தன்மானம்

பிச்சை எடுப்பது ரொம்ப கஷ்டமான வேலை போல தோன்றியது. முதன்முதலாக பிச்சை எடுக்கும் ஒரு மனிதனின் நிலைமை எப்படியிருக்கும்? யாரிடம் முதலில் பிச்சை கேட்பது என்று
தன்மானம்
Published on
Updated on
5 min read

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு. சுப்பிரமணியசுவாமி கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்கு வெளியே வேப்பமரத்தடியில் நின்றுகொண்டு யாரிடம் கேட்பது, எப்படி கேட்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

பெருமாள்சாமி பிச்சை எடுத்துப் பிழைப்பது என்று முடிவு செய்துவிட்டார்.

பிச்சை எடுப்பது ரொம்ப கஷ்டமான வேலை போல தோன்றியது. முதன்முதலாக பிச்சை எடுக்கும் ஒரு மனிதனின் நிலைமை எப்படியிருக்கும்? யாரிடம் முதலில் பிச்சை கேட்பது என்று யோசித்திருப்பானோ? இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிவிட்டோமே என்று நினைத்திருப்பானோ? அப்படியெல்லாம் தோன்றாமல் கூட போயிருக்கலாம். பசி வேறு எதையும் நினைக்கவிடாது.

உண்மையிலேயே இன்றைக்கு பசியின் கொடுமையை நன்றாகவே உணர்ந்துவிட்டார். இதற்குமேல் தாங்க முடியாது. கையில் இருந்த காசெல்லாம் சுத்தமாகக் கரைந்துவிட்டது. நான்கு நாட்கள் எப்படியோ ஓடிவிட்டன.

எண்பது வயதில் இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. லட்சுமிக்கு முன்னால் இவர் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் லட்சுமி முந்திக் கொண்டுவிட்டாள். இரண்டு வருடங்களுக்குள் என்னவெல்லாமோ நடந்துவிட்டது.

லட்சுமிக்கு தன்னுடைய கடைசிக் காலம் தெரிந்துவிட்டிருந்தது.

""நான் போயிட்டா... உங்களை யாரு பார்த்துக்குவா... காட்டையும் தோப்பையும் என்னைக்கும் வித்துப் போடாதீங்க... அது இருக்கறவரைக்கும்தான் மதிப்பு...''

போச்சு லட்சுமி... போச்சு... எல்லாமே போச்சு...

பெருமாள்சாமி வயிற்றைப் பிடித்துக் கொண்டார். பசி தாங்க முடியவில்லை.

"பிச்சை எடுத்துப் பொழைக்கிற நெலமைக்கு வந்துட்டேன்... என் நெலமையைப் பார்த்தியா லட்சுமி... நீ இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா?'

பசி... பசி... பசி... பசி...  வயிற்றைச் சுண்டிவிட்ட மாதிரி இருந்தது. கண்கள் கலங்கிப் போய்விட்டன.

""அய்யா... எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா  கொடுங்க...''

""இங்க வேலை இல்லீங்க பெரியவரே...''

""ரொம்ப வயசனாவரா இருக்கறீங்க... என்ன வேலை கொடுக்கறது?''

""ஆளைப் பார்த்தா சீக்கு வந்த ஆளு மாதிரி இருக்குது... போங்க... வியாபாரத்தைக் கெடுக்காதீங்க..''

""போ பெரிசு... நாங்களே வேலையில்லாம கெடக்கறோம்.. உனக்கு எங்க போய் வேலை கொடுக்கறது? தடத்து மேலே நிக்காதே...''

மளிகைக் கடை, டீக்கடை, ஹோட்டல், அரிசிக்கடை, துணிக்கடை... எத்தனை கடைகள் இந்த இரண்டு  நாட்களில்... பொள்ளாச்சியை நிறைய தடவை சுற்றிவிட்டார். அவர் வயதையும் உடல் நிலையையும் பார்த்து யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை.

பெருமாள்சாமிக்கு பாளையம்தான் சொந்த ஊர். ஐந்து ஏக்கர் காட்டுக்கு சொந்தக்காரராக இருந்தார். இரண்டு மகன்கள்.

