வீடுன்னா இப்படித்தான் இருக்கணும்!
By -ந.ஜீவா | Published On : 21st December 2013 03:11 PM | Last Updated : 21st December 2013 03:11 PM | அ+அ அ- |

"நாம் காடுகளை அழித்துவிட்டோம். விளைநிலங்களில் வீடுகளைக் கட்டி வருகிறோம். வாகனப் புகைகளையும், தொழிற்சாலை நச்சுப் புகைகளையும் காற்றில் கலந்து அதை நஞ்சாக்கிவிட்டோம். பிளாஸ்டிக் கழிவுகளையும், ரசாயனக் கழிவுகளையும் மண்ணில் கலந்து நிலத்தடி நீரைக் கெடுத்துவிட்டோம்'- இப்படிப் புலம்புவதில் அர்த்தமில்லை என்கிறார் இந்திர குமார்.
""இந்த பூமியைக் கெடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று ஒவ்வொருவரும் யோசித்து செயல்பட வேண்டும். சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் நமது வீட்டை நாம் அமைத்திருக்கிறோமா? ஏஸி, குளிர்சாதனப் பெட்டி என்று காற்றை மாசாக்குகிறோம். குளிக்க, துவைக்க நாம் பயன்படுத்தும் சோப்புகளின் ரசாயனக் கலவைகளின் மூலம் நிலத்தை மாசாக்குகிறோம். பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளால் மண்ணைக் கெடுக்கிறோம். தேவையில்லாமல் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தி, சுற்றுச் சூழலைக் கெடுக்கிறோம். இவற்றையெல்லாம் ஒவ்வொரு தனி மனிதனும் தவிர்க்க வேண்டும். அதற்காக நான் எனது வீட்டையே ஒரு மாதிரி வீடாக அமைத்திருக்கிறேன்'' என்கிறார் அவர்.
அதையும்தான் பார்த்துவிடுவோமே என்று சென்னை பம்மலில் உள்ள அவருடைய வீட்டுக்குப் போனோம்.
நகர்ப்புறத்தின் அனல் கக்கும் வீடுகளின் நடுவே அவருடைய வீடு ரொம்ப ரொம்ப பசுமையாக, ரொம்ப ரொம்ப குளிர்ச்சியாக நம்மை மயக்கியது.
""ஏஸி வீட்டில் இருப்பதைப் போல இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இங்கே ஏஸி எல்லாம் கிடையாது. வீட்டைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். வீட்டினுள் வெளிக்காற்று வந்து போகும்படி எல்லாப் பக்கங்களிலும் ஜன்னல்கள் வைத்திருக்கிறேன். பலர் ஒரு சுவரில் ஜன்னலை வைத்துவிட்டு, அடுத்த சுவரில் வைக்காமல் விட்டுவிடுவார்கள். அதனால் வெளிக்காற்று வீட்டுக்குள் வராது. எனவே எல்லாப் பக்கங்களிலும் ஜன்னல்களை வைக்க வேண்டும். வீட்டுக்குள் வெப்பமடையும் காற்று மேல் நோக்கிச் செல்லும். மேல் நோக்கிச் செல்லும் அந்தக் காற்று வெளியே செல்ல வீட்டின் கூரைப் பகுதிக்குக் கீழே காற்று செல்ல இடைவெளி விட்டிருக்கிறேன். இப்படிச் செய்தால் வீடு காற்றோட்டமாக இருக்கும். ஆனால் ஏஸி வைத்திருப்பதைப் போல குளிர்ச்சியாக இருக்காது. அதற்கு வீட்டின் மேல் தளத்தில் ஓர் இடத்தில் 5ஷ்5 அடி அல்லது அந்த அளவுக்கும் குறைவாக ஒரு திறப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மேல் கூம்பு வடிவில் பிரமிடு போல அமைக்க வேண்டும். வீட்டில் உள்ள காற்று வெளியே செல்லும் விதமாக இடைவெளிவிட்டு பிரமிடை அமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் வீடு முழுமையும் வெப்பமாகும் காற்று அதன் வழியாக வெளியேறிவிடும். குளிர்ச்சியான காற்று வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும்.
