

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அரிய மூலிகை ஒன்று இந்தியாவில் இருப்பதாகப் பயணிகள் மூலம் கேள்விப்பட்டேன். போய்க் கொண்டு வாருங்கள்'' என்று பெர்ஷியா நாட்டை ஆண்ட மன்னர் கோஸ்ரா நவோஷர்வான் ( கி.பி.531-579) தன்னுடைய அரண்மனை வைத்தியரிடம் கூறினாராம். இந்தியா வந்த வைத்தியர் பர்úஸô, நாடு முழுவதும் அந்த மூலிகையைத் தேடி அலைந்தார். அவரது தேடுதலைக் கண்ட முதியவர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி, ""அப்படியொரு மூலிகை இருப்பதாக பஞ்சதந்திரக் கதைத் தொகுப்பில் கூறபட்டிருக்கிறதே தவிர, அது உண்மையல்ல'' என்று கூறினார். மன்னரிடம் சென்று இதைக் கூறினால் அவர் நம்பமாட்டார் என்று கருதிய வைத்தியர் சிரமபட்டுப் பஞ்சதந்திரம் கதைப் பிரதியொன்றைத் தேடிபிடித்து அதை தங்களது மொழியில் மொழி பெயர்த்து மன்னரிடம் கொடுத்தார். இது பெர்ஷிய மொழியில் "காடக்கா மற்றும் தமனக்கா நரிகள்' என்ற பெயரில் வெளியாயிற்று.
பஞ்சதந்திரம் என்பது நீதியை போதிக்கும் கதைகளின் தொகுப்பு என்றே உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. ஐந்து தொகுப்புகளைக் கொண்டது என்பதைக் குறிக்கவே "பஞ்சதந்திரம்' என்று பெயரிடப்பட்டதாகக் கூறுவார்கள். ஒவ்வொருத் தொகுப்பிலும் பிரதானக் கதையைச் சுற்றி பல கிளைக் கதைகள் கூறப்பட்டிருக்கும். பஞ்சதந்திரம் மற்றும் ஹிதோபதேச கதைகள் நீதிபோதனைகளைக் கொண்டதாகும்.
உண்மையில் பஞ்சதந்திரம் இருதலைமுறைகளைச் சேர்ந்தென்றும் கூறுவார்கள். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணுசர்மா, அதே காலகட்டத்தில் வாழ்ந்த வசுபாகா ஆகியோரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் பின்னர் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு உலகம் முழுவதும் பரவியது.
கர்நாடகாவில் கி.பி.1023 ஆண்டில் வசுபாகா எழுதிய பஞ்சதந்திராவின் அடிப்படையில் துர்க சிம்ஹா என்பவர் கன்னடத்தில் மொழி பெயர்த்தார். பஞ்சதந்திராவின் மற்றொரு பகுதியான "ஹிதோபதேசம்' வங்காளத்தைச் சேர்ந்த தாவலசந்திரா துணையுடன் நாராயணா என்பவர் எழுதியதாகும். இதன் மூலப்பிரதிகள் கி.பி. 1373 ஆண்டில் கிடைத்தன. ஆனால் எழுதியவர் பற்றியக் குறிப்புகளைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.
பண்டையக் காலங்களில் அறுவடைக் காலத்தில் பணிச் சுமை தெரியாமலிருக்க அனைவரும் கூடியிருக்கும் போது கதைகள் சொல்வது வழக்கமாகும். இதுபோன்ற சின்னஞ்சிறு கதைகள் இந்திய இலக்கியத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தன. ராமனைப் பற்றியும், பஞ்ச பாண்டவர்களைப் பற்றியும் கூறப்பட்ட ராமாயணமும், மகாபாரதமும் அதில் இடம் பெற்ற பல்வேறு கதைகளும் பிரபலமாக இருந்தன.
கிறிஸ்தவ மதம் தோன்றிய காலத்தில் விஷ்ணுசர்மா எழுதிய பஞ்சதந்திரம் பெர்ஷியா, அரேபியா, சிரியா, ஐரோப்பா மற்றும் கிழக்கு நாடுகளில் அவரவர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. கி.பி.570ஆம் ஆண்டில் " கலிவாக் மற்றும் டிம்நாக்' என்ற தலைப்பில் சிரியா மொழியிலும், 8ஆம் நூற்றாண்டில் அப்துல்லா இபின் அலமகபா என்பவரால் அரேபிய மொழியிலும், 10 ஆம் நூற்றாண்டில் குடாலி என்பவரால் பெர்ஷிய மொழியில் கவிதை வடிவத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. 11 ஆம் நூற்றாண்டில் சைமன்சேத் என்பவர் கிரேக்க மொழியிலும், 13 ஆம் நூற்றாண்டில் பெயர் தெரியாத கவிஞரொருவரால் ஹீப்ரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1270ஆம் ஆண்டிலிருந்து 1783ஆம் ஆண்டிற்குள் ஸ்பானிஷ், லத்தீன், செக்கோஸ்லேவியா, இத்தாலி, ஆங்கிலம், டச்சு, ஜெர்மனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தகவலின்படி பஞ்சதந்திரா பல்வேறு வடிவங்களில் உலா வந்ததாகத் தெரிகிறது. விஷ்ணுசர்மா, வசுபாகா, துர்கசிம்ஹா, சமஸ்கிருதம், தமிழ் பஞ்சதந்திரம் என வழக்கத்தில் இருந்த பஞ்சதந்திரத்தில் மித்ரு பேதம் (நண்பர்களை இழத்தல்) மித்ர சம்ப்ரப்தி (நண்பர்களை வெற்றி கொள்ளுதல்) காகோலுகியா ( காக்கைகளும் ஆந்தைகளும்) லாப்ரநாசா (லாபத்தை இழத்தல்) அபரிக்ஷிதகரகா (துன்பங்களைத் தரக்கூடியவை) என்ற ஐந்து தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கிளைக்கதைகள் நீதியைப் போதிப்பதோடு சுவாரசியமாகவும் அமைந்திருந்தன. இந்த பஞ்சதந்திரக் கதைகளை உருவாக்கியவர் விஷ்ணு சர்மா என்றாலும் இதை உருவாக்குவதற்குக் காரணமானவர் தென்னிந்திய நாடுகளில் ஒன்றான மகிலாரோப்யா என்ற நாட்டை ஆண்ட அமரசக்தி என்ற மன்னராவார். இவருக்கு பஹுசக்தி, உக்ரசக்தி, அனந்த சக்தி என்ற பெயர்களில் மூன்று மகன்கள் இருந்தனர்.
