

சோழர் வரலாற்றில் எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட "எசாலம் செப்பேடும்', முன்பு அக்கோயில் வழிபாட்டில் இருந்த செப்புத் திருமேனிகளும், இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணியின்போது (11.1.1987) கிடைத்தன.
சோழர் வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் தமிழக வரலாற்றுக்கும் முக்கிய சான்றாக விளங்குகிறது "எசாலம் செப்பேடு'.
ஊரின் நடுவே கிழக்கு நோக்கி திருக்கோயில் அமைந்துள்ளது. ராமநாதீசுவரர் திருக்கோயில் என்று அழைக்கப் பெற்றாலும் கல்வெட்டுகளில் இக்கோயில் "திருவிராமீசுவரமுடைய மகாதேவர் கோயில்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று "எசாலம்' என்று இன்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் "எய்தார்' எனவும் "எதார்' எனவும் குறிக்கப்பட்டுள்ளது. "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பனையூர் நாட்டு தனியூர்' என்றும் "ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' எனவும் பெயரிட்டு இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன், ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது.
கருவறை விமானம் முழுவதும் கற்களாலேயே அமைந்து கற்றளியாகக் காட்சி தருகிறது. கருவறையில் லிங்க வடிவிலே ராமநாதீசுவரர் காட்சி தருகிறார்.
மேலும் கருவறை உபபீடம், அதிட்டானம், சுவர், பிரஸ்தரம் ( கழுத்து), சிகரம், ஸ்தூபி என்ற கட்டடக் கலை அமைப்பினைக் கொண்டு காட்சி அளிக்கிறது. விமானம் ஒரு தளவிமானமாக வட்ட வடிவமாக அமைந்துள்ளது.
கருவறை அர்த்த மண்டபத் தூண்கள் உருளை வடிவத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் சோழர்கால கலைப்படைப்பாய் மிளிர்கின்றன. அர்த்த மண்டப நுழைவு வாயிலில் அமைந்துள்ள துவாரபாலகர்களின் சிற்பங்கள் சோழர்கால சிற்பச் செழுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல்ஜன்னல் ( சாளரம்) அமைந்துள்ளது. ஜன்னலின் சட்டத்தில் நடனமாடும் கலைஞர்கள் இருவரும், மத்தளம் கொட்டும் இருவரும், சிற்ப வேலைப்பாடுகளில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் தை மாதம் முதல்நாள் சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த ஜன்னல் வழியே பரவி இறைவன் மீது படிவதைக் காணலாம்.
இக்கோயிலின் மகாமண்டபத்தின் வட திசையில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. இறைவி திரிபுரசுந்தரி என்ற பெயரில் அருள்புரிகிறாள். தனது நான்கு கரங்களில் மேலிருகரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கியும் அருள் வழங்கும் அற்புத கோலத்தைக் கண்டு தரிசிக்கலாம்.
இறைவன் - இறைவி சந்நிதிகளுக்குச் செல்ல படிகள், மகாமண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. இதற்கு அருகேதான், தென்கிழக்குப் பகுதியில் சோழர்கால செப்பேடும் -செப்புத்திருமேனிகளும் பூமிக்கடியிலிருந்து கிடைக்கப் பெற்றன. இச்செய்தியை அங்கு சுவரில் எழுதி வைத்திருப்பதையும் காணமுடிகிறது.
எசாலம் செப்பேடு கூறுவது என்ன?
எசாலம் திருக்கோயிலை ராஜேந்திர சோழர்களின் குருவான சர்வசிவ பண்டிதர் என்பவர் எடுப்பித்தார் எனவும், இக்கோயிலுக்கு விக்கிரம சோழ நல்லூர் என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டது என்றும் நில தானம் அளித்த செய்தியை விரிவாக காணலாம், அதுமட்டுமின்றி வரலாற்றையும் சமூகம் சார்ந்த செய்திகளையும் அறிந்து கொள்ளும் விதமான சான்றாக, செப்பேடு அமைகிறது.
இச்செப்பேடு முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டதாகும். இதில் 15 இதழ்கள் (பக்கங்கள்) உள்ளன. இவை யாவும் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழமன்னரின் அரச முத்திரைக் காணப்படுகிறது. முத்திரையின் விளிம்பில் - சுற்றி,
""ராஜத்ராஜ்ஸ்ய மகுடஸ்ரேணி தர்னேஷு ஸாஸனம்
ஏதத் ராஜேந்திர சோளஸ்ய பரகேசரிவர்ம்மனஹ''
என்று கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அரசர்களின் திருமுடிவரிசைகளின் ரத்தினங்களில் திகழ்வதான இது பரகேசரிவர்மனான ராஜேந்திர சோழனின் சாசனம் என்பது பொருள் ஆகும்.
செப்பேட்டில், முதல் நான்கு இதழ்களில் (ஏடுகளில்) வடமொழியிலும் மீதம் உள்ள 11 ஏடுகளில் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இது ராஜேந்திர சோழனின் 25வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளதால் இதன் காலம் கி.பி. 1036 - 37 ஆண்டு எனக் கொள்ளலாம்.
இராஜேந்திர சோழனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது பகீரதன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது போல், கங்கை நீரை சோழநாட்டிற்கு கொண்டுவந்து, பேரேரியை உருவாக்கியதுடன் (சோழகங்கம்) கங்கை கொண்ட சோழபுரியையும் உருவாக்கினான். சிவபெருமானுக்கு பெரிய கோயிலையும் இராஜேந்திரன் கட்டினான் எனக் குறிப்பிடுவதால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திரசோழன் எடுப்பித்தான் என்பதும் உறுதியாகிறது. இதற்கு எசாலம் செப்பேடு பெரிதும் உதவுகிறது.
சோழர் வரலாற்றை அறிந்து கொள்ள, அரிய எசாலம் செப்பேட்டினை தந்த கோயிலாகவும், சோழர் கால கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது எசாலம் திருவிராமீசுவரர் திருக்கோயில்.
எசாலத்தை அடைவது எப்படி?
திண்டிவனத்தை அடுத்து வீடுர்அணை மேற்கே பேரணி, தச்சூர் ஊர்களின் வழியே 6கி.மீ. தூரத்தில் எசாலம் உள்ளது. விழுப்புரம் -
செஞ்சி சாலையில் நேமூரிலிருந்து கிழக்கே.
4 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.