பெருமாள்சாமி நல்ல உழைப்பாளி. கூலி வேலையில் வாழ்க்கையைத் துவக்கியவர். குத்தகைக்கு காடு பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஐந்து ஏக்கர் காட்டை வாங்கினார். மூன்று ஏக்கரை தென்னந்தோப்பாக வளர்த்தார். லட்சுமியும் சும்மா இருக்கவில்லை. மாடுகளும் ஆடுகளும் வாங்கி மேய்த்தாள். பால், தயிர் என விற்று கொஞ்சம் காசு சேர்த்து வந்தாள்.

பெருமாள்சாமி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காட்டுக்கு போய்விடுவார். ஏதாவது வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு ஏக்கர் வயலில் நெல், கடலை, சோளம், கம்பு என்று பயிர்கள் வளர்த்தார்.

மகன்களை நல்ல முறையில் படிக்க வைத்தார். இரண்டு மகன்களுக்குமே விவசாயத்தில் ஈடுபாடு இல்லை. பெரியவனுக்கு சொந்தமாக லேத் ஒர்க் ஷாப் வைத்துக் கொடுத்தார். சின்னவனுக்கு சொந்தமாக எலட்ரிக்கல் கடை வைத்துக் கொடுத்தார். வசதியான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்.

பெருமாள்சாமியின் தோப்பு மெயின் ரோட்டு ஓரத்தில் இருந்தது. ரியல் எஸ்டேட்காரர்கள் கண்களை உறுத்தியது. மெயின் ரோட்டில் இருப்பதால் நல்ல விலைக்கு போகும் என்று பெருமாள்சாமிக்கு ஆசை காட்டினர்.

""என் உசுருள்ள வரைக்கும் அந்தக் காட்டை விக்க மாட்டேன். அது எம் புள்ள மாதிரி...''

 விலைபேச வந்தவர்களிடம் ஒரே பேச்சாக சொல்லி அனுப்பிவிட்டார்.

""காடு இருக்கறவரைக்கும்தான் மதிப்பு... அந்தக் காடு போச்சுன்னா... மானம், மரியாதை எல்லாம் போயிடும்... அவசரப்பட்டு காட்டை வித்துப் போடாதீங்க...'' லட்சுமி சாவதற்கு ஒருநாள் முன்பு இதைச் சொன்னாள். அடுத்த நாள் நெஞ்சுவலி என்று படுத்தவள்தான். போய்விட்டாள்.

அவள் இறந்த பின் பெருமாள்சாமி இரண்டு கைகள் இல்லாத மாதிரி உணர்ந்தார். அவர் காட்டோடுதான் பேசி வந்தார்.

"இது லட்சுமி வச்ச மாமரம்... இந்தக் கொய்யா மரம் மேட்டுப்பாளையத்து அத்தை நட்டு வச்சது. இந்த வேப்பமரம் நம்ம சின்னான் வளர்த்தது...'

காடும் அவரோடு பேசியது. மரங்கள், செடிகள் எல்லாமே அவரோடு பேசின. சருகுகள்கூட சலசலத்தபடி அவரோடு பேசின. காட்டையும் அவரையும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் பிணைத்திருந்தது..

பெரிய மகன் சந்திரனுக்கு கார், பங்களா என்று வாழ வேண்டும் என்று ஆசை. சந்திரனின் மகன் பிளஸ் - டூ முடித்திருந்தான். அவனை எஞ்சினியரிங் காலேஜ் சேர்க்க சந்திரன் முடிவு செய்திருந்தான். அதற்குப் பணம் வேண்டும். மெயின் ரோட்டில் காடு இருப்பதால் கோடிக் கணக்கான ரூபாய்க்கு ரியல் எஸ்டேட்காரர்கள் விலை பேசினார்கள்.

இரண்டாவது மகன் காட்டை விற்றால் கிடைக்கும் பங்குத் தொகையில் என்னென்ன வாங்கலாம் என்று பட்டியல் போட்டு வைத்திருந்தான்.

""அப்பா... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காடு தோப்புன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்கப்போறீங்க... நல்ல வெலைக்கு வருது. வித்துப்போடலாம்...''

பெருமாள்சாமி துடித்துப் போனார்.

