இளங்கோ அடிகள் பெயரிலும் ஒரு விருது வேண்டும்!

"மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ' (கிழக்கே போகும் ரயில்), "தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து' (மீனவ நண்பன்), "காஞ்சிப் பட்டுடுத்தி,

"மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ' (கிழக்கே போகும் ரயில்), "தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து' (மீனவ நண்பன்), "காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்தூரி பொட்டு வைத்து' (வயசுப் பொண்ணு) - இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். பாடலாசிரியராக அவர் பெற்ற அனுபவங்களை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்:

உங்கள் இளமைக்காலத்தின் இனிய அனுபவங்கள் எப்படி அமைந்தன?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது "கடம்பங்குடி'. அதுதான் நான் பிறந்த ஊர். விவசாயம் எங்கள் குலத் தொழில். தொட்டில் பருவத்தில் அம்மா பாடிய தித்திப்புப் பாடல்களைக் கேட்டுக் கேட்டுத்தான் தமிழைச் சுவைக்கத் தொடங்கினேன்.

எங்கள் ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் இறுதிவகுப்பு வரை படித்தேன். அப்போது புலவர் தட்சிணாமூர்த்தி, வரதராச கோனார், வீர இளங்கோ ஆகியோர் எனக்குத் தமிழாசிரியர்களாக இருந்தார்கள். அவர்களிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டேன். அப்பொழுதே பல கவிதைகள் எழுதி வைத்திருந்தேன். அந்தநேரம் பள்ளி ஆண்டு விழாவுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் வந்தார். ஆசிரியர்கள் துணையுடன், நான் எழுதிய கவிதைகளை அவரிடம் காட்டியபோது அவர் அன்புடன் வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார்.

"வெண்ணிலா' என்ற பெயரில் முதல் கவிதைத் தொகுதியை 1961-இல் வெளியிட்டேன். பாவேந்தர் வாழ்த்துரையுடன் வெளிவந்த முதல் கவிதைத் தொகுதி அதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

பத்திரிகைகளில் பணியாற்றியபோது நடைபெற்ற சுவையான நிகழ்வுகள்...?
1966 முதல் 72 வரை "முரசொலி'யில் துணை ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன். அந்த நேரம் கலைஞர் தலைமையில் "அண்ணா' கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை பாடினேன். புகழ் பெற்றேன். பிறகு வேலூர் நாராயணன் நடத்திய "அலை ஓசை' பத்திரிகையில் சேர்ந்தேன். அந்தநேரம் "பொண்ணுக்குத் தங்க மனசு' படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

""தஞ்சாவூரு சீமையிலே - கண்ணு

தாவி வந்தேன் பொன்னியம்மா''

என்ற பாடலை எழுதினேன். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே. வெங்கடேஷ் என்றாலும் நான் எழுதிய பாடலுக்கு இசையமைத்தவர் வெங்கடேஷின் உதவியாளராக இருந்த இளையராஜா. அந்த வகையில் முதன்முதலாக இளையராஜா இசையில் பாடல் எழுதிய பெருமை எனக்கு உண்டு. அது மட்டுமல்ல, பத்திரிகையாளர் ஒருவர் திரைப்படத்தில் பாடல் எழுதி வெற்றி பெறுகிறார் என்பதற்காக எனக்கு ஒரு பாராட்டு விழாவையே நடத்தினார் அலைஓசை அதிபர் வேலூர் நாராயணன். அதற்காக இப்போதும் அவரை நன்றியோடு நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆரின் நெஞ்சில் இடம்பிடித்த கவிஞர்களில் நீங்களும் குறிப்பிடத் தகுந்தவர். அவரைப் பற்றிய மறக்க முடியாத சம்பவம்?
1974-ஆம் ஆண்டில் ஒருநாள் எம்.ஜி.ஆரைச் சந்திக்க, பாண்டிபஜாரில் இருந்த அவர் அலுவலகத்துக்குச் சென்றேன். நான் வந்திருப்பது அறிந்து தன் உதவியாளரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார். ""பணம் வேண்டாம் தலைவரே... அதற்குப் பதில் வேலை கொடுங்கள். அது போதும்'' என்றேன். பிறகு முதன்முதலாக "உழைக்கும் கரங்கள்' படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தந்தார்.

