திரைக்கதிர்

தடபுடல் விழா, வி.ஐ.பி.களின் பாராட்டு மழை என எதுவும் இல்லாமல் அஜித் படப் பாடல்கள் வெளியாகியுள்ளன. ஒரு படம் வெளியாவதற்கு முன்பு புரமோஷன் என்ற
திரைக்கதிர்
Updated on
3 min read

எண்பது - 90- களில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார் ஆனந்த்பாபு. ஆனால் திடீரென்று காணாமல் போனார். மன நிலை பாதித்த நிலையில் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. அதன் பிறகு 2 வருடங்களுக்கு முன் சூர்யா நடித்த "ஆதவன்' படத்தில் ரீ என்ட்ரி ஆனார். ஆனாலும் தொடர் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். 25 வருடங்களுக்கு முன் ஆனந்த்பாபு நடித்த "பாடும் வானம் பாடி' என்ற படம் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தை இயக்கிய எம்.ஜெயக்குமார் தற்போது தான் இயக்கி வரும் "ஜமாய்' என்ற படத்தில் ஆனந்த்பாபுவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ""சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் நடிக்கக் கேட்டதும், மறுக்காமல் ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார் ஆனந்த்பாபு. சினிமாவை விட்டு இத்தனை வருடம் ஒதுங்கி இருந்தாலும், அவருக்கென இப்போதும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படத்தில் நவீன், உதய் நாயகர்களாக நடிக்கின்றனர். அவர்களுக்கு ஜோடியாக வைஜெயந்தி, நிமிஷா நடிக்கிறார்கள். இசையைக் கருவாக கொண்ட கதை என்பதால், ஆனந்த்பாபுவுக்கு இது ஏற்ற படம்'' என்றார் இயக்குநர்.

தடபுடல் விழா, வி.ஐ.பி.களின் பாராட்டு மழை என எதுவும் இல்லாமல் அஜித் படப் பாடல்கள் வெளியாகியுள்ளன. ஒரு படம் வெளியாவதற்கு முன்பு புரமோஷன் என்ற பெயரில் பல விதமான விழாக்களை நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாக நடத்துவதோடு, "சிங்கிள் டிராக்' என்ற பெயரில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை தனித்தனியாக நடத்துவதும் பேஷனாகி வருகிறது.

ஆனால் அஜித் நடித்துள்ள "ஆரம்பம்' படத்தின் ஆடியோ எந்த தடபுடல் ஏற்பாடுகளும் இல்லாமல் அமைதியாக நடந்துள்ளது. கடந்த வாரத்தின் இரவு நேரம் ஒன்றில் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. ஆடியோவில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து விஷ்ணுவர்தன் தன் டிவிட்டரில்...""அஜித்தின் அறிவுறுத்தலின் படியே பாடல் வெளியிட்டு விழா எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார். "அசல்' படத்துக்குப் பின் அஜித் பட பாடல் வெளியீடு எளிமையான முறையில் நடந்து வருகிறது.

விஸ்வரூபம்' முதல் பாகம் தந்த வெற்றி, 2-ம் பாகத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது. இதனிடையே "மருதநாயகம்' படம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார் கமல். 18-ம் நூற்றாண்டின் போராளி மொஹமத் யூசுப் கான் வரலாற்றை மையமாக வைத்து இதன் திரைக்கதையை அமைத்திருந்த கமல், இப்படத்தை தானே தயாரித்து இயக்கத் திட்டமிட்டார். பெரும் எதிர்பார்ப்புடன் 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி சென்னைக்கு வந்து கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். ஆனால், தொடங்கிய வேகத்திலேயே படம் திடீரென்று நின்று போனது. பட்ஜெட்தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. அந்த காலத்திலேயே ரூ.50 கோடிக்கு மேல் செலவாகும் என கூறப்பட்டது. இதற்கு பைனான்ஸ் உதவி செய்வதாக கூறிய வெளிநாட்டினர் சிலர், திடீரென்று பின் வாங்கியதால் படம் தடைப்பட்டது. விஸ்வரூபம் படத்தின் வெற்றி அந்த பைனான்சியர்களை யோசிக்க வைத்துள்ளது. அவர்கள் மருதநாயகம் படத்தை தொடங்கும் படியும் அதற்கு உதவத் தயாரக இருப்பதாகவும் கமலுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளனர். இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத கமல், படப்பிடிப்பை தொடங்கும் திட்டத்தில் இயங்கி வருகிறார்.