இவர்கள் மூவரும் புத்திசாலித்தனமுமின்றி, கல்வியில் நாட்டமும் இன்றி இருப்பதைக் கண்டு வேதனையடைந்த மன்னர், அவர்களைத் திறமைசாலிகளாக மாற்ற வழி சொல்லும்படி அரசவை அறிஞர்களிடம் யோசனை கேட்டார். இலக்கியம் படிக்க வேண்டுமென்றால் பன்னிரண்டு ஆண்டுகளாகும். தர்ம சாஸ்திரம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், வாத்சாயனரின் காம சூத்திராவைப் படிக்க வேண்டுமென்றால் நீண்ட ஆண்டுகளாகும் என்று அறிஞரொருவர் கூறினார். மனிதனின் ஆயுள் குறைந்த காலமென்பதால் அதற்குள் கற்றுக் கொடுத்து புத்திசாலியாக மாற்ற அனைத்து விஷயங்களையும் கற்றுணர்ந்த விஷ்ணுசர்மா என்கிற கல்விமான் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நம்முடைய இளவரசர்களை அனுப்பினால் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் என்று யோசனை கூறினார். உடனே மன்னர், விஷ்ணுசர்மாவை வரவழைத்து தன் மகன்களுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்துத் திறமைசாலிகளாக மாற்ற அவருக்கு நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாக அளிப்பதாக கூறினார்.
""எண்பது வயதான விஷ்ணுசர்மா,என்னிடம் உள்ள கல்வி ஞானத்தை நான் விற்க விரும்பவில்லை. இருப்பினும் அவர்களுக்கு ஆறுமாதக் காலத்திற்குள் புத்திசாலித் தனமாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத் தருகிறேன்''. மன்னரும் அதை ஏற்றுக் கொண்டு தன் மகன்களை அவரிடம் அனுப்பிவைத்தார்.
தன்னிடம் வந்த இளவரசர்களுக்காகவே விஷ்ணுசர்மா, மித்ரபேதம், மித்ரசம்ப்ராப்தி, காகோலுகியா, லாபப்ரநாசா, அபரிக்ஷிதகரகா ஆகிய ஐந்து தொகுதிகளை உருவாக்கினார். அவர்களிடம் இதை மனப்பாடம் செய்யக் கூறினார். ஆறு மாதத்திற்குள் அவர்கள் அதைக் கற்றுணர்ந்து புத்திசாலித்தனமாக வாழத் தொடங்கினர். இந்த ஆறு மாத காலத்தில் விஷ்ணுசர்மா உருவாக்கிய பஞ்சதந்திரம் உலகம் முழுவதும் இளைஞர்களிடையே பரவி திறமைசாலிகளாக வாழ வழிவகுத்துக் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
இந்த பஞ்சதந்திரக் கதைகளில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் 7ஆம் நூற்றண்டு முதல் 12ஆம் நூற்றாண்டுவரை கர்நாடகாவில் கட்டப்பட்ட கோயில்களின் சுற்றுப் பிரகாரங்களில் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றன. பாதாமியை ஆண்ட சாளுக்கியர்கள், ராஷ்டர கூடத்தை ஆண்ட மான்யகேதா, தலைகாடை ஆண்ட கங்காவம்சத்தினர், ஹொய்சலாவை ஆண்ட தொர சமுத்ரா ஆகிய மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களில் பஞ்சதந்திரக் கதைகளை சிற்ப வடிவில் இடம் பெற செய்தனர்.
இன்றும் கர்நாடகாவில் பலபகுதிகளில் உள்ள பழங்கால கோயில்களில் பஞ்சதந்திரக் கதைகளை விளக்கும் சிற்பங்களைக் காணலாம். ஆந்திர மாநிலத்திலும் மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் சாளுக்கியர்கள், ராஷ்ட்ரகூடர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்களிலும் பஞ்சதந்திரக் கதைகளை சிற்ப வடிவில் காணலாம்.
பஞ்சதந்திரக் கதைகள் என்பது நூறுமுதல் 125 கதைகள் அடங்கிய தொகுப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் 50 கதைகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறைக் கூறுகிறது.
ஜாவா, இந்தோனேஷியா நாடுகளின் கோயில்களில் கூட பஞ்சதந்திரக் கதைகள் சிற்பவடிவில் வடிக்கப்பட்டுள்ளன.
13-14 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பஞ்சதந்திரக் கதைகள் இந்தியாவில் கிடைக்காமற் போனதற்கு காரணம் தெரியவில்லை. மத்திய தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் அடிப்படையில் நெதர்வாண்டில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஏசியன் ஸ்டடிஸ் ஆய்வுகள் நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.