""அய்யோ... காட்டை நான் விக்கமாட்டேன்... அது என்னோட உசுரு...''

இரண்டு மகன்களும் போராடிப் பார்த்தார்கள்.

அவர் காட்டை விற்பதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால் மகன்கள் கோடிகளைப் பார்க்கும் ஆசையில் இருந்தார்கள்.

பெருமாள்சாமி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து எல்லாவற்றையுமே தலைகீழாக மாற்றிவிட்டது. அவர் மட்டும் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால்...

நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். மருத்துவமனையில் மட்டும் ஒரு மாதம் தங்க வேண்டி இருந்தது. இடுப்பில் நல்ல அடி. ஆபரேசன் செய்தார்கள். அவர் எழுந்து நன்றாக நடக்கவே நான்குமாதங்கள் ஆகிவிட்டன.

நான்கு மாதங்களுக்குப் பின்னால் காட்டைப் பார்க்கச் சென்றவர் அதிர்ந்து போனார். காட்டைக் காணவில்லை. தென்னை மரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. வெறும் நிலமாக இருந்தது. தென்றல் நகர் என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

பெருமாள்சாமியின் உயிரை யாரோ பிடுங்கிக் கொண்டு ஓடுகிற மாதிரி இருந்தது.

""அய்யோ... என்னோட உசுரைப் பறிச்சுட்டாங்களே... லட்சுமி... லட்சுமி... உன் புள்ளக பண்ணியிருக்கற காரியத்தைப் பார்த்தியா அய்யோ... அய்யோ...''

அலறிக் கொண்டு மகன்களைத் தேடி ஓடினார்.

""டேய்... பாவிகளா என் காட்டை என்னடா பண்ணினீங்க கொன்னுட்டீங்களேடா... என் உசுரை எடுத்திட்டீங்களேடா...''

""அப்பா...பொறுமையா இருங்க... எங்களுக்கு வேற வழி தெரியலே... உங்களுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் வேணும். எங்களுக்கு தொழில்ல நஷ்டம். அதுதான் காட்டை வித்துட்டோம்..'' என்றான் பெரிய மகன்.

""பொய் சொல்லாதீங்கடா...  நீங்க சதி பண்ணிட்டீங்க... என்னை ஏமாத்திட்டீங்க...''

""இப்ப என்னப்பா நடந்து போச்சு... இடம் நல்ல வெலைக்குப் போயிருக்கு. கோடிக் கணக்கில பணம் கிடைச்சிருக்கு. நீங்க ராஜா மாதிரி உட்கார்ந்துட்டு சாப்பிடலாம்'' என்றான் சின்ன மகன்.

""நான் உட்கார்ந்துட்டு சாப்பிடறதா? என்னோட உழைப்பை அழிச்சுட்டு என்னை உட்கார்ந்து சாப்பிடச் சொல்றீங்களா? போச்சே... எல்லாம் போச்சே... சுடுகாடு ஆக்கீட்டிங்களேடா... எப்படிடா வித்தீங்க? என் கையெழுத்து இல்லாம எப்படிடா வித்தீங்க?''

""நீங்கதான் கையெழுத்துப் போட்டீங்க... ஆஸ்பத்திரியில வச்சு கையெழுத்துப் போட்டீங்க... ஞாபகம் இருக்கா?''

""அடப்பாவிகளா அது ஆபரேசன் பண்றதுக்குன்னு சொல்லித்தானே கையெழுத்து வாங்கினீங்க... ஏமாத்திட்டீங்களேடா... நானும் என்ன ஏதுன்னு தெரியாம கையெழுத்தைப் போட்டுத் தொலைச்சுட்டனே...''

""அப்பா... எல்லாம் நல்லதுக்குத்தான்...  உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். கவலைப்படாம இருங்க... பெரிய பங்களா கட்டப்போறோம். கார் வாங்கப் போறோம். உங்க பேரன் எஞ்சினியர் ஆகப்போறான்.  உங்க பேரக் குழந்தைக எல்லாம் பெரிய பெரிய ஸ்கூல்ல படிக்கப் போகுதுக... இதுக்கு மேல என்ன வேணும்?''

