒரே சீரான அளவில் சேர்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. மாவுப் பொருள் - நெய்ப் பொருள் - புரதம் முதலியவை பாகம் அடைய எரிபொருளாகவும் பணியாற்றுகின்றன. நெய்ப்பின் ஆதாரப் பொருட்களாகிய எள், பால், மாமிசம் முதலியவற்றை மிகவும் குறைந்த அளவில் ஆனால் தேவையான அளவை உடலில் சிறுகச் சிறகுச் சேர்த்து உடல் நெருப்புகளுக்குத் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் உடல் ஊட்டமடையும், பலஹீனம் குறையும். தோல் சுருக்கமும் மறைந்துவிடும்.
அமிருதபிராசம், கூஷ்மாண்ட ரஸாயனம், ப்ராம்ஹ ரஸாயனம், நாரசிம்ஹ ரஸாயனம், சியவனப் பிராசம், அஸ்வகந்தாதி லேஹியம், விதார்யாதி லேஹியம் போன்ற சிறந்த ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உதவி புரியலாம். ஆயுர் வேத மருத்துவரை அணுகி விவரம் அறியலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