அதைத் தவிர, மாடி முழுக்க பச்சைத் தொப்பி போட்டதுபோல செடி, கொடிகளை வளர்த்தால், வெப்பம் வீட்டைத் தாக்கவே தாக்காது. மின்சாரச் செலவு இல்லாமல், ஏஸி வாங்காமல், வீட்டை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். ஏஸியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் கேட்டைத் தடுக்கவும் முடியும்.
அடுத்து வீட்டில் பெய்யும் மழை நீர் வீட்டை வெளியே போகாத அளவுக்கு மழை நீர் சேமிப்புத் தொட்டிகள் அமைத்திருக்கிறேன். அதைவிட முக்கியமாக வீட்டில் பயன்படுத்தும் நீரும் - கழிவுநீர் உட்பட - முழுமையாகப் பயன்படுத்துகிறேன். கழிவறை நீர்த் தொட்டிக்குள் நுண்ணுயிர்களைப் போட்டுவிட்டால், அந்த நீர் சுத்தமாகிவிடும். நாற்றமடிக்காது. அதை வீட்டில் உள்ள செடிகளுக்குப் பாய்ச்சுகிறேன். சமையல் அறையில் பாத்திரம் கழுவும் நீரை நேரடியாகச் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். துவைக்கும், குளிக்கும் நீரில் சோப்பு, டிடர்ஜென்ட், ஷாம்பு ஆகியவற்றின் ரசாயனக் கழிவுகள் கலந்திருக்கும். அதைச் சுத்தப்படுத்த அந்த நீர் வரும் பாதையில் கல்வாழை, நீர் சேம்பு போன்ற செடிகளை வளர்த்தால், அந்த ரசாயனக் கழிவுகள் நீங்கிவிடும். இவ்வாறு வீட்டில் பயன்படுத்தும் நீரை வீணாக்காமல் பயன்படுத்தினால் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்க முடியும்.
மக்கும் தன்மையுள்ள சமையலறைக் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து, மாடியில் நாம் வளர்க்கும் செடிகளுக்கு உணவாகப் போடலாம். எனது வீட்டு மாடியில் தக்காளி, புடலை, புதினா, கொத்துமல்லி, காய்கறிகள் என எதை வேண்டுமானாலும் வளர்க்கலாம். மாடியின் கைப்பிடிச் சுவரிலேயே தொட்டி அமைத்துச் செடிகளை வளர்க்கலாம்.
நாம் பயன்படுத்தும் மின்சார பல்புகள் அனைத்தையும் எல்இடி பல்புகளாக மாற்றிவிட்டால், இப்போது நாம் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட ஐந்து மடங்கு குறைவான மின்சாரமே செலவாகும். எல்இடி பல்புகளின் விலை அதிகம் என்றாலும், குறைந்த மின்கட்டணம் செலுத்துவதால் நஷ்டம் ஏதுமில்லை. மேலும் ஒவ்வொருவரும் குறைந்த அளவு மின்சாரத்தைச் செலவு செய்தால், மின்சாரம் தயாரிக்க இன்று நாம் பயன்படுத்தும் நிலக்கரி உட்பட எவ்வளவு எரிபொருட்களை மிச்சப்படுத்த முடியும்? சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும்?
குடிநீரைச் சுத்தப்படுத்த பல முறைகள் உள்ளன. அதிக செலவில்லாததும், தூய்மையானதுமான முறை ஒன்று உள்ளது. 10 லிட்டர் தண்ணீரில் தோற்றான் கொட்டையை கால் கொட்டை அளவுக்கு உரசிப் போட்டு, அந்தத் தண்ணீரை செப்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் போதும், நல்ல குடிநீர் கிடைத்துவிடும்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்தும் காற்று, நீர், மண் வளம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொண்டாலே உலகத்தைச் சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்து காப்பாற்றிவிட முடியும்'' என்கிறார் இந்திரகுமார்.
இந்திரகுமார் ஏதோ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.
""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ஆனால் சிறுவயதில் ஓரிரு ஆண்டுகள் செங்குன்றத்துக்குப் பக்கத்தில் உள்ள எனது பாட்டியின் ஊரான கரிக்கலவாக்கத்தில் இருந்தேன். அப்போதுதான் எனக்கு இயற்கையின் மீது ஈடுபாடு ஏற்பட்டது'' என்கிறார்.