""இதுக்கு மேல என்ன வேணுமா? போடா என்னோட உசுரே போச்சே...  என்னைக் கொன்னுட்டீங்களேடா... எப்படிடா இப்படி ஒரு துரோகம் செய்ய மனசு வந்துச்சு?''

""அப்பா நீங்க ராஜா... உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமா நாங்க பார்த்துக்கறோம்...''

பெருமாள்சாமி நிம்மதி இழந்து தவித்தார்.

மகன்கள் சொன்னதுபோல் அவரை ராஜா மாதிரி நடத்தவில்லை.

""அப்பா ஒரு இடத்தில உட்காரமாட்டீங்களா?''

""போட்டதைச் சாப்பிட்டு பேசாம படுத்துத் தூங்குங்க...''

""வயசான காலத்தில  கோயில் குளம்னு போகாம ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க?''

""அடப்பாவிகளா உழைச்சு சாப்பிடாத சாப்பாடு உடம்புல ஒட்டாது... என்னை மூலையில போயி அடையச் சொல்றீங்களே...?''

பெருமாள்சாமி மனசு கெட்டுப் போய் புத்தி பேதலித்தமாதிரி ஆகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து போய்விட்டார். உள்ளூரில் எங்காவது வேலை கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டுப் பார்த்தார். அவர் வயதையும் உடல் இருக்கும் நிலையையும் பார்த்து யாரும் அவருக்கு வேலை தர முன்வரவில்லை.

ஒரு நாள் காய்ச்சல் வந்து ரொம்பவும் அவதிப்பட்டுப் போய்விட்டார். பெரியமகனிடம், ""காய்ச்சலடிக்குது... ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போடா..'' என்றார்.

""அப்பா... நீங்க சின்னவன் வீட்டுக்குப் போயிடுங்க... நாங்க ஒரு வாரம் டூர் போயிட்டு வர்றோம்...''

சின்ன மகன் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்கள்.

""எனக்கு ஆயிரம் வேலை இருக்குது... உசுரை வாங்காதீங்க... நீங்களே ஆஸ்பத்திரிக்குப் போயிக்குங்க... உங்க பெரிய பையன் அலுங்காம கொண்டுவந்து உங்களை இங்க தள்ளிவிட்டுட்டுப் போயிட்டான்''

அவரே தனியாக தட்டுத்தடுமாறி மருத்துவமனைக்குப் போய் வந்துவிட்டார்.

மருமகளிடம், ""மாத்திரை சாப்பிடணும்... கொஞ்சம் சுடுதண்ணி வச்சுக் கொடும்மா...'' என்று கேட்டார்.

""இப்பத்தான் அடுப்பை ஆப் செஞ்சேன்... சாயங்காலம்தான் சுடுதண்ணி வச்சுக் கொடுக்க முடியும்...''

""என்னம்மா இப்படிச் சொல்றே? ஒரு டம்ளர் சுடுதண்ணி வைக்க எத்தனை நேரம் ஆகும்?''

""என்ன... ரொம்ப ஓவரா அதிகாரம் பண்றீங்க? சொன்னதைக் கேட்டுட்டு நடக்கற மாதிரி இருந்து நடங்க... உங்க சவுகரியத்துக்கு எல்லாம் நாங்க நடக்க முடியாது...''

பெருமாள்சாமி இடிந்து போய்விட்டார்.

""ஊருல யாருக்கெல்லாமோ சாவு வருது... இதுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது. இதை அடிக்கடி இங்க தள்ளிட்டுப் போயிடறாங்க...''

மருமகள் முணுமுணுத்ததைக் கேட்டதும் அப்படியே செத்துப் போய்விடலாம் என்று தோன்றியது.

மகன் வந்ததும் மருமகள் புகார் சொன்னார்.

""விடுடி... கொஞ்ச நாள் பார்த்துட்டு ஏதாச்சும் முதியோர் இல்லத்துல சேர்த்துடலாம்...''

""அதைச் செய்யுங்க முதல்ல...''

பெருமாள்சாமி நொறுங்கி போய்விட்டார்.

"இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இனிமே இங்க இருக்கக் கூடாது...'

அன்று இரவு வீட்டை விட்டுக் கிளம்பியவர்தான்.

