திரைக்கதிர்

ஹிந்தியில் முத்திரைப் பதித்த படங்களைக் கொடுத்தும் அங்கே தொடர்ந்து பணியாற்றாமல் இருப்பதற்கு மொழி தெரியாததுதான்
திரைக்கதிர்
Updated on
3 min read

ஹிந்தியில் முத்திரைப் பதித்த படங்களைக் கொடுத்தும் அங்கே தொடர்ந்து பணியாற்றாமல் இருப்பதற்கு மொழி தெரியாததுதான் காரணம் என்பார் பி.சி.ஸ்ரீராம். தெரியாத மொழியில் வேலை பார்ப்பது எனக்கு அவ்வளவாக இஷ்டம் இல்லாத விஷயம் என்று சொன்னாலும், இயக்குநர் பால்கியின் படங்களில் தொடர்ந்து வேலை பார்ப்பதற்கு ஒரே காரணம் அவர் ஒரு

தமிழர் என்பதுதான். பி.சி.யின் ஒளிப்பதிவு பாணிகளுக்கு ஏற்ற மாதிரி தன் வேலைகளை அமைத்துக் கொள்வாராம் பால்கி. பல வருடங்களுக்கு முன்பு "ஃபேர் அண்ட் லவ்லி' விளம்பர படம் எடுத்த போதுதான், பால்கி - பி.சி. இடையே நட்பு உண்டானது. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழர் பால்கி. அதன் பின் மும்பையில் செட்டிலாகி ஒரு விளம்பரப் பட நிறுவனத்தின் கிரியேட்டிவிட்டி ஹெட் ஆனார். அதன் பின் சினிமாவுக்காக திரைக்கதை எழுதிய பால்கி, தன் நண்பரான பி.சி.யையே தன் கனவுக்கு ஒளி கொடுக்க செய்தார். "சீனிகம்' படத்தில் முதிர்ந்த காதல், "பா' படத்தில் அப்பாவை பையனாக நடிக்க வைத்து, பையனை அப்பாவாக நடிக்க வைப்பது என பல சுவாரஸ்யங்கள் இருக்கும். தற்போது ஹிந்தியில் பி.சி. பணியாற்றி வரும் படத்தின் இயக்குநரும் பால்கிதான். இசை  இளையராஜா. அமிதாப் - ஷாரூக் இணைவதால் பாலிவுட் தாண்டி பரவி கிடக்கிறது எதிர்பார்ப்பு.   

நடிகைகளுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். அதுவும் நாய்கள் வளர்ப்பதில் த்ரிஷா தொடங்கி தமன்னா, ஹன்சிகா என எல்லோருக்குமே ஆர்வம். த்ரிஷா தெருவில் திரியும் நாய்களை காப்பகத்துக்குக் கொண்டு சென்று விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதற்கு தேவையான பராமரிப்புச் செலவுகளையும் ஏற்கிறார். ஹன்சிகா வகை வகையான வெளிநாட்டு நாய்களை தனி பணியாளர்களைக் கொண்டு வளர்த்து வருகிறார். சிறு வயதில் இருந்தே நாய் வளர்க்க வேண்டும் என எண்ணிய தமன்னாவுக்கு, அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், சமீபத்தில்தான் சீன வகை நாய் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். அதற்கு செல்லமாக "ஷெப்பர் என பெயரிட்டுள்ளார். இந்த வரிசையில் தற்போது சமந்தா. சமீபத்தில் தெலுங்கு படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து ஆந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தார் சமந்தா. அப்போது கறுப்பு நிற நாய் ஒன்று அவரது காரையே ஏக்கத்துடன் பார்த்ததாம். உடனே காரை நிறுத்த சொன்ன சமந்தா, அதன் அருகே சென்றதும் வாலை குழைத்தபடி நெருங்கி வந்திருக்கிறது. பாசத்துடன் நெருங்கிய நாயை, தன் காரில் ஏற்றிச் சென்றிருக்கிறார். அதை தன் வீட்டில் அன்புடன் பராமரித்து வரும் சமந்தா, அதற்கு "நோரி' எனப் பெயரிட்டுள்ளார்.    

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் "திருட்டுக்கல்யாணம். முந்தைய படங்களில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்த ரங்காயாழி, தேஜஸ்வீ ஆகியோர் நடிக்கின்றனர். "ஆடுகளம் நரேன், தம்பிராமையா, தேவதர்ஷினி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். பாக்யராஜ், "பூ' சசி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஷக்திவேலன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர்...

