

ஒரு கலவர பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் "அம்மா அம்மம்மா.' "ஆசைப்படுகிறேன்' படத்தை இயக்கிய பாலு மணிவண்ணன் நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்குகிறார். வளர்ப்பு பெற்றோருக்கும், குழந்தையைப் பெற்றவர்களுக்கும் நடக்கும் பாசப் போராட்டம்தான் திரைக்கதை. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, பரபரப்பாக பேசப்பட்ட ஒரு சம்பவத்தைத் தழுவி இப்படம் உருவாகிறது. ""எதாவது ஒரு சம்பவம் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். மறக்க முடியாத வடுக்களை சில சம்பவங்கள் உருவாக்கி விடும். அப்படி என் மனதில் ஆழப் பதிந்த ஒரு விஷயம்தான் இது. இதை சாதாரணமாக படித்து விட்டு கடந்து போக முடியவில்லை. இப்படியொரு சூழலில் பல பெற்றோர்கள் சிக்கி கொள்கிறார்கள். அதை அந்த வலியுடன் இதில் படமாக்கி இருக்கிறேன்'' என்றார் பாலு மணிவண்ணன்.
"வானவில்', "ராஜ்ஜியம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மனோஜ்குமார், தனது பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றியிருக்கிறார். புதிய பெயருடன் அவர் எழுதி, இயக்கும் படம் "உயிருக்கு உயிராக'. படிக்கும் காலத்தில் மாணவர்கள் காதல் வயப்பட்டு தடுமாறுகின்றனர். அந்த நேரத்தில் பெற்றோரின் கடமை என்ன? என்ற கருவுடன் இப்படம் உருவாகிறது. மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர், கம்யூட்டர் இன்ஜினியர் படிக்கும் இரண்டு பேர் சேர்ந்து எதிர்காலத்தில் விமான படை போரை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்குகிறார்கள். அது என்ன என்ற கேள்விக்கும் படம் பதில் சொல்லும் விதத்தில் நவீன தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சஞ்சீவ் - நந்தனா, சரண்குமார் - ப்ரீத்திதாஸ் ஜோடிகளுடன் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திருமண ஏற்பாடுகள் நடப்பதால் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் காஜல் அகர்வால். கோலிவுட்டில் ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்துள்ள காஜல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருப்பதால் தனது சம்பளத்தை இரண்டு கோடி வரை உயர்த்தி கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கமல், பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் பட வாய்ப்புகள் கை நழுவி போனது. இது தவிர பல பெரிய படங்களையும் அவர் ஏற்க மறுத்துள்ளதால், காஜலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. இது பற்றி காஜலின் தாயார் சுமன் தனது டிவிட்டரில் கூறும் போது, ""காஜல் தனது சம்பளத்தை மிக அதிகமாக உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் துளியும் உண்மையில்லை. இப்போது வரை நியாயமான சம்பளத்தைத்தான் பெற்று வருகிறார். கால்ஷீட் இல்லாமல் இருப்பதால்தான் புதிய படங்களை ஏற்கவில்லை. விரைவில் 2 ஹிந்தி படங்களில் நடிப்பார்'' என கூறியிருக்கிறார்.
"அறிந்தும் அறியாமலும்', "பட்டியல்' உள்ளிட்ட படங்களை தயாரித்த "புன்னைகை பூ' கீதா எஸ்.ஜி. பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் "நீயெல்லாம் நல்லா வருவடா.' விமல் கதாநாயகனாக நடிக்கிறார். விமலுக்கு இணையான கதாபாத்திரத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார். கதாநாயகியாக அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் அமிர்தா அறிமுகமாகிறார். உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகும் இப்படத்தை "தம்பி', "வாழ்த்துக்கள்' படங்களில் சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய நாகேந்திரன் எழுதி, இயக்கி அறிமுகமாகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு. பிரவீன் கே.எல்.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்கள். நா.முத்துக்குமார், சினேகன் பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, பாண்டிச்சேரியில் தொடங்குகிறது. ஊட்டி, கேரளம், மலேசியா, ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் தவிர ஹிந்தி, ஜார்ஜியன், ரஷ்யன், துருக்கி, உஸ்பெக் ஆகிய மொழிகளிலும் "இரண்டாம் உலகம்' படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. 2 வருடங்களுக்கு மேலாக ஷூட்டிங் நடந்து வந்தது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. ஆர்யா, அனுஷ்கா மற்றும் துணை நடிகர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் நடக்கிறது. விலங்குகளை கிராபிக்ஸில் காண்பிக்க வேண்டி இருப்பதால் அப்பணிகள் மட்டும் சீராக நடக்கிறது. இதனால் இந்த மாத இறுதியில் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே அனுஷ்கா, செல்வ ராகவனுக்கு தெலுங்கு திரையுலகில் மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை தெலுங்கில் "பிருந்தாவனமலோ நந்தகுமராடு' என்ற பெயரில் வெளியிட உள்ளனர். உலகம் தழுவிய ஒரு கதையாக இப்படம் வந்துள்ளதால் பல மொழிகளில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் ஜார்ஜியன் உள்ளிட்ட உலக மொழிகளில் டப்பிங் நடக்கிறது. தமிழ்ப் பதிப்பு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
ராணிப்பேட்டை வாலிபனுக்கும் 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காஞ்சிபுரம் பெண்ணுக்கும் காதல். தொலைபேசியின் வாயிலாக காதலை வளர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த காதல் நிறைவேறுமா என்ற சூழல் உருவாகும் போது திடீர் திருப்பம் நிகழ்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் "தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும்' படத்தின் கிளைமாக்ஸ். ராஜேஷ் கதாநாயகன். அனாமிகா கதாநாயகி. சுராஜின் உதவியாளர் பாண்டியன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். ""ஹீரோயின் அனாமிகா நடித்த காட்சிகள் காஞ்சிபுரத்தில் படமாக்கப்பட்டன. கோயில் நகரம் என்பதால் அதைப் பின்னணியில் கொண்டு வர, 15 வீட்டு மாடிகளில் கேமிராக்கள் வைத்து பல்வேறு கோணங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன'' என்கிறார் இயக்குநர் பாண்டியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.