திருட்டு கிராமத்தை தழுவிய கதையாக உருவெடுக்கிறது "கன்னக்கோல்'. "நாடோடிகள்' பரணி நாயகனாக நடிக்கிறார். கன்னடத்தில் பிரபலமான காருண்யா இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார். புதுமுக இயக்குநர் குமரேசன் எழுதி, இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர், "" திருச்சி பகுதியில் ஒரு கிராமமே திருட்டுத் தொழிலில் தற்போதும் ஈடுபட்டு வருவதை கவனித்திருக்கிறேன். பணத்தை செலவழிப்பது எளிது. அதைச் சம்பாதிப்பது கடினம். இதுதான் இப்போதைய நடைமுறையாக உள்ளது. இதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மயில்சாமி, கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திருச்சியில் நடக்கும் கதையாக இருந்தாலும், புதுக்கோட்டை பகுதியில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 1990-களில் நடப்பது போன்று கதை சித்தரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 80-களுக்கு முன்னர்தான் இதுவரை ப்ரீயட் படங்கள் வந்துள்ளது. ஆனால் 90-களில் இருந்த ஆடை வடிவமைப்பைக் கொண்டு வருவதில் சிரமங்கள் இருந்தன'' என்றார் இயக்குநர்.

வட சென்னை கதைக்கு வருகிறார் கார்த்திக். எதார்த்த கதையின் மூலம் அறிமுகம் கிடைத்தாலும், கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் தந்து வந்தார் கார்த்திக். அதிலும் சில முயற்சிகள் தோல்வி கண்டதால், மீண்டும் கனமான கதைகளுக்கு வருகிறார். "அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் "காளி' படத்துக்காக வடசென்னை இளைஞர் வேடம் ஏற்கிறார். ""தெருவுக்கு தெரு இசைக்குழு, வீதிக்கு வீதி விளையாட்டு குழு, நான்கு தெருவுக்குள் ஒரு நடனக் குழுவாவது இருக்கும். விளையாட்டு, இசைக் கச்சேரி, நடனம், வீரக்கலை என எதுவாக இருந்தாலும் முழு மூச்சாக இருந்து முழு மூச்சாக இருந்து மூர்க்கமாக கற்றுக் கொள்ளும் வட சென்னை இளைஞர்களின் ஆர்வம் நம்மை வியப்பூட்டும். அப்படி ஒரு வட சென்னை வாலிபன்தான் "காளி'. இதுவரை சினிமா பதிவு செய்யப்படாத வித்தியாசமான கதையாக திரைக்கதை உருவாகியிருக்கிறது. நாசர், பாலாசிங் ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது'' என்றார் ரஞ்சித்.

"நீதானே பொன் வசந்தம்' படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் "யோவான் அத்தியாயம்' படத்தை தொடங்குவதாக இருந்தார் கௌதம்மேனன். விஜய்க்கு கதை பிடிக்காததால் அந்த படம் டிராப் ஆனது. இதையடுத்து சூர்யா நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தைத் துவங்க இருந்தார். இதில் நடிக்க சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களைத் தேர்வு செய்து விட்டார். படத்தின் திரைக்கதை சூர்யாவுக்கு திருப்தி தரவில்லை. இதனால் இப்படமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஹீரோக்களைச் சந்தித்து வேறு சில கதைகளுக்கான ஒன் லைன் சொல்லியுள்ளார். இந்த இரண்டு கதைகளின் திரைக்கதையை அமைப்பது, எந்த படத்தை முதலில் தொடங்குவது, வேறு எந்த ஹீரோக்களிடம் கதை சொல்லலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறார் கௌதம்மேனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com