கையில் ஓர் ஐந்நூறு ரூபாய் மட்டுமே இருந்தது.

அங்கே இங்கே சுற்றி எப்படியோ பொள்ளாச்சி வந்து சேர்ந்துவிட்டார். கையில் இருக்கிற காசெல்லாம் தீர்ந்துவிட்டது. எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்கிற நப்பாசையில் கடை கடையாக ஏறி இறங்கினார். வேலை கிடைக்கவில்லை.

பசித்தது. தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பிச்சை எடுத்தாவது சாப்பிடு... என்றது வயிறு.

சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து தன் பிச்சைத் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து வந்து நின்றார்.

எப்படிப் பிச்சை கேட்பது? என்று தெரியவில்லை. யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்... உழைத்துச் சாப்பிட்ட உடம்பு... பிச்சை கேட்கிறது.

பெற்ற பிள்ளைகள் செய்த துரோகம் மனசுக்குள் வந்தது.

""ச்சே... பணத்துக்காக எப்படியெல்லாம் மாறிடறாங்க...''

பெருமாள்சாமி கூட்டத்தைப் பார்த்தார். ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். நாற்பது வயதுதான் இருக்கும். உடம்பு நன்றாகத்தான் இருந்தது. அவனே பிச்சை எடுக்கும்போது நாம் ஏன் எடுக்கக்கூடாது?

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டுக்கிட்டு இருக்கறாரே... அவர்கிட்ட இருந்து ஆரம்பிக்கலாமா? இல்லே பட்டுச்சேலை கட்டிட்டு நிக்கற இந்தப் பொம்பளைகிட்ட கேட்கலாமா? அந்த பெரியவருக்கும் ஏறக்குறைய எண்பது வயசிருக்கும்போல... ஆள் நல்லா திடமா இருக்காரு... அவர்கிட்ட கேட்டா கொடுப்பாரா? யாருகிட்ட கேட்கறதுன்னு தெரியலியே...

பெருமாள்சாமிக்கு வயிற்றை என்னவோ செய்தது. நிற்க முடியவில்லை. இருண்டு போய்விட்ட மாதிரி உணர்ந்தார். அப்படியே மயங்கிக் கீழே சரிந்து விழுந்தார்.

பெருமாள்சாமி கண் விழித்துப் பார்த்தபோது தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. யாரோ முகத்தில் தண்ணீரை அடித்திருக்கிறார்கள்.

""பசி மயக்கம் போலிருக்கு...'' யாரோ சொன்னார்கள்.

""இந்தாங்க பெரியவரே... ஏதாச்சும் வாங்கிச் சாப்பிடுங்க...'' ஒருத்தர் பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.

பெருமாள்சாமிக்கு உயிரே போய்விட்ட மாதிரி இருந்தது.

""அய்யா... நான் பிச்சை எடுக்கவரலீங்க... எனக்கு பிச்சை வேண்டாங்க... ஏதாச்சும் வேலை கொடுங்க...'' வயிற்றில் அடித்தபடி பெருமாள்சாமி கதறி அழுதார்.

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரத்துக்குத் தேர்வு பெற்ற கதைகள்

  1.   நிலத்தினும் பெரிதே... வாழ்வினும்

உயர்ந்தன்று - பொ.செந்திலரசு

  2.   இந்தியன் என்று சொல்லடா

- இரா.இராஜேந்திரன்

  3.   நிலம் - கலவை சண்முகம்

  4.   நான் விற்பனைக்கல்ல

- குன்றக்குடி சிங்கார வடிவேல்

  5.   சித்ராக்குட்டி - எஸ்.ஸ்ரீதுரை

  6.   இந்நாட்டு மன்னர் - போளூர் சி.ரகுபதி

  7.   வெண்மழை - ஸ்ரீதேவி

  8.   குருதியில் பூத்த மலர் - வெ.ராம்குமார்

  9.   தாயின் மனசு - பாவலர் மலரடியான்

10.   அப்பாவின் இன்னொரு மரணம்

- கண்ணகுமார விஸ்வரூபன்

11.   சால மிகுத்து - ரமேஷ்கல்யாண்

12.   கூட்டணிக் கட்சி - எஸ்.செல்வசுந்தரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com