""கல்யாணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான தருணம். எல்லாருக்குமான கனவுகளும், உலகமும் கல்யாணத்துக்குப் பிறகுதான் தொடங்குகிறது. இதுவரை வாழ்ந்தது வாழ்க்கையல்ல  திருமணத்துக்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கே, அதுதான் சவால் நிறைந்தது. திருட்டுக் கல்யாணமோ, திருக்கல்யாணமோ எது நடந்தாலும் அது முக்கியம் அல்ல. திருமணத்துக்குப் பின் சந்தோஷமாக வாழ்வதுதான் முக்கியம் என்பதை மையமாக வைத்து இக்கதைக் கரு உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் பலம் கருதி ஸ்டார் நட்சத்திரங்களை அணுகவில்லை. ஹீரோ, ஹீரோயினும் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், டெஸ்ட் ஷூட்டிலேயே அவர்களுக்கான முழுச் சம்பளத்தையும் கொடுத்து விட்டோம். சென்னை, கடலூர், கடப்பா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் ஷக்திவேலன்.  

கோடிகளைச் சம்பளமாகப் பெறுவதில் யார்? என்பதில் ஒரு பக்கம் போட்டி இருந்தாலும், உடலில் டாட்டூ வரைந்து கொள்வதில் மற்ற நடிகைகளை முந்துகிறார் ஸ்ருதிஹாசன்.  விதவிதமான டாட்டூக்களில் கவனம் செலுத்துபவராக ஸ்ருதிஹாசன் உள்ளார். ஏற்கெனவே நான்கு டாட்டூவை தன் உடலில் வரைந்திருந்த ஸ்ருதி, தற்போது ஐந்தாவது டாட்டூ வரைந்திருக்கிறார். ஏற்கெனவே சிறிய அளவில் ரோஜா மலரை வரைந்திருந்த ஸ்ருதி, மீண்டும் அதே ரோஜா மலரை பெரிய அளவில் வரைந்திருக்கிறார். இதே போல் முதுகு பக்கத்தில் தமிழில் "ஸ்ருதி என தன் பெயரை டாட்டூவாக வரைந்திருந்தார்.  சில மாதங்களுக்கு முன் தன் கால் பகுதியில் "ரைஸ்' (எழு) என்கிற டாட்டூவை வரைந்திருக்கிறார்.

நான்கு தனி மனிதர்களின் வாழ்க்கையைக் கொண்ட படமாக உருவாகி வருகிறது "நெருங்கி வா முத்தமிடாதே. "ஆரோகனம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஷபீர் கலரக்கல் கதாநாயகனாக நடிக்கிறார். பியா பாஜ்பாய், ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரன், அம்பிகா, "தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்...""பரபரப்பு மிகுந்த இந்த வாழ்க்கையில், உறவுகளிடம் பேசுவதற்கு கூட நேரம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பயணம். வனப்பகுதிகளில் ஒற்றையடி பாதைகள் அமைக்கவே, சிரமப்பட்ட மனித பயணம் இன்றைக்கு வெவ்வேறாக அமைந்து விட்டது. அப்படியான இந்த வாழ்க்கையில் ஒரு நாள் பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லையென்றால் எப்படியிருக்கும் என்கிற கற்பனைதான் இதன் கதைக் கரு. கற்பனை என்றாலும், என்றாவது ஒரு நாள் இந்த நிலையை நாம் கடக்க வேண்டி வரும். அப்போது என்ன நடக்கும்? என்பதுதான் திரைக்கதை. தேசிய பெட்ரோல் தட்டுபாடு என்கிற அரசியலும் படத்துக்குள் இருக்கிறது. திருச்சியிலிருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக காரைக்கால் பயணிக்கிற சிலரின் வாழ்க்கைதான் படம்'' என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கோலிவுட்டில் தொடங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரையிலும் பரவியுள்ளது. இந்நிலையில் தற்போது ஈரான் படத்துக்கு இசையமைக்கிறார். திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்ற "சில்ரன் ஆப் ஹெவன்' படத்தை இயக்கியவர் மஜித் மஜிதி. புகழ் பெற்ற ஈரான் பட இயக்குநரான இவர், "த கலர் ஆப் பாரடைஸ்', "த சாங் ஆப் ஸ்பாரோ' போன்ற படங்களுக்கு உலகின் பெருவாரியான விருதுகளைப் பெற்று புகழின் உச்சத்தில் இருக்கிறவர். கடந்த ஆண்டு தன் பட வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார் மஜிதி. அப்போது ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார். தனது புதிய படத்துக்கு இசையமைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதை உடனே ஏற்றுக் கொண்டார் ரஹ்மான். இதையடுத்து இசைப்பணியில் அதீத தீவிரம் காட்டினார். இதற்காக ஈரான் சென்று இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டார்.  ""ஈரான் படங்களின் கதையும், பின்னணி இசையும் எனக்கு பிடித்தமான ஒன்று. ஹாலிவுட்டில் கூட பாடல்கள் வைத்து இசை அமைத்திருக்கிறேன். முழுக்கவே பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தில் இசையமைப்பது இதுதான் முதல் முறை'' என தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com