""கந்தனுக்கு மாலையிட்டாள்

கானகத்து வள்ளிமயில்

கல்யாணக் கோலத்திலே

கவிதை சொன்னாள் காதல் குயில்''

என்ற அந்த முதல் பாடல் வாணிஜெயராம் குரலில் பதிவானது.

"ஊருக்கு உழைப்பவன்' படத்தில், "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்... ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்' என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைப்போன்று  "இன்றுபோல் என்றும் வாழ்க' படத்தில் ""அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை, நல்ல கொள்கைக்கு நான் அடிமை, தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை'' என்ற பாடலை எழுதினேன். அதுதவிர, ""இது நாட்டைக் காக்கும் கை - உன் வீட்டைக் காக்கும் கை'' என்ற பாடலையும் எழுதினேன். 1977-இல் நடந்த பொதுத் தேர்தலில் இவற்றைப் பிரசாரப் பாடல்களாக எம்.ஜி.ஆர். பயன்படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை இந்தப் பாடல்களைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது. "மீனவ நண்பன்' படத்தில் "தங்கத்தில் முகமெடுத்து' பாடலும் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை' என்ற பாடலும் மறக்க முடியாதவை.

எம்.ஜி.ஆர். 1981-இல் எனக்குப் "பாரதிதாசன் விருது' வழங்கியபோது தமது உரையில் இந்த நிகழ்ச்சியை எல்லாம் சுட்டிக் காட்டினார். அப்போது "முத்துலிங்கம் ஒரு தன்மானக் கவிஞர்' என்று பாராட்டினார். என்றைக்கும் அவையெல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டையும் எப்படிப் பிரித்துப் பார்க்கிறீர்கள்?
தமிழ் என்ற செழுமையான மரத்தின் வேராக இருப்பது மரபுக்கவிதை. அந்த மரத்தின் மலராக இருப்பது புதுக்கவிதை. மரத்தையும் மலரையும் தாங்குவது வேர்தானே. அதனால் மரபுக்கவிதையை வேராகப் பார்க்கிறேன். புதுக்கவிதையில் கருத்து நயம் இருக்கலாம். ஆனால், யாப்பு அதில் இல்லாததால், மற்றவர்களுக்கு வரி மாறாமல் சொல்லுவது என்பது கடினம். மரபுக் கவிதையோ எதுகை மோனைகளோடு குலுங்குவதால் எப்போது வேண்டுமானாலும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைப் புரட்டினால், 18-ஆம் நூற்றாண்டு வரை மரபுக் கவிதைகள்தானே கோலோச்சி நின்றது. உரைநடை வளர்ந்த பிறகுதான் கவிதையின் போக்கிலும் மாற்றம் வந்தது.

விருதுகள் பற்றி...?
"கலைமாமணி' முதல் "கலை வித்தகர்' வரை பல விருதுகளையும் பெற்றுள்ளேன். ஆனால், எனக்குத் தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு. தமிழக அரசு பாரதியார், பாரதிதாசன், உ.வே.சா. பெயர்களில் விருதுகளை அறிஞர்களுக்கு வழங்குகிறது. ஆனால், இளங்கோ அடிகளார் பெயரில் இதுவரை விருது வழங்கப்படவில்லை.

தமிழில் முதல் காப்பியம் படைத்தவர்; அதையும் குடிமக்கள் காப்பியமாக, முத்தமிழ்க் காப்பியமாகப் படைத்தவர். அவர் குறிப்பிட்டுள்ள நாடக மேடை அமைப்பு, இசைத் தமிழ் விளக்கம், ஆடற்கலைச் சிறப்பு இவையெல்லாம் இன்றைக்கும் நமக்கு வியப்பூட்டுபவையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் பெயரில் ஒரு விருது இன்னும் வழங்கப்படவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com