
என் மனைவிக்கு வயது 65. கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சிறுநீர் போய் வந்தவுடன் தொடங்கும் எரிச்சல் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்ததில் MILD BLADDER WALL THICKENING WITH MILD CALYCEAL DILATATION IN BOTH KIDNEYS என்றும் SIGINIFICANT BLADDER NECK DESCENT DURING VALSALVA -? CYSTOCELE என்றும் வந்துள்ளது. இந்த உபாதை ஏற்படக் காரணம் என்ன?
எஸ்.அருணாசலம், திருமங்கலம், மதுரை மாவட்டம்.
இதயத்துக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் குடி கொண்டுள்ள பித்த தோஷத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, துர்நாற்றம், இளகும் தன்மை, நீர்த்தது போன்றவை தம் அளவிலிருந்து கூடும் தறுவாயில், அவை கல்லீரல் வழியே சிறுநீர்ப் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரில் கலந்து வெளியேறுகின்றன. அப்போது சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல் ஏற்பட்டு, சிறுநீர்க் குழாயில் அவை விட்டுச் செல்லும் உஷ்ணமானது, நெடுநேரம் நீடிக்கிறது. இந்த குணங்களை இனிப்புச் சுவை, குளிர்ச்சியான தன்மை, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்ணும் வெடிப்பும் ஆற்றக் கூடிய திறன் வாய்ந்த பழங்களையும், உணவு வகைகளையும், மருந்து வகைகளையும் அவர் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த வகையில் பழங்களில் அத்திப் பழம் அவர் சாப்பிட உகந்தது. அதிலுள்ள இனிப்புச்சுவை, குளிர்ச்சித் தன்மை, நெய்ப்புத் தன்மையால், பித்தத்தின் சகஜநிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், அங்கங்களில் எரிச்சல், தண்ணீர் வேட்கை, உடல் ஆயாசம், உதடு, நாக்கு, வாய், சிறுநீரகங்களில் ஏற்படும் எரிச்சல், புண், வெடிப்பு போன்றவை குணமடைகின்றன. இக் கனிகள் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்து, பித்தத்தின் குணங்களின் வரவை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்து குணம் பெறலாம்.
இதற்கு அடுத்ததாக உலர் திராட்சைப் பழம் சாப்பிட நல்லது. சுமார் 10 - 15 திராட்சையை சிறிது தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை, அது ஊறிய தண்ணீரிலேயே கசக்கிப் பிழிந்து வடிகட்டி, பசும் பாலுடன் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழித்த பின் நீடிக்கும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும். பேரீச்சம்பழம் சாப்பிடவும் உகந்ததே.
மண்பானையில் தண்ணீர் ஊற்றி, அதில் வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தசிராத்தூள், கரும்பு வேர், நெருஞ்சி விதை, பூசணி, பரங்கி, வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய் விதை போன்றவற்றைச் சிறிய அளவில் போட்டு, பானையின் வாயைக் மெல்லிய துணியால் மூடிக் கட்டி, இரவு முழுவதும் மொட்டை மாடியில் சந்திர ஒளி படும்படி வைத்து, மறுநாள் காலை, தண்ணீரை மட்டும் சுமார் 300 -500 மி.லி. உணவுக்கு முன் குடித்து வந்தால், உடல் உஷ்ணம் தணிவதுடன், சிறுநீர் கழித்த பின் ஏற்படும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும். திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணத்தை 10 கிராம் எடுத்து 500 மி.லி.தண்ணீரில் கொதிக்கவிட்டு, 250 மி.லி. ஆனதும், குளிர்ந்த பிறகு வடிகட்டி, சிறுநீர் கழித்த பிறகு வெறும் தண்ணீரால் முதலில் சிறுநீர் வரும் துவாரத்தைக் கழுவிய பிறகு, திரிபலைத் தண்ணீரால் கழுவி வந்தால், விரைவில் அவருடைய உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது.
உணவில் பித்தத்தின் குணங்களை சீற்றமடையச் செய்யும் புளி, உப்பு, காரம் பட்டை, சோம்பு, கரம் மசாலா, எண்ணெய்ப் பொருட்கள், புலால் உணவு வகைகளாகிய மீன், சிக்கன், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. வாழைத் தண்டு, வாழைப்பூ, சிறு கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, போன்றவை சாப்பிட மிகவும் உகந்தது.
சதவெரீகுலம் எனும் லேகியம், வஸ்த்யாமயாந்தகம் எனும் நெய் மருந்து, பிருகத்யாதி, புனர்நவாதி எனும் கஷாயம், சந்தானஸவம், உசீராஸவம் எனும் ஆஸவ மருந்துகள், பிரவாள பஸ்மம், அப்ரக பஸ்மம் போன்ற பஸ்ம மருந்துகள், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப் படி சாப்பிடச் சிறந்தவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.